1953 ஆகஸ்ட் 12ம் நாள் -
இது இலங்கையின் உழைக்கும் மக்களின் வரலாற்றில் ஒரு தனியான தடத்தைப் பதித்த நாளாகும்.
டட்லி சேனநாயக்கவைப் பிரதமராகவும் ஜே.ஆர்.ஜயவர்த்தனவை நிதியமைச்சராகவும் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி உலக வங்கியின் ஆலோசனைக்கமைய, அப்போது முகம் கொடுத்த பொருளாதார நெருக்கடியைத் தீர்க்கும் வகையில் ஆகஸ்ட் 7ம் நாள் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அதற்கமைய 25 சதம் விற்ற ஒரு கொத்து அரிசியின் விலை 70 சதமாக உயர்த்தப்பட்டதுடன், ஏனைய பாவனைப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டது மட்டுமின்றி பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மதிய உணவும் நிறுத்தப்பட்டது. மேலும் போக்குவரத்து மற்றும் தபால் கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டன.
ஏற்கனவே இந்த விலையுயர்வுக்கு எதிராக ஜுலை 20ம் திகதி 3 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அதைப் பொருட்படுத்தாமலே வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டது.
எனவே ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி நாடு பரந்தளவில் வேலை நிறுத்தங்கள் ஆர்ப்பாட்டப் பேரணிகள், சுற்றி வளைப்புகள் என்பன இடம்பெற்றன. நாட்டின் இயல்பு நடவடிக்கைகள் முற்றாகவே சீர்குலைந்ததுடன் நகர்ப்புறங்களின் வீதிகளெங்கும் பெரும் அமைதியின்மை ஏற்பட்டதுடன், எங்கும் ஒரு கொந்தளிப்பான நிலை உருவாகியது. கவர்னர் மாளிகை, பிரதமரின் அலரி மாளிகை, பிரதம தபாலகம், மத்திய வங்கி, ஏரிக் கரைப் பத்திரிகை நிறுவனம் ஆகிய கிளர்ந்தெழுந்த மக்களால் சுற்றி வளைக்கப்பட்டன.
இந்த நிலையில் கொழும்பில் நாடாளுமன்றத்தில் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்த அஞ்சிய அரசாங்கம் கொழும்புத் துறைமுகத்திலுள்ள பிரித்தானிய போர்க் கப்பலில் நடத்தி அவசரகாலச் சட்டத்தைப் பிரகடனம் செய்ததுடன் இராணுவச் சட்டத்தையும் அமுலுக்குக் கொண்டு வந்தது. எனினும் மக்கள் அஞ்சிப் பின்வாங்கி விடாத நிலையில் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. அந்த நிலையில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பொது மக்கள் கொல்லப்படுகின்றனர்.
இந்த நிலையில் பிரதமர் டட்லி சேனநாயக்க தனது பதவியை ராஜினாமாச் செய்து பாதுகாப்பு, உணவு அமைச்சராயிருந்த ஒலிவர் குணதிலகவிடம் ஒப்படைக்கிறார். அவர் ஜே.ஆர்.ஜயவர்த்தனவை நிதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கியதுடன் அவரால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தையும் ரத்துச் செய்கிறார். அத்துடன் அரிசி விலை உட்பட பாவனைப் பொருட்கள் விலை, போக்குவரத்து மற்றும் தபால் கட்டணங்கள் உட்பட அனைத்தும் குறைக்கப்பட்டுப் பழைய நிலைக்குக் கொண்டு வரப்பட்டதுடன், பாடசாலை பிள்ளைகளின் மதிய உணவும் மீண்டும் வழங்க ஆரம்பிக்கப்படுகிறது.
பொருளாதார நெருக்கடியை தவிர்க்க மக்களின் தலையில் சுமைகளை சுமத்த முயன்ற அரசாங்கத்தின் திட்டத்தை முறியடித்த சாதனை 1953 ஹர்த்தால் எழுச்சிப் போராட்டத்தின் மகத்துவமாகும். உழைக்கும் மக்களின் தலைமையில் மக்கள் எழுச்சி பெறும்போது எந்த அநீதிகளையும் உடைத்தெறிந்து விடமுடியும் என்பதற்கு 1953 ஹர்த்தால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். அதுமட்டுமின்றி மக்களின் எழுச்சியின் முன்பு எவ்வளவு பலம் வாய்ந்த ஆயுத ஒடுக்குமுறையும் தோல்வியையே சந்திக்கும் என்பது இலங்கையில் மட்டுமின்றி உலகெங்கும் இடம்பெற்ற வரலாறாகும்.
1953ம் ஆண்டு உருவான மக்கள் பேரெழுச்சி 69 வருடங்களின் பின்பு இலங்கையில் உருவாகியுள்ளது. அரிசி, கோதுமை மா, பாண், சீனி மற்றும் சமையல் எரிவாயு, பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற எரிபொருட்கள் என்பனவற்றின் தட்டுப்பாடு, பல மடங்கிலான விலையுயர்வு என்பன காரணமாக மக்கள் மத்தியில் உருவான எதிர்ப்பலை ஒரு கொந்தளிப்பு நிலையை உருவாக்கியது.
எனவே பாவனைப் பொருட்களுக்கு வரிசையில் நிற்கும்போது குழப்பங்கள், வீதிமறிப்புப் போராட்டங்கள் என ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மெல்ல, மெல்லத் தீவிரமடைய ஆரம்பித்தன. மக்கள் வீதியில் இறங்கி விலைவாசிகள் உயர்த்தப்பட்டமைக்கு எதிராகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கும்போதே அவை பொருட்படுத்தப்படாது மீண்டும் மீண்டும் எரிபொருள் விலைகள் பல மடங்காக அதிகரிக்கப்பட்ட நிலையில் போக்குவரத்துக் கட்டணங்கள் மட்டுமின்றிச் சகல பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டன.
எவ்வாறு ஜே.ஆர்.ஜயவர்த்தன விலையுயர்வுக்கு எதிராக தொழிலாளர்கள் நடத்திய வெற்றிகரமான அடையாள வேலைநிறுத்தப் பொருட்படுத்தாமல் வரவு செலவுத் தி்ட்டத்தை நிறைவேற்றினாரோ அவ்வாறே இன்றைய அரசாங்கத்திலும் மக்களின் போராட்டங்களை உதாசீனம் செய்து மீண்டும் வரிகளை அதிகரிக்கும் வகையில் ஒரு புதிய வரவு செலவுத் தி்ட்டத்தைக் கொண்டு வரப்போவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.
எனவே 1953ம் ஆண்டு ஐ.தே.கட்சி எதிர்கொண்ட பெரும் எதிர்ப்பை ஒத்த பேரெழுச்சியை இன்றைய அரசும் சந்திக்க வேண்டி வந்தது. அமைச்சரவையில் பிரதமர் தவிர்ந்த ஏனைய அமைச்சர்கள் பதவி விலகி புதியதொரு அமைச்சரவை உருவாக்குவதன் மூலம் மக்களை ஏமாற்ற எடுக்கப்பட்ட முயற்சிகள் படுதோல்வியில் முடிவடைந்தன. எனவே மீரிஹானவில் ஜனாதிபதி இல்லத்தைச் சுற்றி வளைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்சமயமும் ஒரு மாதத்தை எட்டும் நிலையில் காலி்முகத் திடலில் “கோத்தா கோ ஹோம்” என்ற சுலோகத்துடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் பிரதமரின் அலரி மாளிகையைச் சுற்றி ”மைனா கோ ஹோம்” என்ற போராட்டமும் நாடாளுமன்ற நுழைவாயில் “ஹெரா கோ ஹோம்” என்ற போராட்டமும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. ரம்புக்கணை, அம்பாறை துப்பாக்கிப் பிரயோகங்கள் மாணவர் மீதான கண்ணீர்ப் புகை, நீர்த்தாரைப் பிரயோகங்கள் என்பனவற்றால் மக்களின் போராட்டத் தீவிரத்தைக் குறைக்க முடியவில்லை.
இந்த நிலையில் தான் கடந்த மே மாதம் 6ம் திகதி 1953 மாபெரும் ஹர்த்தால் போன்ற ஒரு மக்கள் பேரெழுச்சி மேற்கொள்ளப்பட்டது.
இதில் நாட்லுள்ள 2000இற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், மலையக மக்கள், சாதாரண பொது மக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள் என முழுநாடுமே பங்கு கொண்டு கொதித்தெழுந்தது. மாணவர்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப் புகைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டபோதும் அவர்களின் போராட்டம் தொடர்ந்தது. அந்த நிலையில் அன்றிரவ 12 மணியுடன் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
அவசரமாகக் கூட்டப்பட்ட அமைச்சரவையில் அமைச்சர்கள் ராஜினாமாச் செய்து புதிய அமைச்சரவை உருவாக்கப்படவேண்டுமெனவும் பிரதமர் ராஜினாமாச் செய்யவேண்டுமெனவும் கோரப்பட்டதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
எத்தனை சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டாலும் எத்தனை அமைச்சர்கள் மாற்றப்பட்டாலும் ”கோத்தா வீட்டுக்குப் போ” என்ற கோஷங்களுடன் போராட்டங்கள் மேலும், மேலும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றன.
69 ஆண்டுகளுக்குப் பின்பு இன்றைய ஆட்சியாளர்களின் மக்கள் விரோத நடவடிக்கைகளும், லஞ்சம், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் போன்ற மூன்றாம் தர நடவடிக்கைகளும் மீண்டுமொரு மக்கள் பேரெழுச்சியை ஏற்படுத்தியுள்ளன.
ரம்புக்கண, அம்பாறை துப்பாக்கிப் பிரயோகங்களும் மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களும், போராட்டங்களை எதிர்காலத்தில் அரசாங்கம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம்.
ஆனால் எவ்வித ஒடுக்குமுறையும் மக்களின் எழுச்சிக்கு முன் நின்று பிடிக்க முடியாது என்பதை 1953 ஹர்த்தால் மட்டுமின்றி உலக வரலாறு முழுவதுமே காணக்கூடியதாயுள்ளதாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
10.05.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை