Wednesday 22nd of January 2025 11:02:25 AM GMT

LANGUAGE - TAMIL
.
தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படும் தரப்பினரை தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டும்!

தமிழ் மக்களுக்கு விரோதமாக செயற்படும் தரப்பினரை தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டும்!


யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயமென யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் யாழ் மாநகர முதல்வர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டிருக்கின்றது. தென்னிலங்கையிலே போராடுகின்ற சக்திகள் கூட தமிழ் மக்கள் தொடர்பான விடயங்கள் மீது மெல்ல மெல்ல அக்கறை செலுத்துவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.

இலங்கையின் இனப் பிரச்சினைக்கு முற்று முழுதாக ஒரு தீர்வை காண்பதே தற்போதைய பொருளாதார பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.

தற்போது உருவாகியுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் முடிவு எடுக்க வேண்டும். தமிழ் கட்சிகள் குறுகிய நோக்கங்களை கைவிட்டு தமிழ் மக்களுக்காக சிந்திக்க வேண்டும். தமிழ் தேசியம் என்று சொல்கின்ற நபர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சிகள் ஒன்றிணைந்து தமிழ் மக்களுடைய நன்மைக்காக ஒரு முடிவை எடுத்து ஒரணியாக செயலாற்றுவது கட்டாயம். இந்த ஜனாதிபதி தேர்தலிலே என்ன நிலைப்பாட்டை தமிழ் மக்கள் சார்பாக எடுக்க வேண்டும் என்பதை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் பொது அமைப்புக்களுடன் இணைந்து ஆலோசனை செய்ய வேண்டியது கட்டாயமாகும்.

தமிழ் சிவில் சமூகத்தில் அரசியல் சார்ந்து சிந்திக்கக்கூடிய கல்வியலாளர்களுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு கட்டாயம் இதனை செய்ய வேண்டும். அவ்வாறு ஆலோசனையை செய்யமாட்டோம் என சொன்னால் தனிப்பட்ட நிகழ்ச்சிநிரலே அவர்களுக்கு இருக்கக்கூடும். தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கும் விடயத்துக்காக ஒற்றுமைப்பட மாட்டோம் ஒன்றாக முடிவெடுக்க மாட்டோம் என்று யாராவது சொன்னால் கூட அவர்கள் மீது சந்தேகப்பட வேண்டிய நிலையே காணப்படுகின்றது.

பேரம் பேசுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்து இருக்கின்றது. ஜனாதிபதியாக வரக்கூடியவர்களிடமிருந்து தமிழ் மக்களுக்கான குறுகிய கால பிரச்சினைகள் மற்றும் நீண்ட கால பிரச்சினைகள் என்ற அடிப்படையிலே வாக்குறுதிகளை பெற்றுக்கொள்ள வேண்டியது கட்டாயம். ஆக குறைந்தது அரசியல் கைதிகளினுடைய விடுதலை, ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்ற காணிகளை விடுவித்தல், காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கான தீர்வை வழங்குவதற்கான உத்தரவாதம் போன்றவற்றுக்கு வாக்குறுதியை பெற வேண்டும்.

பாதிக்கப்பட்ட வடகிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக வட கிழக்கு மையப்படுத்திய பொருளாதார அதிகார சபையை நிறுவுவதற்கு வரப்போகும் ஆட்சியாளர்களுடன் சம்மதித்து அதை நிறுவ வலியுறுத்த வேண்டும். அரசியல் தீர்வு தொடர்பாக காத்திரமான ஒரு உத்தரவாதத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்த வேண்டும்.

இதை எங்கள் கட்சிகள் செய்ய தவறி வார்த்தை ஜாலங்களை அள்ளி வீசினால் அந்த அரசியல் கட்சிகளுக்கு தென்னிலங்கையில் ஏற்பட்டது போன்ற சூறாவளியை வடகிழக்கில் தமிழ் மக்கள் ஏற்படுத்துவார்கள் என்பதை நாம் கூறிக் கொள்ள விரும்புகிறோம்.

எதிர்வரும் காலங்களில் தென்னிலங்கை அரசியல் பரப்பில் மாத்திரமல்ல தமிழ் அரசியல் தலைவர்களுக்கும் மறக்க முடியாத அனுபவங்களை கொடுக்கக்கூடிய காலமாக மாறிவிடும். இந்த சந்தர்ப்பத்தை வெறுமென கைவிடுவார்களாக இருந்தால் தமிழ் மக்கள் தகுந்த பாடத்தை கொடுப்பார்கள்.

யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த அகற்ற வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், வட மாகாணம், யாழ்ப்பாணம்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE