நடந்துமுடிந்த இடைக்கால ஜனாதிபதிக்கான பாராளுமன்ற உறுப்பினர்களது தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முடிவுகள் தமிழ் மக்களது நலன்களை உள்ளடக்காததென்றென்பது தொடர்பில் அதிக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அவ்வாறே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடவடிக்கையையும் தமிழ் மக்கள் முற்போக்கு கூட்டணியின் முடிவுகளும் தனித்து எழுந்தமானத்தில் கட்சியின் நலனையோ அல்லது தனிப்பட்ட நலனையோ முதன்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது என்ற விமர்சனம் காணப்படுகிறது. அத்தகைய எந்த விமர்சனத்தையும் நிராகரித்துவிட முடியாது. தமிழ் மக்களின் பெரும்பான்மை பிரதிநிதிகளைக் கொண்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு இடைக்கால ஜனாதிபதி தேர்தலில் டலஸ் அழகப்பெருமவை ஆதரித்திருந்தது. அவ்வாறு ஆதரித்தமைக்கு த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன் மற்றும் சாணக்கியன் இருவரும் மக்கள் மத்தியில் பல காரணங்களை முன்வைத்து வருகின்றனர். இக்கட்டுரை த.தே.கூ. டலஸ் அழகப் பெருமாவை ஆதரிப்பதற்கு முன்மொழிந்த காரணம் பற்றிய உரையாடலை வாசகர் மத்தியில் முன்கொண்டு செல்ல முனைகிறது.
முதலாவது, டலஸ் அழகப்பெருமாவை ஆதரிப்பதற்கு த.தே.கூ. முடிபெடுக்கும் கூட்டத்தில் பேச்சாளர் சுமந்திரன் தொலைபேசி வாயிலாக இந்தியாவின் இலங்கைக்கான தூதரக அதிகாரியை அனுகி அவரது பதிலுக்கூடாக முக்கியமான காரணத்தை முன்வைத்துள்ளார். அதனால் த.தே.கூ. டலஸ் அழகப் பெருமாவை ஆதரிப்பதென முடிவெடுத்ததாகவே தகவல்கள் வெளியாகியிருந்தன. அதாவது இந்தியாவே டலஸ் அழகப் பெருமவை ஆதரிக்க வேண்டும் என தொலைபேசிவாயிலாக இந்தியத் தூதரக அதிகாரி வலியுறுத்தியதாக அனைத்து த.தே.கூ. உறுப்பினர்களும் உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் அதில் ஒரு பகுதியினர் பிரிந்து சென்று இரகசியமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹாவுக்கு வாக்களித்தமை வேறு விடயம். எதுவாயினும் த.தே.கூ.டலஸ் அழகப்பெருமாவுக்கு வாக்களிப்பதற்கு இந்தியாவின் வற்புறுத்தலே காரணம் என்பதை தெளிவாக கூட்டமைப்பும் அதன் உறுப்பினர்களும் வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய முடிவு சரியானதா? அல்லது காலம் காலமாக இவ்வாறுதான நிகழ்கிறதா? அல்லது அவ்வாறு நிகழ்கிறது எனக் கூறிக் கொண்டு வேறு ஏதும் நிகழ்கிறதா? ஏன் இந்த விடயம் பகிரங்க வெளியில் அம்பலப்படுத்தப்பட்டது?. கடந்த காலங்களிலும் ஊடகங்களிலும் மக்களது முணுமுணுப்புக்குள்ளான போதும் எதுவும் பகிரங்கப்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போது தெளிவான அம்பலப்படுத்தல் நிகழ்ந்துள்ளது. அதற்கு ஏதும் உள்நோக்கம் இருகிறதா? போன்ற கேள்விகள் தவிர்க்க முடியாதவை.
இரண்டாவது, த.தே.கூ. இராஜதந்திர ரீதியில் செயல்படுவதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரையாடி வருகின்றனர். அது மட்டுமன்றி இந்தியாவுக்கு ஆறுகட்சிகள் சேர்ந்து கடிதம் எழுதுவதும் சர்வதேச நிறுவனங்களுக்கு கடிதம் வரைவதிலும் த.தே.கூ. கட்சிகளும் ஈடுபட்டுவருகின்றன. அதனை ஒரு இராஜதந்திர செய்முறையாக வெளியே பிரச்சாரமும் செய்கின்றன. ஆனால் இந்தியாவின் இராஜதந்திர செய்முறையை அம்பலப்படுத்தி அதன் மூலம் இந்தியாவை இலங்கைத் தமிழர் விடயத்தில் முகம் சுழிக்க வைத்துள்ள விடயத்தை எப்படி இராஜதந்திரமான நகர்வாக கொள்வது என்பதே பிரதான கேள்வியாகும். இராஜதந்திர செய்முறையென்பது போரில் வெற்றி கொள்ளப்பட முடியாத விடயங்களை உரையாடி, சமாதானமாக நகர்ந்து, ஏமாற்றுத் தனங்களை முன்னிறுத்தி ஒரு தேசத்தின் நலனை அடைவதாக கொள்ள முடியும். இதில் தேசம் அல்லது இனம் அல்லது பிராந்தியம் என்ற வரையரையையும் உள்ளடக்க முடியும். அரசுகளுக்கிடையிலான உறவு என உத்தியோகபூர்வமாக அழைக்கப்பட்ட இராஜதந்திரத்தின் வடித்தின் தோற்றம் இத்தாலியக் குடாவில் மன்னர்களுக்கிடையே உறவை வளர்க்கும் விதத்தில் தூதர்களை அனுப்பும் போது அத்தாட்சிக்காக வழங்கப்படும் பத்திரம் (Diploun) என்ற இலத்தீன் மூலச்சொல்லிலிருந்து உருவானதாகும். கீழைத்தேச இராஜதந்திரம் திருவள்ளுவர், கௌடில்லியரின் சிந்தனையால் உருப்பெற்றது. அரச நன்மைக்கான தந்திரம் என்றே அழைக்கப்பட்டது. தந்திரம் என்பது வித்தை, உபாயம், உத்தி என்ற பொருள்பட பிரயோகப்படுத்தப்பட்டது. எது எவ்வாறாயினும் இராஜதந்திரத்தின் இறுதி இலக்கு அரசுக்கான நன்மை அல்லது இனத்திற்கான நன்மை அல்லது தேசத்திற்கான நன்மை என்பதே பிரதானமானதாகும். நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் இந்தியாவுக்கும் தமிழருக்குமான பகைமை வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது இராஜதந்திரத்தை பிரயோகிக்கத் தெரியாது மேற்கொள்ளப்பட்டதென்பதை விட இராஜீக உறவுகளை எப்படிச் சிதைக்க முடியும் என்பதைக் காட்டியுள்ளது. த.தே.கூ.இந்தியாவினது நலனுக்காக நகர்பவர்கள் என்பதை வெளிப்படுத்தியத்தனூடாக அதன் போலித்தன்மை அம்பலமாகியுள்ளது. இந்தியாவின் பெயரால் த.தே.கூ. செயல்படுகிறது என்பதும் தமிழ் மக்கள் மத்தியில் அதனை ஒரு அரசியல் முதலீடாக மாற்றியுள்ளது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இத்தகைய ஏமாற்றுத் தனத்தை த.தே.கூ.அதிககாலம் பின்பற்றிவருகிறது. அது ஒரு போதும் இந்தியாவுடன் தமிழினத்தின் நலனுக்கான எந்த நகர்வையும் கடந்த காலங்களில் மேற்கொள்ளவில்லை. இந்தியாவை பகைத்துக் கொண்டே செயல்பட்டுவந்துள்ளது. தற்போது கூட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பாராளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரனும், சாணக்கியனும் சீனத் தூதரகத்திற்கு எந்த தரப்புக்கும் அறிவிக்காது தங்களது வருகையை நிழல்படம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் சென்று திரும்பியுள்ளனர். அது மட்டுமன்றி இந்தியத் தூதரக அதிகாரியுடன் கட்சிக் கூட்டத்தில் இருந்து கொண்டு தொலைபேசி அழைப்பை முதன்மைப்படுத்தியுள்ளனர். இதில் பல கேள்விகள் உண்டு. அதாவது ஏன் கட்சிக்கு அறிவிக்காது சீனத் தூதரகம் சென்றமை? ஏன் நிழல்படம் எடுக்க்கூடாது என நிபந்தனை விதித்தமை? ஏன் இந்தியத் தூதரக அதிகாரியின் செய்தியை அம்பலப்படுத்தியமை?. எனவே இவை அனைத்தும் திட்டமிடப்பட்ட நகர்வாகவே தெரிகிறது. தமிழ் மக்களையும் இந்தியாவையும் முரண்பட வைப்பதன் மூலம் எதிரிக்கு சேவையாற்றும் நோக்கம் வெளிப்படுகிறது. அதற்கான ஆதாரங்களை த.தே.கூ. இன் கடந்த காலத்தில் தேடுவது பொருத்தமானது.
ஒன்று, சம்பூர் அனல்மின் நிலையம் தொடர்பானது. நல்லாட்சிக் அரசாங்கத்தின் காலத்தில் இந்தியாவின் அத்திட்டத்தை முழுமையாக தோற்கடிக்கும் நடவடிக்கையை த.தே.கூ.அரங்கேற்றியது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையின் கீழ் அத்தகைய எதிர்ப்பு நிகழ்ந்ததாகவும் தற்போதைய ஜனாதிபதியுடன் இணைந்து கொண்டு அத்தகைய நடவடிக்கையை தமிழ் தேசியக் கூடட்டமைப்பு மேற்கொண்டதாகவும் இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. இதில் எப்படி தந்திரமாக அன்றைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்ஹ செயல்பட்டு இந்தியாவுடன் நிரந்தர முரண்பாட்டை கூட்டமைப்பினூடாக மேற்கொண்டு தமிழரை இந்தியாவின் பகையாளியாக்கியுள்ளார் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும்.
இரண்டு, எதிர்கட்சித் தலைவராக த.தே.கூ. தலைமை இருந்த காலம் முழுவதும் தற்போதைய ஜனாதிபதியினதும் முன்னாள் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனாவும் இணைந்து தீர்வைத் தருவார்கள் என்ற அடிப்படையில் இந்தியாவுடனான உறவை பலவீனமாகவே கருதினர். ஒரு சந்தர்ப்பத்திலும் முழுமையான எண்ணத்துடன் இந்தியாவை அணுகவும் இல்லை உறவை வைத்துக் கொள்ளவும் இல்லை. இந்தியாவுக்கு இராஜதந்திர விஜயத்தை எதிர்கட்சியாக இருக்கும் போது த.தே.கூ.தலைமை மேற்கொள்ளவில்லை என்பது என்னவகை தந்திரமாக கொள்வது. 2012-2013 பின்னர் இந்தியாவுக்கு எந்தவித விஜயமும் த.தே.கூ.பாக மேற்கொள்ளவில்லை.
மூன்று, 2021 ஆம் ஆண்டு இந்தியா த.தே.கூ. ஐ புதுடில்லிக்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்திருந்தது. அதற்கு பதிலளித்தவிதம் மட்டுமல்ல முன்வைத்த காரணம் வேடிக்கையானது என்பதுடன் அதனை எத்தகைய இராஜதந்திரத்திற்குள் உள்ளடக்குவது. கடவுச்சீட்டு காலவதியாகியமை மற்றும் தமிழரசுக் கட்சி தலைவரின் மகனின் திருமணச்சடங்கு காரணமாகவே த.தே.கூ. புதுடில்லிக்கு தமிழினத்தின் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு செல்லவில்லை என்பது எப்படியான தந்திரமாக கொள்வது. இவை எல்லாம் தனிப்பட்ட நலனுக்கான காரணங்களே அன்றி தமிழினத்தின் நலனுக்கானதாக கொள்ள முடியுமா?. இவர்களை தமிழரின் பிரதிநிதிகளாக கொள்ள முடியுமா?
நான்கு, இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வை அமெரிக்கா முன்வைக்கப் போவதாகவும் அதற்கான உரையாடலை மேற்கொள்ளும் விதத்தில் த.தே.கூ. குழுவென்று வொசிங்டன் பயணமானது. ஆனால் அத்தகைய முயற்சி தனித்துவமானதாக அமைந்தாலும் அதன் விளைவு எதுவுமற்ற நிலையை த.தே.கூ.க்கு ஏற்படுத்தியதுடன் இந்தியாவுடனான உறவை முழுமையாக பாதிக்கும் விதத்தில் அமைந்திருந்தது. நோர்வேயின் அனுசரணைக்குட்பட்ட பேச்சுக்களின் போதும் அதற்கு முன் பின்னான காலப்பகுதியின் போதும் இந்தியாவின் நிலை இலங்கைத்தீவு பொறுத்து கவனிக்கப்பட வேண்டியதாகும். த.தே.கூ.கடந்தகால விளைவுகளிலிருந்தோ, அல்லது நடப்பு விடயங்களிலிருந்தோ, தீர்மானங்களை மேற்கொள்ளாது தனது தனிப்பட்ட நலனுக்கும் விருப்புக்கும் தீர்மானங்களை எடுத்துவிட்டு அதற்கு வியாக்கியானம் வழங்குவதில் காலத்தை கடத்துகிறது. இத்தகைய தரப்பினாலோ கட்சியினாலோ எந்தவித பயனும் தமிழ் மக்களுக்கு ஏற்படாது என்பதை அவர்களது நடத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. அவர்களிடம் தந்திரமும் கிடையாது இராஜீக நகர்வும் கிடையாது. மாறாக தனிப்பட்ட நலன் மட்டுமே காணப்படுகிறது.
எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நகர்வுகள் ஒவ்வொன்றும் ஈழத்தமிழர் - இந்திய உறவை மேலும் விரிசலாக்குவதில் கவனம் கொள்வதாகவே தெரிகிறது. இவர்களுக்கு சளைத்தவர்கல்ல ஏனைய தமிழ் தேசியப் பரப்பில் இயங்கும் கட்சிகள் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். எனவே தமிழ் மக்கள் இந்தத் தரப்புக்களை முழுமையாக கைவிட்டுவிட்டு புதிய தரப்பொன்றை உருவாக்குவதே பொருத்தப்பாடுடையதாக தெரிகிறது. காரணம் இலங்கைத்தீவு நோக்கி அதிக மாற்றங்கள் நிகழத் தொடங்கியுள்ளது. மீண்டும் இந்திய - அமெரிக்கா-சீனா போட்டிக்குள்ளே இலங்கைத்தீவு அரசியல் முழ்கப்போகிறது. தற்போது ஐசிசி உடன்பாட்டை மீள உருவாக்குவதிலும் அதன் ஊடாக இலங்கைத் தீவில் அமெரிக்காவினதும் நகர்வுகள் அதிகரிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மறுபக்கத்தில் சீனாவின் ஆய்வு கப்பலான யுவாங் வெங்-5 ஹம்பாந்தோட்டையை அணுகும் போதும் ஏற்படப் போகும் விளைவுகளால் இந்தியாவின் நகர்வு எவ்வாறானது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை