ஆனி மாத நடுக்கூறில் மூன்று நாட்கள் அடுத்தடுத்து மிதமான மழை பெய்திருந்தது. அதன் காரணமாக வயல் நிலத்தில் ஏற்பட்ட ஈரப்பதம் தற்சமயம் உலர்ந்தும் உலராதபதத்தில் எட்டியிருந்தது. அந்த நிலத்தில் மரக்கலப்பையை இறக்கி உழும்போது மண் பூப்போல உதிர்ந்து கொடுத்தது. மாடுகளும் சிரமப்படாமல் உழுது கொண்டிருந்தன.
கலப்பை மண்ணில் பதிந்து மெல்லக் கிளறியவாறு சென்று கொண்டிருந்தபோது, கலப்பை பிடிப்பதிலும் குலத்துக்கு ஒரு இதம் பரவியிருந்தது. அதன் காரணமாக மனதில் எழுந்த ஒருவிதமான உற்சாகம் அவனையறியாமலேயே அவனைப் பாட வைத்தது. மாடுகளும் அந்தப் பாடலுக்கேற்ற முறையில் லயம் பிசகாமல் ஒரே சீராக நடப்பது போல் தோன்றியது.
“பாரக் கலப்பையடா ...... செல்லனுக்கு பாரம் மெத்தத் தோணுதடா! மூலை வரம்போரம் செல்லா நீ முடுகி நட நல்ல கண்டே....!
கஞ்சிப்பானையையும் பழம் சோற்றுச் சட்டியையும் ஒரு கடகத்தில் வைத்து சுமந்து கொண்டு வரம்புகளால் நடந்து வந்த பொன்னாவுக்கும்கூட அவனின் பாடல் ஒரு வித உற்சாகத்தைக் கொடுத்தது.வயல்களின் நடுவிலுள்ள அந்தச் சிறு குளத்தின் கரையில் வளர்ந்திருந்த ஆலமரத்தின் கீழ் வந்து கஞ்சிக் கடகத்தை இறக்கி வைத்து விட்டு பலமான குரலில் “மச்சான் ..... வந்து சாப்பாட்டை முடிச்சுப் போட்டு பிறகு போய்ப் பாடு மச்சான்” என்றாள்.
பொன்னாவின் குரல் கேட்டு திரும்பிப் பார்த்த குலம், “இந்தப் பாத்தியிலை ஒரு கொஞ்சம் தான் கிடக்குது! முடிச்சுப் போட்டு வாறன். விருப்பமெண்டால் எதிர்ப் பாட்டுப் பாடிக் கொண்டு உதிலை குந்தியிரு” என்றான்.
“எனக்கு எதிர்பாட்டுத் தெரியாது ..... நீயே பாடு நான் கேட்கிறன்!”
சிறிது நேரத்தில் குலம் மாடுகளை அவிழ்த்துக் கலைத்து விட்டு, கலப்பையையும் நுகத்தையும் தோளில் சுமந்து கொண்டு வந்து ஆலமரத்தில் சாத்தினான். மாடுகள் இரண்டும் தாங்களாகவே போய் குளத்தில் நீரை அருந்தின.
குலமும் போய் குளத்தில் கைகால் கழுவி விட்டு மீண்டும் ஆலமரத்தடிக்கு வந்து பொன்னாவின் முன்பாக அமர்ந்து கொண்டான்.
பொன்னா கொண்டு வந்த பழஞ்சோற்றுக்குள் மீன் குழம்பை விட்டு திரணையாக்கி அவனின் கையில் கொடுத்துவிட்டு கடகத்தில் வைத்திருந்த கருவாட்டையெடுத்து சோற்றுத் திரளையின் மீது வைத்தவாறு, “போன சந்தையிலை அப்பு வேண்டி வந்த சூடைக் கருவாட்டிலை இரண்டு மூண்டு கிடந்தது. உனக்குப் பிடிக்குமெண்டு சுட்டுக் கொண்டு வந்தனான்” என்றாள் பொன்னா.
குலம் சோற்றுடன் கருவாட்டையும் கண்டுவிட்டு மீண்டும் ஆலமரத்தடிக்கு வந்து பொன்னாவின் முன்பாக அமர்ந்து கொண்டான்.
குலம் சோற்றுடன் கருவாட்டையும் ஒரு கடிகடித்து விட்டு, “ச்சை .... பழஞ்சோத்துக் குழையலும் சுட்ட கருவாடும் கொண்டெழுப்புது” என்றான்.
“எழுப்பேக்கை பொத்தெண்டு விழுந்திடாதை” என்றாள் பொன்னா ஒரு மெல்லிய சிரிப்புடன். கவளத்தில் பாதியைத் தின்று முடித்துவிட்ட நிலையில் குலம் ”நீ சாப்பிட்டிட்டியே?” எனக் கேட்டான்.
“இல்லை.... இனிப் போய்த்தான்!”
குலம் கையில் இருந்த சோற்றை அவளின் முகத்துக்கு நேரே நீட்டிவாறு “வாயைத் திற ....... ஆவெண்ணு” என்றான்.
அவள் மெல்லிய சிணுங்கலுடன் “ என்ன மச்சான் நீ ...” என்றாள்.
அவன் அழுத்தமாக “ஆவெண்ணு .... எண்ணுறன்” என அவளை மென்மையாக மிரட்டினான். அவள் சுற்றும் முற்றும் நன்றாகப் பார்த்து விட்டு, வாயைத் திறந்த போது குலம் ஒரு பிடி சோற்றை அவளின் வாயில் ஊட்டி விட்டான்.
திருமண வீட்டில் மாப்பிள்ளை மணப் பெண்ணுக்கு சோறு ஊட்டி விடுவது அவளின் ஞாபகத்துக்கு வரவே, அவளின் முகம் ஓடிச் சிவந்தது.
மெல்லிய நாணம் இழையோடச் சிவந்த அவளின் முகத்தை அவதானித்த குலம் “ என்ன பொன்னா?” என வியப்புடன் கேட்டான்.
அவள் ஒருமுறை அவனின் முகத்தைப் பார்த்துவிட்டு “அது ... அது ஒண்டுமில்லை”, எனத் தடுமாறி விட்டுப் பின்பு தயங்கியவாறே காலையில் தேன் சிட்டுகள் ஒன்றுக்கொன்று உணவூட்டிய காட்சி தன் நினைவுக்கு வந்ததாகக் குலத்திடம் கூறிவிட்டு மெல்லப் புன்னகைத்தாள் பொன்னா.
“அதுகளும் ஒண்டிலையொண்டு உயிரை வைச்சிருக்குங்கள் போல” எனக் கூறிய குலம் ஒரு கள்ளச் சிரிப்புடன், “ஒரு குருவி தன்ரை வாயாலை தானே மற்றதின்ரை வாயிலை ஊட்டியிருக்கும்” என்றான்.
“இப்ப அதுக்கென்ன? பொன்னா சீறினாள்.
ஒண்டுமில்லை. நடக்கிறதைச் சொன்னன்”.
“எனக்கு எல்லாம் விளங்கும் .... இப்ப நீ சாப்பிடு ... மிச்ச வேலை முடிக்க வேணும்” என்று விட்டுப் பொன்னா தான் கொண்டு வந்த அலுமினியச் சட்டியை எடுத்துக்கொண்டு குடிநீர் எடுக்கக் குளத்தருகே இருந்த சிறு கட்டுக் கிணற்றை நோக்கிப் போனாள்.
பொன்னா திரும்பி வந்தபோது குலம் சாப்பிட்டு முடித்து விட்டதன் அறிகுறியாக அவனிலிருந்து ஒரு ஏவறை வெளியில் வந்தது.
பொன்னா மூடிச் சட்டியொன்றில் பழங்கஞ்சியை ஊற்றி அவனிடம் கொடுத்தாள். அவன் ஒரு பகுதியைக் குடித்துவிட்டு மிகுதியை அவளிடம் நீட்டினான்.
“வேண்டாம் நீ குடி!”
“ஏன் நான் எச்சில் படுத்தினதை நீ குடிக்க மாட்டியே?”
அவனை ஒருமுறை முறாய்த்துப் பார்த்து விட்டு கஞ்சிச் சட்டியைப் பறித்து “மடமட“ வென்று குடித்து முடித்துவிட்டு வெறும் சட்டியை அவனிடம் கொடுத்தாள் பொன்னா!
“ஏய் எல்லாத்தையம் குடிச்சு முடிச்சிட்டாய்” என்றான் குலம்.
“பிறகு நீ என்ரை எச்சிலைக்குடிக்கப் போறனெண்டு நினைப்பாய்” என்று விட்டுப் பொன்னா “கலகல” வென சிரித்தாள்.
“குடிச்சால் குடிபடாதே”.
பொன்னா “அது உன்ரை தானே. அதிக்கிடையிலை ஏன் அவசரப்படுறாய்” என்ற பொன்னா கொண்டு வந்த கலயம், சட்டி என்பவற்றைக் கடகத்துக்குள் வைத்துத் தூக்கினாள்.
“வெளிக்கிடப் போறியே?”
“ஓம் மச்சான் .... குஞ்சாத்தை போக வேண்டாமெண்டு மறிச்சவ. நான் அவவுக்குத் தெரியாமல் வந்திட்டன். மனுஷி அறிஞ்சுதோ நான் இருந்தபாடில்லை”.
“சரி கவனமாய்ப் போ ...... ஹெலிக்காரன் இண்டைக்குச் சுத்திக்கொண்டிருக்கிறான்” எனக் கூறிய குலம் மெல்ல அவளருகில் வந்து ஏட்டிக் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தான்.
திடுக்கிட்ட பொன்னா கோபமாக “நீ .... நீ .... உன்னை ....” என்று விட்டு விடுவிடென வரம்பால் நடக்காத் தொடங்கினாள்.
“பொன்னா! பொன்னா!” என அவன் கூப்பிட்டதை அவள் பொருட்படுத்தவேயில்லை. நடையை மேலும் வேகமாக்கினான்.
குலம் தனக்குள் ஒருமுறை சிரித்து விட்டு நீர் அருந்திவிட்டுக் குளக்கரையில் படுத்திருந்த மாடுகளை நோக்கி நடந்தான்.
வயல் வெளிக்கு அப்பாலிருந்த பாதையில் அந்த பச்சை ஜீப் வேகமாக வந்ததையோ அது திடீரென பிரேக் அடித்து நின்றுவிட்டு வேகமாகப் புறப்பட்டுப் போனதையோ அவர்கள் இருவருமே காணவில்லை.
(தொடரும்)
Category: கலை & கலாசாரம், இலக்கியம்
Tags: