Thursday 23rd of May 2024 02:16:23 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 5 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 5 (நா.யோகேந்திரநாதன்)


பொன்னா சரவணை வீட்டுக்கு வந்தபோது வீட்டுக்கு எதிர்ப்பக்கமாக அமைக்கப்பட்டிருந்த மாலின் திண்ணையில் அமர்ந்திருந்த கண்ணகைப்பாட்டி மூடு பெட்டி இளைப்பதற்காக பனையோலைச் சார்வை சந்தகக் கத்தியால் வார்ந்து கொண்டிருந்தாள்.

“பெத்தாச்சி!” என்ற பொன்னாவின் அழைப்பைக் கேட்டதும் திரும்பிப் பார்த்த பாட்டி “வாடி பிள்ளை.... என்ன கையிலை ஏதோ கொண்டாந்திருக்கிறாப் போலை கிடக்குது” எனக் கேட்டாள்.

சரவணையப்புவின் தாயான கண்ணகைப் பாட்டிக்கு வயது ஏறக்குறைய எண்பத்தைந்து தொண்ணூறு எட்டி விட்டபோதிலும் இதுவரைக் கண்பார்வைக் குறைவோ அல்லது கைகால் நடுக்கமோ ஏற்படவில்லை. தலை மட்டும் நரையாமலிருந்தால் அவளின் வயதை யாருமே கணித்து விட முடியாதளவுக்கு அவள் இப்போதும் உடல் தளர்வடைந்து விடாமலே நடமாடினாள். அதன் அப்பு இண்டைக்குச் சந்தையிலை நல்ல பெரிய விளை வேண்டியந்தவர். அதுதான்உனக்குக் கொஞ்சம் கறி கிள்ளி வந்தன்”! ”கொண்டு போய் அடுக்களையிலை வைச்சு மூடி விடு. அவன் வந்து தின்னுவன்”.

கிழவியின் வார்த்தைகளைக் குறுகிட்ட பொன்னா, “எணேய் .... அவை எங்கடை வீட்டைசாப்பிடுவினம். அங்கை மற்றச் சமா நடக்குது. அது முடியச் சாப்பாட்டைக் குடுப்பமெண்டிட்டுஉனக்குக் கறியைக் கொண்டோடி வந்தனான். நீ சாப்பிடு” என்று விட்டு அடுக்களையைநோக்கிப் போனாள்.

“அவங்கள் எங்கை சாராயத்தைச் சுத்தி இருந்தால் இப்போதைக்கு எங்கை எழும்புறது”என்றாள் கிழவி.

கறியைக் குசினியில் வைத்துவிட்டு வெளியே வரும்போதே “இண்டைக்குத்தானணை சரவணையப்புவுக்கு இப்பிடிக் கோபம் வருமெண்டு தெரிஞ்சுது. வெளியேற முந்தியே மண்கிண்டியைப் பற்றி சின்னக்குட்டி மாமா ஏதோ சொல்லத் துள்ளியெழும்பியிட்டார்!” என்று கொண்டே வந்தாள்.

“அவனுக்கு மட்டுமில்லை .... எனக்கும் தான் அந்த ஊரையும். எங்கடை காணியையும் நினைச்சால் வயிறு பத்தியெரியும். தென்னையள், பிலா, வாழை, எலுமிச்சையெண்டு என்ன செந்தழிப்பான காணி” என்ற பாட்டியிடமிருந்து ஒரு பெரிய நெடுமூச்சு வெளிவந்தது. அதைச் சொல்லும்போது அவளின் கண்கள் மெல்லக் கலங்கின.

மண்கிண்டியில் அவர்களின் காணியில் அவர்களின் குடும்பம் மிகவும் செல்வாக்குடன்தான் வாழ்ந்து வந்தது. குளத்து நீரில் நெற் கமம், சேனைப் பயிர்களாக மிளகாய், மரக்கறிகள் என வறுமை கனவில்கூட நெருங்காதபடி வசதியாக அவர்கள் வாழ்வு நகர்ந்தது. அவளின் கணவன் நல்ல வேட்டைக்காரனாகையால் கூரை இறப்பில் எப்போதும் மரை வத்தல் தொங்கும்.

அடிவளவில் நின்ற தென்னைகள் அப்போது முதிர்ந்து நன்றாக உயர்ந்து விட்டதனால் அவற்றின் இடைவெளிகளில் புதிய தென்னங்கன்றுகளை நட்டிருந்தனர். சரவணையும் அவனின் தங்கையும் போட்டி போட்டுக் கொண்டு ஓடிஓடி தண்ணீர் ஊற்றுவார்கள். அவர்கள் இடம்பெயர்ந்தபோது சில தென்னங்கன்றுகள் பாளை விட ஆரம்பித்து விட்டன.

முற்றத்து மாமரங்களும், பலாவும் வருடாவருடம் காய்த்தும் கொட்டத் தவறுவதில்லை. கிணற்றடியில் வாழை, எலுமிச்சை, தோடை என்பனவும் நல்ல பலன் தந்து கொண்டிருந்தன. எலுமிச்சை, தோடை காய்க்கும் காலங்களில் புல் மோட்டை முஸ்லிம் வியாபாரிகள் வந்து நல்ல விலை கொடுத்து அவற்றின் பழங்களை வாங்கிச் செல்வார்கள்.

கணவனையும் பருவமடையும் வயதில் இருந்த மகளையும் மலேரியா பலி கொண்ட பின்பு சரவணையின் உயிரையாவது காப்பாற்றும் நோக்கில் கண்ணகை ஊரை விட்டுப் புறப்பட்டாள்.

தனது ஊரைக் கண்ணால் கூடப் பார்ப்பது அதுதான் கடைசித் தடவை என்பதை அவள் அப்போது நினைத்துக்கூடப் பார்க்கவில்லை.

மலேரியாவில் அந்த ஊரில் ஒருசில குடும்பங்களே உயிர் பிழைத்தன. அவர்களில் சரவணையப்புவும் தாயும் ஒதியமலைக்கும் வேறு மூன்று குடும்பங்கள் ஊஞ்சல்கட்டிக்கும் பெரும் மாட்டுப் பட்டிகள் வைத்திருந்த இரு குடும்பங்கள் கொக்குத்தொடுவாய்க்கும் சிலர் மருதோடைக்கும் போய்க் குடியேறியிருந்தனர்.

கனத்த நெஞ்சுடன் பழைய நினைவுகளுக்குள் போய் வந்த பாட்டி தளதளத்த குரலில் “நாங்கள் வெளிக்கிட்டு வந்து அஞ்சாறு வரியத்தாலை, மண்கிண்டியிலையிருந்து வெளிக்கிட்டு ஊஞ்சல்கட்டிக்கும் இருக்கிற இளந்தாரியளும் சரவணையும் அங்கை போனவை” என்றுவிட்டு வார்த்தைகளை நிறுத்தினாள் அவள்.

அவளால் அதற்கு மேல் பேசமுடியவில்லை.

எனினும் பொன்னா ஆவலுடன் “பிறகு என்னணை நடந்தது?” எனக் கேட்டாள்.

சில விநாடிகளின் பின்பு கண்ணகை மீண்டும் ஒரு பெருமூச்சுடன் “அங்கை போனால் தென்னையள், மா, பிலா எல்லாம் கொள்ளை கொள்ளையாகக் காய்ச்சிருந்தது. அங்கை எங்கடை வீட்டைப் பெருப்பிச்சுப் போட்டு ஒரு சிங்களக் குடும்பம் குடியிருந்ததாம். அதிலை இருந்த சிங்களத்தி எங்கடை பொடியளை ஆரெண்டு விசாரிச்சாளாம். சரவணை காணி தன்ரை தானெண்டு அவளுக்குச் சொன்னவுடனை அவள் “ஹொரா, ஹொரா” எண்டு கத்திக் கொண்டு வெளியிலை ஓடினாளாம். வியஷம் என்னண்டு விளங்காமல் எங்கடை பொடியள் தடுமாற கொஞ்ச நேரத்திலை ஊரிப்பட்ட சிங்களவர் கொட்டனுகளோடையும் காட்டுக்கத்தியோடையும் ஓடி வந்தாங்களாம். அவங்கள் சிங்களத்திலை ஏதோ கத்தினாங்களாம். அதிலை ஒருதன் கொச்சைத் தமிழிலை அது தங்கடை காணியெண்டும் இஞ்ரை இனி கால் வைக்கக் கூடாதெண்டு சொன்னானாம். சரவணை ஏதோ சொல்லி முறுக எல்லாருமாய் அடிக்கத்துவங்கியிட்டாங்களாம். எங்கடை பொடியள் காயங்களோடை தப்பி ஓடி வந்திட்டாங்கள்” எனச் சொல்லி முடித்தாள்.

பொன்னாவும் “அந்த ஆத்திரம் தான் சரவணையப்புவை இப்பிடிக் கொதிக்க வைக்குது” என்றாள்.

“ஓமடி பிள்ளை .... இப்பவும் அவன்ரை முதுகிலை அந்தத் தளம்பு கிடக்குது” என்றாள் பாட்டி.

மலேரியா ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் அப்பிரதேசத்தில் டீ.ரி.டி. மருந்து தெளிப்பதற்கு வந்த மலேரியாத் தடை இயக்கத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் அங்கிருந்த தென்னைகள், மா, பலா, எலுமிச்சை போன்ற மரங்கள் காய்த்துக் குலுங்கும் செழிப்புக் கொண்டதும் குறையாத நீர் வளம் கொண்டதுமான மண்கிண்டியை பார்த்து ஆச்ச ரியப்பட்டனர். அந்தக் கிராமம் மக்களுக்கு வெறிச்சோடிப் போய்க்கிடக்கவே அவர்கள் தங்கள் குடும்பங்களுடன் வந்து குடியேறியதுடன் தங்கள் உறவினர்களையும் கூட்டி வந்து குடியேற்றினர். அத்துடன் அந்தப் பாரம்பரிய தமிழ்க் கிராமம் முற்றாகவே ஒரு சிங்களக் கிராமமாக மாறிவிட்டது. அதற்குப் பிற்பட்ட ஒரு காலப்பொழுதில்தான் சரவணையும் மற்ற இளைஞர்களும் அங்கு போய் அடிவாங்கிக்கொண்டு வரவேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டிருந்தது.

தன்னை மறந்து மண்கிண்டிக் கதையை கேட்டுக் கொண்டிருந்த பொன்னா வீட்டு நினைவு வந்தவளாக “பாட்டி அவைக்குச் சாப்பாடு குடுக்க வேணுமணை? நான் போட்டு வாறன்” என்றுவிட்டு அவசரமாகப் புறப்பட்டாள். எனினும் ஒரு நாளைக்கு ஆறுதலாக வந்து கிழவியிடம் மண்கிண்டி பற்றிய கதைகளை விபரமாக கேட்க வேண்டுமென நினைத்துக் கொண்டாள்.

சரவணையப்புவின் வீட்டிலிருந்து தெருவில் இறங்கிய பொன்னா, நேரமாகி விட்டதென்ற தவிப்புடன் தன் நிழலைப் பார்த்தாள். அது அவளின் காலடியிலிருந்து ஒரு முழத்துக்கு உட்பட்ட நீளமாகவே வளர்ந்திருந்தது.

நேரம் இன்னும் ஒரு மணியாகவில்லை என ஊகித்துக்கொண்டவளாக விரைந்து நடக்கத் தொடங்கினாள். அவர்களுக்கு நேரம் பார்க்கம் கடிகாரம் அவர்களின் நிழல்தான் அதை கால் பாதத்தால் அளந்து நேரம் கணக்கிடுவதுண்டு. ஆனால் முதியவர்கள் பகல் நேரத்தில் சூரியனைப் பார்த்தும் இரவு வேளைகளில் மாலை வெள்ளி விடிவெள்ளி என்பவற்றைப் பார்த்தும் நேரத்தை துல்லியமாகக் கணித்துக் கொள்வார்கள்.

வளந்து படர்ந்து தெருவுக்கும் நிழல் கொடுத்துக்கொண்டிருந்த ஆலமரத்தடியில் சூலத்தின் வடிவில் குடிகொண்டிருந்த வைரவரை மெல்லத் தலை சாய்த்து மனதுக்குள் வணங்கி விட்டு அவள் சிறிது தூரம் நடந்து கிளி வீட்டை அண்மித்தபோதுதான் அந்தப் பச்சை ஜீப் அவளருகில் நின்று “பிரேக்” அடித்துக்கொண்டு நின்றது. அதற்குள் முன்பு மாட்டில் ஜீப் மோதின அன்று தன்னிடம் மன்னிப்புக் கேட்டுக் கதைத்தவன் சாரதி ஆசனத்தில் அமர்ந்திருந்தான்.

பொன்னா தன்னருகில் வாகனம் வந்து திடீரென நின்ற நிலையில் திடுக்கிட்டு விட்டாள்.

“என்ன பயந்து போனியளே! நான் அண்டைக்கு உங்களோடை கதைக்க செங்கண்ணன்தான்!!

அவள் எதுவும் பேசாமல் அவனின் முகத்தை ஒருவித வெறுப்புடன் பார்த்தாள்.

“உங்களட்டை ஒரு விஷயம் கதைக்கலாமே?” என அவன் கேட்டான்.

அவள் ”நான் போக வேணும் .... அப்புவுக்குச் சாப்பாடு குடுக்கவேணும்!” என அவசரப்பட்டாள்.

அவன் “பரவாயில்லை .... நான் சொல்லுறதைக் கேட்டிட்டுப் போகலாம்!”

“என்னது?”

“நீங்கள் ஒரு தமிழ் பெண்ணல்லே .... எங்களுக்கெண்டு ஒரு பண்பாடு இருக்கல்லே?”

“பண்பாடோ ....? அதுக்கென்ன ....?”

“அங்கை வயலுக்கை நிக்கிற ஆலமரத்தடியிலை நீங்கள் காலமை நடந்து கொண்ட விஷயம் சரியே?”

பொன்னா திடுக்கிட்டாள். தாங்கள் அங்கு நின்றபோது தெருவால் போன பச்சை ஜீப் நின்று விட்டுப் புறப்பட்டுப் போனது அவளின் நினைவுக்கு வந்தது.

அவள் தடுமாறியபடி “என்னது?” எனக் கேட்டாள். அவளால் அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கொள்ளமுடியவில்லை.

அவன் ஜீப்பின் ஆசனத்திலிருந்த தொலைநோக்கியத் தூக்கிக் காட்டி ஒரு கேலி கலந்த சிரிப்புடன் “இதாலை எவ்வளவ தூரத்தையும் வடிவாய்ப் பாக்கலாம், தெரியுமே?” எனக்கேட்டான்.

“அதுக்கெனக்கென்ன?” எனச் சீறினாள் பொன்னா.

“உங்களுக்கு மட்டுமில்லை.... அது எங்கடை இனத்துக்கே நல்லதில்லை.... ஒரு வெட்ட வெளியிலை ஒரு இளந்தாரியும், ஒரு குமர்ப் பிள்ளையும் கட்டிப் பிடிச்சு கொஞ்சி ...”

பொன்னா கோபத்தில கத்தினாள் “பொத்தடா வாயை!

குலம் எட்டி நின்று முத்தமிட்டது உண்மைதான் என்றாலும் தானோ, அவனோ ஒருவரையொருவர் கட்டிப் பிடிக்கவில்லை என்பதில் அவளிடம் எவ்வித குழப்பமும் இருக்கவில்லை.

“உண்மையைச் சொல்ல கோபம் வருகுதோ.... என்னைப் போலை ஒரு நாகரீகமான, பண்பான ஒரு வாலிபனோடை விரும்பிப் பேசிப் பழகினால் பரவாயில்லை! உங்களைப் போலை ஒரு வடிவான பிள்ளை ஒரு காட்டு மிராண்டியோடை ....”

பொன்னாவால் அதற்கு மேல் பொறுக்க முடியவில்லை?

“நிப்பாட்டடா கதையை ... இப்ப நீ இதிலையிருந்து போகப் போறியோ ..... இல்லாட்டில் பல்லுடைபடப் போறியோ?”

இடக் கையிலிருந்த சாப்பாட்டுச் சட்டியை வலக்கைக்கு மாற்றினாள் பொன்னா.

அவர்கள் இருவருமே எதிர்பார்த்திராத விதமாக ”என்னவாம் பொன்னாக்கா?” என்ற குரல் அவர்களின் தலைக்கு மேல் கேட்டது. அவர்கள் அண்ணாந்து பார்த்தபோது கிளி தின்று விட்டுத்துப்பிய நாவல், பழத்தின் கொட்டை செங்கண்ணனின் முகத்தில் வந்து விழுந்தது.

“ஆரடி நீ? ஏறி வந்தனெண்டால் மடக்கிப் போட்டுத் தூக்கி எறிஞ்சு விட்டிடுவன்” என்றான் அவன்.

“நீ..... என்னைத் தூக்கி எறியமட்டும் என்ரை கையென்ன பூப் பிடுங்கிக் கொண்டே இருக்கும்”.

“பொறு வாறன்!” என்றுவிட்டு அவன் ஜீப்பின் கதவைத் திறந்தபோது கிளி பலமாக “மாமா... சித்தப்பா .... ஒருதன், பொன்னாக்காவின்ரை கையைப் பிடிச்சு இழுக்கிறான்” எனக் கத்தினாள்.

அங்கிருந்து சிறிது தூரத்திலிருந்த கிளியின் காணியிலிருந்து பலமாக “ஆரடி அவன் .... கல்லாலை எடுத்து குத்தடி... நாங்கள் வாறம்”.... என்ற குரல் கேட்டது. தூரத்தில் சிலர் ஓடி வரும் சத்தங்கள் கேட்டன.

நிலைமை பிழைத்து விட்டதை உணர்ந்த செங்கண்ணன் “உங்களைக் கவனிக்கிற மாதிரிக் கவனிக்கிறன்?” என்றுவிட்டு ஜீப்பை வேகமாக எடுத்துக்கொண்டு பறந்தான்.

“பெட்டையளட்டை வாலை ஆட்டின செங்குரங்கு ஓடுற ஓட்டத்தைப் பாரக்கா” என்று விட்டுக் கிளி கலகலவெனச் சிரித்தாள்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags:பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE