நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை அடுத்து ஏற்கனவே இரண்டு வருடங்களாக இயங்கி வந்த அமைச்சரவை ஒட்டு மொத்தமாகப் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலக மறுத்து வந்ததால் மே 9ம் திகதி இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து அவரும் பதவி விலகியது மட்டுமின்றி அலரி மாளிகையை விட்டு வெளியேறி திருகோணமலை கடற்படை முகாமில் தஞ்சமடைந்தார்.
கடந்த பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது கட்சியும் மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட போதிலும்கூட ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் அவரைப் பிரதமராகவே நியமித்தார்.
அவர் முதலில் நால்வரையும் பின்பு மிகுதிப் பேரையும் கொண்ட ஒரு அமைச்சரவையை உருவாக்கியபோதிலும் நிதியமைச்சர் பதவியை ஏற்க எவரும் முன்வரவில்லை.
கடந்த வாரம் அவரே நாட்டில் நிதியமைச்சராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டார். நாட்டிலும் நாடாளுமன்றத்திலும் எத்தனையோ பொருளாதாரக் கலாநிதிகள் இருந்தபோதிலும் ஒரு சட்டத்தரணியான ரணில் விக்ரமசிங்க நாட்டின் பிரதமராகவும் நிதியமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.
எரிசக்தி மற்றும் சக்திவள அமைச்சர் காஞ்சன விஜயசேகர ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பை வரவேற்கும் முகமாக எரிபொருட்களின் விலையை இரவோடிரவாக அதிகரித்துள்ளார். இந்த அதிகரிப்பானது பெற்றோல் விலை சராசரியாக 80 ரூபாவாலும் டீசல் விலை சராசரியாக 100 ரூபாவாலும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மக்களின் கழுத்து பலமுனைகளிலும் நெரிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. உணவுப் பொருட்கள், போக்குவரத்துக் கட்டணங்கள் உடனடியாக அதிகரிக்கப்பட்டு விட்டன. கோதுமைமாவின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டாலும் மேலும் உயருமென எதிர்பார்க்கலாம். அது மட்டுமின்றி சகல பொருட்களின் விலையுயர்வு ஏற்படுவது தவிர்க்கப்பட முடியாததாகும்.
இவ்வாறு புதிய நிதியமைச்சரின் வருகையே மக்களை மூச்சுத் திணற வைக்கும்போது பிரதமர் விடுத்த அறிவித்தல் மக்கள் முன் ஒரு பயங்கரமான எதிர்காலத்துக்கான முன்னறிவிப்பை வெளிப்படுத்தியுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் உலகம் ஒரு பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொள்ளுமெனவும் அதன் தாக்கம் இலங்கை மக்களையும் வெகுவாகப் பாதிக்கும் எனவும் அவர் தெரிவித்த அதேவேளையில் தற்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க ஒரு ட்றில்லியன் பணம் அச்சிடப் போவதாகவும் தெரிவித்தார். அதனால் தற்சமயம் 32 வீதமாக உள்ள பணவீக்கம் 40 வீதமாக அதிகரிக்குமென அவர் கூறிய போதும் பொருளாதாரக் கலாநிதி ஹர்சன் டி சில்வா பண வீக்கத்தின் அதிகரிப்பு 45 வீதமாக அமையுமெனத் தெரிவித்துள்ளார்.
இப் பணவீக்கம் காரணமாக மீண்டும் ஒவ்வொரு பொருட்களிலும் விலையுயர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போதுள்ள நிலைமையிலேயே அத்தியாவசியப் பாவனைப் பொருட்கள், எரிபொருள், சமையல் எரிவாயு என்பவற்றின் விலை மக்களால் தாங்க முடியாமல் உள்ளபோது பண வீக்கத்தால் ஏற்படும் விலையுயர்வு நெருக்கடிகளைப் பல மடங்காக அதிகரித்துவிடும்.
அதேவேளையில் பொது நிர்வாக மற்றும் மாகாண சபைகள் திணைக்களத்தால் அரச, மாகாண சபை செயலகங்களின் தலைவர்களுக்கு ஒரு விசேட சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. அதில் அத்தியாவசியமான பணியாளர்களை மட்டுமே வேலைக்கு அழைக்கும்படியும் ஏனையோர் காரியாலயங்களுக்கு வரத் தேவையில்லையென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் செலவினத்தைக் குறைக்கும் பொருட்டே எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அண்மையில் இலங்கை சனத்தொகையில் 13 பேருக்கு ஒரு அரச ஊழியர் இருப்பதாகவும் அரச செலவினத்தில் பெருந்தொகை அவர்களுக்கு ஊதியம் வழங்க செலவிடப்படுகின்றதெனவும் ஒரு கருத்து வெளியிடப்பட்டது. அரச செலவினங்களைக் குறைப்பது என்ற அடிப்படையில் அரச ஊழியர்களை ஆட்குறைப்புச் செய்வதும் ஒன்றாக இருந்தால் ஆச்சரியப்பட எதுவுமில்லை. அதை நியாயப்படுத்தும் நோக்கிலேயே குறைந்த பணியாளர்களுடன் அரசாங்கக் காரியாலயங்களை நடத்துவது ஒரு பரீட்சார்த்த முயற்சியாக இருக்கலாமெனவும் கருதப்படுகிறது.
மேலும் பிரதமர் தனதுரையில் உட்கட்டுமானப் பணிகளை இடைநிறுத்தி அந்த நிதியை நிவாரணப் பணிகளுக்குச் செலவிடப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அவ்வகையில்கூட அரச பணியாளர்களின் தேவை வலிந்து குறைக்கப்படலாம்.
அரச செலவினங்களைக் குறைப்பது என்பது உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகிய கடன் வழங்கும் நிறுவனங்களின் நிபந்தனைகளில் முக்கியமான தாகும். இவ்வாறே அரச மானியங்களைக் குறைப்பதும் அவற்றின் நிபந்தனைகளில் ஒன்றாகும்.
அரச செலவினங்களைக் குறைப்பது என்ற திட்டத்தில் அரச பணியாளர்களின் தொகையைக் குறைப்பது சுகாதார கல்வி போன்ற சேவைகளுக்கான ஒதுக்கீடுகளைக் குறைப்பது என்பனவும் அடங்கும் அதேபோல அரச மானியங்களை நிறுத்துவது அல்லது குறைப்பது என்ற அடிப்படையில் இரசாயனப் பசளை, எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா, கோதுமை மா என்பனவற்றின் விலைகள் ஒரு குறுகிய காலத்துக்குள் பல மடங்காக அதிகரிக்கப்பட்டன. அமெரிக்க டொலருக்குச் சமாந்தரமாக இலங்கை நாணயத்தின் பெறுமதி குறைக்கப்படுவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவர முடியும் எனச் சொல்லப்பட்டாலும் அப்படி எந்த முதலீடும் அண்மைக் காலத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
அடிப்படையில் அரச செலவினங்களைக் குறைப்பது, அரச மானியங்களை குறைப்பது அல்லது வெட்டுவது, நாணயத்தின் பெறுமதி குறைவதை கட்டுப்படுத்தாமலிருப்பது போன்ற மேற்கண்ட நடவடிக்கைகளையெல்லாம் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றைத் திருப்திப்படுத்த மேற்மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளாகும். அந்த நிறுவனங்களில் கடன் பெறுவதானால் இப்படியான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவேண்டும்.
இலங்கையின் ஆட்சியாளர்கள் இந்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதன் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்களைத் திருப்தி செய்யும் முகமாக மக்களின் தொடர் போராட்டங்களையும் பொருட்படுத்தாமல் மக்களின் மீது சுமைக்குமேல் சுமைகளைச் சுமத்தினாலும் அண்மையில் உலக வங்கி விடுத்த அறிவித்தல் முக்கியமாக நோக்கப்படவேண்டியுள்ளது.
அதாவது நாட்டின் பொருளாதார நிலைமை ஸ்திரப்பட்டு, நிலையான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பு நடைமுறைப்படுத்தும்வரை இலங்கைக்குப் புதிய நிதியுதவி எதையம் வழங்கும் திட்டம் எதுவுமில்லையென உலக வங்கி அறிவித்துள்ளது.
அப்படியானால் இலங்கையின் பொருளாதார நிலைமை ஸ்திரமடைவதற்கு நிலையான பொருளாதாரக் கொள்கைக் கட்டமைப்பு உருவாக்கப்படுவதற்குமான சாத்தியக் கூறுகள் உண்டா? அப்படியெதுவும் இருப்பதாகத் தென்படவில்லை. நாளாந்தத் தேவைகளைப் நிறைவு செய்ய இந்தியாவிடமும் சீனாவிடமும் தொடர்ந்து கடன் வாங்குவதே நாம் காணக்கூடிய நடைமுறையாகவுள்ளது.
ஒரு நாடு கடன் வாங்கியோ அல்லது நாட்டின் மூலவளங்களை விற்றோ எவ்வளவு நிதியைப் பெற்றாலும் அந்த நிதி மனித உழைப்பினால் மறுசீரமைக்கப்படும்போது மட்டுமே அந்த நிதி பயனுள்ள உற்பத்திப் பொருட்களாக அதாவது, நுகர்வுப் பொருட்களாக மாறி நாடும் மக்களுக்கும் முன்னேறுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்கள் மனித உழைப்பைப் பயனுள்ள விதத்தில் பயன்படுத்துவதிலோ, அதை ஊக்குவிப்பதிலோ அக்கறை செலுத்துவதற்குப் பதிலாக அதை வீணடிப்பதிலேயே அக்கறை காட்டுகின்றனர்.
அரச பணியாளர்களின் உழைப்பைத் தவிர்ப்பதும் அதில் ஒன்றாகும். மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகள், போக்குவரத்துகள் உட்படப் பல தொழில்கள் சீர்குலைந்துள்ளன. இவ்வாறே உணவுப் பொருட்கள் விலையேற்றம் காரணமாக பல உணவு விடுதிகள் மூடப்பட்டும் தமது உற்பத்திகளைக் குறைத்தும் செயற்படும் நிலை உருவாகி விட்டது. இன்றைய நெருக்கடி காரணமாகப் பல சுயதொழில்கள் செயலிழந்து விட்டன. வேலையில்லாப் பிரச்சினை காரணமாக பலருடைய மனித உழைப்பு வீணடிக்கப்படுகிறது.
இன்றைய நெருக்கடிகள் காரணமாக சுற்றுலாத்துறையில் ஏற்பட்ட வீழ்ச்சியால் பல தொழில்கள் முடங்கியதுடன் பலர் வேலையிழக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தத்தில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட மனித உழைப்பில் பாதிக்குமேல் இன்றைய ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் விரயம் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படுவதும் நிலையான பொருளாதாரக் கொள்கை உருவாக்கப்படுவதும் சாத்தியமா?
எனவே இன்றைய புதிய நிதியமைச்சரால் முன்னெடுக்கப்படும் பொருளாதார மீட்பு முயற்சிகள் தலைகீழாக மாற்றப்பட்டு புதிய பாதையில் இறங்கினாலன்றி நாடு இன்றைய நெருக்கடிகளிலிருந்து மீள்வது சாத்தியமாகுமெனத் தென்படவில்லை.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
31.05.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, உலகம்