தென்னிலங்கையின் அரசியல் களம் தொடர்ச்சியான மாற்றங்களுக்களால் நகர்ந்து செல்கின்றது. கிளர்ச்சி செய்த போராட்டக்காரர்கள் அதனை புரட்சியாக மாற்றும் தருவாயில் போராட்டத்தின் எல்லையை மட்டுப்படுத்தியுள்ளார்கள். ஆட்சி மாற்றம் என்ற இலக்கு அரசியலமைப்புக்கு வெளியே நிறைவேற்றப்பட்டதோடு அதற்கு பின்னான மாற்றங்கள் அனைத்தும் அரசியலமைப்புக்கூடாக மீளவும் நகர்த்தப்படுகின்றதொரு கட்டத்தை காண முடிகின்றது. ஆனால் அதன் அணுகுமுறை மீளவும் தீவிரம் பெறலாம் என்ற சந்தேகம் போராட்டக்குழுவால் உச்சரிக்கப்படுகின்றது. ஆனால் ஆட்சியாளர்களுக்கும் புதிதாக ஆட்சிக்கு வரப்போறவர்களுக்கும் தெளிவான செய்தியொன்றை தெளிவுபடுத்தியுள்ளது. இதேநேரம் தமிழ்த்தரப்பு இப்போராட்டத்தில் விலகி இருந்ததுடன் தமிழ்ப்பாராளுமன்ற உறுப்பினர்களின் நகர்வுகளும் அதிக குழப்பத்தை தருவதாக காணப்படுகின்றது. இக்கட்டுரையும் தமிழரசுககட்சியின் அரசியல்க்குழு இணையவழியூடாக அண்மையில் நடைபெற்ற உரையாடலில் முன்வைத்துள்ள தீர்மானம் பொறுத்தும் அதன் விளைவுகள் பொறுத்தும் வெளிப்படுத்த முயலுகின்றது.
காலிமுகத்திடல் போராட்டத்தோடு வடக்கு-கிழக்கு மக்கள் அதிக ஈடுபாடு காட்டாத போதும், தனித்தும் ஒன்றிணைந்தும் போராட்டத்தோடு பயணித்துள்ளனர். அதற்கான காரணங்களை அத்தரப்பு முதன்மைப்படுத்திய போதும் போராட்ட களத்தில் தமிழ்-முஸ்லீம்-சிங்கள வேறுபாடின்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் தமிழரசியல்வாதிகளை பொறுத்தவரை இத்தகைய போராட்டத்தின் போது எவ்வகை வெளிப்பாடுகளுமின்றி மௌனமாக இக்காலப்பகுதியை கடந்து சென்றார்களென்ற குற்றச்சாட்டுக்கு உரியவர்களாவே உள்ளனர். அதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மாத்திரமின்றி தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் விடுதலை கூட்டணி என்று வேறுபாடுகளின்றி இக்காலப்பகுதியை மௌனமாக இழந்துள்ளனர். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைக்காததும் போராட்டக்காரர்கள் அணுகுகின்ற போதெல்லாம் கரிசனை கொள்ளாமலும் செயற்பட்டதோடு புதிய ஆட்சியினுடைய கட்டமைப்பினையோ, அதற்கான பங்களிப்பினையோ வேடிக்கையான அணுகுமுறைகளூடாக தோற்கடித்துள்ளதாகவே தெரிகின்றது. வடக்கு-கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டக்காரர்களோடு உரையாடும் போது தமிழ் மக்கள் சார்ந்த எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்காத நிலையில் தனிநபர்களை இலக்கு வைத்த நகர்ந்தமையும் போராட்டத்தையும் தமிழ் மக்களின் கோரிக்கைகளையும் அவமதிப்பதாகவே தெரிகின்றது. அவ்வாறே தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு உரையாடலிலும் தனிமனிதர்களை இலக்கு வைத்து ஈழத்தமிழர்களின் அரசியல் பிரதிநிதிகள் என்ற வகையில் உரையாட முயன்றுள்ளனர். அதாவது, அவ் உரையாடலில் தற்போது நாட்டில் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள பிரதம மந்திரியை ஒருபோதும் எந்தவொரு அதிகாரத்திலும் அமர அனுமதிக்க முடியாதெனவும் அவ்வாறு நியமிக்கப்படும் பட்சத்தில் அந்நியமனத்தை எதிர்ப்போமெனவும் ஒரு நாள் என்றாலும் பிரதமர் ஜனாதிபதியாவதை அனுமதிக்க கூடாதென உரையாடப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இத்தகைய உரையாடல்களை தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற அடிப்படையிலும் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையிலும் வெளிப்படுத்துவது தமிழ் மக்களின் உரிமைப் பேபாராட்டத்துக்கும் எதிர்கால நலனுக்கும் அரசியல் நாகரீகத்தக்கும் தவறான அணுகுமுறையாகவே தெரிகிறது. அதனை ஆழமாக விளங்கிக்கொள்ளுதல் அவசியமாகும்.
முதலாவது, தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளும் அதன் ஆட்சியாளர்களும் ஈழத்தமிழர் மீதான அடக்குமுறையை ஆட்சியதிகாரத்தின் மூலமே கையாண்டு வந்தள்ளனர். அதனை முறியடிக்கும் விதத்திலேயே அரகலய அணி தனது இறுதிக்காலப்பகுதி அறிக்கையில் தெளிவான ஜனநாயகப்படுத்தல்களை முன்மொழிந்துள்ளது. இத்தகைய போராட்டக்குழுவின் ஆறு அம்சங்களை தவிர்த்து சுதந்திரத்திலிருந்து ஆட்சியை மேற்கொண்ட அரசியல் கட்சிகளையும் அதன் ஆட்சியாளர்களையும் அவதானித்தால் தமிழ்விரோதப்போக்கே மேலோங்கி இருந்தது. இடதுசாரிகள் வலதுசாரிகள் என்ற வேறுபாடின்றி அத்தகைய போக்கு மேலோங்கி காணப்பட்டது. அதாவது ஆட்சியாளர்கள் எத்தகைய வேறுபாடுகளுமின்றி தமிழர் மீதான ஒடுக்குமுறையை கையாண்டுள்ளது. எந்த தனிநபர்களோ கட்சிகளோ ஆட்சியிலமரும் அதிகாரத் தலைமைகளோ எத்தகைய நியாயப்பாட்டையும் தமிழர் மீது வெளிப்படுத்தவில்லை. அது அரசியல் யாப்புரீதியாகவும் மகாவம்ச மனோநிலையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக அதற்கு மாறான நிலைப்பாட்டினை திரட்சி பெற்றதொரு போராட்டத்தை மேற்கொண்ட தரப்பு வெளிப்படுத்தியுள்ளது. இதனை முன்னிறுத்தி தமிழரசியல் பிரதிநிதிகள் தமது உரையாடல்களையும் எண்ணங்களையும் பரிமாற்றி கொள்ள வேண்டும். எத்தகைய தனிப்பட்ட நபர்களும் ஆட்சியாளர்களும் எத்தகைய செயற்பாட்டை அவர்கள் மேற்கொண்டாலும் அது தமிழ் மக்களின் இரப்பையோ நலனையோ மையப்படுத்தியதாக அமையப்போவதில்லை.
இரண்டாவது, அதனால் தென்னிலங்கையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அனைத்து ஆட்சியாளர்களையும் சமதூரத்தில் வைத்து தமிழ்த்தரப்பு கையாள்வது பொருத்தப்பாடுடடையதாகும். நல்லாட்சி காலப்பகுதியிலும் அதற்கு முன்னுள்ள வாய்ப்பான சந்தர்ப்பங்களிலும் தமிழரசியல் பிரதிநிதிகள் ஒட்டி உறவாடியதன் விளைவாக தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு பதிலாக தோற்கடிக்க பிரதிநிதிகள் அடிமைகளாக செயற்படவும் தமிழரசியல் கட்சிகள் அடிவருடிகளாக செயற்படவுமே வழிவகுத்திருந்தது. இத்தகைய அனுபவத்தை 1948ஆம் ஆண்டிலிருந்து கண்டுகொள்ள முடியும். மீளவும் அத்தகைய யுகமொன்றுக்குள் பயணிக்கதற்கான திட்டமிடல்களை தமிழரசியல் பிரதிநிதிகள் மேற்கொள்கின்றார்களா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மூன்றாவது, தென்னிலங்கை அரசியல் சக்திகளை எதிர்ப்பதும் அரவணைப்பதுவும் சமதூரத்தில் கையாளப்பட வேண்டிய கொள்கை சார்ந்தும் தமிழ் மக்களின் உரிமை சார்ந்தும் கட்டமைக்கப்பட வேண்டிய விடயம். ஒரு தனிநபரை ஆட்சியதிகாரத்தில் அமர்த்துவதற்கும் வெளியேற்றுவதற்குமான போராடுவதும் கருத்து தெரிவிப்பதுவும் அதுபற்றிய உரையாடல்களை முன்கொண்டு செல்வதும் தமிழ் மக்களின் உரிமைப்போராட்டம் பாற்பட்டதாக அமைய வேண்டுமேயன்றி தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்கு உட்பட்டதாக அமைந்து விடக்கூடாது. கடந்த காலத்தில் அவ்வாறானதாகவே தமிழ்த்தரப்பின் அரசியல் நகர்ந்துள்ளது. தனிமனித ஆட்சியாளர் மீது நம்பிக்கை வைப்பதும் பின்னர் அவர் ஏமாற்றிவிட்டார் என்று குறைகூறுவதும் அரசியல் ரீதியாகவோ அல்லது ஒரு அரசியல் போராட்டத்தின் பங்குதாரராகவோ அடையாளப்படுத்த முடியாது. இதுவோர் தமிழ்த்தேசிய இனத்தின் உரிமை சார்ந்த விடயமாகும். அதனை அடைவதைற்கான சூழலும் வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமைந்துள்ளதா என்பதே பிரதான கேள்வியாகும். அதனை விடுத்து தனிப்பட்ட ஆட்சியாளர்களை தனிப்பட்ட ரீதியில் விமர்சிப்பதற்கு அப்பால் கட்சியின் பிரதிநிதியாகவோ தமிழ் மக்களின் பிரதிநிதியாகவோ செயற்படுவதென்பத அரசியல்ரீதியில் தவறான செயற்பாடாகவே அமையும்.
நான்காவது, அவ்வகை தீர்மானங்களை கட்சி சார்ந்து முன்னெடுக்கின்ற போது அதன் உண்மைத்தன்மைகளையும் நியாயப்பாடகளையும் தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். தனிப்பட்ட உறுப்பினர்களின் நலன்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. அவ்வாறு செயற்பட முனைவதன் விளைவகளே ஈழத்தமிழர் அரசியல் பிரச்சினையின் தீர்வற்ற செயற்பாட்டுக்கு காரணமாகின்றது.
எனவே, தமிழரசியல் கட்சியாக, அரசியல் குழுவாக, தனிப்பட்ட ரீதியில் பிரதிநிதியாக உரையாடுகின்ற போதெல்லாம் தமிழ் மக்களின் உரிமை சார்ந்து ஏற்படக்கூடிய விளைவுகள் பொறுத்தே உரையாட வேண்டும். அத்தகைய உரையாடல்களின் முடிவுகள் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடிய விளைவுகள் பொறுத்தே அமைய வேண்டும். தென்னிலங்கையின் அரசியல் கட்சிகளையோ ஆட்சியதிகாரத்தில் அமரும் தனிமனிதர்களையோ தனிப்பட்ட நபர்களாய் விமர்சிக்கலாம் அன்றி தமிழ்த்தேசிய இனத்தின் பிரதிநிதிகளாக செயற்படுவதென்பது தமிழ் மக்களுக்கு ஏற்படக்கூடிய விளைவுகள் சார்ந்தே வெளிப்பாடுகள் அமைய வேண்டும். இவை தனித்த உள்நாட்டின் அரசியல் கட்டமைப்போடு மட்டும் மோதுவதல்ல பிராந்திய சர்வதேச தளத்தில் இயங்கும் சக்திகள் பொறுத்தும் இத்தகைய முடிவுகள் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இது மேலும் ஈழத்தமிழர்கள் மீதான எதிர்ப்புணர்வையும் பகைமையையும் உருவாக்கக்கூடும்.
அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
Category: கட்டுரைகள், புதிது
Tags: