Thursday 25th of April 2024 06:11:04 AM GMT

LANGUAGE - TAMIL
-
நெருக்கடிக்குத் தீர்வு முன்வைக்காத 21ஆவது திருத்தம் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்

நெருக்கடிக்குத் தீர்வு முன்வைக்காத 21ஆவது திருத்தம் - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


இலங்கையில் அரசியல் பொருளாதாரம் சார் அறிவியலும் நடைமுறையும் தோல்விகண்டுவிட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் அரசியல் பொருளாதாரத்தை மையப்படுத்திய அறிவு வளர்ச்சியும் தேடலும் முற்றாகவே முடிவுக்குவந்துவிட்டது.

அதனை நோக்கிய அறிவியல் சிந்தனைகள் அனைத்தும் கைவிடப்பட்டு இனமத பேதங்களையும் முரண்பாடுகளையும் பற்றிய கற்கைகளையும் அதற்கான தீர்வுகள் பற்றிய தேடல்களையும் கொண்டதாக பல்கலைக்கழக கற்கை நெறிகள் காணப்படுகின்றன. அறிவியல் சிகரங்களான பல்கலைக்கழகங்கள் மேற்கு நாடுகளின் பொருத்தமற்ற கோட்பாடுகளை தரையிறக்கம் செய்யும் நிறுவனங்களாகவும் கதையாடல் துறைகளாகவும் மாறியுள்ளன. இதுவே இன்றைய நெருக்கடியின் வளர்ச்சிக்கு அடிப்படையாகவுள்ளது. இக்கட்டுரையும் தற்போது எழுந்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட வரைபின் உள்ளடக்கம் எப்படி மக்களை ஏமாற்றுகின்றதென்பதை தேடுவதாக அமையவுள்ளது.

முன்வைக்கப்பட்டுள் 21 வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கத்தில் இரண்டு பிரதான விடயங்கள் ஊடகப்பரப்பில் அதிகம் முதன்மைப்படுப்படுகிறது.

ஒன்று ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாது செய்வதற்கதன சட்ட உள்ளடக்கங்கள் பற்றியது. ஜனாதிபதி தெரிவிலிருந்து பதவி விலகும் வரையான விடயங்கள் சட்டமூலத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. அதாவது மீளவும் குடியரசின் முதலாவது யாப்பிலுள்ள மாதிரியை அடிப்படையாகக் கொண்டு பெயரளவு ஜனாதிபதி முறைமையை கொண்டுவருவது பற்றியதாகவுள்ளது. பாராளுமன்றத்தால் தேர்தெடுக்கப்படும் ஒருவரே ஜனாதிபதியாக பதவி வகிப்பதன் முக்கியத்துவத்தையே அவரது அதிகாரம் சார்ந்து உள்ளடக்கப்பட்டுள்ளது. அதனால் இலங்கை மீண்டும் ஒரு பாராளுமன்ற செய்முறைக்கு உட்படும் நாடாக மாறவுள்ளமையை வரைபு கொண்டுள்ளது. ஆனாலும் போர் - சாமாதானத்திற்கான பிரகடனத்தை செய்பவராக ஜனாதிபதியே உள்ளமை திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இன்னுமே போரை எதிர்பார்க்கும் சமூகமாகவே உள்ளதா என்ற கேள்வியையே அச்சொற்கள் ஏற்படுத்துகின்றன.

இரண்டாவது ஊடகப் பரப்பில் அதிகம் பேசப்படும் இரட்டைக் குடியுரிமை உடையவரது பாராளுமன்ற உறுப்புரிமை நீக்கம் பற்றிய விடயம் காணப்படுகின்றது. அது அதிகம் 21 வது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படும் என்ற வாதம் பொதுஜனப் பெரமுனாவினால் முன்வைக்கப்படுவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இது பற்றி வரைபு எதனையும் முதன்மைப்படுத்தவில்லை என்பதும் கவனத்திற்குரியதாகும். இனிவரும் பாராளுமன்ற விவாதத்தில் உள்ளடக்கப்பட வாய்புள்ளதாக கூறிக்கொள்ளலாம். ஆனால் இல்லாதது பற்றி அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

இலங்கைத் தீவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது ஓர் அரசியல் பொருளாதாரம் சார்ந்ததென்பது அறிவுபூர்மாக தெரிந்த விடயம். சட்டவல்லுனர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வைத்த திருத்தச் சட்டமூலத்தில் இலங்கைத் தீவிலுள்ள அடிப்படைப் பிரச்சினை எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை. 21 வது சீர்திருத்தத்தின் உள்ளடக்கத்தை அவதானித்தால் அது அரசியல் அதிகாரம் பற்றிய இழுபறியாகவே உள்ளது. இலங்கைத் தீவில் இன்று உள்ள நெருக்கடி பொருளாதாரப் பிரச்சினையாகும். குறிப்பாக பொருட்களுக்கான தட்டுப்பாடே அடிப்படை நெருக்கடியாகும்.. அதற்கான மேலதிகமான காரணங்களாக அரசாங்கங்களின் பிழையான அரசியல் பொருளாதாரக் கொள்கையும் அமுலாக்கமுமேயாகும். இவற்றுக்கு நீண்டகால இனப்பிரச்சினைக்குரிய தீர்வற்ற செய்முறையும் இராணுவ மயமாக்கத்துடன் கூடிய ஊழலும் பிரதான காரணமாகும். ஆனால் இத்தகைய நெருக்கடிகள் எவற்றுக்கும் எத்தகைய தீர்வு முன்வைக்காத வரைபாகவே உள்ளது. மக்களின் துயரத்தை முடிபுக்குக் கொண்டுவரும் எந்த சொற்றொடரும் இல்லாத வரைபாகவுள்ளது.

மக்களின் பொருளாதாரத் தேவையை நிறைவேற்றாத வரைபை வைத்துக் கொண்டு எவ்வாறு பொருளாதாரப் பிரச்சினையை தீர்க்க முடியும் என்பதைக் கூட எந்த சட்டவல்லுனரும் சிந்திக்கவில்லை. அப்படியாயின் சட்டவல்லுனர்களும் தென் இலங்கைப் புலமையாளர்களும் அரசியல் வாதிகளைப் போன்று செயல்படுகின்றனர். நிச்சயமாக இது ஓர் அதிகார போட்டிக்கான வரைபே அன்றி பொருளாதாரப் பிரச்சினைக்கான வரைபு கிடையாது. மாறாக அதிகார போராட்டத்திற்கான உள்ளடக்கமே வரிக்குவரி முதன்மைப்படுத்தியுள்ளனர். இத்தகைய ஏமாற்றுத் தனத்தை நெருக்கடிக்கு தீர்வென உரைக்க அரசியல்வாதிகள் முயலுகிறார்கள்.

அது மட்டுமன்றி இன்றைய பொருளாதாரப் பிரச்சினைக்கு மூலவேராக உள்ள இனப்பிரச்சினை சார்ந்து எத்தகைய உள்ளடக்கமும் வரைபில் காணப்படவில்லை. தமிழ் மக்களையும் வடக்கு கிழக்கையும் இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தின் பங்காளியாக ஆக்கும் செய்முறையை மேற்கொள்ளக் கூடிய காலம் என்பதைக் கூட தென் இலங்கை கவனத்தில் கொள்ள தவறுகிறது. இவ்வகைச் செய்முறையால் புலம்பெயர்ந்த தமிழரிடம் டொலரை பெறமுடியுமெனக் கருதுவதால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. இது பற்றி எந்த தமிழ் அரசியல் பாராளுமன்ற உறுப்பினரும் கவனமற்றிருப்பதைக் காணமுடிகிறது. தென் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான காலத்தில் தமிழ் மக்களது பிரச்சினைக்கு தீர்வை நோக்கி நகர்வது பற்றி எந்த தெரிவுமற்று உள்ளனர். மாறாக ஆளும் எதிர் தரப்பு வேறுபாடின்றி முரண்பட்டுக் கொண்டு தமது விற்பன்னத்தை காட்டிக் கொண்டும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் உலாவருகின்றனர் நெருக்கடியான சூழலிலேயே உலகில் அதிக மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. அதனை நோக்கி செயல்பட வேண்டிய தமிழ் தலைவர்கள் தென் இலங்கைத் தலைவர்களுடன் மோதிக் கொள்வதில் காலத்தை வீணடிக்கின்றனர். .

ஒற்றையாட்சிக் கட்டமைப்பை பலப்படுத்தும் இருபத்தியோரவது வரைபு இலங்கைத் தீவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை. இனரீதியான முரண்பாட்டுக்கு தீர்வு வைக்காத எந்த அரசியலமைப்பும் இலங்கைத் தீவுக்கான சுபீட்சத்தை சாத்தியப்படுத்தாது. கடந்த கால அரசியலமைப்புக்களால் எந்தவித மாற்றத்தையும் இலங்கைத் தீவு ஏற்படவில்லை. குடியரசின் முதலாவது இரண்டாவது யாப்புக்கள் போன்றே கடந்த இருபது திருத்தங்களும் அமைந்திருந்தன. இருபத்தியோராவதும் அத்தகைய இயல்பையே பிரதிபலிக்கிறது. இது ஆட்சி அதிகாரத்தை தென் இலங்கை அரசியல்வாதிகள் பங்கீடு செய்வதற்கான செய்முறை மட்டே உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையின் அரசியல் பொருளாதாரம் மட்டுமல்ல இன நல்லிணக்கமோ ஒருமைப்பாடோ சாத்தியமில்லை.

இருபத்தியோராவது சீர்திருத்தம் அரசியல்வாதிகளதும் ஏமாற்று அரசியலினது இருப்பு பாதுகாப்பதற்கான சூழல் ஒன்றை ஏற்படுத்த உதவுவதாக உள்ளது. அதிலும் தற்போதைய பாராளுமன்றமும் அதன் அதிகாரக் கட்டமைப்பும் ஜனாதிபதியினதும் குடும்ப அரசியலதும் இருப்பும் பாதுகாப்பதற்கான நகர்வாகவே தெரிகிறது. அரசியல்வாதிகளது கடந்த கால ஊழல்களை மறைப்பதற்கான வழிமுறைகளும் காணப்படுகிறது.

இதேவேளை தற்போதைய வடிவத்தில் முன்வைக்கப்பட்ட வரைபை சட்டத்தரணிகள் சங்கமும் எதிர்கட்சியும் முற்றாக நிராகரிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆதெ நேரம் வரைபில் முதன்மைப்படுத்தாத இரட்டைக் குடியுரிமை விடயத்தை முன்வைத்துக் கொண்டு பொதுஜனப் பெரமுன அரசாங்கம் இவவரைபை எதிர்கிறது. அவ்வாறே ஜனாதிபதியும் தனது அதிகாரத்தை குறைக்க தயாரில்லாத நிலையில் வரைபை நிராகரிப்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. அப்படியாயின் இந்த வரைபு எதற்காக முன்வைக்கப்பட்டது என்பது பிரதான கேள்வியாகும். ஏறக்குறைய மக்களது போராட்டத்தை கையாளவும் நெருக்கடியை தணிக்கவும் பாராளுமன்றம் ஏதோ உரையாடுகிறது என்பதை காட்டுவதற்காகவுமே இத்தகைய வரைபு பற்றி உரையாடல் வெளியானது.

எனவே மக்களை ஏமாற்றுவதில் ஆட்சி அதிகாரம் முழுமையாக செயல்பட்டுள்ளது. இத்கை வரைபினால் இலங்கைத் தீவில் எழுந்துள்ள நெருக்கடிக்கு தீர்வு ஏற்படாது. உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் இலங்கைக்கு கடன் வழங்குவதில் தீர்க்கமான முடிபை என்னுமே எட்டாத வரையும் நெருக்கடி தீர வாய்பில்லை என்றே தோன்றுகிறது. வரைபு அரசியல்வாதிகளது பாதுகாப்பையும் நலனையும் உத்தரவாதப்படுத்துவதாக உள்ளதே அன்றி மக்களது நலனுக்குரியதாக அமையவில்லை. தமிழ் மக்களது அரசியல் பிரச்சினைக்கு தீர்வை எட்டாத வரையும் இலங்கைத் தீவின் அரசியல் பொருளாதார நெருக்கடி தீர்வு சாத்தியமாகாது. வேண்டுமாயின் தற்காலிக தீர்வுகளுக்கு செல்லலாமே அன்றி நிரந்தரமான தீர்வை ஏற்படுத்த முடியாது. உலகவரலாற்றில் நெருக்கடியான போதே தீர்வுகளும் சாதகமான முடிபுகளும் எட்டப்பட்டுள்ளது. அத்தகைய அனுபவத்தை இலங்கைத் தீவின் அரசியல்வாதிகள் தவறவிடுதல் ஆரோக்கியமானதாக அமையாது.

அருவி இணையத்துக்காக பேராசிரியர். கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE