இலங்கையில் பௌத்த மதகுருமாருக்கு வழங்கும் முக்கியத்துவத்தினை ஏனைய மதகுருமார்களுக்கும் வழங்கப்படவேண்டும் என கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் ஏற்பாட்டிலான ஊடக சந்திப்பு இன்று மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாயில் உள்ள அதன் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச.லோகநாதன் குருக்கள்,செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாத குருக்கள் ஆகியோர் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத் செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாத குருக்கள் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டவை வருமாறு:-
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் பெறுவதற்காக குருமார் செல்லும் போது, அங்கே குருமார்கள் புறக்கணிக்கப்படுவதும், சமூகத்தால் வெறுத்து ஒதுக்கப்படுவதுமான செயற்பாடுகளால் இந்துக் குருமார் எரிபொருளைப் பெறாமலேயே வீடு செல்லும் நிலையே காணப்படுகிறது.
இதனை மட் டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்துக்கு கடந்த மாதம் எமது ஒன்றியத்தால் பல கோரிக்கைகள் அடங்கிய கடிதம் ஒன்றினைக் கையளித்திருந்தோம்.
இதன்போது மேலதிக அரசாங்க அதிபரால் நாட்டிற்கு எரிபொருள் வருகின்ற போது, உங்களுக்குத் தேவையான எரிபொருளை வழங்குவதற்கு குறிப்பிட்ட எரிபொருள் நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்குவோம் என்ற உறுதி மொழி வழங்கப்பட்டது.
தற்போது அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் போதியளவு எரிபொருள் வந்து கொண் டிருக்கிறது. அதனை மக்களும் தங்களது வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்துக்கமைய பெற் றுக் கொண்டிருக்கிறார்கள். இதன்போது பல முறைகேடுகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்துக் குருமார்கள் தமது பூசைக் கடமைகளுக்காகவும், சமூக மேம்பாட்டுக்காகவுமே எரிபொருளைப் பெற செல்கிறோம். மதவழிபாட்டினை முன்னின்று நிகழ்த்த அனைவரும் முன்வருவதில்லை.
ஒரு சிலரே முன்வருகின்றனர். எனவே அவர்கள் அக்கடமைகளைச் செவ்வனே நிகழ்த்த சமூகத்திலுள்ளவர்கள் உறுதுணையாகச் செயற்பட வேண்டும். அத்தோடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரியும் பொலிசாரும் இடையூறாகச் செயற்படுகின்றனர். இவற்றோடு பௌத்த குரு மார்களுக்கு வழங்கப்படும் உன்னதமான நிலை ஏனைய மதக் குருமார்களுக்கு வழங்கப்படுவதில்லை.
இனிவரும் காலங்களில் எமக்கான எரிபொருளை வழங்க இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அரச அதிகாரிகள் சம்பந்தப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்குப் பணிப்புரை வழங்க வேண்டும். அவ் வாறு செய்யாதபட்சத்தில் நாம் நீதி கோரி வீதிக்கிறங்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்படுமென்றார்.
கிழக்கிலங்கை இந்துக் குருமார் ஒன்றியத் தலைவர் சிவஸ்ரீ கணேசலோகநாதக் குருக்கள் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டவை வருமாறு:-
கொரோனாத் தொற்று காலத்தில் இந்துக் குருமார்கள் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் ஆலய பூசை வழிபாடுகளை உரிய வகையில் நிகழ்த்தினர். இந்நிலையில் எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பூசை வழிபாடுகளை நிகழ்த்த வேண்டியுள்ளது.
இந்நிலையில் எரிபொ ருள் நிரப்பச் செல்கையில் பல்வேறு இடர்கள், இன்னல்கள் மற்றும் கசப்பான சம்பவங்களை எதிர்கொள் கின்றனர். எரிபொருள் நிலையங்களில் சமூகத்திலுள்ள ஏனையோர் போன்று வரிசையில் நின்று எரிபொருள் பெற முடியாது. ஏனெனில் காலை, மதியம், பிற்பகல் பூசை வழிபாடுகளை நிகழ்த்த செல்ல வேண்டியுள்ளது. ஒருகுருவானவர் ஐந்து, ஆறு ஆலயங்களுக்குச் சென்று பூசை செய்ய வேண்டியுள்ளது.
இந்நிலையில் எரிபொருள் உரிய வேளையில் கிடைக்காத பட்சத்தில் பூசை வiழிபாடுகளை உரிய காலவேளையில் நிகழ்த்த முடியாமல் போய் விடும். இதனால் தெய்வக் குற்றத்துக்கு ஆளாக வேண்டியேற்படும்.
மதத்தை இழிவுபடுத்தும் செயற்பாடுகளில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் ஈடுபடுகின்றார். இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகையோருக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.அவ்வாறு எடுக்காவிட்டால் சிறைச்சாலைக்க முன்பாக ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு