மெக்சிகோ கோஹுயிலா (Coahuila) மாநிலத்தில் நிலக்கரிச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் சுரங்கத்துக்குள் 11 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டுள்ளதாக கோஹுயிலா மாநில செயலாளர் பெர்னாண்டோ டொனாடோ டி லாஸ் ஃபுயெண்டஸ் (Fernando Donato de Las Fuentes) தெரிவித்துள்ளார்.
நேற்று முதல் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் குழுவை மீட்கும் முயற்சி தீவிரமாக இடம்பெற்று வருவதாக மெக்சிகோ தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் கூறினார்.
இந்த நிலக்கரிச் சுரங்கம் சபினாஸ் நகராட்சியில் அமைந்துள்ளது. சுரங்கத்துக்குள் தொழிலாளர்கள் சிக்கிய தகவல் அறிந்ததும், உள்ளூர் ஊடகவியலாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் குடும்பத்தினர் சுரங்க வளாகத்திற்கு வெளியே திரண்டனர்.
இந்த நிலக்கரிச் சுரங்கம் கடந்த ஜனவரியில் செயற்படத் தொடங்கியது. இச்சுரங்கத்தின் செயற்பாடுகள் குறித்து இதுவரை எந்தவொரு புகாரும் வரவில்லை என்று மெக்சிகோ தொழிலாளர் அமைச்சு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கத்துக்குள் சிக்கியுள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என நம்புவதாக மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, சுரங்கத்துக்குள் சிக்கிய ஒரு தொழிலாளி பாதுகாப்பாக வெளியேறியதாக கோஹுய்லா ஆளுநர் மிகுவல் ரிக்வெல்மே கூறினார்.
தற்போது சுமார் 92 மீட்புப் படையணிகளைச் சேர்ந்த வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர், அத்துடன் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்கள் மீட்புப் பணிகளுக்காக களமிறங்கியுள்ளதாக மெக்சிகோ ஜனாதிபதி ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் குறிப்பிட்டார்.