Friday 26th of April 2024 12:24:46 PM GMT

LANGUAGE - TAMIL
-
சீனாவின் பெல்ட் & றோட்  திட்டத்துக்கு மாற்றீடாக  ஜி-7 நாடுகளின் 600 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டம்!

சீனாவின் பெல்ட் & றோட் திட்டத்துக்கு மாற்றீடாக ஜி-7 நாடுகளின் 600 பில்லியன் டொலர் முதலீட்டு திட்டம்!


சீனாவின் “பெல்ட் & றோட்” (Belt and Road) எனப்படும் திட்டத்துக்கு கச்சிதமான மாற்றாக 600 பில்லியன் டொலர் மதிப்பிலான உலகலாவிய முதலீட்டுத் திட்டத்தை செயற்படுத்தும் யோசனையை ஜி-7 நாடுகள் முன்வைத்துள்ளன.

திட்டத்திற்கு அமெரிக்கா 200 பில்லியன் டொலரும், எஞ்சிய உறுப்பு நாடுகள் 400 பில்லியன் டொலரும் பங்களிக்கவுள்ளன.

இந்தத் திட்டத்தை 2027-ஆம் ஆண்டுக்குள் சாத்தியப்படுத்த ஜி-7 நாடுகள் திட்டமிட்டுள்ளன.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் நட்சத்திர விடுதியில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டின் போதே சீனாவின் “பெல்ட் & றோட்” திட்டத்துக்கான மாற்று குறித்து ஜி-7 தலைவர்கள் ஆராய்ந்தனர்.

காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கவும், பாலின சமத்துவம் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் 200 பில்லியன் டொலர்களை அமெரிக்கா திரட்டும் என அமெரிக்க ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.

இது உதவி அல்லது தொண்டு அல்ல. இது அனைவருக்கும் வருமானத்தை வழங்கும் முதலீடு என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன் என பைடன் கூறினார்.

இதேவேளை, 2013 இல் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அறிமுகப்படுத்திய சீனாவின் “பெல்ட் & றோட்” திட்டத்திற்கு நிலையான மாற்றீட்டை உருவாக்கும் முயற்சிக்கு உதவ ஐரோப்பா 300 பில்லியன் யூரோக்களை திரட்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூட்டத்தில் கூறினார்.

இத்தாலி, கனடா மற்றும் ஜப்பான் தலைவர்களும் இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஆகியோர் இது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. ஆனால் அவர்களது நாடுகளும் இத்திட்டத்தில் பங்கேற்கின்றன.

சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் “பெல்ட் & றோட்” திட்டம் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வருகிறது.

புதிய சாலைகள், துறைமுகங்கள், ரயில் தடங்கள், பாலங்களில் பணத்தை முதலீடு செய்வதன் மூலம் சீனா பல்வேறு வர்த்தக தொடர்புகளை மேம்படுத்திக் கொண்டது. மேலும் தன் கடன்கள் மூலம் நாடுகளை வளைத்துப் போடுவதாகவும் விமர்சிக்கப்பட்டது.

சீனாவின் இந்த கடன் கொடுக்கும் திட்டம் மிகவும் சிக்கலானது என்று வாதிடுபவர்களும் உள்ளனர். இத்தனை பெரிய தொகையை கடனாகப் பெறுவது என்பது கிட்டத்தட்ட ஆபத்தானது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜி-7 நாடுகளில் “பெல்ட் & றோட்” திட்டத்துக்கான மாற்றீட்டுத் திட்டம் வெற்றி பெறும் என ஜி-7 தலைவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். இத்திட்டம் சீனாவின் முன்னெடுப்புகளுக்கு எதிரான போட்டியாக இருப்பதை விட, வளரும் நாடுகளில் சில நல்ல விடயங்களைச் செய்யத் தேவையான பணத்தை இதன்மூலம் ஒதுக்க முடியும் என அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

இருப்பினும் சீனாவின் முயற்சி போன்று இதுவும் ஒரு விதமான ஆதிக்கம் தான். பூகோள அரசியல் விவகாரங்களில் மேற்கத்திய நாடுகள் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முற்படுவதையே இது வெளிப்படுத்துகிறது என்ற விமர்சனங்களும் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: உலகம், புதிது
Tags: உலகம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE