Wednesday 24th of April 2024 07:11:17 PM GMT

LANGUAGE - TAMIL
.
ஜனாதிபதியைப் பாதுகாக்கும் பிரதமரும் பிரதமரைப் பாதுகாக்கும் எதிர்க்கட்சியினரும் - நா.யோகேந்திரநாதன்!

ஜனாதிபதியைப் பாதுகாக்கும் பிரதமரும் பிரதமரைப் பாதுகாக்கும் எதிர்க்கட்சியினரும் - நா.யோகேந்திரநாதன்!


இம்மாதம் 16ம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் எதிர்வரும் சில மாதங்கள் மிக மோசமானவையாக இருக்குமெனவும் அனைவரும் அர்ப்பணிப்புடன் இந்நிலைமைக்கு முகம் கொடுக்கத் தயாராயிருக்க வேண்டுமெனவும் அழைப்பு விடுத்திருந்தார். ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு, அதீதமான விலையுயர்வு என்பதால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் மேலும் நிலைமை மோசமடையுமென்றும் அதை முகம் கொடுக்க அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமெனவும் விடுக்கப்பட்ட அழைப்பு மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. காலிமுகத்திடல் உட்பட இன்றைய நெருக்கடி நிலைமைகளுக்கு எதிராக பல்வேறு பகுதிகளிலும் வெவ்வேறு விதமாகப் போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு பிரதமரின் உரையில் விமோசனம் தரத்தக்க அம்சங்கள் ஏதாவது இருக்குமென்ற எதிர்பார்ப்பு ஏமாற்றமாகவே முடிந்துள்ளது.

கடந்த 2019 ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தைக் கூடப் பெற்றுக்கொள்ளவில்லை. ரணில் விக்ரமசிங்கவும் தனது சொந்தத் தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. எனினும் அவர் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினரானார்.

ஜனாதிபதியையும் ராஜபக்ஷ் சகோதரர்களையும் ஆட்சிப் பதவியிலிருந்து வெளியேறும்படி மக்கள் நடத்திய தொடர் போராட்டங்களையடுத்து, கடந்த 9ம் திகதி அலரி மாளிகை மற்றும் காலிமுகத்திடல் ஆகிய இடங்களில் ஏற்பட்ட மோசமான சம்பவங்களையடுத்து மஹிந்த ராஜபக்ஷ் பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்தார். மக்கள் போராட்டத்தின் 2வது கோரிக்கையில் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்ட நிலையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வால் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டார்.

மக்களின் எதிர்ப்பின் காரணமாக மஹிந்த பதவி விலக ஏற்கனவே மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க அப்பதவியில் நியமிக்கப்பட்டார்.

தனக்குப் பின்னால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கூடக் கொண்டிராத ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும்படி ஜனாதிபதி எதிர்க்கட்சிகளைக் கோரினார். ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறு நிபந்தனைகளை முன்வைத்தனர். எனினும் தற்சமயம் நிபந்தனைகளைக் கைவிட்டு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுசன முன்னணியிலிருந்து விலகிய 10 கட்சிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய கட்சிகள் தாங்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லையெனவும், அரசாங்கத்தின் நல்ல நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளன. பொதுசன பெரமுனவும் தனது பூரண ஆதரவை ரணிலுக்கு வெளிப்படுத்தியுள்ளது. அதாவது 225 பேர் கொண்ட நாடாளுமன்றத்தில் ஜே.வி.பி.யைச் சேர்ந்த 6 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தவிர்ந்த ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேராதரவுடன் ரணில் விக்ரமசிங்க பிரதமர் சிம்மாசனத்தில் ஏறியுள்ளார்.

தற்சமயம் ஒரு மாதத்தைக் கடந்து இன்னும் வீரியம் குன்றாமல் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் “கோத்தா கோ ஹோம்” போராட்டம் ஆகாயத்திலிருந்து கொட்டப்பட்டதல்ல. அரிசி, பால்மா, சீனி என்பவற்றுக்கு செயற்கைத் தட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டு, விலைகள் அரச அனுசரணையுடன் அதிகரிக்கப்பட்டன. போராட்டங்கள் எரிபொருள், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பாவனைப் பொருட்கள் என்பனவற்றின் தட்டுப்பாட்டுக்கும் விலையேற்றங்களுக்கும் எதிராகப் பல்வேறு வடிவங்களிலும் விரிவடைந்தன. அதன் தொடர்ச்சியே மீரிஹானவில் உள்ள ஜனாதிபதியின் இல்லம் சுற்றிவளைக்கப்பட்ட போராட்டமாகும். அதன் அடுத்த கட்டமாக காலிமுகத்திடலில் “கோட்டா வீட்டுக்கு போ” என்ற தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று வரைத் தொடர்கிறது. அதுவே அலரி மாளிகையைச் சுற்றி “மைனா கோ ஹோம்” ஆகவும் நாடாளுமன்றத்தைச் சுற்றி “ஹொரா கோ ஹோம்” ஆகவும் இடம்பெற்றன.

“கோத்தா கோ ஹோம்” போராட்டத்தின் 5 கோரிக்கைகளில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் குடும்பத்தினர் அனைவரும் வரும் அரசாங்கத்தில் வகிக்கும் சகல பதவிகளிலிருந்தும் விலக வேண்டுமென்பதும் சகல ஊழல் மோசடிகளும் விசாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்படவேண்டும் என்பதும் அந்தப் பணம் திருப்பி அறவிடப்படவேண்டும் என்பதும் முதல் மூன்று கோரிக்கைகளாகும்.

இதில் இரண்டாவது கோரிக்கையில் ஒரு சிறுபகுதி மட்டுமே அதாவது மஹிந்த பதவி விலகியது மட்டுமே இடம்பெற்றுள்ளது. எனவே போராட்டமும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷ்வையும் அவரின் ஜனாதிபதிப் பதவியையும் காப்பாற்ற பிரதமர் பதவியை ஏற்றக்கொண்ட ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவரது ஆட்சிக்கும் ஜே.வி.பி. தவிர்ந்த ஏனைய எதிர்க்கட்சிகள் ஆதரவு வழங்குகின்றன என்றால் அவர்களும் மக்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் துன்பதுயரங்களையும் பொருட்படுத்தவில்லை என்பது தான் அர்த்தமாகும்.

இவர்கள் மக்களின் வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் வந்தது மக்களுக்காகவா அல்லது தங்கள் பதவிகளுக்கும் அதனால் கிடைக்கும் சுகபோகங்களுக்காகவுமா என்ற கேள்வி எழுகிறது. கோத்தபாய இன்னும் பதவி விலகாத நிலையில் அவரை ஜனாதிபதியாகக் கொண்ட ஆட்சிக்கு நல்ல விடயங்களுக்கு ஆதரவளிப்பது என்ற போர்வையில் மக்கள் வெறுப்புக்குள்ளான அரசுக்குத் தோள் கொடுப்பது, ஒருமாதத்துக்கு மேலாக காலிமுகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவமதிப்பது மட்டுமின்றி அவர்களைப் பலவீனப்படுத்தும் ஒரு நயவஞ்சக முயற்சியுமாகும்.

அதேவேளையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹர்சன் டி சில்வா நிதி சீரமைப்புக் குழுவின் தலைவராகவும் பொதுசன முன்னணியிலிருந்து பிரிந்து தனித்துச் செயற்படும் கட்சிகளின் சார்பில் விஜயதாச ராஜபக்ஷ் நீதிக் கட்டமைப்புக் குழுவின் தலைவராகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் சட்ட மறுசீரமைப்புக் குழுவின் தலைவராகவும் செயற்படத் தயாராயுள்ளதாக அறிவித்துள்ளனர்.

இதில் கண்டனத்துக்குரிய ஒரு விடயமென்னவெனில் எதிர்க்கட்சியாக ஒரு பொதுக் கொள்கையில் ஒற்றுமைப்பட முடியாத இவர்கள் “கோத்தபாய - ரணில்” அரசாங்கத்தை காப்பாற்றுவதில் மட்டும் ஒன்றிணைந்து நிற்கின்றனர்.

நெருக்கடி நிலைமையால் எழும் சுமைகளை தற்சமயம் மக்கள் தலை மீது சுமத்தியுள்ள நிலையில் மேலும் இந்த நிலை மோசமாகுமெனவும் அதை தாங்கத் தயாராக மக்கள் அர்ப்பண உணர்வுடன் செயற்பட வேண்டுமெனவும் பிரதமர் அழைப்பு விடுத்திருக்கிறார்.

எனவே இந்த அழைப்பில் சிறப்புக் குழுக்களின் தலைவர்களாக பணியாற்றவுள்ள மூவருக்கும் அவர்களின் கட்சிகளுக்கும் பங்கில்லையெனச் சொல்லிவிட முடியுமா?

பயனற்ற பிரமாண்டமான திட்டங்கள், லஞ்சம், ஊழல் மோசடி, அதிகார துஷ்பிரயோகம், தான்தோன்றித்தனமாக நடவடிக்கைகள் என்பன மூலம் நாட்டைப் படுபாதாளத்துக்கு இழுத்துச் சென்ற ராஜபக்ஷ் குடும்பத்தை ஆட்சியிலிருந்து அகற்ற மக்கள் போராடும் போது அவர்களுக்கு ஆதரவு கொடுப்பது, அவர்களின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் ஒரு போக்காகும்.

இவர்களுக்கு அதிகாரம் கிட்டும்போதும் இவர்களும் அதே வழிமுறையிலேயே செயற்படுவார்கள் என்பதால் ஒருவரை ஒருவர் காப்பாற்றுவதில் அதிசயம் எதுவுமில்லை.

எனவே பிரதமரின் அழைப்பும் அந்த அழைப்பு அமைவாக எதிர்க்கட்சிகள் ஆதரவளிப்பதும் மக்களுக்கு விரோதமாக இத்தரப்பினர் அனைவரும் ஒன்று சேர்ந்து விட்டனர் என்பதே அறிகுறியாகும்.

ஆனால் மக்களின் போராட்டம் எவ்வித தளர்வுமின்றி தொடர்ந்து கொண்டிருப்பது நிச்சயமாக அரச தரப்பினரதும் எதிர்த்தரப்பினரதும் வேசங்களை அம்பலப்படுத்தும் என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

24.05.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, ம.ஆ.சுமந்திரன், மகிந்த ராசபக்ச, ரணில் விக்கிரமசிங்க, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE