Friday 10th of May 2024 09:22:21 PM GMT

LANGUAGE - TAMIL
.
உக்ரைனின் பொறிக்குள் சிக்கிய ரஷ்யப் படை; கிழக்கில் 500 பேர் வரை பலி - ஆயுதங்கள் அழிப்பு

உக்ரைனின் பொறிக்குள் சிக்கிய ரஷ்யப் படை; கிழக்கில் 500 பேர் வரை பலி - ஆயுதங்கள் அழிப்பு


கிழக்கு உக்ரைன் - டான்பாஸ் பிராந்தியத்தில் ஓடும் சிவா்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றைக் (siversky donets river) கடந்து முன்னேற ரஷ்யப் படைகள் மேற்கொண்ட முயற்சி உக்ரேனியப் படைகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இந்த முறியடிப்புத் தாக்குதலில் சுமார் 500 வரையான ரஷ்யப் படைகள் கொல்லப்பட்டதாகவும், படைப்பிரிவின் ஹெலிகப்டர்கள், வேகப் படகுகள் மற்றும் கவச வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஆயுதங்கள் அழிக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

மே 8 ஆம் திகதி முதல் சிவா்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றைக் கடக்க ரஷ்யப் படைகள் 3 முறை முயற்சிகளில் ஈடுபட்டன. நேற்று வெள்ளிக்கிழமையும் இந்தப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி உக்ரேனிய படைகளில் கடும் தாக்குதலால் முறியடிக்கப்பட்டதாக உக்ரைனின் லுஹான்ஸ்க் பிராந்திய இராணுவ நிர்வாக தலைவரான செர்ஹி ஹேடே (Serhiy Hayday) தெரிவித்தார்.

கிழக்கு உக்ரேனிய நகரத்தை சுற்றி வளைப்பதற்காக சிவர்ஸ்கி டோனெட்ஸை கடக்க ரஷ்யா கடுமையாக முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும் உக்ரேனிய படைகளின் கடும் முறியடிப்புத் தாக்குதலால் ரஷ்யப் படைகளின் முயற்சி முறியடிக்கப்பட்டது. அத்துடன், ரஷ்யப் படைகள் பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளன எனவும் செர்ஹி ஹேடே தெரிவித்தார்.

இதேவேளை, ரஷ்யப் படைகள் ஆற்றைக் கடக்கும் வரை காத்திருந்த உக்ரேனியப் படைகள், ஆற்றைக் கடந்து சென்றவுடன், நகரத்துக்குள் நுழைவதற்கான பாலத்தை தகர்த்தன. இதனால் ரஷ்யப் படைகள் பொறியில் சிக்கின என உக்ரைன் பாதுகாப்பு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெளியாகியுள்ள புகைப்படங்களில் டசின் கணக்கான கவச வாகனங்கள் டோனெட்ஸ் ஆற்றின் கரையில் எரிந்து கிடப்படைக் காண முடிகிறது.

உக்ரைனின் கடுமையான எதிா்ப்புக்கிடையே சிவா்ஸ்கி டோனெட்ஸ் ஆற்றை கடப்பது ஆபத்தான முயற்சி என ரஷ்யப் படைத் தளபதிகள் முன்னரே எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் கிழக்கு உக்ரைனில் மிக வேகமாக முன்னேற வேண்டும் என்பதால் ஆபத்தைக் கருதாது நடவடிக்கையில் இறக்குமாறு மேலிடத்திலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் ஏனைய பகுதிகளில் இருந்து பின்வாங்கிய ரஷ்யப் படையினா் தற்போது முழுமையாக டான்பாஸ் பிராந்தியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர். எனினும் இந்தப் பிராந்தியத்திலும் ரஷ்யா திட்டமிட்டவாறு முன்னேற முடியாதவாறு உக்ரேனியப் படைகள் கடும் எதிர்த் தாக்குதலை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE