கடந்த ஆகஸ்ட் மாதம் 9ம் நாளை தொழிற்சங்கக் கூட்டணி, சிவில் சமூக அமைப்புகள், மதகுருமார் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஒன்றிணைந்த தேசிய எதிர்ப்புத் தினமாகப் பிரகடனம் செய்ததுடன் அன்றைய தினத்தில் ரணில் அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் ஒடுக்குமுறைகளை நிறுத்தக் கோரியும், மக்கள் மீது தொடர்ந்து பொருளாதார நெருக்கடிகளை மக்கள் மீது சுமத்துவத்தை நிறுத்தக்கோரியும் பதவியிலிருந்து வெளியேறும்படி கோரியும் போராட்டங்களை முன்னெடுக்கும்படி அறைகூவல் விடுத்தனர்.
அதை ஏற்றுக்கொண்ட பல்வேறு தரப்பினராலும் கொழும்பிலும் நாட்டின் ஏனைய பல நகரங்களிலும் பெரும் ஆர்ப்பாட்டங்களும், பேரணிகளும் அமைதிப் போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டன. கொழும்பு நகர சபையிலிருந்து ஆரம்பமான பேரணி, விகாரமாதேவியில் திரண்டிருந்த போராட்டக்காரர்களுடன் இணைந்து சுதந்திர சதுக்கத்தை அடைந்து அங்கு ஆட்சியாளருக்கு எதிரான முழக்கங்களை மேற்கொண்டனர். கொழும்புக் கோட்டையில் தொழிற் சங்கங்கள், மாணவர் அமைப்புகள் இணைந்து ஒரு பெரும் போராட்டத்தை நடத்தினர். ஐக்கிய தேசிய முன்னணியினர் நாடாளுமன்ற நுழைவாயிலுக்கு முன்பாக அரசாங்கத்தைப் பதவி விலகக் கோரி ஒரு போராட்டத்தை நடத்தினர். கோத்தா கோ ஹோம் போராட்டக் களத்தில் பெருமளவு மக்கள் அணி திரண்டு ரணிலை வீட்டுக்குப் போகும்படி கோரியும் அரசாங்கத்தை பதவி விலகக் கோரியும் போராட்டத்தை நடத்தினர். அதேபோன்று மலையகத்திலும் நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் இடம்பெற்றன.
இப்போராட்டம் ஜூலை 9 இடம்பெற்ற பேரலை போன்று ஜனாதிபதியைப் பதவியை விட்டு ஓட வைக்குமளவுக்கும், ஆட்சியை நிலை குலைய வைக்குமளவுக்கும் வலிமையாக இல்லாதபோதும் மக்களின் மாற்றத்துக்கான உணர்வு ஒரு சிறிய அளவிலேனும் பின்னடைவடைந்து விடவில்லை என்பதை இப்போராட்டங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
ஒரு நாட்டில் மக்கள் போராட்டங்கள் இடம்பெறும்போது மக்களின் கோரிக்கைகளுக்குச் சாதகமாகப் பதிலளிப்பது அல்லது ஆயுத வன்முறை மூலம் அடக்குவது என்பனவே அதிகார பீடங்களின் வழமையாக நடைமுறையாக விளங்கி வருகின்றது.
ஆனால் ஓகஸ்ட் 9ல் இடம்பெற்ற போராட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரண்டு வழிமுறைகளையும் புறமொதுக்கி விட்டு மூன்றாவது வகையில் பதிலளித்துள்ளார். அதாவது அவர் நேரடியான பதிலை வழங்காமல் வேறு இரு நடவடிக்கைகள் மூலம் அவர் போராட்டக்காரர்களுக்குத் தனது எதிர்கால அணுகுமுறைகள் எப்படி இருக்கும் என்பதைப் பதிலாக வழங்கியுள்ளார்.
போராட்டக்கார்கள் தேசிய எதிர்ப்புத் தினத்தை முன்னெடுத்த அதே நாளில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வத்தை அக்ரோகொடவில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்துக்குச் சென்று அங்கு பாராளுமன்றத்தைப் பாதுகாத்த ஜனநாயகத்தைக் காப்பாற்றியமைக்காகப் படையினருக்கு நன்றி தெரிவித்துடன், அவர்களைப் பாராட்டும் முகமாக விருதுகளையும் வழங்கிக் கௌரவித்துள்ளார்.
அவர் அங்கு உரையாற்றும்போது ஒரு துப்பாக்கி வேட்டுக் கூடப்பயன்படுத்தப்படாமல் போராட்டக்காரர்கள் விரட்டப்பட்டுப் பாராளுமன்றம் படையினரால் காப்பாற்றப்பட்டு விட்டதாகவும், அவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளாதிருந்தால் பெரும் மாற்றம் இடம்பெற்று ஜனநாயகம் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்குமெனவும் குறிப்பிட்டிருந்தார். நிறைவேற்று அதிகாரம், நீதித்துறை, பாராளுமன்றம் என்பனவே ஜனநாயகத்தின் தூண்கள் எனவும், அவை காப்பாற்றப்படுவதில் படையினர் மேற்கொண்ட பணியைத் தான் பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.
அதாவது பாராளுமன்றத்தைக் காப்பாற்றியதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் காப்பாற்றப்பட்டு விட்டதையும், இன்றைய பொருளாதார, அரசியல் ஒடுக்குமுறைகளிலிருந்து மீள்வதற்கான மாற்றத்துக்கான முன்னெடுப்புகள் முறியடிக்கப்பட்டமையும் சர்வ வல்லமைகொண்ட தனது நிறைவேற்று அதிகாரம் காப்பாற்றப்பட்டமையையும் அவர் வரவேற்றதன் மூலம் அவர் ஒரு முக்கிய செய்தியைச் சொல்லியுள்ளார்.
இன்று மக்கள் மீது மேற்கொள்ளப்படும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்தும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுபடும் வகையிலான எந்த மாற்றத்தையும் தான் அனுமதிக்கப் போவதில்லை மற்றும் அவை கடுமையான இராணுவ நடவடிக்கைகள் மூலம் முறியடிக்கப்படும் என்ற செய்தியையும் ஆணித்தரமாக வெளியிட்டுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் மக்களின் வாழ்க்கை மேலும் மேலும் படுகுழியை நோக்கித் தள்ளப்படும்.
இதன் முதல் அறிவிப்பாக மின்சாரக் கட்டணம் 75 வீதத்தாலும் மற்றும் தபால் கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநாளில் எதிர்வரும் 4 மாதங்களுக்கான வரவு செலவு குறை நிரப்புப் பிரேரணை வேறெந்தத் துறைகளையும் விடக் கூடுதலாக பாதுகாப்பு அமைச்சுகளுக்கு 48914 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கொரோனா அச்சுறுத்தல், குரங்கம்மை நோய் என்பனவற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய சுகாதார அமைச்சுக்கு 24.807 கோடியே ஒதுக்கப்பட்டுள்ளது.
அதாவது மக்களைப் பாதுகாக்கும் துறையைவிட மக்களை அழிக்கும் மக்களை அடிமைகளாக்கி அடக்கி வைத்திருக்கும் துறைக்கு இரு மடங்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே ரணில் விக்கிரமசிங்கவின் படையினர் முன் நிகழ்த்திய உரையும், குறை நிரப்புப் பிரேரணையின் நிதி ஒதுக்கீடுகளும் அவர் எந்த வகையில் தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பலப்படுத்தத் திட்டமிட்டுள்ளார் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.
இனி அடுத்த கட்டமாகச் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைகளுக்கு அமைய விலைவாசி உயர்வு, மானியங்கள் வெட்டு, அரச சேவைகளில் ஆட்குறைப்பு, நஷ்டமடையும் அரச நிறுவனங்களை அந்நிய நிறுவனங்களுக்கு விற்றல், தேசிய வளங்களை விற்றல் என்பன தாராளமாகவே இடம்பெறும்; எதிர்ப்புகள் ஆயுத முனையில் அடக்கப்படும்.
இந்த நிலையில் அடுத்தநாள் அதாவது ஓகஸ்ட் 10ம் நாள் அரகலய போராட்டக்காரர்கள் காலிமுகத்திடலிலிருந்து தங்கள் கூடாரங்களைக் கழற்றிக்கொண்டு வெளியேறி விட்டனர். ரணிலும் ஆட்சியாளர்களும் சம்பவம் குறித்தும் பெருமகிழ்ச்சியடையலாம்.
ஆனால் போராட்டத்துக்குத் தலைமை தாங்கியவர்களில் ஒருவரான அனுரத்த பண்டார ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்த கருத்து மிகவும் முக்கியமானதாகும்.
“எமது போராட்டம் முழுமையடைந்து விடவில்லை. ஒருசில வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளோம். எனவே இறுதி வெற்றி வரைப் போராட்டம் தொடரும். இன்றைய சூழலுக்கேற்ற வகையில் எமது போராட்ட வடிவம் மாற்றமடையும். இதுவரை நகரங்களை மையமாக வைத்துத் தொடரப்பட்ட போராட்டம் இனிக் கிராமங்களை நோக்கி நகரும்”.
பல உலக விடுதலைப் போராட்டங்கள் நகர்ப்புற எழுச்சிகளாகவும் வேலை நிறுத்தங்களாகவும் ஆரம்பிக்கப்பட்டு, அவற்றில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாகக் கிராமப் புறங்களை நோக்கி நகர்ந்தன. பின்பு கிராமங்களிலிருந்து முன்னேறி நகரங்களும் வெற்றி கொள்ளப்பட்டன.
மக்கள் போராட்டங்கள் செயற்கையாக உருவாக்கப்படுபவையல்ல. அவர்கள் தமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராகவே கிளர்ந்தெழுகின்றனர். எனவே அவ்வகையான அநீதிகள் இல்லாமற் செய்யப்படும்வரைப் போராட்டங்கள் வடிவங்களை மாற்றியாவது தொடரப்படுவது தவிர்க்கப்படமுடியாததாகும்.
எனவே இராணுவத்தைப் பாராட்டி ஊக்குவிப்பதன் மூலமோ இராணுவச் செலவினங்களை அதிகரிப்பதன் மூலமோ மக்கள் போராட்டங்களை முற்றாக ஒடுக்கி விடமுடியாது. எந்தப் பிரச்சினைகளுக்காகப் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டனவோ அவை முழுமையாகத் தீர்க்கப்படும்வரை போராட்டங்கள் நிறுத்தப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது உலக வரலாறாகும்.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
16.08.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: ரணில் விக்கிரமசிங்க, இலங்கை