தாய்வான் மீது சீனா படையெடுத்தால் தாய்வானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்கும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரத்தில் உக்ரைன் போரில் வெளியே நின்று உதவுவது போன்று இல்லாமல் அமெரிக்கா நேரடியாகத் தலையிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
தாய்வான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி வெளியிட்ட மிகத் தெளிவான செய்தியான இது அமைந்துள்ளது. பைடனின் இந்தக் கருத்து சீனாவை மேலும் ஆத்திரமூட்டும் எனவும் கருதப்படுகிறது.
சி.பி.எஸ். தொலைக்காட்சியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்பட்ட60 நிமிட நேர்காணலில் சீனாவால் உரிமை கோரப்படும் சுயராஜ்ய தீவான தாய்வானை அமெரிக்கப் படைகள் பாதுகாக்குமா? என்று கேட்டதற்கு ஆம் என பைடன் பதிலளித்தார்.
தாய்வான் மீது சீனா படையெடுத்தால் உக்ரேனைப் போலல்லாமல் அமெரிக்கா நேரடியாகத் தலையிடுமா? எனக் கேட்டபோது ஆம் என பைடன் மீண்டும் கூறினார்.
இந்தக் கருத்து அமெரிக்காவின் ஒரே சீனக் கொள்கை தொடர்பான நிலைப்பாட்டில் அண்மைக் காலங்களில் வெளிப்படுத்தப்பட்ட மிக முக்கிய மாற்றமாகக் கருதப்படுகிறது.
அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியின் தைவான் விஜயத்தை அடுத்து சீனா - அமெரிக்கா உறவுகள் மோசமடைந்துள்ள நிலையில் பைடனின் இவ்வாறான கருத்தால் சீனா மேலும் ஆத்திரமடையும் எனக் கருதப்படுகிறது.
இதேவேளை, தேவைப்பட்டால் தாய்வான் மீது இராணுவ பலத்தை பயன்படுத்தவும் தயங்கப்போவதில்லை என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அத்துடன், ஜூலை மாதம் பைடன் உடனான ஒரு தொலைபேசி உரையாடலின்போது தாய்வான் சுதந்திரத்தை ஆதரிப்பவர்கள் நெருப்புடன் விளையாடுவதாக ஜி ஜின்பிங் எச்சரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.