இம்மாதம் இடம்பெற்ற புதிய ஜனாதிபதித் தேர்தலில் ஏற்கனவே பிரதமராகவும், முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ்வின் ராஜினாமாவின் பின்பு பதில் ஜனாதிபதியாகப் பதவி வகித்தவருமான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 134 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்று 52 மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்றுள்ளார். இவருடன் போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும 113 வாக்குகளைப் பெறுவாரென எதிர்த்தரப்பினரால் நம்பப்பட்ட போதிலும் அவரால் 82 வாக்குகளை மட்டுமே பெறமுடிந்தது.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசா நாயக்க இந்தத் தேர்தல் தொடர்பாகப் பல கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் சிலர் விலைக்கு வாங்கப்பட்டனர் எனவும் வெகுவிரைவில் அவை தொடர்பான விபரங்களை வெளியிட முடியுமெனவும் தெரிவித்திருந்தார்.
எது எப்படியிருந்தபோதிலும் இம்மாதம் 21ம் திகதி ரணில் விக்கிரமசிங்க சத்தியப் பிரமாணம் செய்ததுடன், கோத்தபாய ராஜபக்ஷ்வின் மிகுதிக் காலத்துக்கான ஜனாதிபதி ரணில் என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது.
இந்த நிலையில் பல ஊடகங்கள் உட்படப் பல்வேறு தரப்பினரும் ரணில் விக்கிரமசிங்கவின் புகழ்பாடத் தொடங்கி விட்டனர். கழுதை அதிகாரத்துக்கு வந்தாலும் கழுதைக்கு மிக அழகான கொம்பு எனப் பலர் துதிபாடுவது அப்படியொன்றும் அதிசயமில்லை.
ஆனாலும் இலங்கை வரலாற்றில் இரு பெரும் சாதனைகளை ஈட்டிய பெருமை ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு என்பதை எவரும் மறுத்துவிடமுடியாது.
சிங்கள பௌத்த மக்களின் ஞானத் தந்தையாகக் கருதப்படும் அநகாரிக தர்மபாலவின் சீடர்களும் 1915ல் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகளை வழி நடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் சிறை சென்று, பின்பு சேர்.பொன்.இராமநாதனின் முயற்சிகளால் விடுவிக்கப்பட்டு சிங்கள மக்களின் நாயகர்களாகத் தம்மை நிலை நிறுத்திக் கொண்டவர்களும் இலங்கையின் சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கருதப்படுபவர்களுமான எவ்.ஆர்.சேனநாயக்க, டி.எஸ்.சேனநாயக்க, டி.பி.ஜெயதிலக, பரண் ஜெயதிலக, டி.ஏ.ஹேவவிதாரண போன்ற தலைவர்களால் உருவாக்கப்பட்டதே ஐக்கிய தேசியக் கட்சி.
டி.எஸ்.சேனநாயக்க, சேர்.ஜோன்.கொத்தலாவலை, ஜே.ஆர்.ஜயவர்த்தன, ஆர்.பிரேமதாச போன்ற பிரசித்தி பெற்ற தலைவர்கள் அக்கட்சியின் சார்பில் பிரதமர்களாகவும் ஜனாதிபதிகளாகவும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு ஆட்சி நடத்தினர். அத்தகைய வரலாறு கொண்ட ஒரு கட்சியைத் தலைமை தாங்கி தானும் வெற்றி பெறாமல், தனது கட்சியைச் சேர்ந்த வேறு ஒருவர் கூட வெற்றி பெறாதவாறு 2020 பொதுத் தேர்தலின்போது வழி நடத்திய சாதனையைச் செய்தவர்.
மக்களால் தானும் தனது கட்சியும் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்ட நிலையிலும்கூட 69 இலட்சம் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்ட கோத்தபாயவின் பதவியை மக்களின் வாக்களிப்பின்றி அவருக்கு எதிராகக் காலிமுகத்திடலிலும் அலரி மாளிகையிலும் போராட்டங்கள் நடந்து கொண்டிருக்கும் நிலையிலும் ரணில் விக்கிரமசிங்க கைப்பற்றியுள்ளார். இது அவரின் இரண்டாவது வரலாற்றுச் சாதனை.
மக்களால் அதலபாதாளத்துக்குத் தள்ளப்பட்ட அவர் மக்களின் எதிர்ப்பின் மத்தியில், மக்களின் எதிர்ப்பால் ஏற்பட்ட ஒரு இடைவெளியூடாக அதிகாரத்தின் உச்சிக்கு ஏறிவிட்டார்.
இவரைப் பற்றி தத்துவமேதை அன்ரன் பாலசிங்கம் ஒருமுறை கூறும்போது, “ரணில் ஒரு விஷப் பாம்பு. அவர் தூங்குவது போலவும், செத்து விட்டது போலவும் அசையாமல் கிடப்பார். நேரம் வரும்போது பாய்ந்து கொத்தி விடுவார்” என்றார்.
தூங்குவது போலவும் செத்து விட்டது போலவும் கிடந்த ரணில் இப்போது எழுந்து படத்தை விரித்துவிட்டார். இனி அவர் யாரைக் கொத்தப் போகிறார் என்பதோ அல்லது அடி வாங்கி சுருளப் போகிறாரா என்பதோ தான் இப்போது எழும் கேள்விகளாகும்.
மக்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவர் தான் தன்னிடமுள்ள அதிகாரங்களைப் பாவித்துக் காய்களை நகர்த்தப் போகிறார்.
அவர் எப்படி ஆட்சியை முன்னெடுப்பார் என்பது தெரிந்தாலும் அவரின் வெற்றிக்கு அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளும் இந்தியாவும் வழங்கிய வாழ்த்துக்களும் வரவேற்புகளும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளுக்கான அறிகுறிகளும் அவரின் அடுத்த கட்ட நகர்வை உறுதி செய்கி்ன்றன.
இப்போதும் தீவிரமாகத் தொடரும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்படுவதற்கும், தீவிரமடைந்தற்கும் எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா, உணவுப் பொருட்கள் என்பனவற்றின் விலைகள் திட்டமிட்டுப் பல மடங்காக உயர்த்தப்பட்டமையும், அவற்றைப் பெறுவதற்காக நாட்கணக்கில் மக்கள் வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டமையுமே காரணமாகும். நாடு பட்டினிச் சாவையும் கொடிய வறுமையையும் நோக்கித் தள்ளப்படுகிறது என்பது தெளிவான விடயமாகும். தற்சமயம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்க தீர்வுகளை முன்வைப்பரா? இன்னும் வரிசைகளை அதிகரிப்பாரா? என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அடுத்தகட்ட நடவடிக்கைகள் நேர்மையாகவும், தீவிரமாகவும் எடுக்கப்பட்டாலே போராட்டங்கள் ஓய்வுக்கு வருமென்பதை போராட்டச் செயற்பாட்டாளர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இப்பிரச்சினைகள் நேர்மையாகத் தீர்க்கப்படாது என்ற நிலையிலேயே போராட்டம் பொருளாதாரப் போராட்டங்கள் என்ற கட்டத்தைத் தாண்டி அரசியல் போராட்டமாக உருவெடுத்தன. ஆனால் போராட்டங்களை முறியடிக்கவும் போராட்டக்காரர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவும் சட்டம், ஒழுங்கு, அமைதி என்ற பெயரில் வெவ்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இதைப் பற்றிப் போராட்டக்காரர்களின் முக்கிய செயற்பாட்டாளர்களில் ஒருவரான சமீர் தெட்டுவகே “ரணில் ஒரு இரக்கமற்ற நடைமுறைவாதி” எனக் குறிப்பிட்டார்.
அதேபோன்று பிரபல அரசியல் பொருளாதார ஆய்வாளரான அகிலன் கதிர்காமர், “ரணிலின் நடவடிக்கைகள், சிக்கனம், பொதுச் செலவுகளை குறைத்தல் என்பதை அடிப்படையாகக் கொண்டே அமையும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளையில் முன்னாள் இடதுசாரியான விக்டர் ஐவன் மற்றும் அரசியல் ஆய்வாளர்கள், பல்கலைக்கழகப் பொருளாதார வல்லுனர்கள் ஆகியோரும் கதிர்காமர் அவர்களின் கூற்றின் விளக்கமாகப் பல்வேறு ஊடகங்களிலும் கருத்துகளை முன் வைத்துள்ளனர்.
அதாவது தனியார் துறையை ஊக்குவித்தல், நட்டமடையும் அரச நிறுவனங்களைத் தனியார் மயமாக்கல், கல்வி, சுகாதாரம் போன்ற பொதுச் சேவைகளுக்கு ஒதுக்கும் நிதியைக் குறைத்தல், அரச ஊழியர்களின் தொகையை சரி பாதியாகக் குறைத்தல், மானியங்கள் வழங்கப்படுதலை நிறுத்தல் போன்ற நடவடிக்கைகளே அவையாகும்.
இவையனைத்தும் சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதற்கான நிபந்தனைகளுக்கு அமைவானவையேயாகும்.
இங்கு ரணில் ஜனாதிபதியானவுடன் அமெரிக்கா வாழ்த்தி வரவேற்றதையும் இலங்கையுடன் ஒத்துழைக்கத் தயார் என அறிவித்ததும், சர்வதேச நாணய நிதியப் பிரதிநிதிகள் உடனடியாக இங்கு கடன் வழங்குவது பற்றிப் பரிசீலிக்க வருவதும் ரணில் இதுவரை எடுத்த எடுக்கப்போகும் நடவடிக்கைகளுக்கான திசை காட்டிகளாகும்.
எனவே ரணிலின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிவாயு விநியோகம், எயர் லங்கா நிறுவனம், உருக்காலைக் கூட்டுத்தாபனம், சீமெந்து உற்பத்தி, கடதாசிக் கூட்டுத்தாபனம், ஓடு, கூரைத் தகடு உற்பத்திகள் போன்ற கைத்தொழில், வர்த்தக நிலையங்கள் அந்நிய நிறுவனங்களுக்கு விற்கப்படும். அதற்கான காரணம் நட்டத்தைத் தவிர்த்தல் எனக் கூறப்படும். உண்மையில் இலஞ்சம், ஊழல், மோசடி, அதிகார துஷ்பிரயோகம் என்பன தவிர்க்கப்பட்டால் இவை நட்டமடைய முடியாது. எனவே எமது பிரதான உற்பத்தி வர்த்தகம் என்பன அந்நியப் பெரும் நிறுவனங்களின் கைகளுக்குப் போய்விடும். புல்மோட்டை இலுமனைட், எப்பாவல பொஸ்பேற் ஆகிய கனிய வளங்கள் ஏற்கனவே விற்கப்பட்டது போன்று எமது இரத்தினக் கல் வளம், கடலட்டை, றால், கணவாய் போன்ற கடல் வளங்களும் விற்கப்படும் அபாயம் ஏற்படும். அரசாங்க சேவை, துணை அரச நிறுவனங்கள் என்பவற்றில் ஆட்குறைப்புச் செய்யும்போது ஏற்படும் வேலையின்மை காரணமாக மக்களின் வாங்கும் சக்தி நலிவடைய வறுமை நிலை மேலும் கூடும். பொதுச் செலவுகள் மட்டுப்படுத்தப்படும்போது கல்வி, சுகாதாரம் என்பவற்றுக்கு மக்கள் சொந்தப் பணத்தையே செலவு செய்யும் நிலை ஏற்படுமாதலால், அவை பெருமளவு மக்களுக்குக் கிட்டாமல் போய்விடும். கடந்த அரசாங்கத்தின்போது ஒரு அந்தர் பசளை 3000 ரூபாவுக்கு வாங்கி அரசாங்கத்தின் 2,000 ரூபா மானியம் காரணமாக விவசாயிகளுக்கு ஆயிரம் ரூபாவுக்கு வழங்கப்பட்டது. மானியம் நிறுத்தப்படும்போது அதன் காரணமாக உணவுப் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரிக்கும்.
அதனால் அவற்றின் விலை அதிகரிக்க விற்பனை வீழ்ச்சியடையும் அதன் காரணமாக மக்களுக்கு உணவுப் பொருடக்ளை வாங்கமுடியாத நிலைமையும் விவசாயிகள் வறுமையில் தள்ளப்படும் நிலைமையும் உருவாகும்.
இதுதான் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின்படியான தனியார் முதலீடுகளை ஊக்குவித்தல், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளல், வீண்விரயங்களைத் தவிர்த்தல், அரச செலவினங்களைக் குறைத்தல், உற்பத்தியைப் பெருக்கல் என்பனவற்றின் அர்த்தமாகும்.
அப்போது பொருட்களுக்குக் தட்டுப்பாடு இருக்காது. ஆனால் அவற்றை வாங்குமளவுக்கு மக்களிடம் பணமிருக்காது.
எனினும் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற அன்றே போராட்ட செயற்பாட்டாளர்களாகிய முன்னாள் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் வசந்த லியனகே மற்றும் போராட்டத்தில் பிரதான பாத்திரம் வகிக்கும் தேரர் ஒருவர் என இருவர் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அன்று நள்ளிரவு காலிமுகத்திடலில் கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் மீது பொலிஸாரும் இராணுவத்தினரும் வன்முறைகளைப் பிரயோகித்து கூடாரங்களைப் பிய்த்தெறிந்ததுடன் தாக்குதல்களையும் மேற்கொண்டனர். அதன் காரணமாக 8 பொது மக்கள் படுகாயப்படுத்தப்பட்டனர்.
இதிலிருந்து புதிய ஜனாதிபதியின் தலைமையில் இலங்கையின் எதிர்காலம் எப்படி அமையும் என்பதற்கான அறிகுறிகள் தெளிவாகியுள்ளன. ரணில் விக்கிரமசிங்கவின் செத்தவன் போல் கிடந்து சந்தர்ப்பம் வாய்க்கும்போது பாய்ந்து கொத்தும் நயவஞ்சகம் வெகுவிரைவில் அதற்கான எதிர்விளைவைச் சந்திக்கும். ஏனெனில் ஒவ்வொரு தாக்கத்திற்கும் எதிர்த்தாக்கம் இருக்குமென்பது விஞ்ஞானி நியூட்டன் அவர்களின் மாற்றமுடியாத விதியாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
26.07.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, ரணில் விக்கிரமசிங்க, இலங்கை