Saturday 12th of October 2024 02:12:02 AM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையின் சூழலை பொருளாதார ஒத்துழைப்பால் ஆக்கிரமிக்க முயல்கிறதா இந்தியா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!

இலங்கையின் சூழலை பொருளாதார ஒத்துழைப்பால் ஆக்கிரமிக்க முயல்கிறதா இந்தியா? - பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்!


இலங்கை -இந்திய நட்புறவு புவிசார் அரசியலுக்கூடாகவே அதிகம் விளங்கிக் கொள்ள முயலப்படுகிறது. ஆனால் அத்தகைய புவிசார் அரசியல் அனைத்து விடயங்களிலும் கவனம் கொள்ள முயலுகிறது. குறிப்பாக இலங்கைக்குள் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடியை தீர்க்கும் வகையில் தொடர்ச்சியாக நிதி மற்றும் பொருளாதார உதவிகளையும் நன்கொடைகளையும் கடன்களையும் இந்தியா வழங்குவதில் புவிசார் அரசியலாகக் கவனம் கொண்டுள்ளது. இலங்கைத் தீவை அமெரிக்கா மற்றும் சீன வல்லரசுகள் ஆதிக்கம் செலுத்த முனையும் சூழலில் இந்தியா பொருளாதாரமாக உதவவும் இலங்கையின் மீள் எழுச்சிக்கு கைகொடுக்கும் விதத்திலும் செயல்படுவதன் மூலமும் தனது செல்வாக்கினை பலப்படுத்த விளைவதாகவே தெரிகிறது. இதனால் இந்தியா இலங்கையை தனது நிலமாக கருதும் நிலை ஏற்படுகின்றதா என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இக்கட்டுரையும் இந்திய -இலங்கை உறவில் காணப்பட்டுவரும் மாற்'றங்களையும்; அதன் விளைவுகளையும் தேடுவதாக அமையவுள்ளது.

முதலாவது, இந்தியப் பாராளுமன்றத்தின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உரையாற்றும் போது இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு இந்தியா உதவ வேண்டும் என்ற தகவலை தெரிவித்ததுடன் அதற்கான முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து நடைபெற்ற விவாதம் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய கடினமான நேரத்தில் அயல் நாட்டுக்கு ஒருமித்த ஆதரவு வழங்க முன்வந்திருப்பது சிறப்பானது. இந்த முக்கிய தருணத்தில் இலங்கைக்கு உதவுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது என தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமை இந்தியாவுக்கான இலங்கைத் தூதுவர் மிலிந்த மொறகொட சந்தித்த(21.06.2022) போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பபையும் இந்தியா வழங்குமொன உறுதியளித்துள்ளார். தொடர்ந்து அவர் குறிப்பிடும் போது இலங்கை நெருக்கடியிலிருந்து மீண்டுவரும் எனவும் தெரிவித்தார்.

மூன்றாவது, இந்தியாவின் உயர்மட்ட தூதுக் குழுவினர் 23.06.2022 இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பொருளாதார ஆலோசகர் ஆனந்த நாகேஸ்வரன் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சின் செயலாளர் வினாய் குவாத்ரா அத்துடன் பொருளாதார அலுவலகத் திணைக்களத்தின் செயலாளர் அடங்கிய குழுவினர் வருகைதந்துள்ளனர். பொருளாதார நெருக்கடி குறித்து தூதுக் குழு அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்ப்பதுடன் இக்குழுவினர் இலங்கையின் ஜனாதிபதி பிரதமரைச் சந்தித்து உரையாடவுள்ளதாகவும் தெரியவருகிறது. இதில் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் குறுகிய நீண்ட கால உதவித் தேவைகள் குறித்து கலந்துரையாடியதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதனை அடுத்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹாவைச் சந்திதனர். இச்சந்திப்பில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பால்கே கலந்து கொண்டார்.

எனவே இந்தியா இலங்கையை முழுமையாக மீட்டெடுக்க உதவுவதற்கான சூழலையே வெளிப்படுத்துவதாக தெரிகிறது. இதன் மூலம் இலங்கை மக்கள் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்புக்குள்ளால் நிமிர வாய்ப்பு அதிகரித்துள்ளது இந்தியா நேரடியாகவே செயல்பட ஆரம்பித்துள்ளது. ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் போது இந்தியா இலங்கைத் தீவை மீட்டெடுபப்பதில் அதிக கவனம் கொண்டு செயல்படுகின்றது. இலங்கைத் தீவில் எழுந்துள்ள நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு பிற தேசங்கள் அதிக ஈடுபாட்டைக் காட்ட முன்வந்த போதும் அதற்கான வாய்ப்புக்களை வழங்காது இந்தியா நகர்வை அதிகரித்துள்ளது. அமெரிக்க தூதுக்குழுவின் வருகைக்கு முன்பே இந்தியாவின் நடவடிக்கை தீவிரம் பெற்றுள்ளது. இந்திய பாராளுமன்ற ஆலோசனைக் குழுவினர் முதல் பொருளாதார நிபுணர்கள் அடங்கிய தரப்பு வரை இலங்கை விடயத்தில் இந்தியாவின் போக்கு அதிகரித்துள்ளது. இத்தகைய பொருளாதார உதவிகளுக்குப் பின்னால் பரஸ்பரம் இரு தரப்புக்கும் இடையிலேயே வெளிப்படுத்த முடியாத உடன்பாடு நிலவுவது தவிர்க்க முடியாததாகும்.

குறிப்பாக இலங்கை ஆட்சியாளர்களது இருப்பினை பாதுகாக்கக் கூடிய அரசாக இந்தியா மட்டுமே முதன்மையானதாக உள்ளது. அமெரிக்காவும் சீனாவும் பிற தேசங்களும் உலக வங்கியின் நிபந்தனைக்குள் அகப்பட்டிருப்பதுடன் இலங்கைத் தீவில் ஒர் ஆட்சி மாற்றத்தை அதிகம் விரும்புகின்றதை அவதானிக்க முடிகிறது. போராட்டகாரர்களை பாதுகாக்கும் அனைத்து நடவடிக்கைகளையும் அமெரிக்க பிரிட்டன் தூதுவர்கள் மட்டுமல்ல ஐக்கிய நாடுகளுக்கான தூதுவரும் கவனம் கொண்டுள்ளதை காணமுடிகிறது. போராட்ட குழுக்களது நடவடிக்கைகள் மட்டுமல்ல அதற்கான மக்கள் ஆதரவையும் பாதுகாப்பதில் மேற்கு நாடுகளின் தூதுவர்கள் முக்கிய கவனம் செலுத்துகின்றனர்.

சீனாவைப் பொறுத்தவரை அமெரிக்காவுடன் கூட்டுச் சேர்ந்தாலும் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் வெளியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாத நிலையையே கொண்டுள்ளது. ஆனால் இலங்கைத் தீவில் தனது செல்வாக்கினை இழந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக செயல்படுகின்றதைக் காணக்கூடியதாகவே உள்ளது. எதுவாயினும் இலங்கைத் தீவில் அமெரிக்கா சீனாவின் செல்வாக்கின் எல்லையை மட்டுப்படுத்தவே முனைகிறது. அதற்கான நகர்வே சீனாவுடனான கூட்டை அமெரிக்கா கருதுகிறது. இந்த சூழலிலேயே அமெரிக்கா சீனாவைக் கடந்து செயல்பட முனைகிறது. இலங்கைத் தீவை ஆதிக்கம் செய்வதற்கான வாய்ப்பினை அமெரிக்கா அதிகரித்துள்ளது. சீனாவின் போக்கில் காணப்படும் பலவீனத்தை பயன்படுத்திக் கொண்ட அமெரிக்கா தனது விசேட தூதுக்குழுவை அழைத்து இலங்கையுடன் கைகோர்க்க முனைகிறது. இதனைக் கையாளுவதற்கான நகர்வையே இந்தியா வேகப்படுத்தியுள்ளது. முன்கூட்டியே இந்திய உயர்மட்டக் குழுவினரது இலங்கை வருகை சாத்தியமான விளைவுகளைத் தந்துள்ளது.

இலங்கைக்கான பொருளாதார வாய்ப்புக்களை அதிகரிப்பதன் மூலம் அரசியல் இராணுவ ரீதியான நெருக்கத்தை இந்தியா இலங்கையுடன் மேற்கொள்ள முடியும். சீனா கடந்த காலத்தில் இலங்கையுடன் மேற்கொண்டிருந்த முக்கியத்துவத்தை இந்தியா கைப்பற்ற முனைகிறதென்பது அவசியமான புவிசார் அரசியலாகும். அதனை நோக்கி இந்தியா செயல்படுவதென்பது இந்தியாவின் இலங்கைக்கான பொருளாதார உதவிகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. அத்தகைய உதவிக்கு பின்னால் பாரிய ஒத்துழைப்பின் விளைவுகளை அடைய இந்தியா செயல்படுவதைக் காணலாம். பொருளாதார உதவிகளாலேயே உலக நாடுகளை சுற்றிவளைக்கப்படுகின்றது. அதிலும் வறிய நாடுகள் கைப்பற்றப்படுவதும் வலுவான நாடுகளால் ஆதிக்கம் செய்யப்படுவதும் இயல்பான அரசியலாக உள்ளது. இதனையே இந்தியா மேற்கொண்டுவருகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் அனுபவத்தை இந்தியா இலங்கை விடயத்தில் கவனம் கொள்ளுமா என்பது முக்கியமான கேள்வியாகும். ஏறக்குறைய இலங்கை தீவின் அரசியல் இயல்பு ஆப்கானிஸ்தான் போன்றே காணப்படுகிறது. அதனை பலதடவை இந்தியா இலங்கையில் எதிர்கொண்டுள்ளது என்பது இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களுக்கு நன்கு தெரிந்த விடயமாகும். அதனால் இலங்கையை சரியாக கையாளும் திறனுடன் செயல்படுபவர்கள் என்ற முடிபுக்கு வந்துவிட முடியாது. ஆனாலும் இலங்கைத் தீவுக்கு இந்தியாவே தற்போது பாதுகாப்பான நட்பு நாடாகவுள்ளது. அதனையே இந்திய வெளியுறவு அமைச்சர் பாராளுமன்ற ஆலோசனைக்குழுவிலும் தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளை விட இந்தியா இலங்கை அரசையும் ஆட்சியையும் பாதுகாக்கும் நிலையிலுள்ள தேசமாக உள்ளது. இந்தியாவின் அனைத்து பொருளாதார ஒத்துழைப்புகளையும் இலங்கைத் தீவின் ஆதிக்க மகாசங்கங்கள் அமைதியாக ஏற்றுக் கொண்டு;ள்ளதைக் காணமுடிகிறது. காரணம் அரசையும் ஆட்சியையும் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தற்போதைய சூழலில் இலங்கைத் தீவு தள்ளப்பட்டுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கைத் தீவு முழுமையாக இந்தியாவின் செல்வாக்குக்குள் உட்பட வேண்டும் என்பது பிரதான நோக்கமாகவுள்ளது. அதற்கான வாய்ப்பான காலப்பகுதியாகவே தற்போதைய சூழலை பயன்படுத்திக் கொள்ள முனைகிறது. இந்தியாவுக்கு இலங்கையின் வடக்கு கிழக்கு மட்டுமன்றி இலங்கைத் தீவு முழுவதும் அதன் நலனுக்கு அவசியமான தீவாக உள்ளது. பிற வல்லரசுகளது தலையீட்டை தவிர்ப்பதுடன் இந்தியாவை சூழவுள்ள நெருக்கடியை தவிர்க்கவும் பாதுகாக்கவும் உதவக் கூடிய தீவாக இலங்கை காணப்படுகிறது.

இந்தியாவும் இலங்கையும் தெளிவான இலக்குடன் பயணித்தாலும் இலங்கை ஆட்சியாளர்கள் வெற்றிகரமாக செயல்படும் திறனுடையவர்கள் என்பதை கடந்த காலத்தில் நிறுவியுள்ளனர். அதனால் இந்தியாவின் முழுமையான ஒத்துழைப்புடன் வெற்றிகரமான தற்போதைய நெருக்கடியை கடந்துவிடுவார்கள் என்ற கருத்து நிலவுவது சரியானதாகவே தெரிகிறது. அதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளது. ஈழத்தமிழருக்கான இந்தியாவின் அனுசரணையை விட இலங்கைத் தீவுக்கான ஒத்துழைப்பு விரிவடைந்துள்ளது. தமிழகத்தின் நிலைப்பாட்டைக கடந்து சென்னை-புதுடில்லி-கொழும்பு உறவு வலுவடைந்துவருகிறது. இலங்கைக்கான அரசியல் பொருளாதார நெருக்கடி புதிய வாய்ப்புக்களையும் சந்தர்ப்பங்களையும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு வழங்கியுள்ளது. ஈழத்தமிழர்கள் புதுடில்லியிலிருந்து மட்டுமல்ல சென்னையாலும் அன்னியப்படுத்தப்படுகிறார்கள். இதன் விளைவு ஈழத்தமிழருக்கு மட்டுமல்ல இந்தியாவுக்குமானதாக அமைய வாய்ப்புள்ளது. ஒத்துழைப்புக்களை மட்டும் இந்தியத் தரப்பு இலங்கைக்கு வழங்க நிச்சயம் முன்வராது என்பது தெளிவானாலும் இலங்கைத் தரப்பு இந்தியாவை இலகுவில் வெற்றிகண்டுவிடும் என்ற அனுபவம் கடந்த காலங்களில் உண்டு என்பது தவிர்க்க முடியாததாகும்.

அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE