இலங்கை அரசியல் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து கொண்டே செல்கிறது தற்போதைய நாணய நெருக்கடியை கடந்து அரசியல் கொந்தளிப்பு தீர்க்கப்பட முடியாத கட்டத்தை எட்டியுள்ளது. உணவுப் பொருட்களின் நெருக்கடியை தீர்த்துக் கொள்ள இந்தியாவும், உலக நாடுகளும் பெருமளவு பிரயத்தனத்தை மேற்கொண்டு செயல்படுகின்றன.
இந்தியா, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) உதவ முன்வந்தாலும் நடைமுறையில் இந்தியாவின் பங்களிப்பே கணிசமானதாக உள்ளது. இந்த சூழலில் சர்வதேச நாணய நிதியத்திற்கான ஆசிய-பசுபிக் பணிப்பாளராக இந்தியாவைச் சேர்ந்த கிஷ;ணா தெரிவாகியுள்ளார். சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியும் பேச்சுவார்த்தை நிலையிலேயே உள்ளது. இந்தியா மத்திய அரசும், தமிழக அரசுமே இலங்கைக்கு உதவிவரும் நிலை காணப்படுகிறது. இக்கட்டுரையும் இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பு ஏற்படுத்தவுள்ள விளைவுகளை தேடுவதாக அமையவுள்ளது.
மிகப் பிந்திய நிலையில் இந்தியா அரசாங்கத்தின் இலங்கைக்கு எரிசக்தித் தேவைக்கு 500அமெரிக்க டொலர் கடன் மற்றும் 200அமெரிக்க டொலர் வரிவகைக்கடன் வழங்க முன்வந்துள்ளது.
இந்தியா மேலும் 500அ.டொ. வரிக்குட்பட்ட கடனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நேரம் 'Tan Binh-99' எனும் சரக்குக் கப்பலில் 9,000தொன் அரிசி, 200தொன் பால் மா மற்றும் 24தொன் அத்தியாவசிய மருந்துகளுடன் இலங்கைக்கான தமிழக அரசின் உதவி சென்னையில் இருந்து புறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இலங்கைக்கான் உதவி பற்றி ANI செய்திச்சேவையில் கருத்துத் தெரிவித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், தற்போது, எட்டுக் கோடி இந்திய மதிப்பிலான மருத்துவப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பப்படும். இந்த மருந்துகள் மனிதாபிமான அடிப்படையில் அங்குள்ள பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடைவதற்காகவும் அவர்கள் இன வேறுபாடின்றி அனுப்பப்படுகின்றன என்றும் கூறினார்.
ஏற்கனவே கொழும்பு - புதுடில்லி உறவானது பலமானதாகவும் புரிதலுள்ளதாகவும் காணப்படும் போது மேலதிகமாக சென்னை-கொழும்பு உறவு பலப்படுத்தப்படுகிற சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழகம் வழங்கும் உதவிகள் மனிதாபிமான அடிப்படையிலானவை என்பதில் மாற்று கருத்துக் கிடையாது. ஆனால் தென் இலங்கை இன்றய பொருளாதார நெருக்கடியிலும் வடக்கு கிழக்கில் காணி ஆக்கிரமிப்பையும் விகாரைகள் அமைக்கப்படுவதையும் நிறுத்தாது செயல்பட்டுவருகிறதை அவதானிக்கும் போது சென்னையுடனான உறவை மனிதாபிமானத்திற்கு அப்பால் ஈழத்தமிழர் விடயத்தில் சென்னையை எப்படி கையாள வேண்டும் என்பதை செயல்படுத்த முனையும் என்பதில் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அதிலும் இலங்கைக்கான அமைச்சரவை அந்தஸ்துள்ள தூதுவர் தலைவர்களை கையாளுவதில் ஆளுமைமிக்க ஒருவர் என்ற வகையில் தமிழக முதலமைச்சரை கொழும்பின் ஆதரவாளராக மாற்றுவதில் கவனம் கொள்வதில் வெற்றி அடைவார்.
இதற்கு ஆதாரமாக ஒரு விடயத்தை நினைவு கொள்வது பொருத்தமாக அமையும். கொழும்பு சென்னை உறவு பற்றி புரன்லைன் (Frontline) ஏடு இதனை ஒரு மாற்றமாகவும், இது இரு பிராந்திய மக்களிடையே மேம்பட்ட தொடர்புக்கு களம் அமைகத்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய மாற்றத்தின் போக்கு அதிக விளைவுகளைத் தரக்கூடியது. அவை புரிந்து கொள்ளப்பட வேண்டியது.
முதலாவது, தமிழக ஆட்சியின் நிர்பந்தத்தாலும் தமிழக மக்களின் போராட்டத்தாலும் 1987ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு ஒப்ரேஷன் பூமாலை எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது. அதன் மூலம் இலங்கை இராணுவத்தின் ஒப்ரேஷன் லிபரேஷன் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழருக்கு உணவுப் பொதிகளைப் போட்டதுடன் இலங்கை இராணுவத்தின் தாக்குதலையும் முடிபுக்கு கொண்டுவர காரணமாக அமைந்தது. அக்காலப்பகுதியல் ஈழத்தமிழரின் ஆயுதப்போராட்டத்தின் மீது அதிக கரிசனை கொண்டிருந்த தமிழக முதல்வர் எம்.ஜி. இராமச்சந்திரன் மத்திய அரசுக்கு பாரிய அழுத்தங்களை கொடுத்திருந்தார்.
ஆனால் மிலிந்த மொறக்கொடவுடனான சந்திப்பில் மு.க.ஸ்டாலின் எந்தவிதத்திலும் ஈழத்தமிழர் பற்றி ஒருவார்த்தை கூட உரையாடியதாக தகவல் இல்லை. அதற்கு ஈழத்தமிழ் அரசியலை தாங்குவதாக கூறிக் கொள்ளும் தமிழ் அரசியல் வாதிகளும் முக்கிய காரணமானவர்கள் என்பதை மறுக்க முடியாது. ஈழத்தமழருக்கு ஆதரவான ஓர் ஆட்சி சென்னையில் மலந்துள்ளதை எந்த ஈழத்தமிழ் அரசியல் கட்சியினரும் கவனத்தில் எடுக்கவில்லை. வாழ்த்துக்களை மட்டும் ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துவிட்டு கடமை முடிந்ததாக செயல்படுகின்றனர். அவர்கள் பாராளுமன்றத்தில் பேச்சுப் போட்டி நிகழ்திக் கொண்டு தென் இலங்கை ஜனநாயகத்தை மீட்டெடுக்க போராடுகின்றனர்.
அதற்காகவே தமிழ் மக்கள் தமது வாக்குகளை வழங்கி பாராளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். தென் இலங்கையின் ஜனநாயகத்தையும் ஆட்சி அதிகாரத்தை பாதுகாப்பதே அவர்களது கடமையாக கருதுகின்றனர். ஈழத்தமிழ் அரசியல் வாதிகளுக்கு தென் இலங்கையில் நிகழ்வதையோ பிராந்தியளவில் தமிழருக்கு எதிராக நிகழும் விடயங்கள் பற்றி எந்த தேடலும் கிடையாது. அதனை அறிவதற்கு முயல்வதுமில்லை. ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி ஓராண்டைப் பூர்த்தி செய்துள்ள போதும் எந்த ஈழத்தமிழ் அரசியல்வாதியும் ஸ்டாலினை சந்திக்கவும் இல்லை தமிழ் மக்களது பிரச்சினை சார்ந்து உரையாடவும் இல்லை. இந்த சூழலில் எவ்வாறு தமிழர் பிரச்சினை சார்ந்து தமிழகம் செயல்படும். இரண்டாவது, கடந்த 27 இல் (மே மாதம்) இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகை தந்திருந்தார். அப்போது மு.க.ஸ்டாலின் கச்சதீவை மீட்பது பற்றிய கோரிக்கையை பிரதமரிடம் நேரடியாக வெளிப்படுத்தியிருந்தார். அதுமட்டுமன்றி இலங்கைக்கு உணவளிப்பது தொடர்பில் நரேந்திர மோடி அதிக பிரயத்தனத்துடன் உதவிகள் தொடரும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் எதிலும் ஈழத்தமிழர் பற்றிய உரையாடல் இருவரிடமிருந்தும் வெளிப்படுத்தப்படவில்லை.
இதனை அவர்கள் மீதான குறைபாடாக கருதுவதை விட அதனை அவர்கள் வெளிப்படுத்துவதற்கு ஏற்ப எந்த அடிப்படையான உரையாடலையும் ஈழத்தமிழ் அரசியல் வாதிகள் ஏற்படுத்தவில்லை. ஸ்டாலினும் பிரதமர் நரேந்திர மோடியும் ஈழத்தமிழர் விடயத்தை உரையாட வேண்டும் என்றும் தீர்வை முன்வைக்க வேண்டும் என்றும் கற்பனையாக அரசியல் நிகழ்த்தப்படுகிறது. இதனால் எத்தகைய மாற்றமும் சாத்தியப்படாது.
மூன்றாவது, இறுதிப் போருக்குப் பின்னரும் தமிழக மக்களின் எழுச்சிகள் தமிழக அரசை ஈழத்தமிழர் நலன் சார்ந்தே நகர்ந்துள்ளனர். தற்போது கூட இலங்கைக்கு வருகை தந்த பாரதீய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையின் ஈழத் தமிழர் பற்றிய உரையாடல் தனித்துவம் மிக்கதாகவே அமைந்திருந்தது. அது மட்டுமன்றி தென் இலங்கை எதிர்ப்புவாத உணர்வையே அவர் கொண்டிருந்ததுடன் 2009களுக்கு பின்னர் தென்னிலங்கையுடனான தமிழக உறவுகள் முற்றாக நிராகரிக்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. தமிழக அரசை தமிழக மக்களே ஈழத்திழர் விடயத்தில் வழிகாட்டுபவர்களாக காணப்படுகின்றனர். அத்துடன் தென் இலங்கைக்கு எதிரான உணர்வுகளுடன் தமிழக மக்களது அர்பணிப்பான நடவடிக்கை தமிழக அரசை கொழும்புக்கு ஆதரவாக செயல்படாது தவிர்க்க உதவியது.
நான்காவது, தற்போதைய இலங்கைத் தூதுவர்; புதுடில்லியின் நிலைப்பாட்டை கொழும்புடன் இணைப்பதில் வெற்றி கண்டது போல் இலகுவாக தமிழகத்தையும் இணைத்துவிடும் அரசியல் வேலைத் திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ள தை அவதானிக்க முடிகிறது. அதன் வெளிப்பாடே தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுடான மிலிந்த மொறகொடவின் சந்திப்பு காணப்படுகிறது. தமிழக முதல்வருடனான சந்திப்பு அடுத்து தனது ருவிட்டர் பக்கத்தில் இச்சந்திப்பு தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்த உதவும் எனக் குறிப்பிட்டுள்ளார். எனவே தெளிவான உரையாடலை தூதுவர் ஆரம்பிக்க இருக்pறார் என்பதை கோடிட்டுக் காட்டுவதாகவே தெரிகிறது.
எனவே கொழும்பு - சென்னை உறவு வலுவடையுமாயின் ஈழத்தமிழர் அதிக விலை கொடுத்தும் மீளமுடியாத நிலை ஏற்படும். ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தை அடுத்து புதுடில்லியுடனான உறவை இழந்தது போல் தமிழக உறவை இழக்கும் நிலை ஏற்பட்டால் ஈழத்தமிழரது இருப்பு காணாமல் போய்விடும். ஈழத்தமிழருக்கான நட்பு சக்தியும் இல்லாது போவதுடன் நேசசக்தியாகவும் தமிழகம் செயல்படமுடியாத நிலை ஏற்படும். அதற்கான புள்ளிகளை கொண்டே கொழும்பு சென்னையை அணுக முற்படும் என்பதை புரிந்து கொள்வது அவசியமானது. இதற்கான எச்சரிக்கைகளை கருத்தில் கொள்ள தவறும் பட்சத்தில் முழுமையான இழப்பினை ஈழத்தமிழர் எதிர்கொள்ள வேண்டிய நிலை தவிர்க்க முடியாததாகும். இவற்றை சரிசெய்யும் நிலையில் ஈழத்தமிழருக்கான தற்போதைய அரசியல்வாதிகள் இல்லை என்பதை புரிந்து கொண்டு ஈழத்தமிழ் மக்கள் செயல்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது. அடுத்துவரும் பாராளுமன்றத் தேர்தலில் தென் இலங்கையை விட வடக்கு கிழக்கு தமிழர்கள் முழுமையான மாற்றத்தை நோக்கி நகரவேண்டியதன் தேவைப்பாடு ஏற்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் புதிய கட்சிகளையும் புதிய தலைமைகளையும் நோக்கி செயல்பட வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
Category: கட்டுரைகள், புதிது
Tags: இலங்கை