மூச்சுத் திணறவைக்கும் நெருக்கடியிலும் முற்றுப் பெறாத மோசடிகள் - நா.யோகேந்திரநாதன்
இன ஒடுக்குமுறை நடவடிக்கைகள், அதனடிப்படையில் முனைப்படைந்த உள்நாட்டுப் போர், மக்களுக்குப் பயனளிக்காத பிரமாண்டமான அபிவிருத்தித திட்டங்கள், ஊழல் மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகம் என்பன காரணமாக இன்றைய மூன்றாவது பொருளாதார நெருக்கடி உச்சத்தைத் தொட்டு மக்களைக் கொடிய வறுமையை நோக்கித் தள்ளிக் கொண்டிருக்கிறது.
இந்த நெருக்கடியிலிருந்து மீள சர்வதேச நாணய நிதியம், இந்தியா, சீனா, ஜப்பான் உட்பட்ட உலகநாடுகளிடம் கடன் கேட்டுக் கையேந்தி நிற்கம் வேளையிலும் அதிகார பீடங்கள் இன்னமும் ஊழல், மோசடிகளிலிருந்து வெளியே வந்து விட்டதாகத் தெரியவில்லை.
சில மோசடிகள் சம்பந்தமாகக் கோப் குழுவுக்குச் சில தகவல்கள் கிடைக்கப் பெற்ற நிலையில் அது சில துரிதமான விசாரணைகளை நடத்தி திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்ட சில அதிகார துஷ்பிரயோகம் மோசடி என்பன வெளிப்படுத்தப்பட்டுள்ளன.அண்மையில் சிறுநீரக நோய்கள், இருத நோய், புற்றுநோய் உட்படப் பல மருந்துகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சத்திர சிகிச்சைக்குத் தேவையான சில முக்கிய மருந்துகளுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் சீனாவால் 500 மில்லியன் பெறுமதியான மருத்துவ உபகரணங்களும் மருந்துகளும் வழங்குவதாகவும் இந்தியாவால் 200 மில்லியன் பெறுமதியான மருந்துவப் பொருட்கள் வழங்குவதாகவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.
எனவே தற்சமயம் சீனாவிலிருந்து முதலாவது தொகுதி மருந்துகளும், மருத்துவ உபகரணங்களும் வந்து சேர்ந்துள்ளன. மிகுதி 2 ஆவது தொகுதி இம்மாத நடுப்பகுதியில் வந்து சேருமெனவும் அடுத்த வருடம் வரை இவை போதுமானவையெனவும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளையில் கடனுதவிக்கு மேலதிகமாக சீனாவால் 300 மில்லியன் பெறுமதியான அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் 03.06.2022 அன்று அன்பளிப்பாக அனுப்பப்பட்டுள்ளன.
இன்னுமொருபுறம் இந்தியாவால் மருந்துகளுக்கும் மருத்துவப் பொருட்களுக்கும் கடனுதவியாக ஒதுக்கப்பட்டுள்ள பணத்தில் 55.6 மில். டொலருக்கான மருந்துகள் வந்து சேர்ந்துள்ளன. இது ஒதுக்கப்பட்ட நிதியில் 28 வீதமாகும். மிகுதி நிதிக்கான மருந்துப்பட்டியல் இதுவரை அனுப்பி வைக்கப்படவில்லையெனத் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சரிதஹேரத் தலைமையிலான கோப் குழு நடத்திய விசாரணைகளின்போது 330 மில்லியனுக்கு இதுவரைக்கும் கேள்வி அனுப்பாமைக்கு இரு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று அமைச்சர்கள் மாறியமை என்பதும் மற்றது கணனிக் கட்டமைப்பு செயற்படாமை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை மாற்றம் ஒரு காரணமெனக் கூறமுடியாது. ஏனெனில் தேவையான மருந்துகளின் பட்டியல் தயாரிப்பு செயலாளரின் அதிகாரத்திலுள்ள அதிகாரிகளின் கடமையாகும். அதேவேளையில் 645 மில்லியன் ரூபா செலவில் கணனி கட்டமைப்பு உருவாக்கப்பட்டதாகவும் அதனைப் பராமரிக்கவென மாதாந்தம் 5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் மருந்துப் பட்டியல் தயார் செய்ய முடியாமல் செயலிழந்து போயுள்ளதாகவும் தற்சமயம் புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும் கோப் குழுவுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக வங்கி, ஆசிய அவிபிருத்தி வங்கி, உலக சுகாதார நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் வழங்கிய 330 மில்லியன் டொலரே இப்படிப் பயன்படுத்தப்படாத நிதியில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உல உயிர் காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை தொடர்பாக பல மருத்துவமனைகளில் மருத்துவர்கள் உட்பட்ட பணியாளர்கள் போராட்டங்களை நடத்திய போதும், தேவைப்பட்டியலை அனுப்புவதில்கூட பொறுப்புணர்வின்மை தெரியவந்துள்ளது.
இவையெல்லாம் அலட்சியமா, அல்லது திட்டமிடப்பட்ட மோசடியா, தரகுப் பணம் பெறமுடியாத விடயங்களில் காட்டப்படும் “சிவப்பு நாடா” நடவடிக்கையா என்ற கேள்வி எழுகிறது.
அண்மையில் பெருமளவு மருந்துகள் உரிய நேரத்தில் பயன்படுத்தாமையால் காலாவதியாகி விட்டதாகவும் அவற்றில் 90 வீதம் மருத்துவமனகைளுக்கே அனுப்பப்பட்டு விட்டதாகவும் ஒரு செய்தி வெளிவந்துள்ளது.
ஏற்கனவே நாடு நெருக்கடியில் தத்தளிக்கும்போதும், அதிலிருந்து மீள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தருணத்தில் இவ்வாறான மோசடிகள் இடம்பெற்று வருவது எவ்வளவு தேச விரோத நடவடிக்கை என்பதை புரிந்து கொள்ளமுடியும்.
மேலும் இராணுவத்திற்கு மேற்கொள்ளப்படும் செலவுகளைவிட மேலதிகமாக இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் மேலதிகமான சலுகைகளைக் கவனத்திலெடுக்காமல் விடமுடியாது.
இலங்கை இராணுவத்தில் தளபதிகள் முதல் லெப். கேணல் தர அதிகாரிகள் வரை 108 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவருக்கும் உத்தியோகபூர்வ வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தபோதிலும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்கென ஒவ்வொரு வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்களிலிருந்து வாடகைக்குப் பெறப்பட்ட இவ்வாகனங்களுக்கான வாடகையாக மாதாமாதம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இலட்சம் அரசாங்கத்தால் செலுத்தப்படுகிறது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு வாகனங்களுக்கும் ஒவ்வொரு சாரதியும் ஒரு உதவியாளரும் அரச ஊதியத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மாதம் 200 லிற்றர் டீசல் இந்த வாகனங்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த அதிகாரிகளுக்கென உத்தியோகபூர்வ வாகனங்களாக ஆடம்பர வாகனங்கள் வழங்கப்பட்டபோதிலும் கூட மேலதிகமாக அவர்களின் தனிப்பட்ட ஆடம்பரத் தேவைகளுக்காக அந்த வாகனங்களுக்காக மில்லியன் கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது.
அந்த நிலையில் அனாதை இல்லத்தில் பராமரிக்கப்படும் ஒரு சிறுவனுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் தொகை நாளொன்றுக்கு 20 ரூபா மட்டுமே.
தற்சமயம் கொழும்புக் கடலில் ரஷ்ய எண்ணெய் தாங்கிக் கப்பலொன்று 90,000 மெற்றிக் தொன் மசகு எண்ணெயுடன் தரித்து நிற்கிறது. அதிலிருந்து எரிபொருளை இறக்க இலங்கை அரசியல்வாதிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலோட்டமாக ரஷ்ய, உக்ரேன் போர் காரணமாக ரஷ்யா மீது சில வர்த்தகத் தடைகளை அமெரிக்காவும், ஐரோப்பிய ஒன்றியமும் விதித்துள்ளனர் என்பதால் மேற்கு நாடுகளுடன் பகைக்கக் கூடாது என்பதற்காகவே ரஷ்ய எரிபொருளை வாங்கத் தயங்குவதாகக் கருதப்படுகின்து. அதற்கும் அப்பால் ஒரு காரணம் உண்டு என்பதை அறிய முடிகிறது.
இலங்கை டுபாயிலுள்ள ஒரு நிறுவனத்திலிருந்தே எரிபொருளை இறக்குமதி செய்யவுள்ளதாகத் தெரிய வருகிறது. அந்த நிறுவனத்தின் முக்கிய பங்காளி இலங்கையிலுள்ள ஒரு முக்கிய அரசியல்வாதியின் மகனின் நண்பராவார். எனவே ரஷ்ய எரிபொருளை நிராகரித்து டுபாய் நிறுவனத்திலிருந்து இறக்குமதி செய்யவே இலங்கையின் அதிகார மட்டம் உத்தேசித்துள்ளது.
இதில் முக்கிய விடயம் என்னவெனில் உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் எரிபொருளின் விலை 117 டொலராக இருக்கும் நிலையில் ரஷ்யா தாங்கள் கொண்டு வந்த எரிபொருளை 72.6 மில்லியன் டொலர் விலையில் வழங்கத் தயாராய் உள்ளது. இது டுபாய் நிறுவனத்திடம் கொள்முதல் செய்வதை விட பெருமளவு மலிவானதாகும்.
இந்த வசதியைப் பயன்படுத்த மறுப்பது உண்மையிலேயே ஒரு தேச விரோத நடவடிக்கையாகும்.
மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இறக்குமதி, இராணுவ அதிகாரிகளுக்கான அதீத ஆடம்பர செலவினங்கள், எரிபொருள் இறக்குமதியில் மற்கொள்ளப்படும் மோசடி என நெருக்கடி நேரத்திலும் தொடரும் சில முறைகேடுகள் வெளிவந்துள்ளன. இன்னும் இது போன்ற விடயங்கள் எவ்வளவு உண்டு என்பது போகப் போகத்தான் தெரியும்.
“தாய் கிண்ணிப் பிச்சை எடுக்க மகன் குத்தியன் கும்பகோணத்தில் கோ தானம் செய்தானாம்” இப்படி ஒரு பழமொழி தமிழில் உண்டு.
பல்வேறு நாடுகளிடம் கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்களிடம் அரசாங்கம் கடன் கேட்டுப் பிச்சையெடுக்கும் நிலையில், நாட்டில் ஏற்பட்ட டொலர் தட்டுப்பாட்டின் காரணமாக பாவனைப் பொருட்களின் விலைகள் கிட்ட நெருங்க முடியாமல் உயர்ந்து விட்ட நிலையில், இங்குள்ள அரசியல் செல்வாக்குக்கொண்டவர்களும், அதிகார மட்டத்தினரும் இவ்வாறு நாட்டின் நிதியை விரயம் செய்வதை எப்படி அனுமதிக்க முடிகிறது? இவை ஏன் தடுத்து நிறுத்தப்படவில்லை?
உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற கடன் வழங்கும் நிறுவனங்கள் வளரும் நாடுகளுக்கு நிதி வழங்கும்போது விதிக்கப்படும் நிபந்தனைகளில் அரச செலவினங்களைக் குறைப்பது ஒரு முக்கிய விடயமாகும்.
அவ்வகையில் அரச சேவைகளில் ஆட்குறைப்பு, ஊதியக் குறைப்பு, விவசாய இடு பொருட்கள் என்பவற்றுக்கும் வேறு அத்தியாவசியப் பொருட்களுக்கும் வழங்கப்படும் மானியங்களைக் குறைத்தல் அல்லது வெட்டுதல் போன்ற விடயங்கள் சிபார்சு செய்யப்படுகின்றன.
அப்படியானால் மருத்துவப் பொருட்களின் இறக்குமதியில் மேற்கொள்ளப்படும் மோசடிகள், இராணுவ அதிகாரிகளின் மேலதிக ஆடம்பரத்துக்கான செலவினங்கள், குறைந்த விலையில் எரிபொருளை இறக்குமதி செய்யும் வாய்ப்பு உள்ள போதும் கூடிய நிலைக்கு கொள்முதல் செய்தல் போன்ற முறைகேடுகள் இவற்றைப் பற்றியெல்லாம் கடன் வழங்கும் சர்வதேச நிறுவனங்கள் அக்கறை காட்டுவதில்லை.
அங்குள்ள முக்கிய விடயமென்னவெனில் அவர்களின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதிலும் சில வரையறைகள் உண்டு.
கடன் வழங்கும் நிறுவனங்களின் நிபந்தனைகள் பல்தேசிய நிறுவனங்களைப் பாதிக்கும் வகையிலான விடயங்களில் அமுல்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுவதில்லை.
பொதுவாக இராணுவத்துக்கான மேலதிகமான சலுகைகளாக வாகனங்கள், அவற்றுக்கான எரிபொருட்கள் என்பன வழங்கப்படும்போது, பல்தேசிய நிறுவனங்களே நன்மை பெறுகின்றன. மேலும் போர் முடிவடைந்துவிட்டாலும் இராணுவத்தில் ஆட்குறைப்பு எதிர்பார்க்கப்படுவதில்லை.
ஏனெனில் அதிகமான இராணுவத்தினர் சேவையிலுள்ளபோது கூடுதலான ஆயுதங்கள், கூடுதலான வாகனங்கள், கூடுதலான சீருடைகள் ஆகிய தேவைப்படுகின்றன. அவை கொள்முதல் செய்யப்படுவதால் ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் உட்பட்ட பல்தேசிய நிறுவனங்களே நன்மை பெறுகின்றன.
அதுபோன்று மலிவான விலையில் ரஷ்யாவிடம் எரிபொருளைக் கொள்முதல் செய்ய மறுப்பதைக் கடன் வழங்கும் நிறுவனங்கள் கண்டு கொள்ளமாட்டார்கள். ஏனெனில் அதுவும் ரஷ்யா மீதான மேற்குலகின் பொருளாதாரத் தடைகளுக்குச் சாதகமான அம்சமே.
இன்றைய நெருக்கடியிலிருந்து மீளெழுவதானால் கடந்த காலத் தவறுகளிலிருந்து முதலில் வெளிவரவேண்டும். ஆனால் ஊழல் மோசடிகள் மேலும் மேலும் தொடரப்படும் நிலையானது அப்படியான ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையைப் பலவீனப்படுத்தும் வகையிலேயே உள்ளது.
எனவே புற்று நோயாகப் பரவியுள்ள ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பன முற்றாகக் களையாமல் நாடு விமோசனமடைவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே காணப்படுகின்றன.
தொடரும்....
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை