ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 51வது கூட்டத் தொடரில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை அதன் பதில் ஆணையாளர் நடாஅல் அஷ்ஃப் அவர்கள் சமர்ப்பித்திருந்தார்.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள், குற்றம் புரிந்தவர்களுக்குத் தண்டனை விலக்கு, சிவில் சேவைகளில் இராணுவ மயம், வடக்கு, கிழக்கில் சிங்கள பௌத்தமயப்படுத்தல், சிவில் அமைப்புகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் தொடர்ந்தும் கண்காணிப்புக்கு உட்படுத்துதல், போராட்டக்காரர்கள், தொழிற்சங்க, மாணவர் தலைவர்கள் என்போர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பிரயோகித்தல், போர்க் குற்றவாளிகளை உயர் பதவிகளில் அமர்த்தல் போன்ற மனிதகுல விரோத நடவடிக்கைகள் நல்லிணக்க உருவாக்கத்திற்குப் பெரும் தடையாக உள்ளன என அந்த அறிக்கையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேவேளையில் அவ்வறிக்கை மூலம் அவர் சர்வதேச நாடுகளிடம் ஒரு முக்கியமான கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அதாவது இலங்கையில் தற்போது பயனுள்ள பொறுப்புக் கூறல் தெரிவுகள் இல்லாத நிலையில் சர்வதேச சட்டத்தில் பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதற்கு வெளிநாட்டு மற்றும் உலகளாவிய வரம்பின் அடிப்படையில் மாற்று உபாயங்களை பின்பற்றுமாறு அவர் சர்வதேச நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சட்டத்தின் ஆட்சி, நல்லெண்ணம், நிலையான அமைதி என்பன நிலை நிறுத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதில் முக்கியமாக நாம் அவதானிக்க வேண்டிய விடயம் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற சர்வதேச நியமங்களுக்கு ஒவ்வாத சட்டங்களின் பிரயோகம், போர்க் குற்றவாளிகள் உட்பட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை விலக்கு, போர்க் குற்றம் புரிந்த படையினருக்கு உயர் பதவிகள், தமிழ், முஸ்லிம் மக்கள் மீதான மத, இன ஒடுக்குமுறைகளின் அடிப்படையில் காணி, மத ஆக்கிரமிப்பு போன்ற அரசாங்கத்தால் அல்லது அரசாங்க அனுசரணையுடன் மேற்கொள்ளப்படும் முறைகேடுகள் பற்றி சர்வதேச மட்டத்தில் உலகளாவிய வரையறைகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அவர் அழைப்பின் அர்த்தமாகும். மேற்படி குற்றங்களில் ஈடுபட்டவர்களின் வெளிநாடுகளிலுள்ள சொத்துக்கள் முடக்கப்பட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
ஆணையாளரின் அறிக்கையை அடியொற்றி அமெரிக்கா, பிரிட்டன், மாலாவி, ஜேர்மனி, மொண்டேனிக்கா உள்ளிட்ட இணைஅனுசரணை நாடுகள் பிரேரணையாக ஒரு வரைவை முன்வைத்துள்ளன. இவ்வறிக்கை விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டுப் பின்பு திருத்தங்களுடன் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு தீர்மானமாக நிறைவேற்றப்படும்.
அதேவேளையில் சர்வதேச மன்னிப்புச் சபை, ஆசியா ஃபோரம், மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நீதியாளர்கள் அமைப்பு ஆகிய நான்கு முக்கிய மனித உரிமைகள் அமைப்புகள் ஆணையாளரின் அறிக்கை பயனுள்ள வகையில் நிறைவேற்றப்படவேண்டுமென மனித உரிமைகள் ஆணையகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளன. குறிப்பாக இலங்கைக்குள் பொறுப்புக் கூறல் இல்லாத நிலையில் மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர்களை சர்வதேச நீதிமன்றங்களில் விசாரணை செய்யவேண்டும் எனவும், வெளிநாடுகளில் உள்ள திருடப்பட்ட சொத்துக்களைக் கண்டு பிடித்து முடக்கும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவேண்டும் எனவும் அக்கடிதத்தில் கோரப்பட்டுள்ளது முக்கிய விடயமாகும்.
பிரிட்டனும் இப்படியான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன், அமெரிக்க செனட்டர்களும் இவ்வாறான கருத்துக்கொண்ட ஒரு பிரேரணையை முன்மொழிந்துள்ளனர்.
குற்றமிழைத்த இராணுவத்தினர் உட்பட குற்றமிழைத்தாகக் கருதப்படும் இலங்கையர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்படவேண்டுமென நேரடியாகச் சுட்டா விட்டாலும் சர்வதேச விசாரணைக்கான அழுத்தங்கள் வலுப்பெற்றிருப்பதைக் காணமுடியும்.
இவ்வாறு இலங்கையின் போர்க்குற்றங்கள் மனித உரிமை மீறல்கள், இராணுவமயமாக்கல், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தண்டனை விலக்கு, பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் என்பன மனித உரிமைகள் பேரவையிலும் உறுப்பு நாடுகள் மத்தியிலும் பிரதான பேசுபொருளாக மாறி சர்வதேச விசாரணை பற்றிய கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் இலங்கை அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுத்து வருகிறது.
இலங்கையின் சார்பில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் அல் சப்ரி அவர்கள் இலங்கை மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தை நிராகரிக்கிறதெனவும், சர்வதேசப் பொறிமுறை மூலமான விசாரணை இலங்கையின் அரசியலமைப்புக்கு ஏற்புடையதல்ல எனவும், ஒரு இறைமையுள்ள நாடு என்ற வகையில் உள்நாட்டுப் பொறிமுறை மூலம் விசாரணைகளை மேற்கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கைக்குச் சார்பான ஒரு தீர்மானமே நிறைவேற்றப்படக்கூடிய அறிகுறிகளே இப்போது தென்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அப்படி நிகழுமாயின் அடுத்த கட்ட நகர்வு எப்படியிருக்குமென்பதே இப்போது எழும் கேள்வியாகும்.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 13 ஆண்டுகளாகி விட்டன. இக்காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் என்பன தொடர்பாக 30/1 தொட்டு 46/1 வரையான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இத்தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ், ரணில் விக்கிரமசிங்க - மைத்திரிபால சிறிசேன, கோத்தபாய ராஜபக்ஷ், ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆட்சியதிகாரம் நிலவியது. ஆனால் இவர்கள் எவரதும் ஆட்சியிலும் எந்தவொரு தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை.
மஹிந்த ராஜபக்ஷ் ஆட்சியில் போர்க்குற்றவாளிகளை இனங்காணவும், மனித உரிமை மீறல்களைக் கண்டறியவும் நல்லிணக்க ஆணைக்குழு நிறுவப்பட்டது. நாட்டின் பல பாகங்களிலும் அமர்வுகள் நடத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏராளமான செலவில் பொருமளவு மனித சக்திகளை ஈடுபடுத்தி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்பு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. காணாமற் போனோர் விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய பரணகம ஆணைக்குழு அமைக்கப்பட்டு அமர்வுகள் மேற்கொள்ளப்பட்டன. காணாமற்போனோரின் உறவுகள், இராணுவத்தினர், புலனாய்வுப் பிரிவினர் மற்றும் துணை இராணுவக் குழுக்கள் ஆகியோரின் கடும் அச்சுத்தல்கள் மத்தியிலும் பலவித சிரமங்களுக்கும் முகம் கொடுத்து சாட்சியங்களை வழங்கினர். விசாரணையாளர்கள் கூடச் சாட்சியாளர்களை மிரட்டியமையும் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு எவ்வளவோ இடையூறுகள் மத்தியில் வழங்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை எவ்வித நடவடிக்கையும் இன்றிக் கிடப்பில் போடப்பட்டது. இது மஹிந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட உள்ளக விசாரணைகளும் அவற்றின் பலாபலன்களும்.
ரணில் - மைத்திரி ஆட்சியில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அரசாங்கம் இணைஅனுசரணை வழங்கியது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டது. காணாமற்போனோர் விவகாரம் தீர்க்கப்படுமெனவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் உள்ளகப் பொறிமுறை மூலம் சர்வதேச நிபுணர்கள் உதவியுடன் மேற்கொள்ளப்படுமென ஏற்றுக்கொள்ளப்பட்டது. கண்துடைப்பாக, இயங்காத ஒரு காணாமற் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டது. பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட்டு, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுமெனக் கூறப்பட்டது. அதன் பின்பு ஒவ்வொரு அமர்வின் போதும் கால அவகாசம் கோரிப் பெறப்பட்டது. இவ்வாறு காலம் இழுத்தடிக்கப்பட்டு எதுவுமே நிறைவேற்றப்படாமல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. பயங்கரவாத் தடைச் சட்டம் இன்றுவரை இளமை குன்றாமல் உயிருடன் இருந்து அரச எதிர்ப்பாளர்களையும், விமர்சிப்பவர்களையும் வேட்டையாடி வருகிறது.
அதாவது இந்த இரு தரப்பினரும் பேரவையின் தீர்மானங்களை எதிர்த்தபோதும், ஆதரித்த போதும் தொடர்ந்து சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வந்தனர் என்பதே உண்மை.
ஆனால் 2020ல் கோத்தபாய ராஜபக்ஷ் ஆட்சிக்கு வந்ததும் இலங்கை அனுசரணை வழங்கிய 46/1 வரையான தீர்மானத்திலிருந்து விலகுவதாக அவரின் ஆட்சிப் பீடம் அறிவித்துவிட்டது. 46/1 தீர்மானம் இலங்கையின் அரசியலமைப்பை மீறியது என்பதையும் இலங்கையின் இறைமையை நிராகரிக்கிறது என்பதையும் கண்டு பிடிக்க அவர்களுக்குப் பல வருடங்கள் பிடித்தன என்பதுதான் அதிசயம்.
எனவே இம்முறை இடம்பெறும் அமர்வின்போது இலங்கையின் அரசியலமைப்பு, இறைமை, உள்ளப் பொறிமுறை என்பன பற்றி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கிறார்.
இவர்கள் இலங்கையின் இறைமையின் பேரில் அதை ஒரு கவசமாகப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மக்களின் இறைமையையும் சுயாதீனத்தையும் பறிக்கின்றனர். அது மட்டுமின்றி 63 இலட்சம் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி அவஸ்தைப்படும் நிலையில், அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத துன்பத்தில் தள்ளப்படும் அவலத்துக்குக் காரணமான மோசடி, இலஞ்சம், ஊழல், இன ஒடுக்குமுறை என்பவற்றையும் லாவகமாக தொடர்கின்றனர்.
சர்வதேச நாணய நிதியத்திடமும் வெளிநாடுகளிலும் கையேந்தி நிற்கும் நிலையிலும் சர்வதேசத்தால் போர்க்குற்றவாளிகளாகவும் மனிதகுல விரோதிகளாகவும் இனம் காணப்பட்டவர்களைக் பாதுகாப்பதிலேயே இன்றைய ரணில் ஆட்சியும் அக்கறை காட்டி வருகிறது. சர்வதேசத்தைத் தொடர்ந்தும் ஏமாற்றும் முயற்சிகளில் ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையிலேயே இலங்கைக் குழுவினர் பேரவையும் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளைத் தனித்தனியே சந்தித்து தங்களை நியாயப்படுத்தி வருகின்றனர்.
ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரின் அறிக்கை, இணை அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்ட பிரேரணை, மனித உரிமை நிறுவனங்களின் அழுத்தம் என்பன இலங்கையில் ஏமாற்றுகளுக்கு இடமளிக்கா போன்றே தோன்றுகின்றது. இலங்கையின் உள்ளகப் பொறிமுறை என்பது அப்பட்டமான ஒரு ஏமாற்று என்பதைச் சர்வதேசம் உணர்ந்ததாலேயே 46/1 தீர்மானத்தை நிறைவேற்றியது.
அதேவேளையில் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிரான மாவிட்டபுரத்திலிருந்து அம்பாந்தோட்டை வரையான ஊர்திப் போராட்டம், காணாமற் போனோர் உறவினரின் போராட்டங்கள் என்பவை மனித உரிமைகள் பேரவையின் சில சாதகமான பலாபலன்களை ஏற்படுத்த முடியும். அவற்றை உறுப்பு நாடுகளிடம் கொண்டு செல்வதில் தமிழ்த் தலைமைகள் வகிக்கும் பங்கு எப்படியிருக்கும் என்பதுதான் இங்கு எழும் கேள்வி.
கால அவகாசம் வழங்குவது என்ற பேரில் சில தமிழ்ப் பிரதிநிதிகள் அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற்பட்டு, சர்வதேச உடன்படிக்கைகளை வலுவிழக்க வைக்க உதவியதை நாம் மறந்து விட முடியாது.
எனவே சர்வதேச அளவில் தமிழ் மக்களுக்கு இன்று கிடைத்துள்ள சாதகமான சூழ்நிலையை தமிழ்த் தலைமைகள் சரியாகப் பயன்படுத்தத் தவறுவார்களாயிருந்தால் தமிழினத்திற்கு செய்யும் படுமோசமான துரோகம் அதைவிட வேறு எதுவுமிருக்கமுடியாது.
அருவி இணையத்துக்காக :- நா. யோகேந்திரநாதன்
20.09.2022
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க, இலங்கை, உலகம், ஜெனீவா