Thursday 21st of November 2024 12:59:24 AM GMT

LANGUAGE - TAMIL
-
உயிர்த்தெழுகை - தொடர் 01 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - தொடர் 01 (நா.யோகேந்திரநாதன்)


அடுக்களையிலிருந்து கூரை தலையில் தட்டுப்படாமல் லாவகமாகக் குனிந்து வெளியேறிய பொன்னா நிமிர்ந்த போது, கடப்படிக்கருகில் நின்ற பாலை மரத்தின் சிறிய கொப்பில் அமர்ந்திருந்த இரு தேன் சிட்டுகளும் அவளின் கண்களில் பட்டன. விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் அவை இரண்டும் “கீச், கீச்” எனத் தங்கள் மொழியில் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

அந்தக் காட்சி அவளின் மனதில் ஒரு விதமான மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவளையறியாமலே முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை படர்ந்தது.

அவள் கையில் கொண்டு வந்த சாம்பல் சட்டியைக் கொண்டுபோய் சாம்பலைக் குப்பையில் கொட்டினாள். குப்பையில் முளைத்த அந்தப் பூசணி வளர்ந்து படர்ந்து விட்டிருந்தது. வெகு விரைவில் பெரும் காய்களைத் தரப்போவதன் அறிகுறியாக சில மஞ்சள் பூக்கள் அங்குமிங்கும் தென்பட்டன. அவள் சாம்பலைக் கொட்டி விட்டுத் திரும்பியபோது கடப்புத் தடிகளைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தான் குலம்.

முற்றத்துக்கு வந்த குலம் “அம்மான், போட்டாரே?” என அவளிடம் கேட்டான்.

அவள் “ஓம் ..... மச்சான் ..... அவரும் சின்னக்குட்டி மாமாவும் விடியப்புறமே வண்டிலையும் பூட்டிக்கொண்டு போட்டினை என்றாள். ஒவ்வொரு சனியும் நெடுங்கேணிச் சந்தைக்குத் தங்கள் உற்பத்திகளைக் கொண்டுபோய் விற்கவும், தங்கள் தேவைக்கான பொருட்களை வாங்கி வரவும் அந்த ஊரில் நின்ற பொதுப் போக்குவரத்து வாகனங்களாக வண்டிலும் உழவியந்திரமும் விளங்கின. பட்டிக்குடியிருப்பு நாகராசாவின் உழவியந்திரமும் ஒவ்வொரு சனியும் போய் வருவதுண்டு.

“நேற்றையில குறை உழக்கிடக்குது. இப்ப போனால் பொழுது உச்சிக்கு வாறதுக்கிடையிலை வேலையை முடிச்சிடலாம்” என்று விட்டு குலம் வண்டில் கொட்டில் பக்கம் போனான்.

ஏற்கனவே ஒற்றைத் திருக்கலில் கலப்பை, நுகம், துவரம் கேட்டி எனத் தேவையான எல்லாவற்றையும் ஏற்றி காசியர் தயாராய் வைத்திருந்தார்.

குலம் செங்காரியை வண்டியில் பூட்டிவிட்டு மற்ற எருதின் பிடிகயிற்றை வண்டில் பின் தட்டியில் கட்டினான்.

பின்னால் வந்த பொன்னா, “மச்சான், பழஞ்சோறும் ராத்திரியில் விரால் மீன் கறியும் கிடக்குது. நல்ல குழையல் ஒண்டு போட்டுத்தாறன். நாலு வாய் திண்டிட்டுப் போ!” எனக் கேட்டாள்.

“இப்ப விடியமுந்தி என்னெண்டு தின்னுறது. பழங்கஞ்சி கொண்டு வரேக்கை கொண்டு வா!”

“அப்ப .... தேத்தண்ணியெண்டாலும் குடிச்சிட்டுப் போவன்!”

“விடியக் குஞ்சாத்தை பால் கறந்து நல்ல தேத்தண்ணி போட்டு எனக்கும் சேனாதியண்ணருக்கும் தந்தவ” என்று விட்டு வண்டிலின் ஆசனப் பலகையில் ஏறி அமர்ந்த குலம் பொன்னாவைப் பார்த்து “வரட்டே?” எனக் கேட்டான்.

“ஓ .... ஓ ...... மாட்டுப் பட்டியைக் கொண்டு போய் மேய்ச்சலுக்கு விட்டிட்டு கஞ்சி கொண்டு வாறன்”.

“சரி .... சரி ..... மாடு கொண்டு போகேக்கை குஞ்சாத்தையோடை ஞாயம் பிளந்து கொண்டு நில்லாமல் கெதியாய் வா. நாலு சுத்து வர வயிறு காந்தத் துவங்கியிடும்”.

பொன்னா முன்னால் போய் கடப்புத் தடிகளைக் கழற்றி விட்டாள்.

குலத்தின் “ஹேய் ..... ஹேய்யா”! வுடன், மாடு புறப்பட ஆரம்பித்தது.

ஒழுங்கை வளைவில் வண்டில் திரும்பி மறையும் மட்டும் பார்த்துக்கொண்டு நின்ற பொன்னா, கடப்புத் தடிகளை மீண்டும் கொழுவிவிட்டு உள்ளே போகக் காலடி எடுத்து வைத்தபோது குருவிகளின் “கீச்சொலி” காதில் விழவே பாலை மரத்தை அண்ணாந்து பார்த்தாள்.

ஒரு குருவியின் வாய்க்குள் மற்றது எதையோ ஊட்டி விட்டு மீண்டும் “கீச் .... கீச்” என்றது.

அதைப் பார்த்தபோது சோறு கொடுக்கும் திருமணத்தின் போது, மாப்பிள்ளையும் பொம்பிள்ளையும் ஒருவருக்கொருவர் சோறு ஊட்டி விடுவதுண்டு என அவள் கேள்விப்பட்ட விடயம் நினைவுக்கு வந்தது.

அந்த நேரத்தில் ஏனோ குலத்தின் நினைவு அவள் நெஞ்சில் வந்து போனது. ஏதோவொரு விதமான உற்சாகத்துடன் மாட்டுப்பட்டியை நோக்கி நடந்தாள்.

குலம் பொன்னாவின் மைத்துனன் தான். பெரியாத்தையும் குஞ்சாத்தையும் காசியப்பரின் கூடப் பிறந்த சகோதரிகள். குலம் பெரியாத்தையின் மகன். அதேபோன்று சேனாதி குஞ்சாத்தையின் மகன். பெரியாத்தையும் அவளின் கணவனும் ஏற்கனவே இறந்து விட்ட நிலை யில் குலத்தையும் சேனாதியையும் குஞ்சாத்தையே வளர்த்து வந்தாள்.

இந்த நிலையில் பொன்னாவும், குலமும் ஒருவரையொருவர் விரும்பியிருந்தாலும் இருவரும் அதை இதுவரை ஒருவரிடம் மற்றவர் தெரிவித்ததில்லை.

ஒருவிதமான இனிமையான நினைவுகளுடன் மாட்டுப்பட்டிக் கடப்புத்தடிகளை கழற்றி விட்ட பொன்னா மாடுகளைச் சாய்த்துக்கொண்டு ஒழுங்கைக்குள் இறங்கினாள்.

மாடுகள் ஒழுங்கையால் வந்து மருதோடை பிரதான வீதியில் மிதந்தபோது தூரத்தில் ஒரு பச்சை நிற ஜீப் வேகமாக வந்து கொண்டிருப்பதைக் கண்டு கொண்ட பொன்னா அவசரமவசரமாக மாடுகளை ஒரு ஓரமாகத் தட்டி விட்டாள். ஆனால் ஜீப்பின் வேகத்துக்கேற்ற வகையில் மாடுகளை ஒதுக்கி விட முடியவில்லை.

அந்த வாகனம் திடீர் “பிரேக்” அடித்துக் குத்திக் குலுங்கி நின்றபோதிலும் நரையன் பசுவின் பின் பக்கத்தில் தட்டி விட்டது. காயம் எதுவும் அதற்கு ஏற்படாத போதிலும் கன்னிப் பசுவான அது கதறிக்கொண்டு ஓட ஆரம்பித்தது. அதன் அலறலில் ஏனைய மாடுகளும் கலைந்து ஓடத் தொடங்கின.

அது கன்றாயிருந்த காலத்திலிருந்து பொன்னா செல்லமாக வளர்த்த நரைச்சி இப்போது கன்று போடத்தயாராகி விட்ட நிலையில் அதன் மேல் அடிபட்டதும், அது கதறிக் கொண்டு ஓடியதும், அவளுக்கு அளவற்ற கொதிப்பை ஏற்படுத்தியது.

வேகமாக ஜீப்பின் அருகில் சென்ற அவள் சாரதியிடம் “டேய் ..... நீ எல்லாம் ஒரு மனுசனே? வாயில்லாச் சீவனிலை மோதிப்பாக்கிறாய் ....? எனச் சீறினாள்.

ஜீப்புக்குள் ஆயுதங்களுடன் இருந்தவர்கள் பற்றி அவள் அக்கறைப்படவில்லை.

“அக்காவுக்கு மரியாதையாய் கதைக்கத் தெரியேல்லை மரியாதை படிப்பிக்கத்தான் வேணும் போல ....! நாங்கள் ஆர் தெரியுமே?” என இறுமாப்புடன் கேட்டான் அந்தச் சாரதி.

பொன்னாவுக்கு அவனின் திமிர்த்தனமான கதை மேலும் அவளின் கோபத்தை அதிகரித்தது.

“நீங்கள் ஆரெண்டால் எனக்கென்ன? என்ர மாட்டை மோதிப் போட்டுத் தடிப்புக் கதை பேசுறாய்?”

“பொத்தடி வையை ...” என்றவாறே அவன் ஜீப்பின் கதவைத் திறந்தபோது பக்கத்தில் இருந்தவன், “நிப்பாட்டடா எல்லாதையும்”, என்றான் அதிகாரத் தொனியில்.

சாரதி, “தோழர், இவள் ........” என ஏதோ சொல்லத் தொடங்க மற்றவன் “எனக்கு எல்லாம் விளங்கும் என்றான்” எனச் சாரதியை அடக்கினான்.

பின்பு எட்டி யன்னலால் பொன்னாவைப் பார்த்த அவன், “பிழை எங்களிலைதான் .... மாடுகளைத் தூரத்திலை கண்டவுடனேயே ஜீப்பைச் ஸ்லோ பண்ணியிருக்க வேணும்,” என்றவன் பின்பு சாரதியிடம் “மன்னிப்புக் கேளடா” என்றான்.

சாரதி பரிதாபமாக அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு தயங்கியவாறே பொன்னாவைப் பார்க்காமல் “என்னை மன்னியுங்கோ” என இழுத்தான்.

அவனுக்குக் கட்டளையிட்ட மற்றவன் பொன்னாவைப் பார்த்து ஒரு மெல்லிய புன் சிரிப்புடன் “என்னைத் தெரியுமே?” என இழுத்தான்.

அவள் எதுவுமே பேசவில்லை. ஏனென்றால் அவள் அவர்களுடன் பேச விரும்பவில்லை. இவர்களைப் போன்றவர்களுடன் கதைத்தால் காலையில் குலத்துடன் கழித்த சில நிமிடங்கள் ஊட்டிய இனிய உணர்வுகளை குழம்பிப் போய் விடுமென்றே பொன்னா கருதினாள்.

அவன் அவளின் மௌனத்தை பொருட்படுத்தாமலே, “நான் தான் செங்கண்ணன். இயக்கத்தின்றை இந்த ஏரியாப் பொறுப்பாளர்” என்று விட்டு பின்பு, “கெதியா வீட்டை போய்ச் சேருங்கோ ..... பெருங்குளம் சந்திப் பக்கம் ஹெலி சுத்திச் சுத்திச் சுடுறான்” எனக் கூறினான்.

பின்பு சாரதியின் பக்கம் திரும்பி ”எடடா ஜீப்பை!” என்றவிட்டு மீண்டும் பொன்னாவைப் பார்த்து, “போட்டு வாறன் .... பை” என்றவாறே கையைக் காட்டினான்.

ஜீப் உறுமிக் கொண்டு புறப்பட்டபோது அவன் சாரதியிடம் சொன்னது அவளின் காதில் அரைகுறையாக விழுந்தது.

“தோழர்! உனக்கு வடிவான பெட்டையளோடை எப்பிடி பழக வேணுமெண்டு இன்னும் விளங்கேல்லை!”

அந்த வார்த்தைகள் பொன்னாவின் காதில் அரைகுறையாக விழுந்தாலும் அவனின் நோக்கத்தை அவளால் புரிந்த கொள்ள முடிந்தது.

அவள் ஜீப் போனபக்கமாகத் திரும்பி வெறுப்புடன் காறித் துப்பி விட்டாள்.

“சனியன்கள்!” என மனதுக்குள் திட்டி விட்டு மாடுகளை ஒதுக்கித் தரவைப் பக்கம் கொண்டு போனாள்.

ஏற்கனவே தரவையில் மேய்ந்து கொண்டிருந்த பட்டிகளுடன் அவள் தனது மாடுகளையும் சேர்த்துவிட்டு அவசரமவசரமாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

குலத்துக்குச் சாப்பாடு நேரத்துக்குக் கொண்டு போக வேண்டுமென்ற உந்துதல் அவளின் நடையை வேகப்படுத்தியது.

அவள் குஞ்சாத்தை வீட்டுப் படலையை நெருங்கிய போது அந்தப் பச்சைப் ஜீப் காறன் சொன்னதைப் போலவே உலங்கு வானூர்தி வந்துவிட்டது.

பொன்னா படலையைத் திறந்து கொண்டு உள்ளே ஓடிப் போனாள். முற்றம் கூட்டிக் கொண்டு நின்ற குஞ்சாத்தை அவனின் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டிற்குள் இழுத்துச் சென்றாள்.

உள்ளே போனதுமே பொன்னாவுக்கு ஒரு மங்களம் விழுந்தது. “அவன் இஞ்சை இஞ்சை சுத்திறான். நீ மிலாந்திக் கொண்டு நிக்கிறாய்?”

உலங்கு வானூர்தி ஒருமுறை வட்டமடித்துவிட்டு ஜீப் போன பக்கமாக நகர்ந்தது.

அது போனதும் பொன்னா ... “நான் போகட்டேயணை? குலம் மச்சானுக்குச் சாப்பாடு கொண்டு போகவேணும்” என்றாள் பொன்னா?

அந்த நேரம் சற்றுத் தொலைவில் உலங்கு வானூர்தியின் வேட்டுக் சத்தங்கள் “படபடவெனக்“ கேட்டன.

“அவன் உப்பிடிப் பொழிஞ்சு தள்ளுறான் ..... உதுக்கை ஒதுங்க இடமில்லாத வயல் வெளிப் பக்கம் போகப் போறியே” என்று பொரிந்த குஞ்சாத்தை,

“நாலைஞ்சு பாத்தி தானே உழக்கிடக்கெண்டவன், இவ்வளவைக்கு முடிஞ்சிருக்கும் வந்து சாப்பிடட்டும்” என்றாள்.

“அவன் பசி கிடக்க மாட்டானணை”

“எங்கை பாப்பம். ஒரு நேரம் விட்டு சாப்பிட்டால் செத்துப் போவனோ எண்டு..... நீ போக வேண்டாம்!” என அதட்டினாள் குஞ்சாத்தை!

குஞ்சாத்தையின் சொல்லைத்தட்டினால் பின்பு பூகம்பம்தான் என்பது பொன்னாவின் அனுபவம். பொன்னாவுக்கு “ஓ” என்று கதறி அழ வேண்டும் போலிருந்தது.

(தொடரும்)


Category: கலை & கலாசாரம், இலக்கியம்
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE