ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் பதவி விலக வேண்டும், ராஜபக்ஷ் குடும்பத்தினர் அனைவருமே அரசாங்கத்தில் வகிக்கும் பதவிகளிலிருந்து வெளியேற வேண்டும், இந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மோசடிகள் விசாரிக்கப்படுத் தண்டனை பெறப்படவேண்டும் என்பன உட்பட 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று 25வது நாளாகவும் கொழும்பு காலிமுகத்திடலில் மக்கள் போராட்டம் பேரெழுச்சியுடன் இடம்பெற்று வருகிறது. நாளுக்குநாள் போராட்டத்தில் பங்கு கொள்பவர்களின் தொகை அதிகரித்து வருவதுடன் போராட்டமும் புதிய உத்வேகமடைந்து வருகிறது. மேலும் நாட்டில் பல பகுதிகளிலும் ஆர்ப்பாட்டப் பேரணிகளும் வீதிமறிப்புப் போராட்டங்களும் இடம் பெறுகின்றன. சில இடங்களில் அவற்றை முறியடிக்க பொலிஸார் மேற்கொண்ட முயற்சிகளும் வெற்றியளிக்கவில்லை.
இந்த நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் அண்மையில் சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய பேட்டியில் இடைக்கால அரசு ஒன்று உருவாக்கப்படுமானால் அது தனது தலைமையிலேயே ஸ்தாபிக்கப்படுமெனவும் வேறொரு தரப்பினரைப் பிரதமராக்க பெரும்பாலானோர் தயாரில்லையெனவும் அரசியல் தெளிவற்றவர்களே தான் பதவி விலகவேண்டுமெனக் கூறுகிறார்களெனவும் என்ன மாற்றம் ஏற்பட்டாலும் தானே பிரதமர் எனவும் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ் குடும்பமே அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டுமென மக்கள் தீவிரமாகப் போராடிக்கொண்டிருக்கும்போது பிரதமரின் இந்த அறிவித்தலானது பிரதமர் போராட்டக்காரர்களுக்கு வழங்கிய பதிலாகவே பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் ஜனாதிபதியின் அதிகாரங்களை நாடாளுமன்றத்தி்ல் அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்து பறிக்கும் முயற்சிகளும் மறுபுறத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒரு தரப்பு அரசியலமைப்பின் 21வது திருத்தச் சட்டத்துக்கான முன்வரைவொன்றை சபாநாயகரிடம் சமர்ப்பித்துள்ளது. அத்துடன் சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ் சபாநாயகரிடம் ஒரு புதிய அரசியலமைப்புத் திருத்த வரைவைச் சமர்ப்பிக்கவுள்ளார். இன்னொருபுறம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் 19வது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தும் வகையில் புதிய திருத்தத்தை முன் வைக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், 19வது திருத்தம் மூலம் பிரதமருக்கும் நாடாளுமன்றத்துக்கும் வழங்கப்பட்ட அதிகாரங்கள் பறிக்கப்பட்டன. பஷில் ராஜபக்ஷ் அதிகாரத்துக்கு வரும்பொருட்டு இரட்டைக் குடியுரிமையுள்ளோர் நாடாளுமன்ற உறுப்பினராக வருவதற்கு இருந்த தடை அகற்றப்பட்டது. மஹிந்தவின் பிள்ளைகள் ஜனாதிபதியாக வரும் வகையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வயதெல்லை குறைக்கப்பட்டது. சுயாதீன ஆணைக்குழுக்கள் ஜனாதிபதியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன. அதாவது 20வது திருத்தச் சட்டத்தின் மூலம் ராஜபக்ஷ் குடும்பத்தின் அதிகாரம் வலுப்படுத்தப்பட்டதுடன், ஜனாதிபதியை ஒரு சர்வாதிகாரியாக்கியது.
இந்த நிலையில்தான் சஜித் பிரேமதாச, விஜயதாச ராஜபக்ஷ், மஹிந்த ராஜபக்ஷ் ஆகியோரால் 20வது திருத்தச் சட்டம் செயலிழக்கச் செய்யப்படும் முகமாக 21ம் சட்டத் திருத்தத்திற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், சஜித் பிரேமதாச, விஜயதாச ராஜபக்ஷ் ஆகியோரின் நோக்கத்துக்கும் பிரதமர் மஹிந்தவின் நோக்கத்துக்கும் பாரிய வேறுபாடு உண்டு. அவர்கள் இருவரும் தற்சமயம் அதிகாரத்திலுள்ள ராஜபக்ஷ் குடும்ப ஆட்சியை முற்றாக அகற்றிவிட்டு, ஒரு புதிய அரசியலதிகாரத்தை உருவாக்கும் நோக்குடன் செயற்படுகின்றனர்.
ஆனால், மஹிந்த ராஜபக்ஷ் புதிய அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் 19வது திருத்தத்தை வலுப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளார். அதாவது 19ம் திருத்தத்தின்படி ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. நாடாளுமன்றத்தினூடாகப் பிரதமரின் அதிகாரம் வலுப்படுத்தப்படும். மேலும் சுயாதீன ஆணைக்குழுக்களின் கட்டுப்பாடு நாடாளுமன்றத்திடம் கொண்டு வரப்படும்.
அதாவது 19வது திருத்தத்தை வலுப்படுத்துவதன் மூலம் பிரதமர் அதிகாரம் படைத்தவராகி விடுவர். அதாவது அதிகாரம் மஹிந்த ராஜபக்ஷ் கைக்கு மாறிவிடும். தற்சமயம் உள்ள நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையைத் தன் பின்னால் வைத்திருப்பது மஹிந்தவைப் பொறுத்தவரையில் ஒரு சிரமமான காரியமல்ல.
எனவே ஏதாவது ஒரு விதத்தில் கோத்தபாய கையில் உள்ள நிறைவேற்று அதிகாரம் பறிக்கப்படுமானால் 19வது திருத்தத்தை வலுப்படுத்துவதன் மூலம் அது மஹிந்தவின் கைக்கு வந்து சேர்ந்துவிடும்.
அப்படி இடம்பெறும்போது ராஜபக்ஷ் குடும்பத்தை அரசியலதிகாரத்திலிருந்து வெளியேற்ற இடம்பெறும் போராட்டங்களும் உயிரிழப்புகளும் அர்த்தமற்றவையாக மாறிவிடும் அபாயம் உண்டு.
மஹிந்தவின் 19வது திருத்தத்தை வலுப்படுத்துவது என்ற முன்வைப்பு அடிப்படையில் இன்று தீவிரமடைந்துவரும் போராட்டத்தை திசைதிருப்பவும் ராஜபக்ஷ் குடும்பத்தை விட்டு அதிகாரம் வெளியே போய்விடாமல் பார்த்துக் கொள்வதுக்குமான ஒரு தந்திரோபாயமாகவே கருத வேண்டியுள்ளது.
வெளிப்படையில் கோத்தபாயவுக்கும் மஹிந்தவுக்குமிடையே ஒரு அதிகாரப் போட்டி இடம்பெறுவதாகவும் அப்போட்டிக்குள் திருத்தச் சட்டங்கள் சிக்குப்பட்டுள்ளன என்பது போலவுமே ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால் உண்மை அப்படியல்ல. அது திட்டமிட்டு உருவாக்கப்படும் ஒரு மாயையேயாகும். எந்தத் தரப்பு அதிகாரத்தைக் கைப்பற்றினாலும் ஒரு தரப்பு மற்றத் தரப்புக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப் போவதுமில்லை, இன்றைய பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கப் புதிய வழிமுறைகளைத் தேடப் போவதுமில்லை.
விலைவாசி உயர்வு, பொருட்கள் தட்டுப்பாடு போன்ற விடயங்களை எதிர்த்து மக்கள் நாடு பரந்த ரீதியில் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போது எவ்வித கூச்சமுமின்றி எரிபொருட்கள், சமையல் எரிவாயு என்பனவற்றின் விலைகள் ரூபாக்காளாலன்றி சில மடங்குகளால் அதிகரிக்கப்பட்டுள்ளன. அவ்வதிகாரிப்புக் காரணமாக ஏனைய சகல பொருட்களின் விலைகளும் இயல்பாகவே அதிகரிக்கின்றன.
இந்த நிலையிலும் கூட சர்வதேச நாணய நிதியம் வரிகளை அதிகரிக்க வேண்டுமென ஆலோசனை வழங்கியுள்ளது.
1974ம் ஆண்டு ஸ்ரீமாவோ அரசாங்கம் உலக வங்கியில் நிபந்தனைகளை நிறைவேற்றாதபோது உலக வங்கி சகல உதவிகளையும் நிறுத்தியது. அதன் காரணமாகப் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை எழுந்தது.
இந்த நிலையில் பிரதமர் துணிவுடன் உணவு, உடை போன்றவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்தி உள்ளூரிலேயே உற்பத்தி செய்ய மக்களை ஊக்குவித்தார். ரஷ்யா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்துக் கொடுத்ததுடன், ஈரான் மசகு எண்ணெயை வழங்கியது. ஜப்பான் உதவியுடன் டயர் தொழிற்சாலைகள் உருவாகின. மூன்றாம் உலக நாடுகள் பெருமளவில் இலங்கைத் தேயிலையைக் கொள்முதல் செய்தன.
இந்த நிலையில் மெல்ல மெல்ல இலங்கையின் பொருளாதார நெருக்கடி நீங்கியதுடன் இலங்கை சுயதேவைப் பொருளாதாரப் பூர்த்தியை நோக்கி முன்னேறியது. உலகச் சந்தையில் இலங்கை நாணயத்தின் பெறுமதி அதிகரித்தது.
ஆனால் இன்றைய ஆட்சியாளர்களுக்கு அதற்கான துணிவும் இல்லை, தெளிவான பார்வையுமில்லை. அதுமட்டுமின்றி ஆட்சி வகித்த காலங்களில் சுயதேவைப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் மூல வளங்களை அழித்து விட்டார்கள். அல்லது வெளி நாடுகளுக்குத் தாரை வார்த்து விட்டனர்.
எத்தனை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் சர்வதேச நாணய நிதியத்தின் கிடுகுப் பிடியிலிருந்து விடுபடாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. ஆட்சிமாற்றம், அமைச்சரவை மாற்றம் என்பதெல்லாம் மக்களைத் திசை திருப்ப ஏமாற்றும் நாடகமாகும் என்பதே உண்மையாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
03.05.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கொழும்பு