இலங்கைத்தீவின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் சுமூகமான சூழலை தோற்றுவிக்கும் அடையாளம் இணங்கானப்படுகின்றது. ஆனால் அத்தகைய வெளித்தோற்றத்தின் உள்ளார்ந்த வடிவம் அதிக நெருக்கடியும் சவால்களுமிக்கதாக காணப்படுகின்றது. ஜனாதிபதி ஒரு கட்சியை சார்ந்தவராகவும் ஆட்சியதிகாரம் இன்னொரு கட்சி சார்ந்ததாகவும் காணப்பட்ட சூழல் முழுவதும் இலங்கைத்தீவின் அரசியல் குழப்பகரமானதாகவே காணப்பட்டுள்ளது.
அதற்கான அரசியல் கலாசாரத்தை இலங்கைத்தீவு இன்னுமே எட்டவில்லையெனக் குறிப்பிடலாம். நாகரிகமானதொரு அரசியல் கலாசாரத்தை இலங்கைத்தீவில் அடையாளம் காண்பது கடினமாகும். இக்கட்டுரையும் புதிய ஜனாதிபதியால் முன்னெடுக்கப்பட்ட சர்வசட்சி அரசாங்க நிலை பற்றி உரையாட முனைகிறது.
புதிய ஜனாதிபதியின் கட்சி அரசியல் கட்சியின் இருப்புக்கான தோற்றப்பாடு தோல்வியடைந்ததொன்றாகவே காணப்படுகின்றது. இதனால் பொதுஜன பெரமுனாவை மையப்படுத்தியே அரசாங்கம் ஒன்றை கட்டவேண்டிய தேவைப்பாடு எழுந்த போது காலிமுகத்திடல் போராட்டத்தையும் பொதுமக்களின் அதிருப்தியையும் கையாளும் நோக்கில் சர்வகட்சி அரசாங்கத்தை புதிய ஜனாதிபதி முன்மொழிந்திருந்தார்.
அத்தகைய முன்மொழிவுக்கு பின்னால் பொதுஜன பெரமுனாவின் எழுச்சி ராஜபக்ஷ பரம்பரையின் மீளெழுச்சி ஐக்கிய தேசிய கட்சியின் மீளுருவாக்கம் காலிமுகத்திடல் போராட்ட தோற்கடிப்பென பல பரிமாணங்களை கொண்டு திட்டமிடப்பட்டது. ஆனால் அத்தகைய உபாயத்தை ஏனைய அரசியல் கட்சிகள் புரிந்து கொண்டதோடு அதற்கான மாற்று திட்டமிடல்களையும் எதிர்வினைகளையும் ஆற்ற தொடங்கியது. அதனால் சர்வகட்சி அரசாங்கம் தனது ஆரம்ப கட்டத்திலேயே அதிக எதிர்ப்புக்களை சந்திக்க தொடங்கியது.
இரண்டாவது, சர்வகட்சி அரசாங்கத்துக்கு மாற்றீடாக எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படையாக எதிர்த்ததோடு சர்வகட்சி அரசில் பங்கெடுக்காது சர்வகட்சி ஆட்சியில் பங்கெடுக்க போவதாகவும் சர்வகட்சி ஆட்சி என்ற புதிய உரையாடலை இலங்கைத்தீவில் அக்கட்சி ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது. இத்தகைய திட்டமிடல் ஆரோக்கியமான ஜனநாயக அரசாங்க கட்டமைப்பையும் நிர்வாகரீதியிலான ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களையும் மக்களை மையப்படுத்திய ஆட்சி பாரம்பரியத்தையும் கட்டமைக்க உதவுவதாக காணப்பட்டது.
இடைக்கால ஆட்சி முறையென்பது நிர்வாக பரம்பலையும் அதிகார பரம்பலையும் சாத்தியமாக்கும் வழிமுறையென்பதை எதிர்க்கட்சி உறுதிப்படுத்த முனைகிறது. இதன்மூலம் எதிர்க்கட்சியின் இருப்பு பாதுகாக்கப்படுவதுடன் அதன் கொள்கைகள் ஜனாதிபதியையும் பொதுஜனபெரமுனவையும் பாதுகாக்கும் விதத்திலோ அதிகாரத்துக்கு கட்டுப்படும் நோக்கிலோ இயங்காது இருப்பதோடு எதிர்கால அரசியலுக்கான இலக்கை முழுமைப்படுத்த திட்டமிட்டது. அதுவே எதிர்க்கட்சியின் சர்வகட்சி ஆட்சி என்பதுவாகும். இதனை கருத்தில் கொள்ளாது சிரேஷ்ட உறுப்பினர்கள் சர்வகட்சி அரசாங்கத்தில் இணையப்போவதாக குறிப்பிட்டுள்ளனர். அதனால் எதிர்க்கட்சி பலவீனப்படுவதோடு மீண்டுமொரு ஐக்கிய தேசிய கட்சி யுகத்தை தோற்றுவிக்குமா என்ற சந்தேகத்தை உருவாக்கி உள்ளது.
மூன்றாவது, ஜே.வி.பி என அழைக்கப்படும் மக்கள் விடுதலை முன்னணி முற்றாகவே சர்வகட்சி அரசாங்கத்தை நிராகரித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் அழைப்பை நிராகரித்ததோடு அவரைச் சந்திக்கும் முயற்சியை முற்றாக கைவிட்டுள்ளது. காலிமுகத்திடல் போராட்டத்தை வழிப்படுத்திய தரப்புக்களில் ஒன்றாக அடையாளப்படுத்தப்படும் ஜே.வி.பி சர்வகட்சி அரசாங்கத்தை நிராகரித்தது என்பது அதன் தோல்விக்கான பிரதான பதிவாக உள்ளது. இதனால் சர்வகட்சி அரசாங்கம் எதிர்பார்க்கப்பட்ட உறுதிப்பாட்டையோ அல்லது அதற்கான திட்டமிடலையோ அல்லது அதற்கான வாய்ப்புக்களையோ இழந்துள்ளதென்றே கூற முடியும். ஜே.வி.பி-இன் சர்வகட்சி அரசாங்கத்துக்கான எதிர்ப்பானது காலிமுகத்திடல் போராட்டக்காரர்களின் எதிர்ப்பாகவே கருதப்படுகின்றது.
நான்காவது, தமிழ்த்தேசிய கூட்டமைப்பானது சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கெடுக்காது எனக்குறிப்பிட்டுள்ளதுடன், வெளியிலிருந்து ஆதரவளிப்பதாக குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதி தேர்தலில் அதன் தீர்மானமும் உறுப்பினர்களின் நகர்வுகளும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மீதமான அதிருப்தியை தமிழ் மக்களின் மத்தியில் அதிகரிக்க வழிஅமைத்துள்ளது.
இதனால் சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவதில் அதான் எதிர்கால தேர்தல்களும் தமிழ் மக்களின் ஆதரவும் கருத்தில் கொள்ளப்பட்டதோடு கட்சியின் தலைமைத்துவத்தின் பலவீனமும் சர்வகட்சி அரசாங்கம் பொறுத்தான முடிவுகளை சரிவர மேற்கொள்ள முடியாமைக்கான காரணமாக விளங்குகின்றது. பிரதமர் கனவோடு இருந்தவர்கள் மக்களின் எதிர்ப்புணர்வுகளாலும் அதிருப்தியினாலும் சர்வகட்சி அரசாங்கத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் முழுமையான தோல்விக்கு வழிவகுத்துவிடுமென்று கருதுகிறார்கள். வடக்கு கிழக்கில் புதிய தலைமைகள் மற்றும் புதிய அரசியல் கட்சிகள் பற்றிய உரையாடல்கள் மேலெழுந்திருப்பதோடு தமிழ்த்தேசிய கூட்டமைப்பை புனரமைப்பு செய்யவேண்டுமென்ற விவாதங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐந்தாவது, தனி ஒரு பாராளுமன்ற உறுப்பினராக தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலை கூட்டணியின் செயலாளர் விக்கினேஸ்வரன் அவர்கள் கூட்டரசாங்கத்தில் இணைவதற்கு நிபந்தனைகளை முன்வைத்தார். இவ்வாறு நிபந்தனைகளை இரு பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் முன்வைத்ததோடு விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு வாக்களித்ததோடு அவருடனான உரையாடல்களில் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து செயற்படுகின்றனர். அவரது அணுகுமுறை ஜனாதிபதியாகி நிறைவேற்றும் பட்சத்தில் சர்வகட்சி அரசாங்கம் இணைந்து பயணிப்பதில் வெளிப்படையான உரையாடல்களை முன்வைத்து வருகின்றது.
ஆறாவது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வகட்சி அரசாங்கம் பற்றிய உரையாடலை முன்வைக்கின்ற போது ஆதரித்ததொரு தரப்பாக பொதுஜன பெரமுனாவே காணப்படுகின்றது. பொதுஜன பெரமுனவின் ஆதரவே ஜனாதிபதியின் சர்வகட்சி அரசாங்கத்தின் முன்னெடுப்பின் தோல்வியாக கருதப்படுகின்றது. காரணம், பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம்கொண்ட பொதுஜன பெரமுனவே சர்வகட்சி அரசாங்கத்திலும் அதிகாரத்தை செலுத்தப்படுகிறதெனவும் சர்வகட்சி அரசாங்கமும் பொதுஜன பெரமுனவின் அரசாங்கமாகவும் கருதும் நிலை இருதரப்பாலும் புரிந்து கொள்ளப்படுகின்றது. இதனாலேயே சர்வகட்சி மீதான அதிருப்தியை அனைத்து கட்சிகளும் முன்வைப்பதற்கான காரணமாக விளங்குகின்றது. அவ்வகை அரசாங்கம் சாத்தியப்படுமாயின் மீண்டும் பொதுஜன பெரமுனவின் செல்வாக்கும் ராஜபக்ஷ குடும்பத்தின் மீளெழுச்சியும் மேலோங்குவதந்கான வாய்ப்புள்ளதாக எதிர்க்கட்சிகள் கருதுகிறது.
எனவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் சர்வகட்சி அரசாங்க எண்ணம் பொதுஜன பெரமுன கட்சியின் நடவடிக்கையால் தோற்கடிக்கப்பட்டுள்து. பொதுஜனபெரமுனவுக்கு கட்டுப்பட்டு இயங்கும் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவின் மீள்வருகையையும் மகிந்த ராஜபக்ஷவின் மீளெழுச்சியையும் சாத்தியப்படுத்த உதவுமென்றே கருதப்படுகின்றது. எனவே இலங்கைத்தீவின் வெளிநாட்டு கொள்கை மட்டுமன்று உள்நாட்டு கொள்கையும் அதன் விருப்பும் பாரிய சவாலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. சர்வகட்சி அரசாங்கத்தின் தோல்வி பொதுஜன பெரமுனவின் அணுகுமுறையால் உருவாக்கியுள்ளது.
அருவி இணையத்துக்காக பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம்
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: