உலக வரலாற்றில் பெரும் இரத்தக்களரியால் எழுதப்பட்ட ஏராளமான விடுதலை தேடிய, உழைக்கும் மக்களின் மரணங்களாலும் இழப்புகளாலும் தன்னைக் கறைப்படுத்தழித்துக் கொண்டதுதான் பிரான்ஸின் “இரத்த வாரம்”.
பிரான்ஸின் தலைநகர் பாரிஸில் நிறுவப்பட்ட “பாரீஸ் கம்யூன்” என்றழைக்கப்பட்ட தொழிலாளவர்க்க அரசியல் அதிகாரம் 2 மாதங்களும் 1 வாரமும் 3 நாட்களும் மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது.
பிரான்ஸ் இராணுவத்தின் 17,000 படையினர் ஏறக்குறைய 25,000 முதல் 50,000 வரையான மக்கள் படைக்கு எதிராக களமிறக்கப்பட்டனர். ஒரு வாரம் நீடித்த இப்போரில் 6,667 போராளிப் படையினர் கொல்லப்பட்டு 43,500 பேர் கைது செய்யப்பட்டனர். 6,500 பேர் நாட்டை விட்டு இங்கிலாந்து, பெல்ஜியம், சுவிஸ்லாந்து ஆகிய நாடுகளுக்குத் தப்பியோடினர். 28.05.1871 அன்று “பாரிஸ் கம்யூன்” முற்றாகவே தோற்கடிக்கப்பட்டு பிரான்ஸ் அரசாங்கத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. ஏறக்குறைய 2 மாதங்களே அந்தத் தொழிலாள வர்க்க அரசியலதிகாரம் நிலைத்திருந்த போதிலும் ஒடுக்கப்படும் மக்களும் விடுதலை விரும்பிகளும் அதிலிருந்து ஏராளம் பாடங்களைக் கற்றுக் கொள்ளமுடியும்.
இவ்வருடம் மார்ச் 31ம் திகதி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வின் இல்லத்தைச் சுற்றிவளைத்து ஆரம்பிக்கப்பட்ட கோத்தா கோ ஹோம் போராட்டம் விரிவடைந்து கோல்பேஸ் திடல், அலரி மாளிகை, நாடாளுமன்றம் எனப் பல்வேறு மையங்களுக்கும் பரந்து ஒரு பெரும் மக்கள் பேரெழுச்சியாகப் பொங்கியது. அதுவேளையில் ஏறக்குறைய 2 மாதங்களாக “கோத்தா கோ ஹோம்” போராட்டம் காலிமுகத்திடலில் தொய்வின்றித் தொடர்ந்தது.
பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம், தடியடி போன்றவற்றாலும், கைதுகளாலும் அலரி மாளிகையிலிருந்து ஏவப்பட்ட காடைத்தனமான வன்முறைகளாலும் இப்போராட்டங்களை சிதைக்கவோ செயலிழக்கச் செய்யவோ முடியவில்லை.
பலவிதமான வன்முறைகளுக்கும் முகம் கொடுத்து தொடர்ந்துவந்த இந்த அமைதிப் போராட்டம் இம்மாதம் 9ம் திகதி நாடு பரந்த ஹர்த்தாலாக அடுத்த கட்டத்தை எட்டியது.
இப்போராட்டத்தின் இன்னொரு பரிமாணமாக ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை, ஜனாதிபதி செயலகம் என்பன போராடும் மக்களின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஜனாதிபதியும் பிரதமரும் தங்கள் பதவிகளை ராஜினாமாச் செய்யும்வரை தாங்கள் ஜனாதிபதி மாளிகையையோ அலரி மாளிகையையோ விட்டு வெளியேறப் போவதில்லையென உறுதியாகத் தெரிவித்து போராட்டக்காரர்கள் அங்கேயே தங்கியுள்ளனர்.
ஒரு மக்கள் போராட்டம் ஜனநாயக நியாயங்களுக்கு வெளியே போகாமல் அமைதி வழியில், வன்முறைகளை எதிர்கொண்டு முன்னேறிச் செல்லமுடியும் என்பதை இங்கு போராடும் மக்கள் பொறுமையும், நிதானமும் உறுதியும் மிக்க நடவடிக்கைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
எனினும் தற்சமயம் இடம்பெற்ற சில சம்பவங்கள் போராட்டத்தின் ஜனநாயகத்தன்மை சீர்குலைந்து போவதைப் போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி அதைக் கொண்டு இராணுவ வன்முறை மூலம் போராட்டத்தை ஒடுக்க அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதலாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வீடு தீக்கிரையாக்கப்பட்டது. அதில் முக்கிய பெறுமதி வாய்ந்த 2,500 புத்தகங்கள் எரிக்கப்பட்டதாகவும் அவற்றில் போத்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தின் புத்தகங்களும் உள்ளடங்குமெனவும் பிரதமர் தெரிவித்துள்ளார். மேலும் தனது பெறுமதி வாய்ந்த பல பொருட்களும் எரித்து அழிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இரண்டாவது அலரி மாளிகையிலுள்ள ஊடகப் பிரிவு உடைக்கப்பட்டு கணனிகள், பெறுமதி வாய்ந்த புகைப்படங்களும் திருடப்பட்டு விட்டதாகவும் முக்கிய ஆவணங்கள் வைக்கப்பட்டிருந்த அறைச்சுவர்கள் துளையிடப்பட்டும் கதவுகள் உடைக்கப்பட்டும் ஆவணங்கள் சேதப்படுத்தப்பட்டு விட்டதாகவும் பிரதமர் காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
மூன்றாவது அலரி மாளிகையில் தங்கியிருந்த போராட்டக்காரர்களிடையே இரு தரப்பினர்கள் மோதலில் ஈடுபட்டதாகவும் அதில் 10 பேர் காயமடைந்ததாகவும் ஒரு பெண் கழுத்து வெட்டப்பட்டுக் காயமடைந்ததாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இந்த மூன்று சம்பவங்களும் போராட்டத்தின் புனித நோக்கம் சிதைக்கப்படுவதற்கும் அமைதி வழிப்போராட்டம வன்முறையை நோக்கித் திசை திருப்பப்படுவதற்கான ஆரம்பமா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
ஏனெனில் உலகில் எத்தனையோ நீதியான, நேர்மையான போராட்டங்கள் இப்படியான ஈனச் செயல்களில் ஈடுபடுபவர்களின் ஊடுருவல் காரணமாக சீரழிக்கப்பட்டதும் சிதைக்கப்பட்டதும் பிளவுபடுத்தப்பட்டதுமான வரலாறுகள் உண்டு.
இங்கு நாம் ஒரு விடயத்தை முக்கிய கவனத்துக்கு எடுக்கவேண்டும். அதாவது ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் 1 கோடியே 78 இலட்சம் ரூபா கண்டெடுக்கப்பட்டது. அது அவர்களால் மறைக்கப்பட்டு மோசடி செய்யப்படவுமில்லை, பங்கு பிரிப்பதில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளவுமில்லை. மாறாக கண்டெடுக்கப்பட்ட பணத்தில் ஒரு சதத்தைக் கூடத் தொடாமல் அப்படியே பொலிஸாரிடம் ஒப்படைத்து விட்டனர்.
அப்படியானவர்கள் வீட்டைக் கொழுத்தியிருப்பார்களா? கிடைத்தற்கரிய புத்தகங்களை எரித்திருப்பார்களா? சில இலட்சம் மட்டுமே பெறுமதியான கணனிகளையும் புகைப்படக் கருவிகளையும் திருடியிருப்பார்களா? தங்களின் கோஷ்டி பிரிந்து வெட்டிக் கொத்துமளவுக்குச் சண்டை பிடித்திருப்பார்களா? இந்த அத்தனை சம்பவங்களும் பிரதமரின் இல்லம், பிரதமரின் அலரி மாளிகை என்பனவற்றுடன் சம்பந்தப்பட்டவையே! அது மட்டுமின்றி பிரதமர் இல்லத்துக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் நையப்புடைக்கப்பட்டும் சுடப்பட்டும் தாக்கப்பட்டதும் அங்கு நின்ற அதிரடிப் படையினராலேயே என்பதும் முக்கியமானதாகும்.
எனவே இவையனைத்தும் போராட்டக்காரர்களுக்கு எதிராக விரிக்கப்பட்ட சதிவலையின் கண்ணிகளா என வினவத் தோன்றுகிறது.
அதனால்தான் மக்களின் அபிலாஷைகளின் அரசியல் வடிவமாக உருவாக்கப்பட்ட “பாரீஸ் கம்யூன்” இரண்டு மாத காலத்திலேயே வீழ்த்தப்பட்டதன் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தோம்.
முன்னைய அதிகாரத்தில் மதகுருமாரே ஆட்சியில் ஆதிக்கம் வகித்த நிலையில் கம்யூன் அதிகாரத்தில் அரசும் மதமும் பிரிக்கப்பட்டன. ஏனெனில் பெருமளவிலான நிலங்கள் மத நிறுவனங்களிடையே இருந்தபடியால் மக்கள் பண்ணையடிமைகள் ஆக்கப்பட்டுக் கடுமையாக வேலை வாங்கப்பட்டனர். கட்டுப்பட மறுத்தவர்கள் சிறை செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டனர். அரசாங்கமும் அவர்களின் ஆதிக்க சக்திகளும் தட்டிக் கேட்க ஆளில்லாமல் இருந்தது. அடுத்ததாக கம்யூன் தொழிற்சாலைகளின் நிர்வாகத்தைத் தொழிலாளரிடமே ஒப்படைத்தது. சிறுவர்களை வேலைக்கமர்த்தல் தடைசெய்யப்பட்டு பெண்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன. மக்கள் மீதான கொடிய வரிகள் நீக்கப்பட்டன.
இப்படியெல்லாம் செய்தபோதும் நிர்வாக யந்திரத்தை உடைத்துப் புதியதை உருவாக்கத் தவறிவிட்டனர்.
நிர்வாகம் மக்களிடம் கொடிய வரிகளை அறவிடுவதை நிறுத்துவது என்ற பேரில் பண்ணையாளர்கள் தொழிலதிபர்களிடமும் வரிகளை அறவிடாமல் விட்டனர். தொழிற்சாலைகளில் ஏற்கனவே முதலாளிகளால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளே இருந்தபடியால் உற்பத்தியைச் சீர்குலைத்தனர். இந்த நிலையில் திறைசேரி காலியாக ஆரம்பித்தது. புரட்சிப் படையில் ஊடுருவிய சதிகாரர் மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் பல புரட்சியாளர்களையும் மது, மங்கை ஆசை காட்டிச் சீரழித்தனர்.
இந்த நிலையில் பிரான்ஸ் இராணுவத்தால் சுலபமாக பெரும் இரத்தக் களரி மூலம் தொழிலாளர்களின் அரசியல் அதிகாரத்தை வீழ்த்த முடிந்தது.
எனவே எமது மக்கள் போராட்ட சக்திகளும் தலைமைகளும் அரச கைக்கூலிகள், அரச ஆயுதப்படைகளின் புலனாய்வாளர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களில் புகுந்துள்ள சதிகாரர்கள் என்போரின் ஊடுருவல் தொடர்பாக விழிப்புடன் இருக்கவேண்டும். தேவையற்ற வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பாகவும் பொலிஸார் வன்முறையை மேற்கொள்ள வாய்ப்பளிக்கும் வகையில் செயற்படுபவர்கள் பற்றியும் கண்காணிப்புடன் இருக்கவேண்டும்.
மிகமுக்கியமாகத் தீயிடல், களவு போன்றவற்றில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதும் பின்னால் நின்று அவர்களைத் தூண்டி விட்டவர்களையும் இனம் காண்பதும் போராட்டக்காரர்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்துபவர்களை அறிவதும், மாற்று நடவடிக்கைகளை எடுப்பதும் உடனடியாக மேற்கொள்ளப்படவேண்டிய பணிகளாகும்.
தற்சமயம் போராட்டக்கார்கள் கோத்பாயவின் இராஜினாமாவையடுத்து ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், அலரி மாளிகை என்பனவற்றை விட்டு சமாதான பூர்வமாக தாங்களாகவே வெளியேறியுள்ளனர். எனினும் காலிமுகத்திடலில் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தற்சமயம் பதில் ஜனாதிபதியாக பதவியேற்றிருக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியைவிட்டு விலகவேண்டுமெனக் கோரி அவர்கள் அமைதி வழிப் போராட்டத்தைத் தொடருகின்றனர். அலரி மாளிகையின் முன்பு சத்தியாக் கிரகப் போராட்டமும் அதே கோரிக்கையை வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அதிகார பீடங்களின் நிலைப்பாட்டை எதிர்த்து நியாயமான போராட்டங்கள் தொய்வின்றி தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அதேவேளையில் இன்று முகிழ்ந்திருக்கும் விடியலை நோக்கிய மக்கள் பேரெழுச்சிக்கு பரிஸ் கம்யூனுக்கு ஏற்பட்ட தோல்வி ஏற்பட்டு விடாமல் தடுப்பது போராட்டச் செயற்பாட்டாளர்களினதும் அவர்களின் தலைமையினதும் பொறுப்பாகும்.
அருவி இணையத்துக்காக : நா.யோகேந்திரநாதன்
19.07.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, ரணில் விக்கிரமசிங்க, பிரான்சு, இலங்கை, கொழும்பு, பாரிஸ்