Wednesday 24th of April 2024 08:40:24 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 7 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 7 (நா.யோகேந்திரநாதன்)


ஒதியமலையிலிருந்து பெருங்குளம் சந்தி வந்து நெடுங்கேணி வந்து சேரும்வரை மண் வீதியென்றாலும் பாதை பிரச்சினையாக இருக்கவில்லை. இடையிடையே மழை காலங்களில் உழவு இயந்திரம் செல்லும்போது சேறாயிருந்த சில இடங்களில் பெரிய ரயரின் தடங்கள் ஏற்படுத்திய பள்ளங்கள் சில இன்னும் அழியாமல் இருந்தபோதிலும் அவற்றை விலத்தி சைக்கிளை ஓட்டக் கூடியதாக இருந்தது.

குலம் ஆறாம் வகுப்புப் படித்தபோது அந்த வருட அறுவடையின்போது நெல்லு விற்ற பணத்தில் சேனாதி எடுத்துக்கொடுத்த “ஏசியா” சைக்கிளைக் கழுவித் துடைத்து அவன் கவனமாகப் பாவித்து வந்தான். ஆனால், ரயர் தட்டுப்பாடு காரணமாக அவை தேய்ந்து கடைசிக் கட்டத்தை எட்டியபோதும் தைத்துப் பாவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. குலத்துக்கு சைக்கிள் எடுத்துக்கொடுத்து இரண்டு வருடங்களின் பின்பே சேனாதி தனக்கொரு “ஹீரோ” சைக்கிளை எடுத்தான்.

குலம் அதிகாலை ஐந்து மணிக்கே ஒதியமலையிலிருந்து புறப்பட்டு விட்டான். பெருங்குளம் வீதியால் வரும்போது தூரம் தெரியவில்லை. காட்டுக்குள்ளிருந்து ஓடி வந்த நரியொன்று வீதியில் வந்து நின்று அவனைத் தூரத்தில் கண்டு விட்டு மீண்டும் மறுபக்கக் காட்டுக்குள் ஓடி மறைந்தது. வீதிக்கரையில் நின்ற பட்ட மரமொன்றில் அமர்ந்திருந்த இரு தோகை மயில்கள் எழும்பிப் பறந்து போய் சற்றுத் தொலையில் உள்ள ஒரு பாலை மரத்தில் அமர்ந்து கொண்டன.

இடையிடையே முயல்கள் வீதியைக் குறுக்கறுத்துப் பாய்ந்தன. சற்றுத் தூரம் சென்ற பின்பு வீதிக்கரையில் கிடந்த யானை உலத்தியிலிருந்து ஆவி பறந்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தின் முன்பு அந்த இடத்தை யானைகள் கடந்திருக்கவேண்டுமென ஊகித்துக்கொண்டான்.

அந்த இடத்தில் விளாத்தி மரங்கள் கூடுதலாக நின்ற காரணத்தால் அங்கு யானைகளின் நடமாட்டம் அதிகமாயிருக்கும்.

அந்த ஊர் மக்கள் யானைகளைக் கண்டு பெரிதாகப் பயப்படுவதில்லை. யானைகள் கிளையாக வரும்போது மனிதரைக் கண்டால் விரட்டித் தாக்குவதில்லை. ஆனால் யானைகள் வரும் பாதையில் குறுக்கே நின்றால் மட்டும் அச்சம் கொண்டு மனிதர்களை தாக்குவதுண்டு.

ஆனால் அப்பகுதி மக்கள் காற்றில் வரும் வாசனையைக் கொண்டு யானைகள் வருகின்றனவா அல்லது போகின்றனவா என்பதை அறிந்து அதற்கேற்ற வகையில் நடந்து கொள்வார்கள்.

ஆனால் “அலியன்” என அழைக்கப்படும் கூட்டத்தை விட்டுப் பிரிந்த தனியன் யானை மிகவும் ஆபத்தானது. அது மனிதரைக் கண்டால் துரத்தி வந்து தும்பிக் கையால் தூக்கி காலுக்குள் போட்டு மிதித்துக் கொன்றுவிடும். சற்றுத் தூரம் சென்று ஒரு சிறு வெளியான பகுதியைக் கடந்தபோது காதில் ஒருவிதமான காற்றொலி வந்து விழவே அண்ணாந்து வானத்தைப் பார்த்தான். அரைவட்ட வடிவில் ஒரே சீராகப் பறந்து சென்ற நீர்க் காகங்களை எத்தனை தரம் பார்த்தாலும் அவனுக்குச் சளைப்பதில்லை.

அவற்றையெல்லாம் அந்த அதிகாலைப் பொழுதில் பார்த்துக்கொண்டு போவது அவனுக்கு ஒரு இன்பமயமான உணர்வைக் கொடுத்தபோதிலும் அவன் சைக்கிளின் வேகத்தைக் குறைக்கவில்லை.

நெடுங்கேணி வந்து சேர்ந்த அவன் தண்ணீரூற்றுக்குப் போகும் பிரதான வீதியில் சைக்கிளை விட்டான். அது ஒரு காலத்தில் பஸ் ஓடும் பிரதான தார் வீதியாக இருந்தது. நீண்ட காலம் பராமரிப்பு இன்மையால் படுமோசமான நிலையை அடைந்திருந்தது. ஒரு கிடங்களில் சைக்கிள் விழுந்து விடாமல் “ஹாண்டிலை” மறுபக்கம் திருப்பினால் சில்லு வேரொரு கிடங்கில் விழுந்துவிடும். அது மட்டுமின்றி தாரை விட்டுக் கிளப்பி வீதியெங்கும் சிதறிக் கிடந்த கருங்கல்லுச் சல்லிகள் உருண்டு கொடுத்துச் சைக்கிளை விழுத்தி விடக்கூடுமென்பதால் மெதுவாகவும் மிகக் கவனமாகவும் சைக்கிளை ஓட வேண்டியிருந்தது.

சைக்கிள் பள்ளம் திட்டியில் விழுந்தும் ஏறியும் மிகவும் சிரமத்தைக் கொடுத்தபோதிலும் குலம் ஒரு மகிழ்ச்சியான மனதுடனேயே சைக்கிளை ஓடிக் கொண்டிருந்தான்.

அவன் தனது நீண்ட நாள் கனவான கிராமசேவகர் உத்தியோகத்தைப் பெறுவதற்கான முதலாவது முயற்சியை நோக்கியே அவன் போய்கொண்டிருந்தான்.

விதானையார் செல்லத்துரை வர்த்தமானியின் கிராமசேவையாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது என்பதை அவனுக்குத் தெரிவித்ததுடன் நேர்முகப் பரீட்சையை நடத்தும் அதிகாரிகளில் ஒருவர் தனது நண்பரெனவும் அவனுக்கு தன்னுடன் சேர்ந்து வேலை செய்த அனுபவத்தைச் சொல்லி சிபார்சு செய்து விடுவதாகவும் கூறியிருந்தார்.

அவன் அன்றே மருதோடை தபாலகத்துக்குச் சென்று வர்த்தமானியிலிருந்த விண்ணப்பப்படிவத் தைப் பிரதி செய்து வந்ததுடன் அடுத்த நாளே முள்ளியவளைக்குப் புறப்பட்டு விட்டான்.

முள்ளியவளையின் பெட்டிசம் கனகர் என்றால் தெரியாதவர்கள் யாருமில்லை.

பெட்டிசங்கள், விண்ணப்பங்கள் என்பவற்றை ஆங்கிலத்தில் எழுதித் தட்டச்சு செய்து கொடுப்பதுதான் அவரின் தொழில். அவரிடம் போகும்போது இரண்டு “கப்ஸ்ரன்” சிகரட்டுடன் போகவேண்டும் என்பது கட்டாயமானது. பின்பு அவர் செய்யும் வேலைக்கு இரண்டு ரூபாவிலிருந்து எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்வார். அவர் எவ்வளவு தரவேண்டுமெனக் கேட்பது கிடையாது.

அந்தப் பாதையில் கண்ணிவெடியை வெடிக்கத் தயாராகப் பொருத்தி விட்டுப் போராளிகள் மறைவில் பதுங்கியிருந்தனர்.

போராளி கிருபா ஒருவன் சைக்கிளில் வருவதைக் கண்டு விட்டான். அப்போது இராணுவ வாகனம் வரும் சத்தம் தூரத்தில் கேட்டது. அப்போதுதான் கிருபா எதிர்ப் பக்கத்தில் குலம் வருவதைக் கண்டதும் பதட்டமடைந்தான்.

கிருபா தன் அணித் தலைவன் காண்டீபனிடம் பதட்டத்துடன் “அண்ணை ஒருதன் சைக்கிளிலை வந்து கொண்டிருக்கிறான். ட்றக்கும் அவனும் ஒரே நேரத்திலை தான் எங்கடை “ஸ்பொட்டுக்கு” வருவினம் போலை கிடக்குது. என்னண்ணை செய்யுறது?” எனக் கேட்டான்.

காண்டீபனும் குலம் வருவதைபை் பார்த்துவிட்டு “ம்.... இராணுவ ட்றக்குக்கு நாளைக்கும் வைக்கலாம். ஆனால் எங்கடை சனத்திலை ஒருதன்ரை உயிர் போனால் எண்டைக்கும் திருப்பி எடுக்கேலாது” என்றான்.

“அப்ப இப்ப என்னண்ணை செய்யிறது?”

“அவனுக்கு ஆபத்து வருமெண்டால் அமத்தாமல் விடுவம்.”

அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மெல்லிய ஒரு வெடிச்சத்தம் அவர்களின் காதில் விழுந்தது.

ஒரு கிடங்கில் சைக்கிளின் முன்சில்லு இறங்கியபோது ஒரு கூரான கல்லுக்குத்தியதால் முன் ரயர் வெடித்து விட்டதைக் குலம் புரிந்து கொண்டான்.

அவன் சைக்கிளால் இறங்கி ரயரைப் பார்த்தபோது அது ஒரு அங்குல நீளத்துக்குப் பிளந்து போயிருந்தது. அந்த நேரத்தில் வாகன இரைச்சல் கேட்டுத் திரும்பிப்பார்த்தவன் வருவது இராணுவ வாகனம் என்பதைப் புரிந்து கொண்டான்.

இராணுவ வாகனம் வந்து கொண்டிருந்த இடத்திலிருந்து கணிசமான தூரத்தில் சைக்கிளில் வந்தவன் நின்று விட்டதைக் கண்டு காண்டீபன் மகிழ்ச்சியுடன் “நடத்து!” என்றான்.

அடுத்த கணம் இராணுவ வாகனம் ஒருமுறை எழும்பி விழுந்தது. அதற்குள்ளிருந்த படையினர் தூக்கி வெளியில் வீசப்பட்டதைக் குலம் கண்டு விட்டான். குலம் சைக்கிளை அப்பிடியே போட்டு விட்டு காட்டுப் பக்கமாக ஓடத் தொடங்கினான்.

அதேவேளை பற்றைக்குள்ளிருந்து இராணுவத்தினரை நோக்கி வேட்டுகள் பாய ஆரம்பித்தன.

கண்ணிவெடியில் காயங்களுடன் உயிர் தப்பிய சிலர் ஒருவாறு தங்களைச் சுதாகரித்துக் கொண்டு பற்றைகளை நோக்கித் திருப்பிச் சுட ஆரம்பித்தனர். சில நிமிடங்கள் சமர் தொடர்ந்தாலும் போராளிகளின் குறி தவறாத சூட்டில் படையினர் ஒவ்வொருவராக விழ ஆரம்பித்தனர்.

அதேபோல் தொலைவில் இரு இராணுவ வாகனங்கள் வேகமாக வருவதைக் காண்டீபன் கண்டு விட்டான். உடனடியாக அவன் தனது போராளிகளைக் காட்டை நோக்கிப் பின் வாங்கும்படி பணித்தான்.

தமது நோக்கம் நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியுடன் போராளிகள் சுடுவதை நிறுத்திவி்ட்டு காடுகளுக்குள் பின்வாங்கத் தொடங்கினர்.

மீண்டும் கண்ணி வெடி வெடிக்கக்கூடும் என்ற பயத்தில் இரு வாகனங்களிலும் வந்த இராணுவத்தினர் அவற்றைச் சிறிது தொலைவில் நிறுத்திவிட்டு குதித்து இறங்கிச் சுட்டவாறே குனிந்து ஓடிக்கொண்டு கண்ணிவெடி வெடித்த இடத்திற்கு வந்தனர்.

அவர்கள் சுற்றிவர இருந்த பற்றைகளையும் காட்டையும் நோக்கி கண்மூடித்தனமாகச் சுட்டனரேயன்றி எவரும் துணிந்து காட்டுக்குள் இறங்கவில்லை.

காட்டுக்குள் சிறிது தூரம் பின்வாங்கிய போராளிகள் படையினர் தங்களைப் பின் தொடரக்கூடுமென எதிர்பார்த்து திருப்பித் தாக்கும் நோக்கத்துடன் மரங்களின் பின் பதுங்கிக் கொண்டனர்.

பதினைந்து இருபது நிமிடங்களில் வெடிச் சத்தங்கள் ஓய்ந்து விட்டன. படையினர் காட்டுக்குள் இறங்கிய அறிகுறிகள் எதுவும் தென்படவுமில்லை.

எனவே அவர்கள் தங்கள் இடத்தை நோக்கிப் போவதென முடிவெடுத்து காட்டினூடாக நடக்க ஆரம்பித்தனர்.

சைக்கிளை அப்படியே போட்டு விட்டு ஓடிய குலம் துப்பாக்கி வேட்டுச் சத்தங்கள் கேட்கும்வரை ஓடிக் கொண்டேயிருந்தான். சத்தங்கள் மெல்ல மெல்ல குறைந்து முற்றாக நின்ற பின்பே அவன் தனது ஓட்டத்தை நிறுத்தினான்.

களைப்புத் தாங்க முடியாத நிலையில் ஒரு மரவேரில் அமர்ந்து மெல்ல மரத்தில் சாய்ந்து கொண்டான்.

அந்தக் காடு அவனுக்குப் பரிச்சமில்லாத காரணத்தால் தான் எங்கே நிற்கிறான் என்பதை அவனால் புரிந்து கொள்ளமுடியவில்லை. திரும்பிப் போய் சைக்கிளை எடுக்கத் துணிவு வரவுமில்லை.

அண்ணாந்து மரக்கிளைகளுக்குள்ளால் சூரியனைப் பார்த்தான். பெருங்குளத்திலிருந்து பண்ணைகளுக்குப் போகும் வீதி சூரியனுக்கு எதிர்த்திசையிலேயே இருக்கக்கூடுமென ஊகித்துக் கொண்டான். அவன் எழுந்து ஒரு குறிப்பிட்ட திசையில் நடக்கத் தொடங்கினான்.

சிறிது தூரம் சென்ற பின்பு உலங்கு வானூர்திச் சத்தம் கேட்கத் தொடங்கவே அவனை மீண்டும் அச்சம் ஆட்கொண்டது.

அது சிறிது நேரம் வானில் வட்டமிட்டு விட்டு காட்டை நோக்கிச் சரமாரியாகச் சுட ஆரம்பித்தது. என்ன செய்வதென்பதைப் புரிந்து கொள்ளாமல் தடுமாறிய குலம் அடர்ந்த பற்றை ஒன்றுக்குள் பதுங்கிக் கொண்டான்.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால்பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE