Wednesday 24th of April 2024 08:47:01 PM GMT

LANGUAGE - TAMIL
.
திரண்டெழும் மக்கள் சக்தியும் திணற வைக்கும் கோரிக்கைகளும்! - நா.யோகேந்திரநாதன்!

திரண்டெழும் மக்கள் சக்தியும் திணற வைக்கும் கோரிக்கைகளும்! - நா.யோகேந்திரநாதன்!


கடந்த மார்ச் மாதம் 31ம் நாள் முன்னிரவுப் பொழுதில் மீரிஹானவிலுள்ள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வின் இல்லத்தைச் சுற்றி வெடித்த போராட்டம் ஒரு சிலரால் ஆரம்பிக்கப்பட்டபோதிலும் அன்று நடு இரவுக்கு முன்பாகவே ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட பேரெழுச்சியாகப் பரிணமித்தது. போராட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் பொலிஸாரும் இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டு கண்ணீர்ப்புகை, குண்டாந்தடியடி, நீர்த்தாரை என்பன பிரயோகிக்கப்பட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை விரட்ட முடியவில்லை. ஒரு இராணுவ வாகனம் எரியூட்டப்பட்டதுடன் இரு பொலிஸ் வாகனங்களும் சேதமாக்கப்பட்டன. மேலும் போராட்டம் களுத்துறை, மொரட்டுவ பகுதிகளுக்கும் பரவி மொரட்டுவ மேயரின் வீடு தாக்கப்படுமளவுக்கு மக்கள் எழுச்சி தீவிரமடைந்தது. இப்போராட்டம் எழுப்பிய எழுச்சிப் பேரலை நாட்டின் பல பகுதிகளுக்கும் பரவியதுடன் பல்கலைக்கழக மாணவர்கள் உட்பட அரசாங்கத்துக்கு எதிராகவும், அரசாங்கத்தின் மக்கள் விரோத நடவடிக்கைக்கு எதிராகவும் பல்வேறு தரப்பினரும் களமிறங்கி பல்வேறு போராட்டங்களில் இறங்கினர்.

நாடு பரந்தளவில் மாணவர்கள், தொழிலாளர்கள், புத்திஜீவிகள் உட்பட்ட நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகள், அன்றாடம் தொழில் செய்து வாழ்பவர்கள் என பல்வேறு தரப்பினரின் போராட்ட எழுச்சியின் குவிமையமாக கொழும்பு காலிமுகத்திடல் மாறியது. “கோத்தா கோ ஹோம்” அதாவது “கோத்தாவே வீட்டுக்குப் போ” என்ற கோஷத்துடன் மக்கள் எழுச்சியின் மையமாகக் காலிமுகத்திடல் சூடு பிடித்துள்ளது. எரிக்கும் வெய்யிலிலும் கொட்டும் மழையிலும் கூட மக்கள் விட்டுக்கொடுக்காமல் போராட்டத்தை தொடர்கின்றனர். அதேவேளையில் உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் என்பனவும் கூடாரங்களும் பல்வேறு தரப்பினராலும் வழங்கப்பட்டு வருகின்றன.

போராட்டக்காரர்கள் அப்பகுதிக்கு “கோத்தா கோ கிராமம்” எனப் பெயர் சூட்டி இப்போராட்டத்தின் செய்தியை ஆணித்தரமாகப் பதிவு செய்துள்ளனர்.

அதேவேளையில் போராட்டக்காரர்கள் 5 கோரிக்கைகளை முன்வைத்து, அவை நிறைவேறும்வரை போராட்டம் தொடருமெனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

அதாவது ஜனாதிபதி பதவி விலக வேண்டும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் உட்பட ராஜபக்ஷ் குடும்பத்தில் உள்ள அரசாங்கத்தில் பதவி வகிக்கும் சகலரும் பதவி விலக வேண்டும் 19வது திருத்தச் சட்டம் மீண்டும் அமுலுக்குக் கொண்டுவரப்படவேண்டும் இடைக்கால அரசு நிறுவப்பட்டு மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பன பற்றி விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப்படுவதுடன் முறையற்ற விதத்தில் பெறப்பட்ட சொத்துகள் பறிமுதல் செய்யப்பட வேண்டும் 6 மாதத்திற்குள் ஜனாதிபதித் தேர்தலும் பொதுத் தேர்தலும் நடத்தப்படவேண்டும் என்பனவே அந்தக் கோரிக்கைகளாகும்.

இதில் எந்தவொரு கோரிக்கையும் நியாயமற்றதெனச் சொல்லிவிட முடியாது.

இதுகாலவரை போர் வெற்றியையும், இன, மத, மேலாதிக்கத்தையும் கவசமாகப் பயன்படுத்தித் தங்களைத் தட்டிக்கேட்க ஆளில்லை என்ற வகையில் ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம், சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகளில் தலையீடு செய்தல், பாதுகாப்பு என்ற பேரில் இன, மத ஒடுக்குமுறைகளையும் தனிப்பட்ட பழிவாங்கல்களையும் மேற்கொள்ளல் என இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைமீறல்கள் தொடர்பான விசாரணைகள் ஒரு இடைக்கால அரசு நிறுவப்பட்டு அதன் அதிகாரத்தின் கீழ் சுதந்திரமான விசாரணை நடத்தப்படவேண்டும் என்ற நான்காவது கோரிக்கை இன்றைய ஆட்சி பீடத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கான சாத்தியங்கள் இல்லையென்றே சொல்லி விடமுடியும்.

“அவன் காட் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் 110 கோடி ஊழல், கொழும்பில் கப்பம் கோரி 11 இளைஞர்கள் காணாமலாக்கப்பட்ட விவகாரம், தேர்தல் காலத்தில் சில் துணிகள், பஞ்சாங்கம் என்பன அரச செலவில் வழங்கப்பட்டமை, மிகப் பெறுமதியான காணியை அரசாங்க அதிகாரத்தைப் பாவித்து மலிவான விலையில் கொள்முதல் செய்தமை, அரச செலவில் ஜனதிபதி, பிரதமர் ஆகியோரின் தந்தைக்கு மணி மண்டபம் அமைத்தமை போன்ற விடயங்கள் தொடர்பான வழக்குகள், வழக்கைத் தொடரப் போதிய ஆதாரம் இல்லையெனக் கூறப்பட்டு அவை வாபஸ் பெறப்பட்டமை, மேலும் பண்டரோ ஊழல் சம்பந்தமான விவரங்கள் வெளியே வரும்போது இன்னும் பலரின் சங்கதிகள் சந்திக்கு வரலாம்.

எனவே இந்த நான்காவது கோரிக்கைக்கு ஒப்புக் கொள்வது சம்பந்தப்பட்டவர்கள் தங்கள் தூக்குக் கயிற்றைத் தங்கள் கையாலேயே தங்கள் கழுத்தில் மாட்டும் ஒரு விடயமாகவே கருதப்படுகிறது.

ஆனால், இந்தக் கோரிகைகளையும் அரச தரப்பினர் ஏற்றுக்கொள்ளும் வரைப் போராட்டம் தொடரும் என்பதை போராட்டக் குழுவினர் திட்டவட்டமாக அறிவித்து விட்டனர். அதுமட்டுமின்றி போராட்டத்திற்கு ஆதரவாகப் பிரபல விளையாட்டு வீரர்கள், மக்கள் அபிமானம் பெற்ற நடிகர்கள், நடிகைகள், பாடகபாடகிகள், தொழிற்சங்கவாதிகள் எனப் பல தரப்பினரும் களமிறங்கி ஆதரவை வெளிப்படுத்தி வருகின்றனர். மகா சங்கத்தினர், பேராயர் மல்கம் ரஞ்சித் தலைமையிலான கிறிஸ்தவர்கள், முஸ்லிம் மத அமைப்புகள் என்று சகல மதத்தினரும் கலந்து கொண்டுள்ளனர்.

10 நாட்களுக்கு மேலாக இப்போராட்டம் முழுவீச்சுடன் தொடர்வது மட்டுமின்றி நாளாந்தம் மேலும்மேலும் பலம் பெற்றுவரும் நிலையில் வடக்கில் இடம்பெற்றுவரும் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் நடத்தும் போராட்டம் 1800 நாட்களைத் தாண்டி இடம்பெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பெற்றோரில் பல தகப்பன்கள். தாய்மார் மரணமடைந்து விட்டபோதிலும் அவர்களின் போராட்டம் எவ்வித தொய்வுமின்றி முழு வீச்சுடன் இடம்பெற்று வருகிறது.

காலிமுகத்திடலில் 10 நாட்களாக இடம்பெறும் போராட்டத்தின் 4வது கோரிக்கையும் வவுனியாவில் 1800 நாட்களுக்கு மேல் நடைபெற்றுவரும் போராட்டத்தின் கோரிக்கையும் நிறைவேற்றப்படுமானால் பலர் நீதிமன்றக் கூடுகளில் ஏற வேண்டிவரும் என்பதுடன் அவர்களை நீண்ட கால சிறைத் தண்டனைக்கு உள்வாங்க சிறைக் கதவுகள் தயாராகி விடுமென்றே கருதப்படுகின்றது.

5 கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்தும் காலிமுகத்திடல் போராட்டக்காரர்களும் காணாமற் போன தங்கள் உறவுகளுக்காகப் போராட்டம் நடத்தும் வவுனியா போராட்டக்கார்களும் ஒரே தரப்பினரால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற வகையில் ஒரே புள்ளியில் நிற்கின்றனர்.

எனவே அதிகார பீடத்தினர் தங்களுக்கு வரவுள்ள மீளமுடியாத ஆபத்தின் பலத்தை உணராமலில்லை. அதற்கு மாற்றீடாக அவர்கள் தங்கள் வழியிலேயே நடவடிக்கை எடுப்பார்களென எதிர்பார்க்கமுடியும். அதற்கான அறிகுறிகளும் தென்படாமல் இல்லை.

கடவத்தை சிறப்பு அதிரடிப் படை முகாமில் இராணுவத்தினருக்கு கொமாண்டோ படைப் பயிற்சி வழங்கப்படுவதும், காலிமுகத்திடலில் பொலிஸ் வாகனங்கள் குவிக்கப்படுவதும் பொழுதுபோக்குக்காக அல்ல என்பது புரிந்து கொள்ளப்படவேண்டும். வடை விற்பவர்களாகவும் இளநீர் விற்பவர்களாகவும் வரும் சிலர் இராணுவத்தின் மீது கைக்குண்டை எறிந்து குழப்பங்களை தோற்றுவித்தாலும் ஆச்சரியப்பட எதுவுமில்லை.

எனவே இன்றை மக்கள் போராட்டம், திட்டமிட்ட சதி நடவடிக்கைகள் மூலம் திசை திருப்பப்படவும் ஒடுக்கப்படவுமான வாய்ப்புகள் இல்லையென்று சொல்லிவிடவும் முடியாது.

இதே காலிமுகத்திடலில் 1956ம் ஆண்டு தந்தை செல்வா தலைமையில் அஹிம்சை போராட்டம் நடத்தப்பட்டபோது அது வன்முறை மூலம் ஒடுக்கப்பட்டு இரத்த ஆறு ஓட வைக்கப்பட்டது. அதன் பலன் ஒரு பெரும் உள்நாட்டு யுத்தம் வரை விரிவடைந்து பல்லாயிரம் உயிர்கள் பலியாகின.

தற்சமயம் அதே காலிமுகத்திடலில் இடம்பெறும் சாத்வீகப் போராட்டத்திற்கு துப்பாக்கிகள் மூலம் பதிலளிக்கப்படுமானால், அது நிச்சயமாக மீண்டெழமுடியாத அழிவுக்கே இட்டுச் செல்லும் என்பதை மறுத்துவிடமுடியாது.

அன்று தமிழர்களைப் பயங்கரவாதிகளாகக் காட்டி இன அழிப்பை மேற்கொண்ட அதே கூட்டம் முழு சிங்கள மக்களையும் பயங்கரவாதிகளாகக் காட்டமுடியுமா? அநீதிக்கெதிரான மக்கள் எழுச்சியின் முன்பு இனவாதம், மத அடிப்படைவாதம் என்பன செல்லாக் காசாகி விடும்.

எனவே இன்று திரண்டெழும் மக்களின் கோரி்க்கைகளுக்கு நியாயபூர்வமான முறையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இலங்கையின் எதிர்காலம் நிச்சயமாக ஆரோக்கியமாக இருக்கப் போவதில்லை.

அதிகாரத்தைத் தங்கள் கையில் வைத்துக்கொண்டு தங்களைத் தட்டிக்கேட்க எவராலும் முடியாது என்ற எண்ணத்துடன் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இன்று மக்கள் சக்தியின் விட்டுக்கொடுக்கப்படாத ஆவேசத்தின் முன் திணறிக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் தங்கள் குற்றங்களை ஏற்றுக்கொண்டு அதற்கான பரிகாரங்களை தேட சம்பந்தப்பட்டவர்கள் முயற்சிக்காவிடின் எதிர்காலம் அவர்களுக்கு மட்டுமல்ல நாட்டுக்கும் நல்லதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.

அருவி இணையத்துக்காக ;- நா.யோகேந்திரநாதன்

19.04.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்புபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE