விண்வெளியில் சீனா தனியாக அமைத்து வரும் ‘தியாங்கொங்' (Tiangong) சர்வதேச விண்வெளி நிலையத்தில் சீன விண்வெளி வீரர்கள் நடைபயணம் (spacewalk) மேற்கொண்டு விண்வெளி நிலைய இறுதிக்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
விண்வெளியில் நடப்பதற்கான பிரத்யேக ஆடைகளை அணிந்து கொண்டு விண்வெளி நிலையத்தில் இருந்து சனிக்கிழமை வெளியே வந்த ஷென் டாங் (Chen Dong), கை சுஹி (Cai Xuzhe) ஆகிய 2 விண்வெளி வீரர்களும் விண்வெளி நிலையத்தின் வெளிப்புறம் இருக்கும் பிரமாண்டமான இயந்திரத்தில் பொருத்த வேண்டிய உபகரணங்களை பொருத்தியதாக சீன விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீனா விண்வெளியில் தியாங்கொங் என்ற பெயரில் தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த விண்வெளி நிலையத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர சீனா திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஷென் டாங், கை சுஹி ஆகிய 2 விண்வெளி வீரர்களும் லியு யாங் என்ற வீராங்கனையும் கடந்த 5 மாதங்களாக விண்வெளியில் தங்கியிருந்து புதிய விண்வெளி நிலையத்தை அமைக்கும் இறுதி கட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் விண்வெளி நிலையத்தை செயற்பாட்டுக்கு கொண்டு வரும் பணியின் ஒரு பகுதியாகவே சீன விண்வெளி வீரர்கள் ஷென் டாங் மற்றும் கை சுஹி ஆகிய இருவரும் நடைபயணம் மேற்கொண்டனர்.
இதேவேளை, ரஷ்யாவால் உருவாக்கப்பட்டு, பல நாடுகளின் கூட்டு முயற்சியில் செயல்பட்டு வரும் தற்போதைய உலகின் ஒரே விண்வெளி ஆய்வகமாக சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station - ISS) உள்ளது. இந்நிலையில் சீனாவின் தியாங்கொங் விண்வெளி நிலையம் செயற்படத் தொடங்கினால் தனக்கென்று சொந்தமாக விண்வெளி நிலையத்தை வைத்திருக்கும் ஒரே நாடு என்ற பெருமையை சீனா பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.