Monday 7th of October 2024 10:39:34 PM GMT

LANGUAGE - TAMIL
.
இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 5

இலங்கையை உலுக்கிய பொருளாதார நெருக்கடிகள் - 5


தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கிய துணிச்சலான பயணம் - நா.யோகேந்திரநாதன்!

1974ம் ஆண்டு திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்துக்கு மிகவும் சோதனையான ஒரு காலப்பகுதியாகவே விளங்கியது.

1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஜே.வி.பி. கிளர்ச்சியைப் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஏறக்குறைய 2 வருடங்கள் பிடித்தன. இக்காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடிகள் பெரும் தாக்கத்தைச் செலுத்தவில்லை. ஆனால் இராணுவச் செலவினங்கள் காரணமாகவும் ஏற்றுமதி வருமானத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாகவும் திறைசேரி காலியாகும் நிலை வேகமாக உருவாகிக்கொண்டு வந்தது.

இந்த நிலையில் உலக வங்கி தனது நிபந்தனைகளில் ஒன்றான அரச செலவினங்களைக் குறைத்தல் என்பதை நிறைவேற்றும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது.

அரச செலவினங்களைக் குறைத்தல் என்றால் அரச ஊழியர்களைக் குறைத்தல், அவர்களின் ஊதியங்களை மட்டுப்படுத்தல், இலவச மருத்துவம், இலவசக் கல்வி போன்றவற்றை ரத்துச் செய்தல், சில அத்தியாவசிய பொருட்களுக்கு அரச மானியம் வழங்கலை நிறுத்துதல் என்பவற்றை அமுல்படுத்துவதாகும்.

அதிலும் குறிப்பாக விவசாய உற்பத்திக்கு ஒரு அந்தர் பசளையின் விலை 50 ரூபாவாக இருந்தபோது அரசாங்கம் 30 ரூபா மானியம் வழங்கி விவசாயிகளுக்கு 20 ரூபாவுக்கே கொடுத்தது.

அப்போது நிதியமைச்சராக இருந்த என்.எம்.பெரேரா பசளை மானியத்தை நிறுத்தி உலக வங்கியின் நிபந்தனையை நிறைவேற்ற வேண்டுமெனப் பிடிவாதம் பிடித்தார். அதை விவசாய அமைச்சராயிருந்த ஹெக்டர் கொப்பேகடுவ கடுமையாக எதிர்த்தார். அந்த நிலையில் என்.எம்.பெரேராவின் கோரிக்கையை அமைச்சரவையும் நிராகரித்து விட்டது.

இந்த நிலையில் உலக வங்கி தனது உதவிகளைத் திடீரென நிறுத்திக் கொண்டது. ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கியிருந்த அரசாங்கம் மேலும் சிக்கலுக்கு உள்ளாகியது. அதுமட்டுமின்றி என்.எம்.பெரேரா குழுவினர் ஏனைய அமைச்சர்களுடன் ஒத்துழைக்க மறுத்துமுரண்பட்டனர்.

நிதி நெருக்கடி மற்றும் அரசாங்கத்திற்குள் எழுந்த முரண்பாடு என நெருக்கடிகள் ஒரு புறமும் மறுபுறம் தொழிற் சங்கங்களின் சம்பள உயர்வுப் போராட்டங்கள், ஜே.ஆரின் அரசு எதிர்ப்புப் போராட்டங்கள் எனப் பல்வேறு சிக்கல்களுக்கு அரசு முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

இந்த நிலையில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஏகாதிபத்திய நாடுகளிடமும் உலக வங்கியிடமும் சரணடைவாரெனவே எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாதையைில் மேலும் தீவிரமாக இறங்கினார்.

ஆடம்பர வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்கள், தைக்கப்பட்ட ஆடைகள், நெசவு உற்பத்தியப் பொருட்கள். உப உணவுப் பொருட்கள் என்பனவற்றின் இறக்குமதிகள் வெகுவாகக் குறைக்கப்பட்டன. தேயிலை, இறப்பர் போன்ற ஏற்றுமதிப் பொருட்களுக்குப் புதிய சந்தைகள் தேடப்பட்டன. உள்ளூர் கைத்தொழில்கள், சிறு கைத்தொழில் என்பனவற்றுக்கும் கடன் உதவி, சந்தை வாய்ப்புகள் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.

அதாவது நாடு சொந்தக் கால்களில் தங்கி நிற்கும் வகையிலான அபிவிருத்தியை நோக்கிய முறையில் நாடு முன்னேற ஆரம்பித்தது.

ஆனால் இந்த மாற்றத்துக்கான காலகட்டம் மிகவும் நெருக்கடிமிக்கதாகவே விளங்கியது. பாவனைப் பொருட்களுக்கான தட்டுப்பாடு பொருட்களின் விலையுயர்வு என்பவற்றால் மக்கள் பெரும் இன்னல்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக கோதுமையைப் போதியளவு பெற முடியாத நிலையில் கோதுமைக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவியது. அதன் காரணமாக நகரப் புற மக்கள் பொதுவாகவே பாணைத் தமது காலை உணவாகக் கொண்டிருந்ததால் தினமும் பாணுக்கு வரிசையில் நிற்க வேண்டிய நிலை எழுந்தது. அதே போன்று மலையக மக்களின் பிரதான உணவு கோதுமை ரொட்டி என்பதால் மிகவும் சிரமப்பட்டனர்.

இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து எதிர்க்கட்சிகள் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும், சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தங்களையும் மேற்கொண்டன. 1975ம் ஆண்டு இடம்பெற்ற தொண்டமான் தலைமையிலான மலையகத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஆட்சியையே திக்குமுக்காட வைத்தது.

இவ்வாறு நகர்ப்புற மக்களும், மமைலயக மக்களும் சில நெருக்கடிகளைச் சந்தித்தபோதும், சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் சிறப்பாகக் கிராமிய மக்கள் மத்தியில் கணிசமான முன்னேற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன.

கோதுமைத் தட்டுப்பாடு காரணமாக அரிசி, சோயா, கௌபி, குரக்கன் போன்ற உணவுப் பொருட்களுக்கான கேள்விகள் அதிகரித்தன. நெல்லு வர்த்தகத்தில் எழும் கறுப்புச் சந்தையை இல்லாமற் செய்யும் நோக்குடன் மாவட்டங்களுக்கு வெளியே தனியார் 2 புசல் நெல்லுக்கு மேல் கொண்டு செல்வது தடை செய்யப்பட்டது. நெல்லு வியாபாரம் முழுவதுமே பல நோக்குக் கூட்டுறவுச் சங்கங்களே மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டன. அதே வேளையில். மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றின் இறக்குமதி தடை செய்யப்பட்டதால் அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகள் அவற்றை நியாயமான விலைக்கு விற்க வசதி படைத்தவர்களாகும் நிலை உருவானது. இவ்வாறு நோர்வேயின் உதவியுடன் மீன்பிடித்துறைகள் அமைக்கப்பட்டும் படகு கட்டுதல் உட்பட மீன்பிடி உபகரணங்கள் உற்பத்தி செய்யப்பட்டும் மீன்பிடித் தொழில் வேகமாக வளர்ச்சி்யடைந்தது. இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் சுயதொழில் மூலம் விவசாயிகள், மீனவர்கள் ஆகியோரின் சுயதொழில் முயற்சிகளின் முன்னேற்றம் ஏற்பட்டதுடன், அவர்கள் வசதி படைத்தவர்களாகவும் உழவு இயந்திரங்கள், லொறிகள் போன்றவற்றைக் கொள்முதல் செய்யுமளவுக்கு வசதி படைத்தவர்களானார்கள்.

வெளிநாடுகளிலிருந்து ஆடம்பர ஆடைகள் இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டதுடன் அவற்றுக்கான வரி அதிகரிக்கப்பட்டது. நெசவு இயந்திரங்களை இறக்குமதி செய்ய வரி இரத்துச் செய்யப்பட்டது.

அதன் காரணமாக வெள்ளவத்தை, துல்கிரிய, மினுவாங்கொட போன்ற இடங்களில் பெரும் ஆடைத்தொழிற்சாலைகள் உருவாகின. வடபகுதியில் தின்னைவேலி, வல்லை, பண்டைத்தரிப்பு, தெல்லிப்பளை ஆகிய பகுதிகளில் இயந்திர நெசவுசாலைகள் உருவாகின. அதுமட்டுமின்றி வடக்கிலும் கிழக்கிலும் கைத்தறி நெசவாலைகள் ஆரம்பிக்கப்பட்டு சாரம், துவாய், படுக்கை விரிப்பு என்பன உருவாக்கப்பட்டன. அவற்றைப் பலநோக்குக் கூட்டுறவச் சங்கங்களே வாங்கி சந்தைப்படுத்தின. அவ்வகையில் ஆடை உற்பத்தியில் ஒரு வேக வளர்ச்சி ஏற்பட்டதுடன் கணிசமான வேலை வாய்ப்புகளும், சுயதொழில் பெருக்கங்களும் உருவாகின.

முன்பு இறக்குமதி செய்யப்படும் ஹென்லி, ரீகல், மன்கற்றன் சேட்களே பாவனையில் இருந்தன. தைக்கப்பட்ட ஆடைகள் தடை செய்யப்பட்டதுடன் உள்நாட்டில் ஆடை உற்பத்திக்கு செல்வாக்கு உருவாகி முஸ்லிம்கள் முன்னேற உதவியது.

அக்காலத்தில் வடக்கில் அலுமினியத் தொழிற்சாலைகள், கண்ணாடித் தொழிற்சாலை, கூரைத் தகடு தொழிற்சாலை, சவர்க்காரத் தொழிற்சாலை, சோடா உற்பத்தி எனப் பல கைத்தொழில்கள் உருவாகி வளர்ந்தன.

அதேவேளையில் ஆடம்பர வாகனங்கள், வாகன உதிரிப்பாகங்கள் என்பனவற்றின் இறக்குமதி கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் சாதாரண “கராஜ்கள்“ சிறு தொழிற்சாலைகளாக மாறின. பழைய உதிரிப் பாகங்களையே மீண்டும் வார்த்துக் கடைந்து உதிரிப்பாகங்கள் உருவாக்கப்பட்டன. பழைய வாகனங்கள் மீளுருவாக்கம் செய்யப்பட்டன. பழைய ரயர்கள் கூட மீள் நிரப்புச் செய்யப்பட்டுப் புதியதாக்கப்பட்டன.

சீனி இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நிலையில் பனஞ்சீனி உற்பத்தி செய்யப்பட்டது. பனங்கட்டி உற்பத்தி ஒரு குடிசைக் கைத்தொழிலாக முன்னேற்றம் கண்டது. அதனால் சீவல் தொழிலாளர்களும், அவர்கள் குடும்பங்களும் முன்னேறும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

இவ்வாறு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் பொருளாதார நெருக்கடியை வெற்றி கொள்ள தேசிய உற்பத்திகளை ஊக்குவிக்கும் கொள்கைகளை மேற்கொண்ட நிலையில் விவசாயிகள், சிறு கைத்தொழிலாளர்கள், மீனவர்கள் என உழைக்கும் மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தையும் கணிசமான அளவில் சுபீட்சத்தையும் முன்கொண்டு சென்றது.

இவ்வாறு உள்நாட்டு நெருக்கடிகளைச் சமாளித்து முன் சென்ற போதிலும் சர்வதேச அளவில் உருவாக்கப்பட்ட நெருக்கடிகளுக்கும் முகம் கொடுக்க வேண்டியிருந்தது.

அந்த விடயத்தில் இலங்கைக்க அணிசேரா நாடுகள் உட்பட சில நாடுகள் உதவி வழங்கின. அமெரிக்கா திட்டமிட்டு உலகச் சந்தையில் தேயிலை விலையை விழுத்தியபோது, ஈராக், லிபியா ஆகிய நாடுகள் கூடுதலான விலைக்குத் தேயிலையை வாங்கின. சோவியத் யூனியன் ஒரு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை உருவாக்கிக் கொடுக்க ஈரான் குறைந்த விலையில் மசகு எண்ணெய்யை விநியோகித்தது. ஜப்பானின் ஒத்துழைப்புடன் களனியில் வாகனங்களுக்கான ரயர்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டதுடன், கைக்கிள்களுக்கான லோட்டஸ் டயரும் உற்பத்தி செய்யப்பட்டது.

அணிசேரா நாடுகளின் முதலாவது மாநாடு 1965ல் யூகோஸ்லாவியாவின் தலைநகர் பெல்கிரேட்டில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்ட 12 நாடுகளில் இலங்கை முக்கிய பங்கு வகித்தது. அதன் இரண்டாவது மாநாடு 1975ல் கொழும்பில் இடம்பெற்றபோது அதில் ஆசியா, ஆபிரிக்கா, லத்தீன் அமெரிக்கா என ஏராளமான நாடுகள் கலந்து கொண்டன. கொழும்பில் இடம்பெற்ற இந்த மாநாட்டில் யூகோஸ்லாவிய அதிபர் டிட்டோ, லிபியாவின் கடாபி, ஈராக்கின் சதாம் ஹுசைன் உட்பட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் அணிசேரா நாடுகளின் தலைவியாகத் ஸ்ரீமாவோ தெரிவு செய்யப்பட்டார். அவரின் துணிச்சலான ஏகாதிபத்திய எதிர்ப்பு நடவடிக்கைகளும் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியமைப்பில் அவர் காட்டிய உத்வேகமும் மூன்றாம் உலக நாடுகள் மத்தியில் அவருக்கு தனியான கௌரவத்தை ஏற்படுத்தின. அதுமட்டுமின்றி அந்த நாடுகள் இலங்கையுடன் பொருளாதார உறவுகளை மேம்படுத்தின.

இவ்வாறான தேசிய உற்பத்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் பொருளாதாரக் கொள்கையை மேற்கொண்ட காரணத்தால் இலங்கையில் நாணயப் பெறுமதி அதிகரித்தது. இலங்கையின் 80 சதத்துக்கு இந்தியாவின் 1 ரூபா சமனாக இருந்தது. அதனால் வாழ்க்கைச் செலவு உயர்வு தடுக்கப்பட்டது.

இவ்வாறு இலங்கையை ஏகாதிபத்திய நாடுகளின் கரங்களில் விழுத்தத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட பொருளாதார நெருக்கடிகள், உலக வங்கியின் அழுத்தங்கள் என்பன தோல்வியிலேயே முடிந்தன. திருமதி ஸ்ரீமாவோ எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் மூலம் நாடு தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி முன்னேற ஆரம்பித்தது.

அதன் காரணமாக விவசாயிகள், சுயதொழில் செய்பவர்கள், கிராமியக் கைத்தொழிலாளர்கள், சிறு கைத்தொழிலாளர்கள், தேசிய கைத்தொழில்கள், தேசியக் கலை இலக்கிய முயற்சிகள் எனப் பல்வேறு முனைகளிலும் பாரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டன. அது மட்டுமின்றி அவர்களின் வாழ்க்கைத் தரமும் உயர்ந்தது.

ஆனால் கோதுமைத் தட்டுப்பாடு, பாணுக்கு வரிசையாக நிற்பது, ஆடம்பரப் பொருட்களைப் பெறமுடியாமை, மிளகாய், வெங்காயம், மரவள்ளி போன்ற பொருட்களின் விலைகள் அதிகரித்தமை என்பவற்றை வைத்து அரசாங்கத்துக்கு எதிராகப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் வடக்குக் கிழக்கிலும் தனிநாட்டுக் கோரிக்கை முன் வைக்கப்பட்டு, தமிழ் மக்கள் பெற்ற நன்மைகள் உணர விடப்படாமல் அரசுக்கு எதிரான உணர்வுகள் மூட்டி விடப்பட்டன. தமிழ் மக்களும் மலையக மக்களும் அரசியலமைப்பு ரீதியாக, இன ரீதியில் வஞ்சிக்கப்பட்டமையை மறுத்துவிட முடியாது. அதேவேளையில் தமிழ், முஸ்லிம் மக்கள் பொருளாதார ரீதியில் பெற்ற நன்மைகளையும் அலட்சியம் செய்யமுடியாது.

குறிப்பாக ப.நோ.கூ.சங்கங்கள் மூலம் ஒருவருக்கு ½ கொத்து அரிசி இலவசமாகவும், பங்கீட்டு அட்டைக்கு குரக்கன், கௌபி, சோயா, ரவை என்பன மலிவு விலையிலும்டி வழங்கப்பட்டன.

ஆனால் ஐ.தே.கட்சி, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழர் விடுதலைக் கூட்டணி, இடதுசாரிகள் ஆகிய தரப்பினர் நல்ல விடயங்களை மறைத்து தவறுகளைப் பெரிதுபடுத்தி, அரசாங்கத்துக்கு எதிரான வெறுப்பை மக்கள் மத்தியில் வளர்த்தனர். அதன் காரணமாக 1977ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி படுதோல்வியடைந்து ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்தது.

அமெரிக்க சார்பாளரான ஜே.ஆர்.ஜயவர்த்தனவின் தலைமையில் ஐ.தே.கட்சி ஆட்சிக்கு வந்ததுமே திறந்த பொருளாதாரக் கொள்கை அமுலுக்குக் கொண்டு வரப்பட்டு தன்னிறைவுப் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது.

எப்படியிருந்தபோதிலும் 1970-1977 காலப்பகுதியில் இலங்கை மீது திணிக்கப்பட்ட இரண்டாவது பொருளாதார நெருக்கடி திருமதி ஸ்ரீமாவோ தலைமையிலான ஆட்சியால் வெற்றி கொள்ளப்பட்டதுடன் எதிர்காலத்தில் எந்தவொரு சர்வதேச நெருக்கடியாலும் இலங்கை வீழ்ந்து விடாதவாறு தன்னிறைவுப் பூர்த்திப் பொருளாதாரத்தை நோக்கி வளர்ச்சி பெற்றது.

ஆனால் 1977 ஆட்சிக்கு வந்த ஜே.ஆர்.ஜயவர்த்தன அதைச் சீர்குலைத்து இலங்கையைச் சர்வதேச வர்த்தக வலைக்குள் மாட்டி விட்டார்.

அது வளர்ச்சி பெற்று இன்று நெருக்கடி தீர முடியாதளவுக்கு உச்சம் பெற்றுவிட்டது. இலங்கை சர்வதேச நாடுகளும் உலக வங்கியும் கடன்களால் பங்கு போடப்படும் மோசமான நிலை உருவாகி விட்டது.

தொடரும்....

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE