அண்மைய நாட்களில் சர்வகட்சி அரசாங்கம் என்பது அரசியல்வாதிகள் மத்தியிலும், ஊடகங்களிலும் பிரதான பேசுபொருளாகியுள்ளது. தற்போது இலங்கையில் நிலவும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைத் தீர்க்கக்கூடிய ஒரே மருந்தாக சர்வ கட்சி அரசாங்கம் முன்வைக்கப்பட்டுப் பிரசாரங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இது சாத்தியமோ இல்லையோ சகல கட்சிகள் மட்டத்திலும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதா, இல்லையா என்பது பற்றி கருத்து வெளிப்பாடுகள், சில சமயங்களில் கருத்து வேறுபாடுகளாகவும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஒன்று மட்டுமே உறுதியான குரலில் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையப் போவதில்லை என்பதைத் தெரிவித்துள்ளது. ஏனைய கட்சிகள் அதில் சேர்வதற்கு நிபந்தனைகளை முன்வைத்து ஜனாதிபதியுடன் பேச்சுகளை நடத்துகின்றன. எனினும் சில கட்சிகள் இணைவதற்கான அறிகுறிகள் தென்படும் அதேவேளையில் அப்படி இணையாவிடில் அக்கட்சிகள் பிளவுபட்டு விடக்கூடும் என்ற நிலையும் தோன்றியுள்ளது.
எப்படியிருந்த போதிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தனது கட்சியின் சார்பில் பாராளுமன்றத்தில் தன்னைவிட ஒரு தனி உறுப்பினர் கூட இல்லாத நிலையில் அவர் 134 வாக்குகள் ஆதரவாகப் பெற்று ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அது மட்டுமின்றி அவரின் அதிகாரத்தைப் பலப்படுத்த முன்வைக்கப்பட்ட அவசரகாலச் சட்டமும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ ஐக்கிய மக்கள் சக்தியின் பலரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் 5 பேரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக வாக்களித்தார்களெனக் கூறியிருந்தார். ஜனாதிபதியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடனான சந்திப்பில் அதை உறுதி செய்கிறார். அதேவேளையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், தமிழர் ஐக்கிய முன்னணியும் தமிழ் முற்போக்குக் கூட்டணியும் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையத் தயாராகிவிட அறிகுறிகள் தெளிவாகத் தெரிய ஆரம்பித்துள்ளன.
ஆனால் எதிர்க்கட்சியிலுள்ள பல கட்சிகளும் இணைந்தோ அல்லது எதிர்க்கட்சியிலுள்ள சில முக்கிய உறுப்பினர்களை இணைத்தோ சர்வகட்சி அரசாங்கம் என்ற பேரில் ஒரு “சாம்பார்” அரசாங்கம் அமைக்கப்படும் என்பதில் சந்தேகமடையத் தேவையில்லை. அதன் காரணமாக 40 அமைச்சர்களைக் கொண்ட ஒரு அமைச்சரவை அமைக்கப்பட்டால் ஆச்சரியப்பட எதுவுமில்லை.
தற்சமயம் நாடாளுமன்றத்தில் பொது ஜனபெரமுனவைச் சேர்ந்தவர்களின் ஆதரவு ரணில் விக்கிரமசிங்கவுக்கு உண்டு. எனவே அவர் பெரும்பான்மை பலத்துடன் தனது அதிகாரத்தைக் கொண்டு செல்லமுடியும்.
அப்படியிருந்தும் ஏன் சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதில் ரணில் தீவிர அக்கறை செலுத்துகின்றார் என்ற கேள்வி எழலாம்.
அதற்கு இரு காரண்ஙகள் உண்டு.
ஒன்று - இன்று அவரால் போராட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் மேலும் மேலும் விரிவடைந்து வருகின்றன. அந்த ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்தவும் அங்கீகரிக்கவும் அவரின் பின்னால் ஒரு பலமான நாடாளுமன்றம் தேவை. இன்னொருபுறம் அவர்கள் எதிர்த்தரப்பில் இருந்தால் இந்த ஒடுக்குமுறைகளை எதிர்த்துக் குரலெழுப்புவார்கள் அவர்கள் அரசாங்கத்தில் இணைக்கப்படுவதன் மூலம் அவர்களின் வாய்கள் மூடப்பட்டு விடும்.
எனவே, இதுவும் போராட்டக்காரர்களைத் தனிமைப்படுத்தி அழிக்கும் சதியின் ஒரு பகுதிதான்.
அடுத்தது - ஜூலை 20ம் திகதி நள்ளிரவில் காலிமுகத்திடல் போராட்டக்கார்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் அமெரிக்கா, கனடா உட்படப் பல நாடுகளின் முழுமையான கண்டனத்துக்கு உள்ளாகின. அதன் காரணமாக சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதற்கு விதித்துள்ள நிபந்தனைகளில் ஒன்றான நாட்டின் ஸ்திரத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் ஒரு சர்வகட்சி அரசாங்கத்தை உருவாக்குவதன் மூலம் நாட்டில் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டு விட்டதாகவும் அதைத் தொடர்ந்து பேணவே, நாட்டின் குழப்பங்களை விளைவிக்கும் ஜனநாயக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றொரு மாயையை ஏற்படுத்த முடியும்.
அவற்றின் அநீதியான நோக்கங்களை மூடிமறைக்கவே சட்டம், ஒழுங்கு, நீதிமன்றக் கட்டளைகள் என்பன பயன்படுத்தப்பட்டு முலாம் பூசப்படுகின்றன. எப்படியிருப்பினும் நாட்டில் நிலவும் ஸ்திரத் தன்மையைப் பாதுகாக்க, ஜனநாயகத்தைப் பாதுகாக்க நாடாளுமன்றம் சட்டப்படி மேற்கொள்ளும் நடவடிக்கைகளாகவே காண்பிக்கப்படும்.
எப்படியிருப்பினும் சர்வகட்சி் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் பெரும்பான்மை மக்களின் அபிலாஷைகளுக்கு உட்பட்டதாகவே காட்டப்படும். ஆனால் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்படுவதற்குப் பின்னாலுள்ள பேரம் பேசல்கள், விலைபோதல்கள் என்பன அரங்குக்கு வரப்போவதில்லை.
தற்சமயம் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டு வருவதை அவதானிக்க முடியும்.
முதல் நடவடிக்கையாகப் பல முன்னணிப் போராட்டக்காரர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் துரிதமாக இடம்பெற்றன.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுப் பின் கைது செய்யப்பட்டார். ரெட்டா என அழைக்கப்படும் ஒரு தலைமைப் போராட்டக்காரரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ருகுணு பல்கலைக்கழக மாணவர் அமைப்பின் முன்னாள் தலைவர் எத்தனி வீரசிங்க புஸ்பிக்க நீல நிற வானில் இனம் தெரியாதவர்களாகல் கடத்தப்பட்டார். பின்பு பொலிஸார் தாங்களே கடத்தியதாக ஒப்புக்கொண்டனர். நீதிமன்றத் தடையை மீறி கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறப்பட்டு தொங்கடுவ மகாநாயக்க தேரர் கைது செய்யப்பட்டுள்ளார். உதைபந்தாட்ட வீரர் தனிஷ் அலி கட்டுநாயக்கவில் வைத்து அவர் டுபாய் பயணம் செய்யவிருந்த தருணத்தில் விமானத்திலிருந்த எவ்வித பிடியாணையுமில்லாமலே இறக்கிக் கைது செய்யப்பட்டார்.
அது மட்டுமின்றி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதியின் ஆசனத்தில் அமர்ந்தார். திரைச் சீலைகளின் ஹூக்குகளைக் களவாடினார். தொலைக்காட்சிப் பெட்டிகளைத் திருடினார். மின் அழுத்தியைத் திருடினார் போன்ற குற்றச்சாட்டுக்களில் பலர் திருட்டுப் பட்டம் கட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அது மட்டுமின்றித் தொழிற்சங்கச் செயற்பாட்டாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை ஆசிரியர் சங்கப் பொதுச் செயலாளர் யோசேப் ஸ்டாலின், வங்கி ஊழியர் சங்கச் செயற்குழு உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் துறைமுகத் தொழிலாளர் சங்கத் தலைவர் தந்திரிகே உதென ஜெயரட்ண ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது எதிர்வரும் 9ம் திகதி அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் முன்னணிப் போராட்டக்காரர்கள், மாணவர் அமைப்புகளின் முக்கியஸ்தர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் ஆகியோர் மிகத் துரிதமாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக எந்த ஒரு எதிர்க்கட்சியும் கண்டனங்களை வெளியிடவோ, ஆர்ப்பாட்டங்களை நடத்தவோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆனால் போராட்டம் உச்ச கட்டத்திலிருந்தபோது அவர்கள் பலமாக ஆதரவுக்குரல் எழுப்பியதை மறந்து விடமுடியாது.
எனவேதான் மேற்கொள்ளப்படும் இனி மேற்கொள்ளவுள்ள ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்குப் பலம் சேர்க்க ஒரு சர்வகட்சி அரசாங்கத்தின் தேவையை ரணில் விக்கிரமசிங்க நன்கு உணர்ந்துள்ள காரணத்தாலேயே எதிர்க்கட்சியினரின் பிச்சா பாத்திரங்களில் போட அமைச்சுப் பதவிகளையும் ராஜாங்க அமைச்சுப் பதவிகளையும் தயாராகத் தன் கையில் வைத்துள்ளார்.
அதேவேளையில் முன்னணிப் போராட்ட செயற்பாட்டாளர்களையும் மாணவர் அமைப்புகளின் முக்கியஸ்தர்களையும் தொழிற் சங்கத் தலைவர்களையும் கைது செய்வதன் மூலம் 9ம் தி்கதி இடம்பெறவுள்ள போராட்டத்தை முறியடிக்கும் ரணிலின் கனவு “கல்லைத் தூக்குவது தன் சொந்தக் காலில் போடுவதற்காக” என்பது போன்ற ஒரு நடவடிக்கையே என்பதாகும் என்பதை ரணிலும் அவரால் உருவாக்கப்படவுள்ள சர்வ கட்சி அரசாங்கமும் உணர வெகு நாட்கள் பிடிக்கப் போவதில்லை என்பதே நிதர்சனமாகும்.
உலகப் போராட்ட வரலாறுகளில் போராட்டங்களை முறியடிக்க இவ்வாறான தந்திரங்கள் உபயோகிக்கப்படுவது அப்படி ஒன்றும் புதிதல்ல. ஆனால் இறுதியில் போராட்டங்கள் வெற்றிபெறுவதே வரலாறாகியுள்ளது என்பதும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
09.08.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை