Friday 19th of April 2024 04:22:58 PM GMT

LANGUAGE - TAMIL
.
பொருளாதாரப் பேரிடர் ஏற்படுத்தும் சமூகத் தாக்கங்களும் அதனை எதிர்கொள்ளலும் - மருத்துவர் சி. யமுனாநந்தா

பொருளாதாரப் பேரிடர் ஏற்படுத்தும் சமூகத் தாக்கங்களும் அதனை எதிர்கொள்ளலும் - மருத்துவர் சி. யமுனாநந்தா


தற்போதைய பொருளாதாரப் பேரிடர் சமூகமட்டங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை நாம் ஆராய்ந்து அவற்றை அனுகூலமான முறையில் எதிர்கொள்ளல் அவசியமானதாகும்.

தற்போதைய சூழலில் அத்தியாவசியமான பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் பட்டினியை எதிர்நோக்கி உள்ளனர். வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது.

தற்போதைய பொருளாதாரத் தளம்பல் நிலைக்கு உள்நாட்டுக் காரணிகளும்,சர்வதேச காரணிகளும் காரணமாக உள்ளன. உள்நாட்டுக் காரணிகளுள் முறையற்ற திட்டமிடல்கள், நிதிநிர்வாகம் என்பனவும், ஊழல், இனவாதம், மதவாதம் மிக்கஅரசியல் நடவடிக்கைகள் காரணமாக அமைகின்றன. பொருளாதாரத் தளர்வுக்கான சர்வதேசக் காரணிகளில் ரஸ்சியா மேற்கொண்டுள்ள உக்ரெயின் போர் முதன்மையானதாகவும், கொரோனாத் தொற்றுத் தொடர்பான பொருளாதார முடக்கம் இரண்டாவதாகவும், காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்ட விவசாய வீழ்ச்சி மூன்றாவதாகவும் அமைகின்றன.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பினை ஐந்து தளங்களில் அவதானிக்கலாம். அவையாவன :

1) அரசியல் ஸ்திரமற்ற நிலை

2) சமூக வர்க்கமட்ட உடைவு

3) சமூக உள இடையீட்டு முதலுதவியின் தேவையின் அதிகரிப்பு ஏற்பட்டு உள்ளமை.

4) நுண்ணிதியவிருத்தியில் சமூக மூலதனப் பற்றாக்குறை காணப்படுகின்றமை.

5) நிலைபேறான சமூக அமைப்பைபேண முடியாத நிலைமை காணப்படுகின்றமை.

தற்போதைய பஞ்சத்தில் அரசியல்வாதிகள் ஒருவரையொருவர் குற்றம் காணுவது மக்களுக்கு எவ்வித பலனையும் தரப்போவதில்லை.

அரசனும் ஆண்டி ஆவான் என்பதுபோல் தற்போது எரிபொருள் இன்மையால் கோடிக்கணக்கான பெறுமதியான வாகனம் ஓர் அங்குலம் நகரமுடியாது உள்ளது. சிலஆயிரம் பெறுமதியான வாகனங்களும் ஓர் அங்குலம் நகரமுடியாதுள்ளது. இவ்வாறே அத்தியாவசியமான உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளவும் அனைவரும் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இவைகள் சமூக வர்க்கமட்ட உடைவுக்கு உதாரணமாக அமைகின்றன. இதனை பங்கீட்டு அடிப்படையிலான பண்டமாற்றுக்கள் மூலமே எதிர்கொள்ள வேண்டியநிலைமை உள்ளது.

தற்போதைய சூழலில் சமூக உள இடையீட்டு முதலுதவி (Psychosocial Intervention First Aid) அதிக அளவில் தேவைப்படுகின்றது.

சமூகஉள இடையீட்டு முதலுதவி என்பது பேரிடர் நேரத்தில் சமூகம் சோர்வடைந்து போகாமலும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கையினை ஏற்படுத்தும் வகையிலும் சமூகமட்டத்தில் உதவுதல் ஆகும். இப்பேரிடர் காலத்தில் இந்திய அரசினால் எமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட மருந்துகளும், உணவுப் பொருட்களும், எரிபொருட்களும் இவற்றுள் அடங்கும். இவை சமூகம் ஆறுதல் அடையவும், நெருக்கீட்டினை ஆக்கபூர்வமாக அணுகவும் ஓர் இடைவெளியினை அளிக்கும். சமூகவன்முறைகள், கலகங்கள் ஏற்படுவதனைத் தடுக்கும்.

சமூக இயக்கத்தில் குடும்பப் பொருளாதாரவிருத்தி என்பது நுண்ணிதியவிருத்தி ஆகும். இன்று பலர் வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களை ஈட்டமுடியாது திணறுகின்றனர். இந்நிலையில் சிறியசிறிய தொழில் முயற்சிகள் ஊக்குவிக்கப்படல் வேண்டும். கடந்தகாலங்களில் எமது பிரதேசங்களில் பொருளாதாரத்தடை இருந்தபோது எரிபொருட்களைப் பல தடைகளைத் தாண்டி சில போத்தல்களில் எடுத்து வந்து வியாபாரம் செய்து பல குடும்பங்கள் தமது வாழ்வாதாரத்தை உருவாக்கினர். பலர் துவிச்சக்கர வண்டிகளில் விறகுகளை எடுத்து விற்பனை செய்தனர்.

இவ்வாறான தொழில் முயற்சிகளை நாம் தற்போது கச்சதீவு பொருளாதார மீட்புவலயம் அமைத்து மேற்கொண்டால் யாழ்ப்பாணத்தில் சுமார் 50,000 பேருக்குரிய வாழ்வாதாரம் நேரடியாகக் கிடைக்கும். மாறாக கப்பலில் கடனடிப்படையில் எரிபொருட்களையும், எரிவாயுவையும் பெற்று சமூகத்தின் மேல்தட்டு மக்களுக்கு விநியோகித்தால் பணத்தினை உழைக்க முடியாது. மாறாக காசு அடிக்கும் இயந்திரம் மூலம் உருவாக்க வேண்டிய சூழலேதொடரும். இதனால் நாள்தோறும் பணவீக்கம் அதிகரிக்கும்.

பொருளாதார நெருக்கடி நிலையில் சிறுதொழில் முயற்சிகள்,சில்லறை வர்த்தகம்,விவசாயம், கடற்றொழில் என்பன ஊக்குவிக்கப்படல் வேண்டும்.

இவற்றுக்குரிய சமூக மூலதனத்தை நாம் கூட்டுறவாகத் திரட்டல் அவசியம். தனிநபர் முதலாளித்துவம் தவிர்க்கப்படல் வேண்டும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடி உலகம் முழுவதும் ஓர் அலைபோல் தாக்கத்தைச் செலுத்தும். எனவே தற்போதைய சூழலில் நாட்டை விட்டு வெளியேற முடிவெடுத்தல் என்பது நிலவுக்கு அஞ்சி பரதேசம் போவதுபோல் ஆகும். ஒவ்வொருவரும் தமது குடும்பத்தை நிலைநிறுத்தி தாம் சார்ந்த சமூகத்தைச் சிதையவிடாது காத்தல் அவசியம். சமூக இயக்கம் என்பது வெறுமனே அரசியல் தளத்தில் நகரும் பொறிமுறை அல்ல. எனவே அரசியல் காழ்ப்புணர்வுகளை இனவன்மங்கள், மதவன்மங்கள், வெறுக்கத்தக்க பேச்சுக்கள் என்பவற்றைச் சமூகத்தில் பரப்பல் தவறானது. தற்போதைய மனிதநேய நெருக்கடியினை பொறுப்புடன் உற்றுநோக்கி ஆக்கபூர்வமாகச் செயற்படுவது அனைவரதும் கடமையாகும். அன்றேல் நாம் பேரிடரால் காவுகொள்ளப்பட்டு விடுவோம்.


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE