காசியர் கொண்டு வந்த மீனில் ஒரு பகுதியைப் பக்கத்து வீட்டுக் கிளியிடம் கொண்டு போய்க் குஞ்சாத்தையிடம் கொடுக்கும்படி அனுப்பிவிட்டு பொன்னா மிகுதியை சட்டியில் போட்டுக் கொண்டு மாமர நிழலை நோக்கிப் போனாள்.
தான் குலத்திடம் திடீரென அப்படி நடந்து கொண்டது அவளுக்கு அளவற்ற வெட்கத்தை உண்டாக்கியது மட்டுமின்றிப் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. குலம் ஆலமரத்தடியில் அப்படி நடந்து கொண்டதுக்கு அளவற்ற கோபம் கொண்ட தானும், அதே வேலையைக் குசினிக்குள் அவ்விதம் செய்ய நினைத்ததை அவளால் நம்பவே முடியவில்லை. ஏதோ ஒரு விதமான உணர்வு அவளையறியாமலே அவளை அப்படி நடக்கும் விதமாக உந்தித் தள்ளியதாகவே அவள் கருதினாள்.
தான் நடந்து கொள்ள நினைத்ததைப்பற்றி அவள் குழப்பமடைந்த போதிலும் கூட அவள் தான் அவனின் உரிமை தானே என நினைத்துத் தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டாள்.
அவள் முற்றத்தில் போய் நின்று அந்தச் சோடிக் குருவிகளைப் பார்த்தபோது அவளையறியாமலே ஒருவித பயம் தோன்றவே “நீ போ மச்சான். மீனைக் கிளியட்டைக் குடுத்து விடுறன்” என அவனிடம் கூறினாள். அவனும் ஏன் தன்னைக் கலைக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாமலே “போட்டு வாறன்” என்று விட்டுப் புறப்பட்டான்.குலம் போய்ச் சிறிது நேரத்தில் காசியரும் வந்து சேர்ந்து விட்டார். அவர் கொடுத்த பையில் இருந்த போத்தலை எடுத்து புகட்டில் வைத்துவிட்டு கடதாசிப் பையில் இருந்த மீனையும் கருவாட்டையும் கையில் எடுத்தாள்.
பொன்னா செதில்களைச் சுரண்டிவிட்டு மீனைக் கழுவிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்த போது, காசி தலைக்கு நல்லெண்ணெய் வைத்துத் தேய்த்து முழுகத் தயாராகி விட்டார்.
பொன்னா மீனைக் கொண்டு போய் குசினிக்குள் வைத்துவிட்டு அடுப்பில் சுட வைத்திருந்த அரப்பையும், சீயாக்காயையும் எடுத்துவந்து அவரிடம் கொடுத்தாள். ஆனால் பொன்னா முழுகும்போது தலைக்கு ஆவரசம் இலையும் செவ்வரத்தையும் தான் அரைத்துத் தேய்ப்பாள்.
காசியர் முழுகிவிட்டு வந்தபோது சரவணையப்புவும், சின்னக் குட்டியும் வந்து சேர்ந்தனர்.
அவர்களைக் கண்டதும் பொன்னா காசியர் கொண்டு வந்து போத்தலை ஒரு முறை பார்த்துவிட்டுத் தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
வழமையாகச் சனிக்கிழமைகளில் காசி நெடுங்கேணிச் சந்தைக்கு வண்டில் கொண்டு போனால் சாராயப் போத்தல் எடுத்து வரத் தவறுவதில்லை. சரவணையப்புவும் சின்னக் குட்டியும் அன்று காசியப்பர் வீட்டுக்கு வந்து சாராயம் குடித்து சாப்பிட்டு விட்டுத் தான் போவார்கள்.
அந்த ஊரில் நடக்கும் கலியாணமோ, சா வீடோ, சாமத்தியத் தண்ணி வார்ப்போ எதுவென்றாலும் சரவணையப்பு தான் தலையாரியாய் நின்று நடத்துவார். ஊரில் உள்ளவர்களுக்கிடையே ஏற்படும் பிணக்குகளையும் அவரே தீர்த்து வைப்பார். அவரின் சொல்லை யாரும் தட்டினது கிடையாது.
சின்னக்குட்டி நல்ல வேட்டைக்காறன். காட்டில் எருமை மாடு பிடிப்பதில் மிகவும் திறமைசாலி, குழுவன்களைப் பிடித்து மடக்கி உழவு பழக்கி விட்டு வேப்பங்குளத்துச் சிங்களவருக்கு நல்ல விலைக்கு அவன் விற்பதுண்டு.
சரவணையப்பு வந்ததும் வராததுமாய்க் காசி அவரிடம், “அப்பு கொழும்புப் பக்கத்துச் சங்கதி ஏதும் கேள்விப்பட்டனியே?” எனக் கேட்டார்.
“இல்லை, என்னவாம் ....?”
“கொழும்பிலை சிங்களவர் தமிழரை வெட்டியும் கொத்தியும் கொண்டு தள்ளுறாங்களாம். வீடு, வாசல், கடை கண்ணியெல்லாம் கொழுத்திறாங்களாம்”.
அவரின் குரலில் ஒருவித கோபம் தொனித்தது.
சின்னக்குட்டி படபடத்தான். “அப்பு! மண்கிண்டியிலை போய் எல்லாம் சிங்களவரையும் சுட்டுப்பாட்டு வருவமே?”
“டேய் பேயா.... கொழும்புச் சிங்களவன் கொடுமை செய்ய மண்கிண்டியில் சிங்களவனையே பலியெடுக்கிறது?”
காசியர் தொடர்ந்தார். “யாழ்ப்பாணத்திலை எங்கடை பொடியள் ஆமிக்குக் கண்ணிவெடி வைச்சதிலை 13 ஆமி செத்தவங்களாம். நேற்று அந்தப் பிரேதங்களைக் கொழும்புக்குக் கொண்டு போய் எரிச்சவங்களாம். அதோடை ராத்திரியே கலவரம் துவங்கியிட்டுதாம்!”.
சரவணையப்பு ஒரு பெருமூச்சுடன் “உப்பிடித் தானே, அஞ்சாறு வரியத்துக்கு முந்தியும் உங்காலுப் பக்கமெல்லாம் தமிழரை வெட்டியும் சுட்டும் அட்டூழியம் செய்தவங்கள். தப்பின சனம் உடுத்த உடுப்போடை ஓடி வந்ததுகள்”.
“ஓமப்பு! அவங்கடை அநியாயத்தாலை தானோ தோட்டத்துச் சனமும் ஓடி வந்து உந்த பண்ணையளிலை கொட்டில்களைப் போட்டுக் கொண்டு குடியிருக்குதுகள்” என்றான் சின்னக்குட்டி. அவனுக்கு நாவலர் பண்ணையில இருக்கும் முனியாண்டியின் ஞாபகம் வந்தது.
1977ம் ஆண்டு ஏற்பட்ட இனக் கலவரத்தின்போது தென்னிலங்கை முழுவதும் தமிழ் மக்கள் மீது பேரழிவுகளை கட்டவிழ்த்து விடப்பட்டபோது ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டதுடன் தொழில் நிலையங்கள், இருப்பிடங்கள் கொள்ளையிடப்பட்டும் எரியூட்டப்பட்டும் ஏராளமானோர் விரட்டப்பட்டனர்.
ஒரு பகுதியினர் கப்பலில் ஏற்றப்பட்டு வடபகுதிக்கு அனுப்பப்பட்டனர். விரட்டப்பட்ட மலையக மக்கள் வவுனியாவில் அகதி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். தமிழ் மக்கள் புனர்வாழ்வுக் கழகத்தினர் அவர்களை அழைத்து வந்து நெடுங்கேணி நாவலர் பண்ணையில் குடியேற்றினர். கைவிடப்பட்டிருந்த கென்ற் பண்ணை, டொலர் பண்ணை ஆகிய பண்ணைகளிலும் பலர் குடியேறினர்.
1966ம் ஆண்டில் பெரும் தமிழ் வார்த்தகர்களுக்கு ஆளுக்கு ஆயிரம் ஏக்கர்படி பண்ணைகள் அமைக்க அரசாங்கத்தால் காணிகள் வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் பண்ணைகளில் வேலை செய்யவெனப் பல மலையகக் குடும்பங்களைக் கொண்டு வந்து அங்கு குடியேற்றினர். 1977ன் பின்பு உள்ளூர் உற்பத்திகளுக்குச் சந்தை வாய்ப்புகள் இல்லாமற் போன நிலையில் பல பண்ணைகள் கைவிடப்பட்டன. ஆனால், அவர்களால் கொண்டு வரப்பட்ட மலையக மக்கள் அங்கேயே தங்கி விட்டனர்.
அவர்கள் அங்கு பண்ணை முதலாளிகளால் வெட்டப்பட்டு, கட்டப்பட்ட கிணறுகள் மூலமாக நீர் பாய்ச்சிப் பயிர் செய்ய முடிந்தது.
இனக்கலவரங்களின்போது வந்த மக்களுக்கும் தாராளமாகவே குடியிருக்க இடமிருந்தது.
எனவே இப்போது தொடங்கிய கலவரத்தாலும் சனங்கள் வரக் கூடுமென்றே சரவணை எதிர்பார்த்தார்.
“காசி இந்த முறையும் சனம் வரும் போலை கிடக்குது. ஏதோ நெல்லோ, குரக்கனோ குடுத்து நாங்களும் உதவி செய்யவேணும்” என்றார் சரவணை!
“இந்த முறை புலவிலை நல்ல சோளம் போட்டிருக்கிறன். அப்படியே வெட்டி அவ்வளவத்தையும் குடுத்து விடுவம். எங்கடை தமிழ்ச் சனமல்லே!” என்றான் சின்னக்குட்டி.
“ஓமோம் நாங்கள் ஒவ்வொரு வீடும் எங்களாலை ஏலுமானதைச் செய்யவேணும்!” என்ற காசியர் பலமான குரலில் பிள்ளை மாமரத்துக்குக் கீழே இரண்டு பாயை விரிச்சுப் போட்டு நான் தந்த சாமானையும் கொண்டு வா!” என்றார்.
அவர் சொன்னதைச் செய்துவிட்டுப் பொன்னா அடுக்களைக்குள் போய் கருவாட்டைப் பொரிக்க ஆரம்பித்தாள்.
மூவரும் போய் பாய்களில் அமர்ந்த பின்பு காசியர் போத்தலைத் திறந்து சுண்டுக் கோப்பைகளில் சாராயத்தை ஊற்றத் தொடங்கினார்.
கருவாடு பொரித்த வாசம் காற்றில் மிதந்து வரவே சரவணை “காசி.... எங்கடை நாக்குக்கு எது வேணும் எண்டது உன்ரை பெட்டைக்கு விளங்கும்!” என்றார்.
“உங்களையும் போத்தலையும் ஒரு நேரத்திலை கண்டால் என்ன செய்ய வேணுமெண்டு அவளுக்கு விளங்கும்” என்று விட்டுக் காசி “கடகடவெனச்” சிரித்தார்.
சுண்டுக் கோப்பையில் விடப்பட்ட சாராயத்தை அப்படியே ஓரேயடியாக உறுஞ்சிக் குடித்த சின்ன குட்டி, ஒரு செருமலுடன் “அப்பு இப்பிடியே சிங்களவன் எங்களை அழிக்கிறதும் கலைக்கிறதுமாயிருக்க நாங்கள் ஓடஓட அவங்களை எங்கடை இடங்களைப் பிடிக்க நாங்கள் விட்டுக் கொண்டிருக்கிறதே?” எனக் கேட்டான்.
சரவணைக்குப் பதினைந்து பதினாறு வயதாயிருந்தபோது அவர்களின் ஊரான மண்கிண்டியில் மலேரியாக் கொள்ளை நோய் பரவியது. நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் குடியிருந்த அந்த ஊரில் மலேரியா மனிதர்களைக் குடும்பம் குடும்பமாகக் கொன்று குவிக்கத் தொடங்கியது. இறந்தவர்கள் போக ஏனையோர் ஊரைவிட்டே வெளியேறி விட்டனர். சரவணை குடும்பத்தில் தாயையும் அவனையும் விட எல்லோருமே மலேரியாவால் பலி கொள்ளப்பட அவர்கள் இருவரும் ஊரைவிட்டு ஓடி ஒதியமலைக்கு வந்து சேர்ந்தனர்.
தமிழ் மக்கள் மண்கிண்டியிலிருந்து வெளியேறிய பின்பு சிங்களவர் குடியேறி அதைச் சிங்கள ஊராக்கி விட்டனர். இப்போது அதன் பெயர் ஜானகபுர.
சின்னக்குட்டியின் வார்த்தைகள் சரவணைக்குத்தான் பிறந்த ஊரான மண்கிண்டியை நினைவுபடுத்தின. அவர் பல்லை நெறுமிய ஒலி மற்ற இருவரின் காதுகளிலும் கேட்டது.
அவர் ...“எங்கடை மண் எங்களுக்குத்தான்ரா .... நாங்கள் போவம்! திரும்பிப் போயே தீருவம்”.
அவரின் குரலில் அளவற்ற உறுதி தொனித்து அவரின் இரு கண்களும் சிவந்து விட்டன.
(தொடரும்)
Category: கலை & கலாசாரம், இலக்கியம்
Tags: