“அமெரிக்க சுதந்திர தினம் துப்பாக்கிக் கலாசாரம் என்ற கடும் நோயினால் சிதைக்கப்பட்டு விட்டது.
இது அமெரிக்காவின் இல்லினால் மாகாணத்தின் ஆளுனர் ஜே.பி.பிட்ஸ்கர் சிக்காக்கோவின் ஹைலாண்ட் பூங்காவின் அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பு இடம்பெற்றபோது ஆயுததாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் கொல்லப்பட்டும், 30 பேர் காயப்படுத்தப்பட்டும் கொடிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டதை ஒட்டி வெளியிட்ட கருத்தாகும்.
ஆயுதம் தாங்கிய தனி நபர்கள் மக்கள் கூடியிருக்கும் பகுதிகளில் நுழைந்து படுகொலைகளை நடத்துவது அமெரிக்காவில் இதுதான் முதல் தடவையல்ல.
இந்த வருடத்திலேயே இடம்பெறும் மூன்றாவது படுகொலை இதுவாகும். இவ்வருட ஆரம்பத்தில் ஒரு நபர் மக்கள் கூடியிருந்த சந்தைப் பகுதியில் மக்கள் மீது தனது வாகனத்தால் மோதிப் பலரைக் கொலை செய்து விட்டுத் தப்பியோடியுள்ளனர். கடந்த மே மாதம் ஒரு 19 வயதுடைய இளைஞன் ஒரு ஆரம்பப் பள்ளியில் புகுந்து கண்மூடித்தனமாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில் பல சிறுவர்கள் கொல்லப்பட்டனர்.
இவ்வாறு காரணம் காணப்படமுடியாத கொலைகள் அமெரிக்காவில் இடம்பெற்ற போதிலும் சிக்காக்கோவில் இடம்பெற்ற படுகொலைகள் அமெரிக்க சுதந்திர தினத்தன்று மேற்கொள்ளப்பட்டமையால் ஏனையவற்றைவிட முக்கியத்துவம் பெறுகிறது. இப்படுகொலை இடம்பெற்று ஒரு மணி நேரத்தில் ஒரு 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டதுடன் அவனிடமிருந்து துப்பாக்கியும் மீட்கப்பட்டது.
உலகத்திலேயே நாமறிந்த மட்டில் எங்கும் எவரும் துப்பாக்கி வைத்திருப்பதற்கான சட்டபூர்வமான அனுமதி வழங்கப்பட்ட ஒரேயொரு நாடு அமெரிக்கா. ஏனெனில் வெள்ளையர் அந்த நாட்டின் உரிமையாளரான மாயா, இன்கா பழங்குடி மக்களை வகை தொகையின்றிக்கொன்று குவித்து அந்த வளங்கொழிக்கும் பூமியைத் தமதாக்கிக் கொண்டமை பெரும் தொடர் ஆயுத நடவடிக்கைகள் மூலமே.
எனவே அக்காலப்பகுதியில் பழங்குடியினரைக் கொன்று குவிக்கவும் அவர்களிடமிருந்து தம்மைப் பாதுகாக்கவும் ஒவ்வொருவருக்கும் துப்பாக்கி தேவைப்பட்டது.
அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி இளைஞர்களுக்குத் துப்பாக்கி பயன்படுத்த அனுமதி வழங்கப்படும்போது அவர்களின் குடும்பப் பின்னணி கவனத்திலெடுக்கப்படுமென ஒரு சட்டம் கொண்டு வந்துள்ளார். இச்சட்டம் அமெரிக்கக் கறுப்பின மக்களையே பாதிக்குமெனவும் படுகொலைகளைத் தடுத்து நிறுத்தப் பயன்படாதெனவும் சில தரப்பினர் தெரிவிக்கின்றனர். ஏனெனில் இன்றைய அமெரிக்கா உருவானதே பழங்குடி மக்கள் மீதான படுகொலைகளால்தான்.
இன்றைய அமெரிக்கா 50 மாநிலங்களையும் 5 யூனியன் பிரதேசங்களையும் 326 பழங்குடியினர் வாழும் பிரிவுகளையும் கொண்டதாகும். உலகின் மூன்றாவது கூடிய சனத்தொகையைக் கொண்ட அந்த நாட்டின் மக்கள் தொகை 321 மில்லியன். இதில் 61 வீதம் வெள்ளையர்கள் என்பதும், கறுப்பர் 12.4 வீதம் என்பதும் பழங்குடியினர் 1.1 வீதம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீண்ட கடல் பயணத்தின் பின்பு அமெரிக்க மண்ணில் கால் பதித்த கொலம்பஸ் அந்த நாட்டின் இயற்கை வளங்களைக் கண்டு அதிசயித்தான். அவனின் இரண்டாவது பயணத்தின்போது நீண்ட வாள்களையும் துப்பாக்கிகளையும் ஏந்திய ஸ்பானியர்கள் அவனுடன் வந்திறங்கினர். அறிவியல் பூர்வமாக முன்னேறி தொன்மைமிக்க நாகரீகத்தைக் கொண்டிருந்த மாயன் மற்றும் இன்கா இனப் பழங்குடியினரை அழித்து, முதலில் லத்தீன் அமெரிக்க நாடுகளையும் பின்பு தென்னாபிரிக்க நாடுகளையும் கைப்பற்றினர். பின்பு, போத்துக்கேயர், பிரான்ஸியர், பிரிட்டிஷார் என பல தரப்பினரும் வெவ்வேறு பகுதிகளில் பழங்குடியினரை அழித்துக் குடியேறினர். பிரிட்டிஷ்காரர் தமது கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய கறுப்பின மக்களை ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகப் பிடித்து வந்து பண்ணையடிமைகளாக வேலை வாங்கினர்.
இறுதியில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் முழு அமெரிக்காவையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதாவது அமெரிக்காவின் பூர்வீக மக்களை அழித்து ஆதிக்கம் பெற்ற வந்தேறு குடிகளான பிரித்தானியப் பேரரசு முழு அமெரிக்காவையும் தனது ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது.
எனினும் முன்னையே வந்தேறிகள் சுதந்திரம் கோரி நடத்திய போராட்டத்தில் பிரிட்டன் பேரரசு வெளியேறியது. 04.07.1776 அன்று அமெரிக்கா சுதந்திர நாடாகியது. எனினும் சில மாநிலங்கள் சுதந்திர அமெரிக்காவுடன் இணைய மறுத்தன. மூன்று வருடங்கள் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் முடிவில் ஐக்கிய அமெரிக்க குடியரசு 01.03.1781 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது.
அதுதான் இன்றைய ஐக்கிய அமெரிக்கக் குடியரசு எனப் பெயர் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியமாகும்.
பழைய பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து புதிய அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னை விடுவித்துக் கொண்ட நாள்தான் அமெரிக்க சுதந்திர நாளான 04.07.1776. உலக வல்லரசாக ஓங்கி நிற்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் 246வது சுதந்திர தினத்தில்தான் அப்படுகொலைகள் இடம்பெற்று உலகை அதன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளன.
அடுத்தடுத்து அங்கு படுகொலைகள் நடைபெற்று வருகின்ற நிலையில் அவற்றில் ஈடுபட்டதாகக் கருதப்படும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்களுக்கும் கொல்லப்பட்டவர்களுக்குமிடையே பகையோ, அல்லது ஏதாவதொரு வகைப் பிணக்கோ இருக்கவில்லை. ஆனால் அவர்கள் வெவ்வேறு விதமான மனநோய்களுக்கு உட்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளது.
அமெரிக்கா ஒரு செல்வந்த நாடு உலகின் முதன்மையான அரசியல், பொருளாதார, இராணுவ வல்லரசாகத் திகழ்கிறது. உலகின் எந்த மூலையிலாவது போரோ, போராட்டங்களோ, கிளர்ச்சிகளோ அல்லது பொருளாதார நெருக்கடியோ இருக்குமானால் அதன் பின்னால் அமெரிக்காவின் கரம் ஏதோ ஒரு வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்குமென நம்பப்படுகின்றது. அவ்வளவு தூரம் அமெரிக்கா சர்வதேச அளவில் பலம் பெற்ற நாடாக விளங்குகிறது.
ஆனால் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம், கொள்ளைகள், மோசடிகள், ஏழை பணக்காரர் இடைவெளி, போதைவஸ்து, இன ஒடுக்குமுறை, தெருச் சண்டித்தனம் எல்லாமே உண்டு. எனவே வெளியே பளபளக்கும் அமெரிக்கா உள்ளே நாறிப்போய் இருப்பதைக் காணமுடியும். இது முதலாளித்துவ நாடுகளின் தவிர்க்க முடியாத சாபக்கேடு.
எனவே இவ்வாறான விடயங்களால் பாதிக்கப்படும் மக்கள் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு வேண்டி அணி திரண்டு போராட வாய்ப்பில்லாத போது பல்வேறு மனப் பிறழ்வுகளுக்கு ஆட்படும் நிலை ஏற்படுகிறது. எனவே, நியாயமான போராட்ட உணர்வு திரிபடைந்து கட்டற்ற வன்முறை வடிவம் பெறுகிறது.
அந்த வன்முறைகளே படுகொலைகள், கொள்ளை, போதைவஸ்து பாவனை, பாலியல் துஷ்பிரயோகம், பிறரைச் சித்திரவதை செய்வதில் இன்பமடையும் வெறி என வெவ்வேறு முனைகளில் வெளிப்படுகின்றன.
ஆனால், வளர்முக நாடுகளில் மக்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அணி திரண்டு ஜனநாயக வழியிலான போராட்டங்களை நடத்துகின்றனர். அவை ஆயுதமுனையில் தோற்கடிக்கப்படும்போது ஆயுதப் போராட்டத்தில் இறங்குகின்றனர். இவ்வாறான நியாயமான போராட்டங்களைச் சிதைக்கவே இன, மத, முரண்பாடுகள், கலாசார சீரழிவுகள், போதை வஸ்துகள் என்பவை பயன்படுகின்றன. இப்படியான சந்தர்ப்பங்களில் சில பின்னடைவுகள் ஏற்பட்டாலும் மீண்டும் மக்கள் போராட்டம் வெற்றியை நோக்கியே முன் செல்லும்.
ஆனால், பெரும் முதலாளித்துவ நாடுகளில் போராட்ட உணர்வுகள் சிதைக்கப்பட்டுத் திசை திருப்பப்படுவதால் அவை தனிநபர் படுகொலைகளாகவும் வெவ்வேறு விதமான பயங்கரவாத நடவடிக்கைகளாகவும் வெடிக்கின்றன.
அண்மைக் காலங்களில் அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளில் இடம்பெறும் படுகொலைகளின் அடிப்படை இதுவென்றால் மிகையாகாது.
எனவே அமெரிக்காவின் சுதந்திரதினப் படுகொலைகள் என்பது ஒரு தனிச் சம்பவமல்ல. அது அமெரிக்கா உலகம் முழுவதும் கட்டவிழ்த்துவிடும் மேலாதிக்கக் கொள்கைகள் விளைவிக்கும் பலாபலன்களின் ஒரு பகுதியேயாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
12.07.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: அமெரிக்கா, உலகம்