Saturday 12th of October 2024 02:30:47 AM GMT

LANGUAGE - TAMIL
.
ஒடுக்குமுறையாளர்களின் இரு ஆயுதங்கள் - நா.யோகேந்திரநாதன்!

ஒடுக்குமுறையாளர்களின் இரு ஆயுதங்கள் - நா.யோகேந்திரநாதன்!


பாதுகாப்புக் கருதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் அவர்கள் திருகோணமலை கடற்படை முனையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலர் கமல் குணரட்ன அவர்கள் அறிவித்துள்ளார். அலரி மாளிகைக்குள் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட ஒரு சிலர் அங்கிருந்து வெளியேறி வந்து அலரி மாளிகைக்கு முன் “மைனா கோ ஹோம்” போராட்டத்தை அமைதி வழியில் மேற்கொண்டிருந்த பொது மக்கள் மீதும் காலி முகத்திடலில் “கோத்தா கோ ஹோம்” போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்த மக்கள் மீதும் வன்முறைத் தாக்குதல்களை மேற்கொண்டனர். போராட்டத்தில் ஏற்கனவே அமைதி வழியில் கடந்த ஒரு மாதமாகக் கலந்து கொண்டிருந்த மக்கள் தவிர்க்க முடியாமல் காடையர்கள் மீது தாங்களும் திருப்பித் தாக்குதல்களை மேற்கொண்டனர்.

ஏற்கனவே அலரி மாளிகையில் குண்டர் கூட்டத்தின் முன்பு தனக்கு முதலாவது நாடே, இரண்டாவதும் நாடே, மூன்றாவதும் நாடே என உணர்ச்சி பொங்க உரையாற்றிய மஹிந்த ராஜபக்ஷ், மேற்படி வன்முறைகள் வெடித்ததையடுத்து அலரி மாளிகையை விட்டு இரகசியமாக வெளியேறி விட்டார்.

ஆனால் அவர் திருகோணமலை கடற்படை முகாமில் மறைந்திருப்பதாகக் கூறி மக்கள் அம்முகாமை 150 படகுகளில் சுற்றி வளைத்துள்ளனர்.

இந்த நிலையில்தான் பாதுகாப்புச் செயலர் பாதுகாப்புக் கருதி முன்னாள் பிரதமரை திருகோணமலை கடற்படை முனையத்தில் தங்க வைத்துள்ளதாக அறிவித்துள்ளார். கடந்த ஒரு மாத காலமாக மக்கள் தமக்கு மேல் தொடர்ந்து சுமத்தப்படும் பொருளாதார நெருக்கடிகளைத் தாங்க முடியாத நிலையில் ஜனாதிபதி, பிரதமர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரையும் பதவிகளை விட்டு வெளியேறி வீட்டுக்குச் செல்லும்படி அமைதி வழியில் போராடி வருகின்றனர். போராட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம், கண்ணீர்ப் புகை என்பன மேற்கொள்ளப்பட்ட போதும் மக்கள் வன்முறைகளில் ஈடுபடவில்லை.

ஆனால், கடந்த 9ம் திகதி மாலை அலரி மாளிகைக்குள்ளிருந்து புறப்பட்ட குண்டர்கள் போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொண்ட தாக்குதல்களினால் அவர்களும் திருப்பித்தாக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்.

எனவே இம்மோதலில் 250இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் அவரின் பாதுகாவலரும் உட்பட 9 பேர் கொல்லப்பட்டனர். 55 வீடுகள் சேதமாக்கப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களும் தாக்கப்பட்டன.

இந்த நிலையில்தான் பிரதமர் அலரி மாளிகையிலிருந்து உயிர் தப்பி ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், செயலகங்கள், வர்த்தக நிலையங்கள் என்பனவும் தாக்கப்பட்டன.

எல்லாவற்றிலும் மேலாக ராஜபக்ஷ் சகோதரர்களின் தந்தையாரான டி.ஏ.ராஜபக்ஷ்வின் சிலை உடைத்து விழுத்தப்பட்டதுடன் அந்த மணிமண்டபமும் உடைத்து சேதமாக்கப்பட்டது.

அது மட்டுமின்றி இந்த மக்கள் விரோத சக்திகளைத் தேடி மக்கள் வாகனங்களை வீதிக்கு வீதி மறித்து சோதனை நடவடிக்கைகளில் ஈடபட்டும் வருகின்றனர்.

அவசர கால நிலைமையிலும் ஊரடங்குச் சட்டம் பிரப்பிக்கப்பட்ட போதிலும் மக்கள் போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் தான் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா மக்கள் வன்முறைகளில் ஈடுபட்டால் சுடப்படுவார்கள் என எச்சரித்துள்ளார்.

இங்குதான் மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டிய தேவையை புரிந்து கொள்ளவேண்டும். ராஜபக்ஷ் குழுமத்தினர் தங்களுக்கும் சாதகமான நிலைமைகளை உருவாக்க இரு வழிகளைக் கையாள்வதுண்டு. ஒன்ற பாதுகாப்பின் பெயரால் மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கைகள் மற்றது, இன, மத முரண்பாடுகளை மூட்டிவிட்டு கொழுந்து விட்டெரிய வைத்து தமது காரியங்களை வெற்றி கொள்வது.

இப்போது ராஜபக்ஷ் குழுமத்தினருக்கு எதிராக எதிர்ப்புக் கூர்மையடைந்துள்ள நிலையில் அவர்கள் இந்த இரண்டில் ஒன்றையோ அல்லது இரண்டையுமோ கையில் எடுக்கத் தயங்கப் போவதில்லை.

காலிமுகத்திடலில் “கோத்தா கோ ஹோம்” போராட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் முன்னாள் கடற்படைத் தளபதியும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகர கூறிய ஒரு விடயம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

அவர் “காலி முகத்திடலில் தமிழீழத்துக்குப் பாதை அமைக்கப்படுமானால் பௌத்த மத, பௌத்த குருமார் அவமதிக்கப்பட்டால், தேசிய கீதம், தேசியக் கொடி என்பன அவமதிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

எரிவாயு, எரி பொருள், பால் மா போன்றவற்றின் தட்டுப்பாடு, அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பல மடங்கால் உயர்வு என்பனவற்றின் பாதிப்பால் மக்கள் சுமை தாங்க முடியாமல் நடத்தும் போராட்டத்தை புலம் பெயர் தமிழர்களின் பின்னணியில் சிங்கள, பௌத்த அரசாங்கத்துக்கு எதிரான போராட்டமாகக் கற்பிதம் செய்து திசை திருப்பும் நயவஞ்சக முயற்சிதான் இது.

அரசாங்கத்தின் கைக் கூலிகளே இராணுவத்தினர் மீது ஒரு கைக்குண்டை வீசி விட்டு மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளலாம்.

இப்படியான விடயங்களுக்கு இவர்கள் என்றுமே தயங்கப் போவதில்லை.

எனவே போராடும் மக்கள் இவ்வாறான நயவஞ்சக முயற்சிகளுக்கு எதிராக மிகமிக விழிப்புடன் செயற்பட வேண்டும்.

மக்களுக்கு எதிராக இராணுவ வன்முறைகளைப் பாவிப்பதோ இன வெறி நடவடிக்கைகளை மேற்கொள்வதோ ராஜபக்ஷ் குழுமத்திற்கு புதிய விடயமல்ல என்பதை போராடும் மக்கள் கவனத்திற் கொள்ளவேண்டும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

17.05.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை, கிழக்கு மாகாணம், கொழும்பு, திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE