Wednesday 24th of April 2024 08:44:00 PM GMT

LANGUAGE - TAMIL
.
மக்கள் போராட்டங்களுக்கு விடுக்கப்படும் சவால்களும் எச்சரிக்கைகளும் - நா.யோகேந்திரநாதன்!

மக்கள் போராட்டங்களுக்கு விடுக்கப்படும் சவால்களும் எச்சரிக்கைகளும் - நா.யோகேந்திரநாதன்!


இன்றைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்திலேயே வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு எதிராகவும், ஊதிய உயர்வு கோரியும் வெவ்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் ஆசிரியர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், புகையிரத நிலைய அதிபர்கள், காப்பாளர்கள், பொறியியலாளர்கள் உட்பட்ட புகையிரத சேவைப் பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர்.

அவர்களின் கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டாலும் நீண்ட இழுபறியின் பின் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டு வேலை நிறுத்தப் போராட்டங்கள் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன.

அதேவேளையில் அரிசி, பால்மா உட்படப் பல அத்தியாவசியப் பொருட்களுக்கான தட்டுப்பாடு ஆலை உரிமையாளர்கள், பெரும் வர்த்தக முதலாளிகள் ஆகிய தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் மேற்படி பொருட்களுக்கான நிர்ணய விலைகள் அரசாங்கத்தால் நீக்கப்பட்டன. எனவே அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வகைதொகை யின்றி அதிகரிக்கப்பட்டன. அது மட்டுமின்றி டொலரின் பெறுமதியின் மீதுள்ள தன் கட்டுப்பாட்டை நீக்கி சுதந்திரமாக மத்திய வங்கி சந்தையில் மிதக்க விட்டது. அதனால் ஏற்பட்ட இலங்கை நாணயத்தின் பெறுமதி வீழ்ச்சி காரணமாகப் பொருட்களின் விலைகள் பல மடங்காக உயர்த்தப்பட்டன.

அதுமட்டுமின்றி அந்நியச் செலாவணி குறைவடைந்தமை காரணமாக எரிபொருள், எரிவாயு, பால்மா என்பவற்றுக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. எரிபொருள், எரிவாயு விற்பனை நிலையங்களில் நீண்ட வரிசைகள் காணப்பட்டதுடன், வரிசையில் நிற்பவர்கள் அதிலேயே விழுந்து இறக்கும் சம்பவங்களும் இடம்பெற்றன.

இந்த நிலையில் விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு என்பவற்றுக்கு எதிராக நாடு பரந்த போராட்டங்கள் வெடித்தன.

இப்போராட்டங்கள் ஜனாதிபதியை பதவி விலகக் கோரியும், ராஜபக்ஷ் குடும்பத்தை அரசாங்கத்தை விட்டு வெளியேறக் கோரியும் ஊழல் மோசடிகள் விசாரிக்கப்பட்டுக் கொள்ளையிடப்பட்ட சொத்துகள் மீளப் பெறப்படவேண்டும் எனக் கோரியும் 5 கோரிக்கைகளை முன்வைத்து 18 நாட்களையும் கடந்த நிலையில் மக்கள் போராட்டம் காலிமுகத்திடலில் இடம்பெற்று வருகிறது.

இன்று அதிகாரத்திலுள்ள ஜனாதிபதி, பிரதமர் உட்பட ராஜபக்ஷ் குடும்பத்தினரும் அவரது ஆதரவு சக்திகளும் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமெனவும் போராட்டம் நடத்தப்பட்டபோதிலும் போராட்டக்காரர்களை திருப்திப்படுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக மக்கள் ஜனநாயக வழிமுறைகள் மூலம் தங்கள் கருத்துக்களை வெளியிட அவர்களுக்கு உரிமை உண்டு என அரச தரப்பால் கூறப்பட்டது.

ஆனால் அரசாங்கக் கட்சியின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தைக் கவனத்தல் எடுக்காமல் விடமுடியாது. அவர் “அனுரகுமார திசாநாயக்கவும் அவரது ஆட்களும் கோஷம் போடுவதால் ஜனாதிபதி பதவி விலகமாட்டார். 1971ல் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க இப்படியானதொரு நெருக்கடிக்கு உள்ளானார். அதன் காரணமாக ஏற்படுத்தப்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சி காரணமாக ஆயிரக் கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். 1988-1989 காலப்பகுதியில் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மீண்டும் அந்த நிலைக்கு நாட்டைத் தள்ளவேண்டாம்” என தனது நாடாளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.

காலிமுகத்திடலில் மட்டுமின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் “கோத்தா கோ ஹோம்” அதாவது “கோத்தாவே வீட்டுக்குப் போ” என்ற கோஷத்தின் கீழ் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் உரையில் ஆழமான சில கருத்துகள் பொதிந்துள்ளதை உணர முடிகிறது.

அதாவது அவர் கோத்தா பதவி விலகமாட்டார் என்பதை உறுதி செய்ததுடன் அதையும் மீறிப் போராட்டம் வலுப்பெறுமானால் 1971, 1988- 89 காலப்பகுதிகளில் ஜே.வி.பி.க்கு எதிராக இராணுவ ஒடுக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டதைப் போன்று போராட்டக்காரர்கள் பேரழிவுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்படுமென அவர் எச்சரிக்கை விடுத்துள்ளாரா என்ற கேள்வி எழுகிறது.

ஏற்கனவே மக்களுக்கும் மக்களின் போராட்டங்களுக்குமெதிராக ஆயுதப் படைகள் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. 2009ல் இறுதிப் போரில் மனித குலப் பேரழிவை ஏற்படுத்துவதில் முன்னிலையில் நின்ற 53வது படையணி கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொலிஸார் அழைத்தால் எந்நேரமும் களமிறங்க இராணுவம் தயார் நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2022ம் ஆண்டில் பாதுகாப்புச் செலவினமாக 47,960 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்பதையும் நாட்டின் மொத்தச் செலவினத்தில் 1/5பங்கு பாதுகாப்புச் செலவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வருடா வருடம் படையினரின் ஓய்வூதியத்துக்கு மட்டும் 170 மில்லியன் வழங்கப்படுகிறது. போர் இடம்பெறாத போர் இடம் பெற்று 13 ஆண்டுகள் முடிந்துவிட்ட ஒரு நாட்டில் ஆயுதப் படைகளுக்கு இவ்வளவு பெருந்தொகை ஒதுக்கப்படுகிறதென்றால் அதுபற்றி ஆழமாகச் சிந்திக்காமல் இருக்கமுடியாது.

இப்படியான ஒரு புறச்சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையிலும் “கோட்டா வீட்டுக்குப் போ” என்ற போராட்டம் மேலும் மேலும் வலுப்பெற்று வருகிறது. விலைவாசி உயர்வு, பாவனைப் பொருட்களின் தட்டுப்பாடு என்பனவற்றை எதிர்த்து நாடு பரந்த அளவில் ஆர்ப்பாட்டங்கள், வீதி மறியல் போராட்டங்கள் என்பனவும் இடம்பெற்று வருகின்றன.

அப்படியிருந்தும் எரிபொருட்களின் விலை திடீரென பெருந்தொகையால் அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசன், பெற்றோல் போன்ற ஒவ்வொன்றிலும் சராசரியாக 80 ரூபாவுக்குக் கூடுதலாகவே அதிகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வதிகரிப்பு போக்குவரத்து உட்பட ஏனைய சகல பொருட்களின் விலைகளிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பது தவிர்க்கப்படமுடியாது.

நாடெங்கும் மக்கள் விலைவாசி உயர்வுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும்போது அதுபற்றிப் பொருட்படுத்தாமல் மீண்டும் விலைகள் அதிகரிக்கப்படுவதென்பது மக்களுக்கு விடப்படும் சவாலாகவே கருதப்படுகின்றது.

இந்தநிலையில்தான் எரிபொருள் உயர்வைக் கண்டித்து கேகாலை ரம்புக்கணையில் இடம்பெற்ற வீதி மறிப்புப் போராட்டத்தின் மீது பொலிஸாரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. அதில் ஒருவர் உயிரிழந்ததுடன் 24 பேர் படுகாயங்களுக்குமுள்ளா கியுள்ளனர்.

“பெற்றோல் பௌஸருக்கு” ஆர்ப்பாட்டக்காரர் தீ வைக்க முயன்றதாலேயே அதை தடுக்கக் குறைந்தளவு வன்முறையைப் பாவித்ததாகப் பொலிஸார் கூறுகின்றனர். பொலிஸார் பெரும் அழிவைத் தடுக்கவே துப்பாக்கியை உபயோகித்ததாகக் கூறுவது இதுதான் முதற்தடவையல்ல. வெலிவேரியாவில் குடிநீர் கோரிப் போராடிய மக்கள் மீது நடத்தப்பட்ட படுகொலை முதற்கொண்டு எரிபொருள் விலையேற்றத்தை எதிர்த்துப் போராடிய மீனவர்கள் பலி கொள்ளப்பட்டது வரை ஆயுதப் படையினரின் கொலை நடவடிக்கைகளுக்குச் சாட்சியங்கள் நிறையவே உண்டு.

ஆனால், இங்கு ஒரு செய்தி வலிமையாகச் சொல்லப்பட்டுள்ளது. அதாவது அரசை எதிர்த்துப் போராட்டங்கள் வலுப்பெறுமானால் அவற்றுக்கான பதிலை துப்பாக்கிகளே வழங்கும் என்பது தான் அது. அதை ஏற்கனவே ஜே.வி.பி.க்கு 1971லும் 1988, 1989லும் நடந்ததைச் சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் ஜோன்சன் பெர்னாண்டோ எச்சரித்ததை மறந்துவிடமுடியாது.

எப்படியிருந்தபோதிலும் விலைவாசி உயர்வுக்கெதிராக மக்கள் போராடும்போதே அதைப் பொருட்படுத்தாமல் மீண்டும் விலைகளை உயர்த்துவதென்பது மக்களுக்கு விடப்படும் சவாலாகவே கருத வேண்டியுள்ளது. அதேவேளையில் றம்புக்கணயில் மேற்கொண்ட படுகொலை போராடும் மக்களுக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கையே என்பதில் சந்தேக மில்லை.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

26.04.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE