இவ்வருடம் மார்ச் 31ம் திகதி மிரிஹானவில் உள்ள ஜனாதிபதி இல்லத்தைச் சுற்றி வளைத்து “கோத்தா கோ ஹோம்” கோஷத்துடன் வெடித்த போராட்டம் பேரெழுச்சியுடன் அலரி மாளிகையின் முன்பு “மைனா கோ ஹோம்” போராட்டமாகவும் நாடாளுமன்ற நுழைவாயில்களைத் தடுத்து “டீல் கோ ஹோம்” போராட்டமாகவும் விரிவடைந்து ஜூலை 9ம் திகதி நாடு பரந்த ஹர்த்தால் போராட்டமாக இலட்சக்கணக்கான மக்களின் பங்களிப்புடன் விரிவடைந்ததுடன் நாட்டின் அதிகார மையங்களான ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலகம் என்பன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டன.
மூன்று மாதங்களாக வெற்றியை நோக்கிப் பயணித்த இம்மாபெரும் மக்கள் பேரெழுச்சி திடீரென வெடித்த ஒரு போராட்டம் எனக் கருதிவிட முடியாது. ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களுக்கு ஏற்படுத்தப்பட்ட செயற்கைத் தட்டுப்பாடுகளுக்கு எதிராகவும் எரிபொருள், சமையல் எரிவாயு என்பனவற்றுக்கு ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக நாட்கணக்கில் வரிசையில் காத்து நிற்க வேண்டிய அவலத்துக்கு எதிரான போராட்டங்களாக நகர்ப்புறங்களிலும் உரப்பசளை தடை செய்யப்பட்டமைக்கு எதிராகக் கிராமப் புறங்களில் விவசாயிகளின் எதிர்ப்பு நடவடிக்கைகளாகவும் என நாடெங்கிலும் இடம் பெற்ற போராட்டங்களின் கூர்முனையாகவே “கோத்தா கோ ஹோம்” போராட்டம் வெடித்தது.
பொலிஸாரின் கண்ணீர்ப்புகை, நீர்த்தாரைப் பிரயோகம், கைதுகள், ஜூன் 9ம் நாள் அலரி மாளிகையிலிருந்து புறப்பட்ட குண்டர்களால் “மைனா கோ ஹோம்”, “கோத்தா கோ ஹோம்” போராளிகள் மீது நடத்தப்பட்ட வன்முறை, அதனால் ஏற்படுத்தப்பட்ட இரத்தக் களரி எனப் போராட்டத்தை முறியடிக்கப் பல நச்சுத் தனமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
எனினும் போராட்டம் பஷில் ராஜபக்ஷ்வின் ராஜினாமா, மஹிந்த ராஜபக்ஷ்வின் ராஜினாமா என வெற்றிமேல் வெற்றியாகக் குவித்தவாறே முன்சென்றது.
அவற்றின் உச்சகட்டமாக ஜூலை 9ம் திகதி ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமரின் செயலகம் என்பன போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டன.
ஜூலை 14ல் கோத்தபாய ராஜபக்ஷ் பதவி விலகியதை அடுத்து போராட்டக்காரர்கள் எவ்வித நிர்ப்பந்தமுமின்றியே தாங்கள் கைப்பற்றியிருந்த நிறுவனங்களை விட்டுத் தாங்களாகவே வெளியேறி காலிமுகத்திடலில் “ரணில் கோ ஹோம்” போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில் ஜனாதிபதிப் பதவிக்கு ஏற்பட்ட வெற்றிடத்துக்கு இடம்பெற்ற தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகளைப் பெற்று 21ம் திகதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்தார்.
அத்துடன் மீண்டும் ஒரு ராஜபக்ஷ் யுகம் வேறொரு வடிவில் பிறப்பெடுத்தது. அவரின் பதவியேற்பை அடுத்து அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இந்திய உயர் ஸ்தானிகர் உட்படப் பலரும் வாழ்த்துக்களையும் வரவேற்பையும் மீண்டும் ஜனநாயகம் மலர்ந்து விட்டதென்ற தோரணையில் தெரிவித்திருந்தனர்.
ஆனால், அவர் பதவியேற்றதுமே மேற்கொண்ட முதற் கடமை முப்படைத் தளபதிகளையும் உயர் மட்டப் பாதுகாப்புத் தரப்பினரையும் பொலிஸ் மா அதிபரையும் அழைத்து நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கட்டளையிட்டதாகும்.
அதன் நோக்கம் போராட்டத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் அழிப்பதே என்பது அன்றிரவே வெளிப்படுத்தப்பட்டது.
அமைதியான முறையில். காலிமுகத்திடலில் போராட்டம் நடத்திய மக்கள் மீது நடு நிசியில் புகுந்து கொண்ட ஆயுதப் படையினர் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டனர். அதில் பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் பலர் படு காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் புகையிரதப் பாதையில் சல்லிக் கற்கள் மீது நடக்க வைக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது மஹிந்த தனது குண்டர்கள் மூலம் குழப்ப முடியாத போராட்டத்தை ரணில் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஆயுதப் படைகள் மூலம் குழப்பினார்.
அமெரிக்கா, நோர்வே, ஐரோப்பிய யூனியன் உட்படப் பல நாடுகள் கண்டனம் செய்த போதிலும் “அமெரிக்காவிலுள்ள வெள்ளை மாளிகையைப் போராட்டக்காரர்கள் கைப்பற்றினால் நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பீர்களா” என மஹிந்த பாணியில் பதிலளித்துள்ளார் ரணில்.
ஏனெனில் அவர்களின் கண்டனங்கள் வெறும் சம்பிரதாய பூர்வமானவை என்பதை அவர் நன்கறிவார்.
ஆனால் அவர் அத்துடன் நிறுத்திவிடவில்லை. போராட்டத்தை படிப்படியாக வீரியமிழக்க வைத்து, முற்றாகவே அழித்து விடும் வகையில் காய்களை நகர்த்தத் தொடங்கி விட்டார்.
தனது மாமனாரான ஜே.ஆர்.ஜயவர்த்தன பாணியில் தந்திரமான பிரசாரம் ஒரு புறமும் சட்டம் ஒழுங்கின் பெயரில் மேற்கொள்ளும் ஆயுத ஒடுக்குமுறை மறுபுறமுமாக அவர் தனது ஆட்டத்தைத் தொடங்கி விட்டார்.
அவர் தனது பெறுமதி வாய்ந்த புத்தகங்கள், தனது இல்லத்தில் பழைமை வாய்ந்த சித்திரங்கள் தனது இல்லத்தில் எரிக்கப்பட்டு விட்டதாகவும், விலையுயர்ந்த கமராக்கள், கணனிகள் திருடப்பட்டு விட்டதாகவும் ஏற்கனவே அவர் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். மேலும் தங்க முலாம் பூசப்பட்ட திரைச் சீலைக் “ஹூக்குகள்” திருடப்பட்டு விட்டதாகவும் அவற்றுடன் சிலர் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. மேலும் தொல் பொருட் திணைக்களம் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முக்கிய பொருட்கள் பற்றிக் கணக்கெடுக்கின்றன. சி.சி.ரி.வி. கமராக்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. இராணுவத்தினரிடம் பறிக்கப்பட்ட துப்பாக்கி ஒரு பாலத்தின் கீழ் கண்டெடுக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது போராட்டக்காரர்கள் வெறும் வன்முறையாளர்களெனவும் பெறுமதியான பொருட்களைத் திருடும் சுயநலவாதிகளெனவும் மக்களை நம்ப வைக்கும் வகையில் பிரசார வலைப்பின்னல் விரிக்கப்பட்டு விட்டது.
போராட்டக்காரருக்கு வெளிநாடுகளிலிருந்து யூனியன் பிளேசிலுள்ள வங்கி மூலம் பெரும் தொகைப் பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இது வெளிநாடுகளின் தூண்டுதலின் பேரிலேயே போராட்டம் நடத்தப்படுகிறது என மக்களை நம்ப வைக்கும் ஒரு சதியாகும்.
எல்லாவற்றையும்விட போராட்டத்தில் முன்னணியில் நிற்பவர்கள் பல்வேறு புதிய, பழைய குற்றச்சாட்டுக்களின் பேரில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், வெளிநாடு செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டும் அவர்களைச் சட்ட விரோதிகளாகக் காட்டும் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி மூன்று மாதங்களாகத் தொடர்ந்த மக்களின் நியாயமான போராட்டம் பல வெற்றிகளை ஈட்டிய போதும் இன்னும் அது தனது இறுதி இலக்கை எட்டி விடாத நிலையில் பல்வேறு சதிகள் காரணமாக ஒரு பின்னடைவுக்குள் தள்ளப்பட்டுள்ளது.
இதைச் சாதகமாகப் பயன்படுத்தி முன்னணிப் போராட்டக்காரர்களின் செயற்பாடுகளை மட்டுப்படுத்தவும் போராட்டக்காரர்கள் மீது மக்களை நம்பிக்கையிழக்க வைக்கவும் திட்டமிட்ட வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
அதேவேளையில் அவசரகாலச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதை நாடாளுமன்றம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீதிமன்ற பிடியாணையின்றி ஒருவரைக் கைது செய்யவோ ஒரு வருடத்திற்கு தடுத்து வைக்கவோ முடியும். போராட்டத்தை முற்றாகவே ஒடுக்கும் முகமாகவே இச்சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை மறுத்து விடமுடியாது.
இவற்றைப் புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் வியூகங்களை வகுத்துப் போராட்டத் தலைமைகள் செயற்படாவிட்டால் மூன்று மாத வெற்றிகளும் பயனற்றுப் போய்விடும் என்பதைப் போராட்டத் தலைமைகள் புரிந்து கொண்டு அடுத்த கட்டத்துக்கு நகர வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
02.08.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை