தென்னிலங்கையில் எமது மக்கள் பட்டுவந்த அவலங்கள் பற்றிய செய்திகள் அன்று காலையே அந்த ஊருக்கு வந்து சேர்ந்துவிட்டன. அவற்றை அந்த ஊரவர்கள் ஒருவருடன் ஒருவர் அனுதாபத்துடன் பரிமாறிக் கொண்டனர். பத்து பதினொரு மணிபோல் கண்ணி வெடிச் சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட பின்புதான் அன்று காலையில் காட்டுப் பக்கம் உலங்கு வானூர்தி சுற்றியதன் காரணம் அவர்களுக்கு விளங்கியது.
முள்ளியவளைக்குப் போன குலம் வெடிச்சம்பவத்திற்குள் அகப்பட்டிருப்பானெனக் குஞ்சாத்தையோ பொன்னாவோ நினைத்துக் கூடப்பார்க்கவில்லை.
மத்தியானம் வீட்டுக்கு வந்த சேனாதி வந்ததும் வராததுமாகக் குஞ்சாத்தையிடம் “எணேய்.... குலத்தான் வந்திட்டானே?” எனக் கேட்டான்.
“இல்லையடா.... விடியப்பறம் போனவனை இன்னும் காணேல்லை. முள்ளியவளைப் பக்கம் பொடியளுக்கும் ஆமிக்கும் சண்டையாம்”, என்றாள் குஞ்சாத்தை ஒரு விதமான கலக்கத்துடன்.“ஓமணை! பதினெட்டு ஆமிக்காரர் செத்துப் போனாங்களாம். பத்துப் பன்னிரெண்டு பேருக்கு காயமாம்...... பிறகு முல்லைத் தீவிலையிருந்து வந்த ஆமிக்காரர் முள்ளியவளைச் சுடலைக்குப் பிரேதம் கொண்டு வந்த சனத்தைத் தாறுமாறாய்ச் சுட்டதிலை 4 பேர் செத்துப் போச்சினமாம்”, என்றான் சேனாதி.
“குலத்தைக் காணேல்லை..... பயமாய்க் கிடக்கடா..... ஒண்டில்லாமல் ஒண்டு நடந்திட்டால்....” குஞ்சாத்தையின் குரல் தளதளத்தது.
“சும்மா...... இரணை...! அவன் ஏன் சுடலையடிக்குப் போறான். அவனோடை படிச்ச பொடியள் அங்கை இருக்கிறாங்கள்தானே...... அவன் அங்கினை தங்கியிட்டு அமளி முடிய வருவன்!” என்றான் சேனாதி.
“மனம் கேட்குதில்லையடா. அவள் அக்காள் தவமாய்த் தவமிருந்து பெத்த பிள்ளையடா.... ஆசையாய்ப் பெத்த பிள்ளைக்கு நாலு பத்து நாள் கூடிப் பால் குடுக்கவும் பலனில்லாமல் போய்ச் சேர்ந்திட்டாள். அவனைப் பார்த்துத்தானே நாங்கள் இப்ப மனமாறுறம்”.
அதைச் சொல்லும்போதே குஞ்சாத்தையின் குரலில் அளவற்ற ஏக்கமும் பதட்டமும் தொனித்தது.
“அப்பிடி ஒண்டும் ஏறுமாறாய் நடக்காதணை. கதிரியம்மான் காலமை நெடுங்கேணி போட்டு வந்தவராம். போய் அவருக்கு ஏதேனும் தெரியுமோவெண்டு விசாரிச்சுக் கொண்டு வாறன்!” என்று விட்டுச் சேனாதி புறப்பட்டான்.
பொழுது மெல்ல மெல்ல மஞ்சள் நிறமான மரங்களுக்குப் பின்னால் இறங்கிக் கொண்டிருந்தபோது தான் கிளி! “எணேய்! குலமண்ணை வாறாரணை!” என்றவாறே ஓடி வந்தான்.
“எங்கையடி?” என்று குஞ்சாத்தை துடித்துப் பதைத்துக்கொண்டு கடப்படிக்கு ஓடிப் போனாள். சேனாதியின் நாய்க்கு என்ன விளங்கியதோ அதுவும் ஒழுங்கையில் இறங்கி ஓட ஆரம்பித்தது.
“தெரு முகப்பிலை வாறாரணை!” என்று விட்டு கிளி குலம் வரும் விசயத்தைப் பொன்னாவுக்கும் சொல்ல காசியர் வீட்டை நோக்கி ஓடினாள்.
குலம் நீண்ட தூரம் நடந்த களைப்பாலும் சின்னக்குட்டியின் றொட்டியாலும் ஏற்பட்ட சோர்வால் அட்டாளையில் படுத்தவன் அவனையறியாமலே கண்ணயர்ந்து விட்டான்.
சிறிது நேரத்தில் திடுக்கிட்டு விழித்த அவனுக்குத் தன்னை வீட்டில் தேடுவார்கள் என்ற எண்ணம் வரவே சின்னக்குட்யிடம் ”மாமா..... நான் வெளிக்கிட்டட்டே” எனக் கேட்டான்.
“தனிய போவியே?”
“என்ன மாமா.... எத்தினை தரம் வந்து போனனான்”.
“சரி கவனம். உங்காலை குழுவன் நடமாட்டம் கூட,” எனக் கூறி சின்னக்குட்டி விடை கொடுத்தான். அவர்கள் பொதுவாக யானைக்குப் பயப்படுவதைவிட குழுவனுக்கும் கரடிக்கும் தான் அதிகம் எச்சரிக்கையாக இருப்பதுண்டு. குழுவன் தூரத்தில் கண்டாலும் மூசிக் கொண்டு வந்து கொம்பில் தூக்கி விடும். அதன் வேகத்துக்கு ஓடித் தப்பிவிட முடியாது.
கரடியோ சத்தம் சள்ளில்லாமல் மனிதரைப் பின் தொடர்ந்து வந்து கட்டிப்பிடித்து விடும் பாலைப் பழக்காலத்தில் அம்மரங்கள் கூடிய காடுகளில் கரடிகளின் நடமாட்டம் அதிகமாயிருக்கும்.
இவையெல்லாவற்றையும் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்த குலம் மிக அவதானமாக வந்து மருதோடை வீதியில் ஏறினான்.
அவன் தங்கள் வீட்டு ஒழுங்கையில் இறங்கியபோது கிளி கண்டு விட்டாள். அவள் ஓடிப்போய் அவனின் கையைப் பிடித்து. “குஞ்சாத்தை உன்னைத் தேடி குளறிக் கொண்டிருக்கிறா” என்று விட்டு சேனாதி வீட்டை நோக்கி ஓடத் தொடங்கினாள்.
குலம் கடப்படிக்கு வருமுன்பே ஓடிப்போய் அவனைக் கட்டிப் பிடித்த குஞ்சாத்தை “எங்கையடா போனனீ. உனக்கொண்டெண்டால் நாங்கள் உசிரோடை இருப்பமே!” எனக் குளற ஆரம்பித்தாள்.
“அதுக்கென்னணை செய்யிறது. என்ரை கஷ்டகாலம். நான் போன நேரம் பாத்து பொடியள் வைச்ச கண்ணியும் வெடிச்சுது.... ஒரு மாதிரித் தப்பி வந்திட்டன் தானே!”
“அவள் அக்காள் மூண்டு மிளகும் மூண்டு முடறு தண்ணியும் குடிச்சு கந்த சட்டி பிடிச்சல்லே நீ அவளின்ரை வயித்திலை வந்தனீ..... உனக்கேதும் நடக்க அந்த முருகன் விடுவனே.... முதல் உள்ளை வா.... கொஞ்சம் களையாறு..... நான் மோர் கரைச்சுக் கொண்டு வாறன்” என்று விட்டு அவனின் கையைப் பிடித்து உள்ளே அழைத்து வந்தாள் குஞ்சாத்தை.
அவன் வீட்டுக்குள் போய் உடுப்பை மாற்றி சாரத்துடன் வெளியே வந்த போது முற்றத்தில் அயலட்டைச் சனமெல்லாம் கூடி விட்டது.
அவர்கள் ஒவ்வொருவரும் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்வதில் அவனுக்குப் போதும்போதுமென்றாகி விட்டது. சிறிது நேரத்தின் பின்பு தான் பொன்னா சற்றுத் தூரத்தில் நின்றதையும் கிளி “வா.... வா!....” என்று அவனின் கையைப் பிடித்து இழுத்ததையும் கண்டான்.
சனத்தை விலத்திக் கொண்டு அவர்கள் அவனருகில் வந்தபோது தான் பொன்னாவின் கண்களிலிருந்து “பொலுபொலுவெனக்” கண்ணீர் கொட்டியதை அவன் கவனித்தான்.
“பொன்னா! என்ன நீ? ஏன் இப்ப அழுகிறாய். எனக்கொண்டுமில்லை .... அழாதை!” என்றான். அவளின் கண்ணீரை எட்டித் தன் கைகளால் துடைத்துவிட வேண்டும்போல் தோன்றினாலும் அந்த இடத்தையும் சுற்றி நின்ற சனத்தையும் நினைத்துத் தன் மனதை அடக்கிக்கொண்டாள்.
“மச்சானுக்கொண்டெண்டால் மனம் துடிக்காதே” என்றாள் அங்கு நின்ற பாறுவதிப் பாட்டி.
“எனக் கொண்டுமில்லையெணை.... பயத்திலை ஓடின களைதான்!” என்றான் குலம். அவன் பார்வதிப் பாட்டிக்குப் பதிலாக அதைச் சொன்ன போதிலும் உண்மையிலே அதை அவன் பொன்னாவைச் சமாதானப்படுத்தத்தான் சொன்னான் என்பதே உண்மை.
குஞ்சாத்தை நிறைய வெங்காயம், பிஞ்சு மிளகாயெல்லாம் வெட்டிப் போட்ட தடிப்பான மோரைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
குலம் மோரைக் குடித்து முடித்துவிட்டு குஞ்சாத்தையிடம் கிண்ணத்தைக் கொடுத்தபோது அவள், “சைக்கிள் எங்கையடா குலம்!....” எனக் கேட்டாள்.
“என்னணை நீ ..... உயிர் தப்ப ஓடயுக்கை சைக்கிளையும் தூக்கிக் கொண்டு ஓடலாமே?” என்ற குலம் ஒரு பெருமூச்சுடன் “இனி அதென்ன துலைஞ்ச முதல் தான் .... என்னத்தைச் செய்யுறது ..... அஞ்சாறு வரியம் என்னோடை உழைச்சது” என்று கூறி முடித்தான்.
“அது போனால் போகுது! உயிர் தப்பினதே பெரிய காரியம்,” என்ற குஞ்சாத்தை கிண்ணியை வாங்கிக் கொண்டு குடத்தடியை நோக்கிப் போனாள்.
வந்திருந்த சனங்கள் துருவித் துவிப் புதினம் விசாரித்துவிட்டு மெல்ல மெல்லக் கலையத் தொடங்கினர்.
பொன்னா மட்டும் அவனைப் பார்த்தவாறே ஒரு ஓரமாக நின்றிருந்தாள். அவளுக்கு அவனைக் கட்டிப்பிடித்து அவனின் நெஞ்சில் முகம் புதைத்து விம்மி விம்மி அழவேண்டும் போலிருந்தது. அவள் தன் கண்களைத் துடைத்து விட்டுக் கொண்டாள்.
குலம் அவளின் எண்ணங்களைப் புரிந்து கொண்டவன் போல் “நீ .... போ ..... பொன்னா .... கொஞ்ச நேரத்தாலை நான் வீட்டை வாறன்....” என்றான்.
பொன்னாவும், “கட்டாயம் வா. அப்புவும் நீ வந்தது தெரிஞ்சால் பாத்துக் கொண்டு நிப்பர்”, என்று விட்டுப் புறப்படத் தயாரானாள்.
“ஓ .... ஓ ..... அண்ணர் வந்தவுடனை வாறன்”, என்றான் அவன்.
பொன்னா போய்ச் சிறிது நேரத்தில் பட்டிக்குடியிருப்பு நாகராசா தனது சைக்கிளைக் கடப்படியில் நிறுத்தி விட்டு, ”குலம்!” ..... எனக் கூப்பிட்டவாறே உள்ளே வந்தான்.
“வாருங்கண்ணை....!” என்றவாறே தூக்கில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த பாயை எடுத்துத் திண்ணையில் விரித்தான் குலம்.
நாகராசா, “உன்ரை விஷயமெல்லாம் கேள்விப்பட்டனான். உனக்குக் காயம் கீயம் பட்டதே?” எனத் திண்ணையில் அமர்ந்தவாறே கேட்டான்.
“நிண்டால் பட்டிருக்கும்.... ஆனால் ஆமி எழும்பிச் சுடத் துவங்கவே காட்டிலை பாஞ்சிட்டன்?”
“எங்கடை பொடியனிலை ஒருதனுக்கு ஒரு சின்னக் காயமாம். மற்றும்படி பிரச்சினை ஒண்டுமில்லை!” என்றான் நாகராசா.
“ஆமி... நூறு நூற்றம்பது தோட்டாவுக்கு மேலை சுட்டிருப்பன். ஹெலி வேறை....! ஒரு பிரயோசனமும் இல்லை. போலை”.
“உனக்கு குமுழமுனைச் சிவப்பிரகாசத்தாரின்ரை மேன் காண்டீபனைத் தெரியுமே....!”
“ஓ..... காண்டியண்ணை! அவர் இயக்கமல்லே!”
“ஓ.... அவன் உன்னைச் சந்திக்க வேணுமாம்..... நாளைக்கு காலமை ஆறு மணிக்குப் பிள்ளையார் கோயிலடிக்கு வரட்டாம்” என்று விட்டு குலத்தின் முகத்தைப் பார்த்தான் நாகராசா.
“ஏனாமண்ணை...?”
“தெரியேல்லை. அவங்கள் ஏதோ விஷயத்தோடை தான் கூப்பிடுவங்கள்!”
“அப்பிடி என்னத்துக்கு!” எனக் குலம் குழம்பினான்.
“எதுக்கும் போய்ப் பாரன்....!” என்றான் நாகராசா.
குலத்தின் மனதில் ஏதோ ஒரு விதமான பயம் பற்றிக் கொண்டது.
கண்ணிவெடி வெடித்த இடத்தில் அதே நேரத்தில் தானும் அங்கு போனாதால் தன்னில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டிருக்கக் கூடுமோ என்ற பயம்தான் அது.
போவதா விடுவதா எனத் தடுமாறியது அவன் மனம்.
(தொடரும்)
Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு, முள்ளியவளை