மறைந்த பிரிட்டன் மகாராணி எலிசபெத்தின் உடல் நேற்று திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
வெஸ்ட்மின்ஸ்டா் அபே தேவாலயத்தில் நடைபெற்ற இறுதிச்சடங்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உட்பட உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் பங்கேற்றனா். அத்துடன், சுமார் 10 இலட்சம் பேர் இலண்னில் திரண்டு மகாராணிக்கு இறுதி விடை கொடுத்தனர்.
96 வயதான எலிசபெத் மகாராணி உடல்நலக்குறைவு காரணமாக ஸ்கொட்லாந்தில் உள்ள தனது பால்மோரல் மாளிகையில் கடந்த 8-ஆம் திகதி உயிரிழந்தார். அங்கிருந்து அவரது உடல் லண்டனில் உள்ள நாடாளுமன்ற வெஸ்ட்மின்ஸ்டர் அரங்குக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நாடு முழுவதிலுமிருந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல மணி நேரம் வரை காத்திருந்து மகாராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அரசு மரியாதையுடன் ராணியின் உடல் இறுதிச்சடங்குக்காக அங்கிருந்து புறப்பட்டது. அரச குடும்பத்தினரின் இறுதிச்சடங்குக்குப் பயன்படுத்தப்படும் பீரங்கி வண்டியில் மகாராணியின் உடல் வைக்கப்பட்ட பெட்டி ஏற்றப்பட்டு ஊா்வலமாக கொண்டு செல்லப்பட்டது. கடற்படையைச் சோ்ந்த 142 மாலுமிகள் இந்த பீரங்கி வண்டியை வழிநடத்திச் சென்றனா்.
பீரங்கி வண்டிக்கு பின்னால் அரசர் சாா்லஸ், அவரது மனைவி கமீலா மற்றும் அரச குடும்பத்து வாரிசுகள் நடந்து சென்றனர். வழிநெடுக பொதுமக்கள் இலட்சக்கணக்கானோர் நின்று மகாராணிக்கு பிரியாவிடை அளித்தனா்.
மத்திய லண்டனில் உள்ள வெலிங்டன் வளைவு வரை பீரங்கி வண்டியில் கொண்டு செல்லப்பட்ட மகாராணியின் உடல், அங்கிருந்து வாகனத்துக்கு மாற்றப்பட்டு வெஸ்ட்மின்ஸ்டர் அபே தேவாலயத்துக்கு புறப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 10 மணியளவில் அந்த தேவாலயத்தில் அரசு மரியாதையுடன் கூடிய இறுதி சடங்கு தொடங்கியது. இதில் உலக நாடுகளைச் சோ்ந்த 500 தலைவா்கள் உள்பட 2,000 போ் பங்கேற்றனா்.
பின்னர், அங்கிருந்து சுமாா் 40 கி.மீ. தொலைவில் உள்ள விண்ட்ஸர் கோட்டைக்கு மகாராணியின் உடல் வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டது. மாலையில் விண்ட்ஸர் கோட்டையில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தை மாலையில் உடல் அடைந்தது. அங்கு நடைபெற்ற ஜெபத்தில் அரச குடும்பத்தினா் உள்பட 800 போ் கலந்துகொண்டனா்.
ராணியின் அரச மணிமுடி, சிலுவைக் கோளம், செங்கோல் போன்றவை உடல் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலிருந்து நீக்கப்பட்டன. மகாராணியின் முடியாட்சி நிறைவுற்றதைக் குறிக்கும் சம்பிரதாய சடங்குகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னா், ‘தேவனே அரசனைக் காப்பாற்று’ என்ற கீதம் பாடப்பட்டு, எலிசபெத்தின் கணவர் எடின்பரோ கோமகன் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தின் அருகே மகாராணியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
முன்னதாக, இறுதிச்சடங்கு நடைபெற்றபோது பிரிட்டன் முழுவதும் இரு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து