அமெரிக்காவின் மைய நகரங்களில் ஒன்றான மண்ஹெட்டனில் அமைந்துள்ள நீதிமன் றத்தில் ஹமில்டன் வங்கி என்ற நிதி நிறுவனம் இலங்கை மீது வழக்குத் தொடுத்துள்ளது.
இந்த வங்கி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட பிணை முறிகளை கொள்வனவு செய்திருந்தது. இலங்கை சர்வதேச இறைமைக் கடன் பிணை முறிகளுக்கான கொடுப்பனவுகளைக் காலவரையறையின்றி நிறுத்தி வைத்துள்ளதாகவும், எதிர்வரும் 25.07.2022ல் பிணை முறிகள் முதிர்வடையும் நிலையில் தமது வங்கியால் முதலீடு செய்யப்பட்ட நீதியான 250 கோடி டொலரையும் 7.4 கோடி டொலர் வட்டியையும் மீளச் செலுத்துமாறு உத்தரவிடக் கோரியும் அந்த நிறுவனம் வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
தாக்கல் செய்யப்பட் வழக்கில் இலங்கையின் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் வெளிநாடுகளில் எங்கெங்கு வைப்புச் செய்யப்பட்டுள்ளன என்ற விபரம் முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால் உட்படப் பல அதிகாரிகளின் சொத்துக் குவிப்புகள் பற்றிய தகவல்கள் என்பனவும் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
ஏற்கனவே இலங்கையின் அரசியல்வாதிகள் சிலர் பெருந்தொகைப் பணத்தையும் சொத்துக்களையும் “செல்சியஸ்” நாட்டிலும் சில மத்திய கிழக்கு நாடுகளிலும் சேர்த்து வைத்துள்ளனர் என்ற தகவல் பலராலும் பேசப்பட்டு வந்தது. தற்சமயம் ஒரு சர்வதேச நிதி நிறுவனமும் அதனுடன் இணைந்த 30 நிறுவனங்களும் அதே குற்றச்சாட்டை முன்வைத்துள் ளன.
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கான நிவாரண நடவடிக்கையில் தனது பங்காக இந்தியாவில் ஒரு சிறுமி தன் உண்டியல் பணத்தையும் ஒரு பிச்சைக்காரன் தனது வங்கிச் சேமிப்பையும் வழங்கியுள்ளனர். இந்த நிவாரண நிதிக்குத் தமிழக சட்டசபை உறுப்பினர்கள் தமது ஒரு மாதச் சம்பளத்தை வழங்கியுள்ளனர்.
ஆனால் வெளிநாடுகளில் கோடிகோடியாகச் சேர்த்து வைத்திருக்கும் இந்த நெருக்கடியின் பங்காளிகளாகக் கருதப்படும் அரசியல்வாதிகளோ உயர் அரச அதிகாரிகளோ, நாடு எதிர்கொண்டுள்ள டொலர் நெருக்கடியை நிவர்த்தி செய்ய ஒரு சதத்தைக் கூடக் கொடுக்கவில்லை. தமக்கு முதலாவதும் நாடு, இரண்டாவதும் நாடு, மூன்றாவதும் நாடு என முழங்கியவர்களின் குரல்களையே இந்த நேரத்தில் கேட்கமுடியவில்லை.
இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டது. கடன் தவணைகளையோ, வட்டி யையோ கட்ட முடியாதளவுக்கு கடன் மறுசீரமைப்பைவிட வேறு வழியற்ற நிலை. இப்படியான ஒரு நிலைக்கு நாட்டைக் கொண்டுவந்த அரசியல்வாதிகளுக்கும் உயர் அதிகாரி களுக்கும் வெளிநாடுகளில் உள்ள தேட்டங்கள் பற்றி அந்தக் கடன் வழங்கிய நிறுவனங்களே வெளிப்படுத்தி்யுள்ளன.
ஆனால் அவர்கள் எவ்வாறு இந்த நாட்டை இவ்வளவு மோசமான நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்பதையும் அவர்களின் தனிப்பட்ட சொத்துக்கள் எவ்வாறு உயர்வடைந்தன என்பதையும் தற்போது இடம்பெற்றுவரும் “கோப்” மற்றும் “கோபா” குழுவினரின் விசாரணை களில் தெரியவந்துள்ளன.
அன்றைய இயந்திரமயமான உலகில் எரிபொருள் இல்லையேல் எதுவுமே இல்லை என்ற நிலை. எந்தவொரு நாட்டினதும் வருவாயிலோ அல்லது செலவினத்திலோ அது முக்கிய பங்கை வகிக்கிறது.
இன்று இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழில்கள், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, உற்பத்தி எனப் பல்வேறு துறைகளிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக நாடே திணறிக்கொண்டிருக்கிறது.
ஆனால், எமது நாட்டில் எரிபொருள் வளம் போதியளவில் இருந்தபோதும், நாம் எரிபொருளுக்கு கப்பல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டியுள்ளது. டொலர் பற்றாக்குறையினால் அதைக் கூடப் பெறமுடியாத நிலை தோன்றியுள்ளது.
2016ல் வெளிநாட்டு நிபுணர்களின் ஆய்வின் அடிப்படையில் கணக்காளர் நாயகத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையும் 2017, 2018, 2019 அறிக்கைகளும் “கோபா” குழுவினால் ஆராயப்பட்டது.
அவற்றில் மிகவும் தெளிவாகவே மன்னார் கடற்படுகையில் எரிபொருள் வளம் இருப்பது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. பெரும் பொருட் செலவில் வெளிநாட்டு நிபுணர்கள் வந்து இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி மன்னார் கடற்படுகையில் 5 பில்லியன் பீப்பாய் எரிபொருளும் 6 ட்ரில்லியன் கன அடி எரிவாயுவும் இருப்பதாகவும் இது இலங்கையின் தேவையை 25 வருடங்களுக்கு நிறைவு செய்யுமெனவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவற்றின் பயன்பாட்டில் 1730 மெகா வாட்ஸ் மின்சார உற்பத்தி செய்ய முடியுமெனவும் அத்துடன் பல்வேறு துறைகளிலும் 25 வருடங்களுக்கு 200 பில்லியன் டொலர் வருமானத்தைப் பெறமுடியுமெனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதுபற்றிய விசாரணைகளை பெற்றோலியம் கூட்டுத்தாபன உயர் மட்டத்தினரிடம் “கோபா” குழு நடத்தியது. அக்குழுவினரால் ஏன் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்படவில்லையெனக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று - பெற்றோலிய அதிகார சபையின் ஊழியர்கள் பற்றாக்குறை. மற்றது பொருத்தமான முதலீட்டாளர்களை இனம் காணமுடியாமை எனத் தெரிவிக்கப்பட்டது.
முதலாவது காரணமாகச் சொல்லப்பட்ட ஊழியர்கள் பற்றாக்குறையென்றால் பொருத்தமானவர்களை நியமித்திருக்கலாம். நாட்டில் உடலுழைப்பாளிகளும் தொழில்நுட்ப வல்லுனர்களும் போதிளவு உண்டு.
எண்ணெய் தொடர்பான முதலீடுகளென்றால் சர்வதேச நாடுகள் “நான் முந்தி, நீ முந்தி” எனப் பாய்ந்து விழுந்து வருவார்கள். ஏன் அவர்களை இவர்களால் இனங்காணமுடியவில்லை? ஏற்கனவே நோர்வேக்கு சில பங்குகள், அமெரிக்காவுக்கு சில பங்குகள், ஜப்பானுக்கு சில பங்குகள் எனப் பேச்சுகள் அடிபட்டன. பின்பு அவையனைத்துமே காணாமல் போய்விட்டன.
அப்படியானால் பொருத்தமான முதலீட்டாளர் என்பது எமது அதிகார பீடங்கள் திருப்திப்படுமளவுக்குத் தரகுப் பணங்களை வழங்குபவர்கள் என்று அர்த்தப்படுமா என்ற கேள்வி எழுகிறது.
எப்படியிருப்பினும் 2016ல் அகழ்வு வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் தற்போது நாம் ஒரு எண்ணெய் உற்பத்தி நாடாக விளங்கியிருப்போம். இன்றைய நெருக்கடி பற்றிக் கனவு கூடக் கண்டிருக்கமாட்டோம்.
திண்மக் கழிவிலிருந்து பசளை உட்பட வேறு சில முக்கியமான பாவனைப் பொருட்களை உற்பத்தி செய்தமைக்காக கனடாவில் வாழும் ஒரு இலங்கைத் தமிழ் முதலீ்ட்டாளர் கனடாவில் ஒன்றியோ மாநில அரசின் விருதைப் பெற்றிருந்தார். அவர் இலங்கையில் அவ்வாறான ஒரு தொழிற்சாலையை அமைக்க அனுமதி கோரி சம்பந்தப்பட்ட அமைச்சரைச் சந்தித்திருந்தார். அமைச்சரோ அந்தத் தொழில் நிலையத்தின் பாதிப்பங்கைத் தனக்கு வழங்கும்படி கேட்டுள்ளார். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து தனது தொழிற்சாலையை பங்களாதேஷில் ஆரம்பித்து விட்டார்.
அவரின் தொழிற்சாலை அமைக்கப்பட்டிருந்தால் இங்கு சேதனப் பசளை உற்பத்தி தொடங்கியிருக்கும் என்பதுடன் குப்பை மேட்டுப் பிரச்சினைகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் இல்லாமற் போயிருக்கும்.
ஆனால், அரசியல்வாதியின் சொந்த நலன் முதன்மைப்படுத்தப்பட்ட நிலையில் நாட்டுக்கு நன்மை தரக்கூடிய ஒரு திட்டம் இல்லாமல் செய்யப்பட்டது.
இந்த இரண்டு விடயங்களின் காரணமாக எரிபொருள் உற்பத்தி, மற்றும் விவசாயத்தின் பிரதான தேவையான பசளை உற்பத்தி என இரு முயற்சிகளும் திட்டமிட்ட வகையில் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக அரசியல்வாதிகளாலும் முறியடிக்கப்பட்டன.
இந்த இரு தொழில் முயற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டு உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால் எரிபொருள் இன்மையால் ஏற்படும் பாதிப்புகளும் விவசாயத்தில் ஏற்பட்ட பின்னடைவும் இல்லாமற் போயிருக்கும்.
அந்நியச் செலாவணி இல்லாமை, டொலர் கையிருப்பு இல்லாமை போன்ற பிரதிகூலம் ஏற்பட்டிருக்கமாட்டா. மேலும் கடன்களையும் வட்டியையும் கட்டமுடியாது நீதிமன்றத்தில் நிற்கும் நிலையும் ஏற்பட்டிராது.
அருவி இணையத்துக்காக :- நா. யோகேந்திரநாதன்
05.07.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, உலகம்