Wednesday 24th of April 2024 09:02:44 PM GMT

LANGUAGE - TAMIL
.
காலிமுகத்திடல் 1956 - 2022 - நா.யோகேந்திரநாதன்!

காலிமுகத்திடல் 1956 - 2022 - நா.யோகேந்திரநாதன்!


சிறப்பு கட்டுரை

நகரத்தின் சந்தடிகளிலிருந்து விடுபட்டு இயற்கையின் இனிமையில் இணைந்து மக்கள் ஓய்வெடுக்கும் இடமாகவே காலிமுகத்திடல் விளங்கி வந்தது. ஓங்கியடிக்கும் கடலலைகளின் அழகையும் உடலை வருடிச் செல்லும் உப்புக் காற்றையும் அனுபவிக்கும் குடும்பங்கள், உடலாரோக்கியம் பேண நடைப் பயிற்சி செய்பவர்கள், விரிக்கப்பட்ட குடைகளின் கீழ் தனி உலகத்தில் சஞ்சரிக்கும் காதலர்கள், மணிவண்டில் தின்பண்ட வியாபாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் ஒன்றுகூடும் பொழுதுபோக்கு மையம் இது. இங்கு அரசியல் கூட்டங்களின் புரட்சிகர முழக்கங்களும் மக்களை மனம் மகிழவைக்கும் இசை நிகழ்ச்சிகளும் இடம் பெறுவதுண்டு. தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டங்களுக்கான அறைகூவல் விடுக்கும் கூட்டங்கள், பிரசித்திபெற்ற 1953 ஹர்த்தாலுக்கான பிரகடனம், 2009ல் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தைத் தோற்கடித்த பெருமையை முழக்கிய வெற்றிவிழா போன்ற வரலாற்றில் பதியப்படவேண்டிய நிகழ்ச்சிகளும் இடம்பெற்றதும் இங்குதான்.

1956ம் ஆண்டு தனிச் சிங்களச் சட்டம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழரசுக் கட்சியால் மேற்கொள்ளப்பட்ட சத்தியாக்கிரகம், 2022ல் ராஜபக்ஷ் குடும்பத்தை ஆட்சியிலிருந்து வெறியேறும்படி நடத்தப்பட்ட போராட்டம் என இவை இரண்டும் ஒடுக்குமுறைக்கெதிரான மக்கள் எழுச்சியையும் அவர்கள் தங்கள் இலட்சியத்தில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் உலகின் கண்களில் வெளிப்படுத்திய சாதனைகளாகும்.

1956 சத்தியாக்கிரகத்தையும் 2022 கோத்தா கோ ஹோம் போராட்டத்தையும் முளையிலே கிள்ளிவிட ஒடுக்குமுறையாளர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டனர். காலிமுகத்திடலின் வெண்மணற் பரப்பை குருதியால் சிவக்க வைக்க முடிந்ததேயொழிய போராட்டத்தை குலைத்துவிட முடியவில்லை.

1956ல் காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகிகள் மேல் தாக்குதல் நடத்தப்பட்டபோது தள்ளாத வயதென்றும் பாராமல் தந்தை செல்வா கடலில் தூக்கி வீசப்பட்டார். ஏராளமானவரக்ள் காயப்படுத்தப்பட்டனர். காயப்பட்ட நிலையிலும் நெற்றியிலி்ருந்து இரத்தம் வழிந்து கொண்டிருக்கும்போது நாடாளுமன்றத்திற்குள் சென்ற அமிர்தலிங்கம் ஆவேசத்துடன் தமிழ் மக்களின் போராட்டத்தின் நியாயங்களை ஆணித்தரமாக முழங்கினார்.

தனிச் சிங்களச் சட்டமும் அதற்கெதிராக காலிமுகத்திடலில் வெடித்த அஹிம்சைப் போராட்டமும், அதன் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியினரால் ஏவப்பட்ட காடையர்களால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையும் அதன் தொடர்ச்சியாக கல்லோயாவில் 150 தமிழர்கள் கொல்லப்பட்டமையும் தமிழ் மக்களிடையே மூட்டிய தீ கொழுந்து விட்டெரிந்து பரவ ஆரம்பித்தது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட இன ஒடுக்குமுறை நடவடிக்கைகளும் அதற்கெதிரான போராட்டங்களும் தமிழீழப் போராட்டமாகப் பரிணாமம் பெறும் தேவைகளை உருவாக்கியது. விடுதலைப் போராட்டத்தின் உச்ச கட்டம் தமிழருக்கென தனியான ஒரு விடுதலைப் பிரதேசத்தை அமைக்குமளவுக்கும் தமிழீழ நிர்வாகக் கட்டமைப்பு, தமிழீழ ஆயுதப் படைகள் என்பவற்றைக் கொண்டிருக்குமளவுக்கும் வளர்ச்சி பெற்றது.

1956ல் அஹிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் மீது காடைத்தன வன்முறைகள் ஏவப்பட்டதைப் போன்று 2022ம் ஆண்டில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய சிங்கள மக்களுக்கு எதிராகவும் காடையர்கள் ஏவிவிடப்பட்டனர்.

தமிழ் மக்களின் சத்தியாக்கிரகத்தின் மீது மேற்கொண்ட வன்முறை மூலம் தமிழ் மக்களின் உரிமைக் குரலை ஒடுக்கிவிட முடியுமென எதிர்பார்க்கப்பட்டதோ அவ்வாறே கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் மீது தாக்குதலை நடத்துவதன் மூலம் அப்போராட்டத்தைச் சிதைத்துவிட முடியுமென்ற எதிர்பார்ப்பு துவம்சம் செய்யப்பட்டது.

அலரி மாளிகையிலிருந்து புறப்பட்ட வன்முறையாளர்கள் அலரி மாளிகையின் முன் இடம்பெற்ற “மைனா கோ ஹோம்” போராட்டத்தின் மீது கொட்டன்களாலும் இரும்புக் கம்பிகளாலும் தாக்குதலை மேற்கொண்டனர். அத்துடன் திருப்தியடையாத “வன்முறைக் கும்பல்“ காலிமுகத்திடல் நோக்கி ஆவேசமாக நகர்ந்தது.

“எதிரிகள் எம்மீது தாக்குதலைத் தொடுக்கும்போது எமது உண்மையான தற்பாதுகாப்பு எதிர்த்தாக்குதல்தான்” என்ற யுத்தக் கோட்பாட்டை காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் பின்பற்ற ஆரம்பித்தனர்.

போராட்டக்காரர்கள் பதில் தாக்குதல் நடவடிக்கைகளில் இறங்குகின்றனர்.

1956ல் தமிழ் மக்களின் எதிர்விளைவு அஞ்சி எழுந்து ஓடாத மன உறுதியாயிருந்த அதேவேளையில் 2022ல் சிங்கள மக்களின் பதில் நடவடிக்கையோ எதிர்வன்முறையாக வெடித்தது.

போராட்டத்தைச் சிதைக்க வந்தவர்கள் சின்னாபின்னப்படுத்தப்பட்டனர். காடையர்கள் மக்களால் அடித்து உதைத்து “பேர” வாவியில் தூக்கி வீசப்பட்டனர். கோத்தா கம போராட்டக்காரர்களை ஓடஓட விரட்ட வந்தவர்கள் ஓடஓட விரட்டப்பட்டனர். தப்பி ஓட முடியாதவர்கள் தங்களை விட்டுவிடும்படி கெஞ்சினர். அவர்கள் வந்த வாகனங்கள் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டன. அங்கிருந்து தப்பியோடியோர் சந்திசந்தியாக மறித்து பொது மக்களால் தாக்கப்பட்டனர்.

வன்முறை நடவடிக்கைகள் மூலம் மக்களின் போராட்டத்தை முறியடித்துவிட முடியுமெனக் கருதியவர்களுக்கு மட்டுமின்றி சகல தரப்பினருக்கும் எழுச்சி பெற்ற மக்கள் முன்பு எந்தவித ஒடுக்குமுறையும் செல்லுபடியாகாது என்ற செய்தி பகிரங்கமாகவே வெளிப்படுத்தப்பட்டது.

66 வருடங்கள் இடைவெளியில் இரு போராட்டங்களும் இடம்பெற்றபோதிலும் இரண்டுமே ஆட்சியதிகாரத்தின் வரம்பு மீறிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள், இரு போராட்டங்களையும் வன்முறை மூலம் ஒடுக்கிவிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது முடியாமற் போனது மட்டுமின்றி அவை மீண்டும் புதிய வேகத்துடன் எழுச்சி பெற்றன. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கு எவ்வாறு தமிழ் மக்களின் பூரண ஆதரவு இருந்ததோ, அவ்வாறே “கோத்தா கோ ஹோம்” போராட்டத்துக்கும் சிங்கள மக்களின் பேராதரவு உண்டு. அதுமட்டுமின்றி தமிழ், முஸ்லிம் மக்களின் ஆதரவும் மெல்ல மெல்ல அதற்கு விரிவடைந்து வருகிறது.

இரு போராட்டங்களும் அஹிம்சை வழியிலேயே ஆரம்பிக்கப்பட்டன. எனினும் வன்முறைகள் போராட்டத்தின் மீது மேற்கொள்ளப்படும்போது பதில் வன்முறைகளும் ஆயுத ஒடுக்குமுறை மேற்கொள்ளப்படும்போது ஆயுத போராட்டமும் வெடித்தன. இன்றைய சிங்கள மக்களின் போராட்டம் மூலம் எவ்வாறு ஒரு புதிய தலைமை உருவாகிக் கொண்டிருக்கின்றதோ, அதேபோல் தமிழ் மக்களின் போராட்டம் ஒரு கட்சியின் மூலம் அஹிம்சை போராட்டமாக ஆரம்பிக்கப்பட்டபோதும் அது ஆயுதப் போராட்ட வடிவம் எடுத்தபோது புதிய தலைமை உருவாகியது.

போராட்டங்கள் மூலம் உருவாகும் தலைமைகள் இலட்சிய உறுதியும், விட்டுக்கொடுக்காத கொள்கைப் பற்றும் நேர்மையும், அர்ப்பண உணர்வும் கொண்டவையாக இருக்கும் என்பது வரலாற்று அனுபவமாகும்.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டபோதும், பின்பு வளர்ச்சியடைந்த காலங்களிலும் அதிகார பீடங்கள் மூலம் அது சிங்கள மக்களுக்கு எதிரானதென்றே சிங்கள மக்கள் நம்ப வைக்கப்பட்டனர். இன்றைய 2022ன் சிங்கள மக்களின் போராட்டம் ஆரம்பமான பின்பு சிங்களவரும் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தின் நியாயத்தை உணரும் நிலை ஏற்பட்டு வருகிறது.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியிலுள்ள அரசியல் தலைமைகள் காலம்காலமாக தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் வெவ்வேறு வழிகளில் நம்பிக்கையீனத்தையும் வெறுப்பையும் மூட்டி முரண்பாடுகளை ஏற்படுத்தித் தங்கள் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். ஆனால் சகல மக்களையும் பொருளாதார அடிப்படையில் ஒடுக்குவதில் அவர்களுக்கிடையே உறுதியான ஐக்கியம் எப்போதுமே உண்டு.

அரசியல் தலைவர்களுக்கிடையேயுள்ள இந்த ஐக்கியம் மக்களை ஒடுக்குவதற்கான ஐக்கியம். ஆனால் இன்று சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடையே தோன்றி வளரும் ஐக்கியம் ஒடுக்குமுறைகளிலிருந்து விடுபடுவதற்கான ஐக்கியம்.

1953ல் அதிகார பீடங்களுக்கு எதிராக ஹர்த்தால் போராட்டத்தின்போது மூவினங்களுக்குமிடையே தோன்றிய ஐக்கியம் போலவே தற்சமயமும் உருவாகும் நிலை தோன்றியுள்ளது. இதுவும் ஒரு ஒடுக்குமுறைக்கெதிரான ஐக்கியம். இது நின்று நிலைத்து ஒரு ஐக்கியப்பட்ட போராட்டமாக நாடு பரந்த ரீதியில் விரிவடையுமாயின், ஒரு சுதந்திரமான சுபீட்சமான இலங்கை உருவாகும் நிலை தொலைவில் இல்லை.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

06.06.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், கொழும்புபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE