Thursday 23rd of May 2024 12:42:25 PM GMT

LANGUAGE - TAMIL
.
அநீதிகளின் ஆயுதமாக விலை பேசும் அரசியல் - நா.யோகேந்திரநாதன்

அநீதிகளின் ஆயுதமாக விலை பேசும் அரசியல் - நா.யோகேந்திரநாதன்


ஒருவர் இன்று எந்தக் கட்சியில் நிற்கிறார், நாளை எந்தக் கட்சியில் நிற்பார் என்பதையோ அவர் எந்தக் கொள்கையின் அடிப்படையில் செயற்படுகிறார், எதிர்காலத்தில் செயற்படுவார் என்பதையோ மக்களால் புரிந்து கொள்ளமுடியாதளவுக்கு இன்றைய அரசியல்வாதிகளில் பலரின் நடவடிக்கைகள் குழப்பகரமாக விளங்குகின்றன. ஒவ்வொருவரும் தங்களின் நடவடிக்கைகள் மக்கள் நலன் சார்ந்தோ அல்லது இனத்தின் நலன் சார்ந்தோ மேற்கொள்ளப்படுவதாகவே கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர்களின் நகர்வுகளின் பின்னால் பதவிகள், பணம் உட்பட பல தனிநபர் சுயநல அம்சங்கள் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது. இலங்கை அரசியலில் இது காலம் காலமாகப் பின்பற்றப்படும் ஒரு கலாசாரமாய் இருக்கக் கூடுமோ என்ற கேள்வியும் எழுகிறது.

நாட்டில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் தனது தொகுதியிலேயே தோல்வியடைந்த ஒருவர், தனக்குப் பின்னால் தனது கட்சி சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்டிராத அவர் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றதும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை இணைத்து அமைச்சரவையை உருவாக்கியதும் முதன்முதலாக இலங்கையில்தான் இடம்பெற்ற ஆச்சரியமாகும்.

கோத்தபாய ராஜபக்ஷ் ஜனாதிபதியாக இருக்கும் வரையும் அரசாங்கத்தில் இணையப் போவதில்லை எனக் கூறிய ஐக்கிய மக்கள் சக்தி, வெளியிலிருந்தே அரசு மேற்கொள்ளும் நல்ல விடயங்களுக்கு மட்டும் ஆதரவு கொடுப்போம் எனப் பிடிவாதம் பிடித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்துடன் முரண்பட்டுக் கொண்டு அதை விட்டு வெளியேறிய 10 கட்சிகள் என வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். மக்களின் எதிர்ப்புப் போராட்டம் காரணமாகப் பதவி விலகிய ஒரு அமைச்சரவையின் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளார்கள் எந்த ஜனாதிபதியை பதவியை விட்டு வெளியேறும்படி மக்கள் போராட்டங்களைத் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றனரோ அந்த ஜனாதிபதியின் கீழ் பணியாற்றத் தயாராகி அவருடன் இணைந்து விட்டார்கள் என்றால் அப்படி அவர்களைச் செய்ய வைத்தது எது என்ற கேள்வி எழுகிறது. மக்களால் விரட்டப்பட்ட ஒரு அமைச்சரவைக்குப் பதிலாக அதே தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட அமைச்சரவையில் இணைந்துள்ளனர்.

இலங்கை அரசியலில் இது புதிய விடயமல்ல.

ஜனாதிபதியைச் சர்வாதிகாரியாக்கும் நடைமுறையை மீண்டும் அமுலாக்கும் வகையில் அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை செயலிழக்கச் செய்யும் வகையில் 20வது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இத்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற அரசாங்கத்திடம் மூன்றில் இரண்டு பகுதி வாக்கும் பலம் இல்லாத நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இரு முஸ்லிம் உறுப்பினர்களும் அரசாங்கத்துக்கு ஆதரவாக வாக்களித்து 20வது திருத்தச் சட்டம் வெற்றிபெற உதவினர். இவர்கள் தாங்கள் இணைந்திருந்த கட்சிகளின் முடிவுக்கு மாறாகவே செயற்பட்டனர். இவர்கள் அரசாங்கக் கட்சியினரால் விலைக்கு வாங்கப்பட்டதாகவே கருதப்பட்டது.

எதிர்க்கட்சிகளைப் பிளவுபடுத்தி சிலரைத் தமது பக்கம் சாய வைத்து தங்கள் நோக்கங்களை நிறைவேற்றுவதும் தங்களைப் பலப்படுத்துவதும் ராஜபக்ஷ் தரப்பினருக்குப் புதிய விடயமல்ல. 2010ம் ஆண்டு தேர்தல் காலத்திலும் அதன் பின்பும் திஸ்ஸ அத்தநாயக்க, கருஜெயசூரிய ஆகியோரையும் அவர்களுடன் சிலரையும் தம்முடன் இழுத்துத் தம்மைப் பலப்படுத்தியமையை மறக்கமுடியாது.

இவ்விடயத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆற்றலும் ஒரு காலத்தில் கொடிகட்டிப்பறந்ததை மறந்துவிட முடியாது. அதிலும் இவ்விடயத்தில் ரணில் விக்ரமசிங்கவுக்கும் அவரது மாமன் ஜே.ஆர்.ஜயவர்த்தனவுக்கும் தனிப் பெருமை உண்டு.

1964ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தால் “லேக் ஹவுஸ்” பத்திரிகை நிறுவனத்தைத் தேசிய மயமாக்கும் பிரேரணை கொண்டுவரப்பட்டது. அப்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த சி.பி.டி.சில்வாவின் தலைமையிலான 13 பேரைத் தம் பக்கம் இழுத்து மசோதாவைத் தோற்கடித்தனர். அதனால் அரசாங்கமும் பதவி விலக வேண்டிய நிலை ஏற்பட்டது.

அதேபோன்று 1948ல் ஐக்கிய தேசியக் கட்சியால் கொண்டுவரப்பட்ட மலையக மக்களை நாடற்றவர்களாக்கிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து வாதாடிய தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி.பொன்னம்பலம் இறுதியில் அது நிறைவேற்ற உதவி செய்தார். அதற்குப் பரிசாக அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டது.

இவையெல்லாவற்றிற்கும் மேலாக 2002ல் ஆரம்பமான அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையேயான சமாதானப் பேச்சுக்கள் ஏறக்குறைய 4 வருடங்கள் தொடர்ந்தன. இறுதியில் சமஷ்டியை ஒத்த ஒரு தீர்வை எட்டும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டபோது விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு தளபதியாக இருந்த கருணாவை உடைத்தெடுத்து புலிகள் இயக்கத்தைப் பலவீனப்படுத்திய சாதனையைச் செய்தவர் ரணில் விக்ரமசிங்க. அதன் காரணமாக பேச்சுக்கள் முறிவடைந்ததுடன் சமாதானத்துக்கான கதவும் மூடப்பட்டுவிட்டது. இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கென்றாலென்ன ராஜபக்ஷ் தரப்புக்கென்றாலென்ன எதிர்த்தரப்பினரை உடைத்துத் துரோகிகளை உருவாக்கி தமது காரியங்களைச் சாதிப்பதில் நீண்ட அனுபவம் உண்டு.

இப்போது இந்த இரு தரப்பினருமே ஒன்றிணைந்துவிட்ட நிலையில் எதிர்த்தரப்பினரைப் பிளவுபடுத்தி அவர்களைப் பலவீனப்படுத்தி தங்களுக்குச் சாதகமான நிலைமையை உருவாக்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாகவே எதிர்க்கட்சிகளிலிருந்து ஒரு சிலரைப் பிரித்தெடுத்து புதிய அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சிலரும் ஐக்கிய மக்கள் சக்தியிலுள்ள சிலரும் ராஜாங்க அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்திருப்பதாகவும் சில தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமது சொந்த நலன்களுக்காகத் தாம் சேர்ந்த கட்சிகளுக்குத் துரோகம் செய்து தங்கள் கொள்கைகளையும் விற்று தடம் மாறுவது இலங்கை அரசியல் வரலாற்றில் அப்படியொன்றும் அதிசயமல்ல.

இப்படியான நிலையில் காலிமுகத்திடலில் இடம்பெறும் “கோத்தா கோ ஹோம்” போராட்டமும் அலரி மாளிகையின் முன்பு இடம்பெறும் “நோ டீல்” போராட்டமும் எவ்வித தளர்வுமின்றித் தொடர்கின்றன.

இப்போராட்டங்களுக்குள் குழப்பங்களை ஏற்படுத்தி அவற்றைப் பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ரணில் - ராஜபக்ஷ் தரப்பினர் சதி வேலைகளில் இறங்கமாட்டார்கள் எனச் சொல்லிவிட முடியாது.

ஸ்ரீலங்கா சுதந்தி்ரக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவரான சி.பி.டி.சில்வாவை அக்கட்சியிலிருந்தும் நேர்மையான அரசியல்வாதி எனக் கருதப்படும் கருஜெயசூரியவை ஐ.தே.கட்சியிலிருந்தும் இரு பிரதமர்களான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க, திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் மகனான அனுர பண்டாரநாயக்கவை அக்கட்சியிலிருந்து பிரித்தெடுத்த ஐ.தே.கட்சி, ராஜபக்ஷ் தரப்பினர் போராட்ட சக்திகளைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தச் சகல முயற்சிகளும் செய்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

அவ்வகையில் ரணில் விக்ரமசிங்க தான் போராட்டக்காரர்களின் நியாயங்களை ஏற்றுக்கொள்வதாகக் கூறியுள்ளதுடன், பொலிஸாரையும் போராட்டங்களை ஜனநாயக வழியில் தொடர அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார். மேலும் போராட்டக்கார்களுடன் பேச ஒரு குழுவை நியமிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இங்குதான் ஆபத்து உருவாவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. உலகிலேயே இலட்சிய உறுதியும் கட்டுப்பாடும் உயர்ந்த மட்டத்தில் கொண்டிருந்த விடுதலைப் புலிகளையே பேச்சுவார்த்தைகளின்போது பிளவுபடுத்திய ரணில் பற்றி சாதாரணமாகக் கணித்து விடமுடியாது.

தற்சமயம் எழுச்சி பெற்றுள்ள மக்கள் போராட்டங்கள் இலங்கையில் ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு நல்ல ஆரம்பம் என்றே மக்கள் நம்புகின்றனர். எனவே போராட்ட சக்திகள் ரணில் - ராஜபக்ஷ் தரப்புகளின் சதி நடவடிக்கைகள் தொடர்பாக மிகவும் விழிப்புடன் இருக்கவேண்டும். இன்றைய ஆட்சியாளர்கள் துரோகிகளை உருவாக்குவதிலும் நீண்ட அனுபவம் உள்ளவர்கள் என்பதை மறந்து விட முடியாது.

அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்

07.06.2022


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, ரணில் விக்கிரமசிங்க, இலங்கைபிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE