அண்மையில் துறைசார் நிபுணர்களுடனான சந்திப்பொன்றின்போது நாட்டின் பிரதமரும் நிதியமைச்சருமான ரணில்விக்ரமசிங்க அவர்கள் உரையாற்றும்போது நாடு ஒரு பெரும் உணவுப் பஞ்சத்தை எதிர்நோக்குவதாகவும் சிறுபோகம் மற்றும் பெரும்போக விவசாய நடவடிக்கைகளுக்குப் போதிய பசளை கிடைக்காதுவிட்டால் மூன்று வேளை உணவுக்குப் பதிலாக இரண்டு வேளைகள் மட்டுமே உணவு உட்கொள்ளவேண்டிவருமெனவும் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தற்போதுள்ள உணவுக் கையிருப்பு எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மட்டுமே போதுமானதாக இருக்குமெனவும் போதியளவு உரம் கிடைக்காவிட்டால் எதிர்வரும் பெப்ரவரி மாதத்தின் பின்பு உணவு உற்பத்தியில் பெரும் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டிவருமெனவும், எனவேதான் ஒரு பிரதமரைப் போலன்றி ஒரு தீயணைப்புப் படை வீரரைப் போல் தான் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமின்றி நாம் ஒரு உற்பத்திப் புரட்சியை முன்னெடுக்காவிட்டால் எதிர்வரும் செப்டெம்பர், ஒக்டோபர் மாதங்களில் பெரும் உணவுப் பஞ்சத்திற்கு முகம் கொடுக்க வேண்டி வருமெனவும் மீண்டும் மீண்டும் பல இடங்களிலும் கூறி வருகின்றார்.
அவ்வகையில் அரச ஊழியர்கள் வெள்ளிக்கிழமைகளில் தங்கள் பணியிடங்களுக்குச் செல்ல வேண்டியதில்லையெனவும் அந்த நாட்களில் அவர்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்மெனவும் அவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் உறுதி செய்யப்படவேண்டுமெ னவும் ஒரு புதிய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ் பெருந்தோட்டங்களிலுள்ள வெற்றுக் காணிகள் எல்லாவற்றிலும் பயிர் செய்யப்படவேண்டுமெனவும் அதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். மலையகத்தில் 23 தோட்டங்களுக்குச் சொந்தமான பயிரிடப்படாமல் விடப்பட்டிருக்கும் 4,000 ஹெக்டயர் நிலப்பரப்பில் பொருத்தமான உணவுப் பயிரினங்களின் உற்பத்தி மேற்கொள்ளப்படவேண்டுமெனவும் ஆலோசனை கூறியுள்ளார். திடீரென இரசாயனப் பசளையைத் தடை செய்ததன் மூலம் உணவுற்பத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய ஜனாதிபதியே விவசாயத்தில் தீவிர அக்கறை காட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் பெருந்தோட்டங்களில் விவசாய உற்பத்தி என்ற பேரில் தோட்டங்களில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கும் உள்நோக்கம் உண்டா? என்ற சந்தேகமும் உண்டு என்ற அடிப்படையில் தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் தலைவர் மனோ கணேசன், தோட்ட நிலங்கள் விவசாய உற்பத்திக்கு வழங்கப்படும்போது தோட்டத் தொழிலாளர்களுக்கே வழங்கப்படவேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரசாயனப் பசளைப் பாவனையைப் பொறுத்தவரையில் ஒரு ஹெக்டருக்கு மலேசியா 1723 கிலோவும் அயர்லாந்து 1243 கிலோவும் சீனா 503 கிலோவும் வியட்நாம் 409 கிலோவும் பயன்படுத்தி வருகின்றன. ஆனால் இலங்கை ஒரு ஹெக்டருக்கு 132 கிலோவை மட்டுமே பாவிக்கிறது. பெரும் அரிசி உற்பத்தி நாடுகளில்கூட 10 அல்லது 15 வீதமே சேதனப் பசளை பயன்படுத்தப்படுகிறது.
ஏனைய நாடுகளின் நடைமுறை இவ்வாறு அமைந்திருக்கும்போது இலங்கை மட்டும்தான் தான்தோன்றித்தனமாக இரசாயனப் பசளையைத் தடை செய்து உணவு உற்பத்தி வீழ்ச்சிக்கு வழி திறந்து விட்டது. தற்சமயம் மீண்டும் இரசாயனப் பசளை பாவனையை அனுமதிப்பதென்ற முடிவு எடுக்கப்பட்டாலும் அதைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இப்படியான நிலையில் அரசாங்க உத்தியோகத்தர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதைப் பிரதமரும், பெருந்தோட்ட நிலங்களில் விவசாயம் செய்வதை ஜனாதிபதியும் இன்றைய உணவுத் தட்டுப்பாட்டை களைய வழிகளாகத் தெரிவு செய்துள்ளனர். விவசாயத்தில் அனுபவமற்ற அரச பணியாளர்கள் அதில் ஈடுபடுவதும் தரிசு நிலங்கள் சீர்செய்யப்பட்டுப் பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்படுவதும் எவ்வளவு தூரம் உடனடிப் பலன்களைக் கொடுக்குமெனச் சொல்லிவிட முடியாது.
ஆனால் தற்சமயம் விவசாயிகளின் உற்பத்தி நடவடிக்கைகளுக்குக் காணப்படும் இடையூறுகள் களையப்பட்டாலே நாட்டுக்குத் தேவையான உணவுப் பொருட்களை அவர்கள் தாராளமாகவே உற்பத்தி செய்வார்கள்.
பொருத்தமான நேரத்தில் காணிகளை உழுது பண்படுத்தப் போதிய எரிபொருள் கிடைப்பதில்லை. கமநல சேவை நிலையங்களால் வழங்கப்படும் பசளைகள் பொருத்தமான நேரத்தில் கிடைப்பதில்லை. ஆதலால் விவசாயிகள் பசளையைக் கூடுதல் விலைக்குக் கறுப்புச் சந்தையிலேயே பெற வேண்டியுள்ளது. 1000 அல்லது 2,000 ரூபாவுக்கு வாங்கிய யூரியா பசளையை 40,000 ரூபாவுக்கு வாங்க வேண்டியுள்ளது. அறுவடை காலத்தில் நெற் சந்தைப்படுத்தல் சபை ஒரு பகுதி விளைச்சலையே கொள்முதல் செய்யும், மிகுதியைத் தனியாருக்கு அநியாய விலைக்குக் கொடுக்க வேண்டிவரும். அவர்கள் அவற்றைப் பெருந்தொகையில் மலிவான விலையில் வாங்கிக் களஞ்சியப்படுத்திவிட்டு, சிறிது காலம் செல்ல அரிசியை அதிக விலையில் விற்பார்கள். அரசு எவ்வளவுதான் நிர்ணய விலையை அறிவித்தாலும், அரிசி விலையைத் தீர்மானிப்பவர்கள் அந்த அரிசி ஆலை உரிமையாளர்களே. இவ்வளவு இடையூறுகளையும் முகங்கொண்டுதான் விவசாயிகள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியுள்ளது.
அரசாங்கமோ, அதிகாரிகளோ இவற்றைக் களைய ஆக்கபூர்வமான எந்த முயற்சிகளையும் எடுப்பதில்லை. கண் துடைப்புக்குச் சில நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் அவற்றால் விவசாயிகள் பயன் பெறுவதாகக் கூறமுடியாது.
இரசாயனப் பசளைகளுடன் வெளிநாடுகளைப் போன்று ஒரு குறிப்பிட்ட வீதத்தில் சேதனப் பசளையைக் கலந்து பாவித்தால் உரமிடுதலுக்கான செலவு குறையும். விளைச்சல்களில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆனால் சேதனப் பசளை உற்பத்தியில் அக்கறை காட்டப்படுவதாகத் தெரியவில்லை. போர் காலத்தில் வன்னியில் பொருளாதாரத் தடை போடப்பட்ட நிலையில் அங்கு அமுது என்ற பேரில் சேதனப் பசளை உற்பத்தி செய்யப்பட்டது. அது சிறந்த அடிக்கட்டுப் பசளையாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
உணவு நெருக்கடியை தீர்க்கப் போவதாகக் கூறிச் சில கண்கட்டு வித்தைகளைக் காட்டுவதில் எவ்வித பயனுமில்லை. நீரிழிவு நோய் ஏற்படுவதைத் தவிர்க்கவெனச் சொல்லி இரசாயனப் பசளையை நிறுத்தி விட்டு அதனால் உற்பத்தி வீழ்ச்சியடைந்த நிலையில் இரசாயனப் பசளையில் உற்பத்தி செய்த அரிசியை இறக்குமதி செய்து மக்களுக்கு வழங்குவது போன்ற முட்டாள் தனங்கள் முற்றாகவே நிறுத்தப்படவேண்டும்.
விவசாயிகளின் அனுபவங்கள், இன்றைய தொழில்நுட்ப வசதிகள் என்பவை நேர்மையாக ஒன்றிணைக்கப்பட்டு விவசாயிகளின் நலன்களூடான உற்பத்திப் பெருக்கம் என்ற வகையில் அவர்கள் முகங்கொடுக்கும் இடையூறுகளைக் களைந்து பூரணமான உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்திச் செயற்படுத்துவதன் மூலமே உணவு நெருக்கடியை வெற்றி கொள்ளமுடியும்.
அதைவிடுத்து அரச பணியாளர்களை விவசாயத்தில் ஈடுபடுத்துவதோ தரிசு நிலங்களைப் பயன்படுத்துவதோ வெற்றி தரப்போவதில்லை.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
14.06.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, இலங்கை