இம்மாதம் 15ம் திகதி இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டில்லி செங்கோட்டையில் இந்தியத் தேசியக் கொடியை ஏற்றி தனது சுதந்திர தின உரையயை நிகழ்த்தியிருந்தார்.
மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு வழமையான தேசிய சுதந்திர தின உரை போலவே தென்படும். ஆனால் இதை சற்று ஆழமாக உற்றுநோக்கினால் இதற்குள் காத்திரமான அர்த்தங்கள் பொதிந்திருப்பதையும் இந்தியா இன்று சென்று கொண்டிருக்கும் பாதையையும், இனி செல்லப்போகும் திசை மாற்றத்தையும் எடுத்துக்காட்டுவதாக உள்ளது. அத்துடன் மகாத்மா காந்தி, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற இந்தியத் தேசியத் தலைவர்களின் பெயரைப் பயன்படுத்தியவாறே, அவர்கள் கட்டி வளர்த்த தேசபக்தி என்ற மகத்துவத்தை முன்வைத்தே “அகன்ற இந்தியா” என்ற கனவை இலக்காகக் கொண்டிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
அவர் தனது உரையில் மகாத்மா காந்தி, அம்பேத்கார், சுபாஷ் சந்திரபோஸ் போன்ற தேசியத் தலைவர்கள் கனவு கண்ட உன்னத இந்தியாவைக் கட்டியெழுப்பும் பணியில் தாம் முன் செல்வதாகவும், பல்லின, பல்மத 130 கோடி மக்களே இந்தியாவின் பலமென்றும் தற்சமயம் இந்தியா உலகின் 5வது பொருளாதார வல்லமை பெற்ற நாடாக விளங்குகிறது என்றும் இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வளர்ச்சியடைந்த நாடுகளின் மட்டத்தை எட்டி விடுமெனவும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்தியாவின் அயலுறவுக் கொள்கை தொடர்பாக அவர் பெரிதாக எதையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் கவனத்தில் எடுக்கவேண்டிய விடயமாகும்.
இந்துக்களின் சாதீய ஒடுக்குமுறையை எதிர்த்த அம்பேத்கார் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட 2 இலட்சம் மக்களுடன் பௌத்த மதத்துக்கு மாறினார். மகாத்மா காந்தி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அதேயளவு உத்வேகத்துடன் சாதி பேதங்களுக்கு எதிராகவும், இந்து முஸ்லிம் ஐக்கியத்தையும் வலியுறுத்தினார். நவகாளியில் இடம்பெற்ற இந்து முஸ்லிம் கலவரத்தைத் தனிமனிதனாக முன் நின்று முடிவுக்குக் கொண்டு வந்தார். ஆனால், அவர் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது ஒரு இந்து மத வெறியனால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஆனால் இந்தியாவில் இன்று வரை முஸ்லிம்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளோ, படுகொலைகளோ முடிவுக்குக் கொண்டு வரப்படவில்லை. சாதிக் கொடுமைகளும் சாதி மேலாதிக்கம் காரணமாக இடம்பெறும் கலவரங்களும் படுகொலைகளும் எவ்வித குறைவுமின்றித் தொடர்கின்றன.
இந்தியாவில் முஸ்லிம்களின் புனித வரலாற்றுத் தலமான பாபர் மசூதி இடிக்கப்பட்டமையும், அங்கு ராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதும் இந்திய இந்து மேலாதிக்கத்தின் வலிமையான சாட்சியங்களாக இருக்கின்றன.
பாபர் மசூதியை இடிப்பதில் முன்னின்ற “கரம்சந்” தொண்டர்கள் வந்த புகையிரதம் தீயிடப்பட்டதும் அதையடுத்து குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் படுகொலைகளும் மறந்து விடக் கூடியவையல்ல.
இப்படுகொலைகள் இடம்பெற்றபோது குஜராத் மாநில முதல்வராக நரேந்திர மோடியே அதிகாரத்தில் இருந்தார் என்பது முக்கிய விடயமாகும். இப்படுகொலைகளுக்கு அவரும் உடந்தையாயிருந்தார் எனக் கூறப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
மகாத்மா காந்தியைச் சுட்டுக்கொன்ற “கோட்சே” ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவன். அந்த இயக்கத்தின் இன்னொரு வடிவம் தான் “சிவசேனா”. இந்த சிவசேனாவின் ஒரு தீவிர உறுப்பினராக விளங்கியவர்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
எனவே இவரது ஆட்சியில் இந்துத்துவத்தின் கொடூரமான சாதி வெறியும் அது தொடர்பான படுகொலைகளும், முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகளும் கொடி கட்டிப் பறப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கமுடியும்.
சுதந்திரதின உரையில் அவர் காந்தி, அம்பேத்கார் ஆகியோரின் கனவுகள் நிறைவேறி வருவதாக அவர் வெளியிட்ட கருத்து நிச்சயமாக தற்சமயம் இடம்பெற்றுவரும் சாதி, மத ஒடுக்குமுறைகளை மறைக்கும் ஒரு கவசம் என்றே கருதவேண்டியுள்ளது.
இந்தியா இன்று பொருளாதார வளர்ச்சியில் 5வது இடத்தில் உள்ளது என்பதையும் 25 வருடங்களில் வளர்ச்சியடைந்த நாடாக மாறிவிடும் என்பதையும் இலகுவில் மறுத்துவிடமுடியாது. மென்பொருட்கள், வாகனங்கள், கப்பல் கட்டுதல், இயந்திர உற்பத்திகள், அணுமின் உற்பத்தி போன்றவற்றிலும் ஆயுத உற்பத்தி, விண்வெளி ஆய்வு என்பனவற்றிலும் இந்திய ஒரு உயர்ந்த இடத்தில் உள்ளது என்பது உண்மையாகும். உலகின் 10 தனவந்தர்களில் தொழிலதிபர் அம்பானியும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்திய சனத் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டுக்குக் கீழ், அதாவது ஒரு நாளுக்கு 1 டொலருக்கும் குறைந்த வருமானம் பெறுபவர்களாகவே உள்ளனர் எனச் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்குமிடையேயுள்ள வருமான இடைவெளி அதிகரித்து விட்டதாக மோடி அவர்களே தன் உரையில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.
வேலையில்லாத் திண்டாட்டமும், வறுமையும் கொடி கட்டிப் பறக்கின்றன. விவசாயிகள் கடன்களைக் கட்டமுடியாமல் தற்கொலை செய்யும் நி்லை நிலவுகிறது.
விவசாய நிலங்களூடாக எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுவதற்கு எதிராக விவசாயிகள் டில்லியில் மாதக்கணக்காக நடத்திய போராட்டங்களுக்குத் தீர்வு எட்டப்படவில்லை. பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் இன்னமும் வீதிகளின் நடைபாதையிலேயே படுத்துறங்கும் நிலை நிலவுகிறது. விபச்சாரம் அங்கீகரிக்கப்பட்டாத ஒரு தொழிலாக விளங்கி வருகின்றன.
இப்படியான நிலையில் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், நடுத்தர மக்கள் ஆகியோர் தமது வாழ்க்கைச் செலவைச் சமாளிக்கவோ, நல்ல குடியிருப்புகளை அமைக்கவோ முடியாமல் திண்டாடி வருகின்றனர்.
அப்படியானால் இந்தப் பொருளாதார வளர்ச்சியால் பயன் பெறுபவர்கள் யார்?
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்ட போதிலும் சாதி, மத, இன ஒடுக்குமுறைகள், வறுமை, பணக்காரருக்கும் வறியவர்களுக்குமிடையேயான பெரும் இடைவெளி என்பன அதிகரித்துச் செல்லும் நிலையே காணப்படுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் உரையில் அவற்றுக்கான தீர்வு எதுவுமே முன் வைக்கப்படவில்லை என்பதே கவனிக்க வேண்டிய முக்கிய விடயமாகும்.
எனவே இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியின் பயன்கள் ஒரு குறுகிய வட்டத்தையே சென்றடையுமாதலால் அந்த வளர்ச்சியுடன் சமாந்தரமாகச் சாதாரண மக்களின் வறுமையும் வளர்ச்சியடைவது தவிர்க்கமுடியாததாகும்.
எனவே இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவாகினால் கூட சாதாரண மக்களுக்கும் பணக்காரர்களுக்கும் இடையுள்ள வருமான இடைவெளி குறையும் என்பதற்கோ அல்லது ஏழைகளின் வாழ்வு வளம் பெறும் என்பதற்கோ அறிகுறிகள் எதுவும் இதுவரை தென்படவில்லை.
அருவி இணையத்துக்காக :- நா.யோகேந்திரநாதன்
19.08.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா