Thursday 21st of November 2024 04:17:15 AM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 3 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 3 (நா.யோகேந்திரநாதன்)


வயலில் இருந்து திரும்பிய பொன்னா கடப்புத் தடியைக் கழற்றிவிட்டு உள்ளே வந்தபோது அவளின் வளர்ப்பு நாய் ஓடிவந்து அனுங்கியவாறே அவளை வரவேற்றது.

அவள் கொண்டு வந்த பாத்திரங்களை அட்டாளைக்கருகில் வைத்துவிட்டு அடுக்களைப் படலையைத் திறந்து உள்ளே போனபோது திண்ணைக்கருகில் இருந்து கொண்டு நாய் வாலை ஆட்டிக் கொண்டிருந்தது. அதன் எதிர்பார்ப்பைப் போலவே சமையலறையிலிருந்து வெளியே வந்த பொன்னா ஒரு சட்டியில் கொண்டு வந்த மிகுதிச் சாப்பாட்டை திண்ணைக் குந்தில் கிடந்த நாயின் தட்டில் கொட்டினாள்.

அடுக்களைக்குள்ளிருந்த சட்டி, பானைகளையும் அவள் அட்டாளைக்கருகில் கொண்டுவந்து வைத்து விட்டு தென்னம் பொச்சினால் உரஞ்சிக் கழுவி வரிசையாக வரிச்சுத் தடிகளின் மேல் அடுக்கினாள்.

அவள் தனது நாளாந்த வேலைகளை வழமை போன்று பிசகின்றிச் செய்து கொண்டிருந்த போதிலும் மனம் மட்டும் மீண்டும் மீண்டும் வயலில் நடந்த சம்பவங்களையே சுற்றி வந்தது.

குலம் முத்தமிட்டதை நினைத்தபோது அவனின் மீது கோபம் கோபமாக வந்தபோதிலும் அந்த நினைவில் ஒருவிதமான ஆனந்தமும் அதேவேளையில் வெட்கமும் உண்டாவதை அவள் உணர்ந்து கொண்டாள்.

அவளையறியாமலே ஒரு பரவசம் அவள் மனதில் படர்ந்தது. எனினும் அவனைக் “காவாலி” என்று ஏச வேண்டும் போலவும் இருந்தது.

சட்டி, பானை கழுவி முடித்த பொன்னா அடுப்பை மூட்டி விட்டு சோறு காய்ச்சத் தயாராகப் பானையை நீரூற்றி அடுப்பில் வைத்தாள்.

முதல்நாள் வாய்க்கால் கரையில் பிடுங்கிய வல்லாரையில் ஒரு சுண்டலும், கத்தரிக்காயில் ஒரு பால் கறியும் வைத்தால் போதுமானதென அவள் முடிவு செய்தாள்.

ஏனென்றால் காசியர் சந்தைக்குப் போய் வரும்போது கடல் மீனோ, கணவாயோ அல்லது நண்டோ வாங்கி வரத் தவறுவதில்லை.

தனது கள்ளு வாய்க்கு இதமாக இருப்பதற்கு சூடை கருவாடும் வாங்கி வர மறப்பதில்லை.

பொன்னா அரிசியைக் கழுவி உலைப் பானையில் போட்டு விட்டு கத்தரிக்காயை எடுத்து அரியத் தொடங்கினாள்.

சமையல் முடியும் சந்தர்ப்பத்தில் “பொன்னா” என்று அழைத்தவாறே குஞ்சாத்தை கடப்பைக் கடந்து கொண்டு வந்ததைப் பொன்னா குசினி மட்டைப் படலுக்குள்ளால் கண்டு கொண்டாள்.

பொன்னாவின் நெஞ்சு படபடவென அடிக்கத் தொடங்கியது. தான் வயலுக்குப் போன நேரம் குஞ்சாத்தை வந்திருந்தால் எழும் கேள்விகளும் வாங்கப் போகும் ஏச்சுகளும் அவளைப் பயமுறுத்தின.

ஆனால் அவள் அச்சப்பட்டது போல எதுவும் நடக்கவில்லை. குஞ்சாத்தை “எடி .... பிள்ளை .... கொக்கத்தடி எங்கையடி வைச்சனி. இரண்டு முருகைக்காய் ஆய்வம்” எனக் கேட்டவாறே அடுக்களைக் தாவாரத்தால் குனிந்து பொன்னாவைப் பார்த்தாள் பொன்னா “கோடிப் பக்கத்திலை கூரையிலை சாத்திக் கிடக்கணை!” என்றாள்.

குஞ்சாத்தை முருங்கைக் காயை ஆய்ந்து கொண்டு முற்றத்துக்கு வரக் குலமும் வந்து திருக்கலை வெளியில் நிறுத்திவிட்டு கடப்புத் தடிகளைக் கழற்றினான். அவனைக் கண்டதும் பொன்னா வேகமாகப் போய்க் குசினிக்குள் புகுந்து கொண்டாள்.

அவனைக் கண்டதும் குஞ்சாத்தை அவனிடம் “டேய் .... சாப்பிட்டியோ?” எனக் கேட்டாள்.

வண்டியைக் கொட்டில் பக்கம் கொண்டு போன குலம், ”ஓமணை ... வடிவாய்ச் சாப்பிட்டிட்டன் ...” என்றான்.

“என்னண்டடா? பொன்னா வயலுக்குச் சாப்பாடு கொண்டு வந்தவளே?”

குலத்தின் பதிலும் குஞ்சாத்தையின் அடுத்த கேள்வியும் பொன்னாவுக்குத் தலையைச் சுற்ற வைத்தன. வரப்போகும் பிரளயத்தை நினைத்து நடுங்க ஆரம்பித்தாள்”.

அப்போதுதான் குஞ்சாத்தை தன்னைப் போக வேண்டாம் எனத் தடுத்ததையும், தான் அவவுக்குத் தெரியாமல் வயலுக்கு வந்ததையும் பொன்னா அவனிடம் சொல்லியிருந்த விடயம் அவளின் நினைவுக்கு வந்தது. எனினும்கூட அவன் சாப்பாடு கொண்டு அங்கு போனதைச் சொல்லி விடுவானோ என்ற பயம் அவளைக் குழப்பியது.

ஆனால் குலம் “இல்லையணை ... பசியெழும்பினாப் போலை நான் திருக்கலைப் பூட்டிக் கொண்டு வந்து பொன்னாவிட்டைப் பழஞ்சோறு திண்டிட்டுப் போனனான்” எனக் கூறிச் சமாளித்தான். அந்த வார்த்தைக் பொன்னாவின் காதில் விழவே அவளுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போலிருந்தது. கிழவி ஏதாவது அடுத்த கேள்வியைத் தொடுத்து வில்லங்கத்தில் மாட்டி விடுமோ என்ற பயத்தில் அவன் வண்டிலை மாட்டுக் கொட்டில் பக்கமாகக் கொண்டு போனான்.

“விடியக் காலத்தாலை அவருக்கு அவ்வளவு பசி. எல்லாம் நான் குடுத்த செல்லம்” எனக் கிழவி புறுபுறுத்துவிட்டு பொன்னாவிடம் “பொன்னா நான் போறன். அண்ணர் கொண்டு வாற கறி புளியிலை உவன் குலத்திட்டைக் குடுத்து அனுப்பி விடு” எனக் கூறிவிட்டுப் புறப்பட்டாள்.

வழக்கமாகக் காசியர் சாமான் வாங்கும்போது இரு குடும்பங்களுக்கும் சேர்த்தே வாங்குவதுண்டு.

குஞ்சாத்தை அங்கு நின்று கேள்விகளால் துளைத்தெடுக்காமல் போனது பொன்னாவுக்கு ஒருவித நிம்மதியைக் கொடுத்தபோதும் தகப்பன் வரும்வரைக் குலத்தை அங்கேயே நிற்கும் வகையில் கட்டளையிட்டு விட்டுப் போனது அவளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது.

எனினும் அவனுடன் கதைப்பதில்லையெனவும் முடிவெடுத்துக் கொண்டாள்.

குலம் மாடுகளை வண்டியிலிருந்து அவிழ்த்துக் “தொட்டிலடிக்” கட்டைகளில் கட்டிவிட்டு போரிலிருந்து வைக்கலை உருவி உதறித் தொட்டிலில் போட்டுவிட்டு முற்றத்துக்கு வந்தான்.

வெளியில் எங்கும் பொன்னாவைக் காணாத நிலையில் “பொன்னா ..... பொன்னா!” எனப் பலமாக அழைத்தான்.

அவளிடமிருந்து எவ்வித பதிலும்வரவில்லை.

அவன் மீண்டும் மீண்டும் அழைத்தபோதும் பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பொன்னாவுக்குத் தன்மீது கோபம் இன்னும் தீரவில்லையெனக் கருதியவனாகக் குனிந்து குசினிக்குள் நோக்கினான். வாசலையே பார்த்துக் கொண்டிருந்த அவள் அவனைக் கண்டதும் “வெடுக்கென” முகத்தை மறு பக்கம் திருப்பினாள்.

குனிந்து அடுக்களைக்குள் புகுந்த குலம், அங்கிருந்த பலகைக் கட்டையொன்றை இழுத்துப் போட்டுக் கொண்டு அவளின் முன்னால் குந்தினான். பொன்னா அவனைத் திரும்பிப் பார்க்கவேயில்லை.

குலம் மெல்ல, “பொன்னா!” எனக் கனிவுடன் அழைத்துவிட்டு ”என்னிலை கோபமே?” எனக் கேட்டான்.

“நீ என்னோடை கதைக்க வேண்டாம்! எழும்பி வெளியிலை போ” எனச் சீறினாள்.

ஒருவிதமான திகைப்புடன் சில வினாடிகள் மௌனித்த குலம் தாழ்ந்த குரலில் “பொன்னா! நான் அப்பிடி என்ன பிழையைச் செய்து போட்டன்” எனக் கேட்டான்.

பொன்னா திரும்பி அவனைப் பார்த்தபோது அவளின் கண்களில் தீப்பொறி பறந்தது.

“பிழை உன்னிலையில்லை. நீ என்னட்டை அப்பிடி நடக்கிற அளவுக்கு இடம்கொடுத்த என்னிலைதான் பிழை!” எனத் தளதளத்த குரலில் சொன்ன பொன்னா விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

என்ன செய்வதென்றே தெரியாமல் தடுமாறிய குலம், “அழாதை பொன்னா! நீ அழ என்னாலை தாங்கமுடியாமல் கிடக்குது” எனச் சொன்னான்.

பொன்னாவின் கோபம் இன்னமும் தீர்ந்ததுபோல் தெரியவில்லை.

“தாங்க ஏலாட்டில் வெளியிலை போய் நிண்டு நீயும் அழு” என்ற அவள் முகத்தை முழங்கால்களுக்குள் புதைத்தவாறு மீண்டும் விம்மத் தொடங்கினாள்.

“அப்ப நான் போகட்டே..?”

அவள் தலையை நிமிர்த்தி “போ ... போ .... போ ...?” எனக் கத்தினாள்.

சில வினாடிகள் எதுவுமே பேசாமல் இருந்த குலம் ஏதோ முடிவுக்கு வந்தவனாக எழுந்து வெளியே போகக் காலடி எடுத்து வைத்தான்.

எதிர்பாராத விதமாக அவனின் சாரத்தை பிடித்து இழுத்த பொன்னா “நான் போகச் சொன்னவுடனை நீ போடுவியோ!” எனக் கேட்டாள்.

“அப்ப என்னை என்ன செய்யச் சொல்லுறாய் ...?” எனக் குலம் பரிதாபமாகக் கேட்டு விட்டுப் பின் “இனி அப்பிடி நடக்க மாட்டனெண்டு சத்தியம் பண்ணட்டே” எனக் கேட்டான்.

அவள் “நீ என்னைத் தானே கலியாணம் கட்டப்போறாய்” என மட்டைப் படலுக்கால் வெளியே பார்த்தபடி கேட்டாள்.

“உலகமழிஞ்சாலும் அது நடந்தே தீரும்!”

“அப்படியெண்டால் இப்பிடிச் சத்தியம் செய்தால் ....... கலியாணம் கட்டின பிறகும் நீ சத்தியம் பண்ணின மாதிரி இருக்ககேலுமே?”

அவள் எவ்வளவு ஆழமாக யோசிக்கிறாள் என்ற போது குலத்துக்கு ஆச்சரியத்தைத் தாங்க முடியவில்லை.

பலகைக் கட்டையிலிருந்து எழுந்த பொன்னா, “மச்சான்! நான் உன்னிலை கொள்ளை ஆசை வைச்சிருக்கிறன். எண்டு தெரியும் தானே. நீ எப்பவும் நல்லவனாய் இருக்கவேணுமெண்டது தான் என்ரை விருப்பம். அதாலைதான் நீ அப்பிடி நடந்த உடனை எனக்கு கோவம் வந்திட்டுது”.

“நான் உன்னிலை கொள்ளை ஆசை வைச்சிருக்கிறனெண்டு உனக்கும் தெரியும் தானே!”

“ஓ ... அதாலைதானே உன்னிலை உயிரையே வைச்சிருக்கிறன்”.

“ம் .... அந்த ஆசை தான் என்னை அப்பிடி நடக்க வைச்சது!”

“அப்ப நான் உன்னிலை வைச்சிருக்கிற ஆசையும் அப்பிடிச் செய்யச் சொல்லுமே மச்சான்?”

குலம் அவளின் முகத்தைப் பார்த்தான் அவளின் கண்கள் கலங்கியிருந்தன.

அவன் எதிர்பாராத விதமாக அவள் அவனைக் கட்டிப் பிடித்து ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் போல் தோன்றியது. உடனடியாக அவள் “விடு விடுவென” வெளியே போய்விட்டாள்.

திகைத்துப் போய்விட்ட குலம், சில வினாடிகளின் பின் சுதாகரித்துக் கொண்டு வெளியே வந்தான்.

பொன்னாவினால் தான் ஏன் அப்படி நடந்து கொண்டாள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

குலத்தைத் திரும்பிப் பார்க்கவிடாமல் வெட்கம் அவளைப் பிடுங்கித் தின்றது. அவளின் உடல் முழுவதுமே கூசியது. கடப்படிப் பாலையை அண்ணாந்து பார்த்தாள். அந்த இரு தேன் சிட்டுக்களும் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டிருந்தன.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE