Friday 26th of April 2024 05:51:05 AM GMT

LANGUAGE - TAMIL
-
அவுஸ்திரேலியாவில் அகதிகளை நிரந்தரமாக குடியமர்த்த இரு பிரதான கட்சிகளும் மறுப்பு!

அவுஸ்திரேலியாவில் அகதிகளை நிரந்தரமாக குடியமர்த்த இரு பிரதான கட்சிகளும் மறுப்பு!


அவுஸ்திரேலியா பொதுத் தேர்தல் நாளை மறுதினம் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் அங்குள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் நிலை தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் மௌனம் சாதித்து வருவதால் தமது எதிர்காலம் குறித்து புகலிடக்கோரிக்கையாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இரு பிரதான கட்சிகளும் தமக்கான தீர்வு தொடர்பில் எவ்வித கொள்கைகளையும் அறிவிக்காத பின்னணியில் நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காதபட்சத்தில் தமது எதிர்காலம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை என கல்வி கற்பதற்கான வேலை பார்ப்பதற்கான பிரிட்ஜிங் விசாவிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் மற்றும் அகதிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

படகு மூலம் அவுஸ்திரேலியா வருபவர்கள் நாட்டில் ஒருபோதும் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என்ற சட்டம் 2013ஆம் ஆண்டு கெவின் ரூட் அரசினால் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டுக்கு வந்தவர்கள் தொடர்பில், எவ்வித திட்டங்களும் அறிவிக்கப்படவில்லை.

குறித்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் பின்னர் அவுஸ்திரேலியா வந்தவர்களில் சுமார் 1380 பேர் இன்னமும் மீள்குடியேற்றப்படுவதற்காக காத்திருக்கின்றனர்.

நியூசிலாந்து-அவுஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின் கீழ் அடுத்த 3 ஆண்டுகளுக்கு சுமார் 450 அகதிகள் நியூசிலாந்தில் குடியமர்த்தப்படுவர். அதேநேரம் அமெரிக்கா- அவுஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தத்தின்கீழ் 250 பேர் அமெரிக்காவில் குடியமர்த்தப்படலாம்.

நியூசிலாந்து மற்றும் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களின் கீழ் மொத்தம் 700 பேர் மாத்திரமே குடியமர்த்தப்படலாம் என்கின்ற நிலையில், எஞ்சியுள்ள 500க்கும் மேற்பட்டவர்களின் எதிர்காலம் தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக அகதிகளை மூன்றாவது நாடொன்றில் குடியமர்த்துவது தொடர்பிலான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்படுவதற்கான வாக்குறுதிகளை வழங்குவதற்கு லேபர் மற்றும் லிபரல் கட்சிகள் மறுத்துள்ளன.

நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியாவில் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் வாழ்ந்துவரும் அகதிகளுக்கு, நிரந்தர விசா வழங்கப்படும் என லேபர் கட்சி அறிவித்துள்ளது.

ஆனால் 2013 ஜுலை 19க்கு பின்னர் இங்கு வந்து பிரிட்ஜிங் விசாவுடன் வாழ்ந்துவருபவர்கள் தொடர்பில் லேபர் கட்சி எவ்வித திட்டத்தையும் அறிவிக்கவில்லை.

அதேபோன்று தாம் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அகதிகள் கொள்கையில் எவ்வித மாற்றங்களும் இருக்காது என லிபரல் கூட்டணி அறிவித்துள்ளது.

இந்நிலையில் இரு பிரதான கட்சிகளும் தமக்கான தீர்வு தொடர்பில் எவ்வித கொள்கைகளையும் அறிவிக்காத பின்னணியில், நியூசிலாந்திலோ அல்லது அமெரிக்காவிலோ குடியமர்த்தப்படுவதற்கு சந்தர்ப்பம் கிடைக்காத பட்சத்தில் தமது எதிர்காலம் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை என பிரிட்ஜிங் விசாவிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த 1380 பேரில் பெரும்பாலானோர் உண்மையான அகதிகள் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களில் கிட்டத்தட்ட 200 பேர் நவுறு தீவில் உள்ள அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் அதேநேரம், ஏனையோர் பிரிட்ஜிங் விசாவுடன் அவுஸ்திரேலியாவில் வாழ்ந்துவருகின்றனர்.

இவ்வாறான நிலையில் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் குறித்த அகதிகள் தொடர்பில் கவனம்செலுத்த வேண்டுமென அவுஸ்திரேலிய அகதிகள் பேரவை வலியுறுத்தியுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: ஆஸ்திரேலியா



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE