Friday 13th of December 2024 07:09:23 PM GMT

LANGUAGE - TAMIL
.
உயிர்த்தெழுகை - 25 (நா.யோகேந்திரநாதன்)

உயிர்த்தெழுகை - 25 (நா.யோகேந்திரநாதன்)


ஆவணிப் பொங்கல் முடிந்து விட்டால் விதைப்புக்கான ஆயத்த வேலைகள் ஆரம்பித்துவிடும். ஆனால் புரட்டாதியில் ஒரு நல்ல நாள் பார்த்து “நாள் கலப்பை” பிடித்த பின்பே விதைப்பு வேலைகள் ஆரம்பமாகும். ஆனால் மானாவாரி வயல்கள் ஆடித் தூற்றலுடன் உழுது மறுத்துவிட்டு புரட்டாதியில் விதைத்து விடுவார்கள். ஆனால் குளத்து நீர்ப்பாய்ச்சல் வயல்களில் புரட்டாதி கடைக் கூற்றிலும் ஐப்பசியிலும் விதைப்புகள் இடம்பெறும்.

குலம் காசியரின் வண்டிலைக் கொண்டு வந்து குஞ்சாத்தையின் கடப்படியில் நிறுத்தியபோது சேனாதி நான்கைந்து நார்க் கடகங்களைக் கொண்டு வந்து அதில் போட்டுவிட்டு, “பொன்னாவும் பெட்டையளும் குளத்தடிக்குப் போட்டாள்களே?” எனக் கேட்டான்.

“ஒமண்ணை..... நான் அங்கை போக முந்தியே வெளிக்கிட்டாள்களாம்.... இவ்வளவுக்கு நாலைஞ்சு வண்டில் பொருக்குகள் கொத்திக் குவிச்சிருப்பள்....” என்றான் குலம்.

சேனாதி “சரி.... மாட்டைத் தட்டி விடு!” என்று விட்டு வண்டியில் ஏறிக்கொண்டான். வண்டி புறப்பட்டுப் போன பின்பே குஞ்சாத்தை கடப்படிக்கு வந்தாள். நல்ல காரியங்களுக்குப் புறப்படும்போது கைம்பெண்கள் முன்னால் முழிவியளத்துக்கு வந்தால் அவை சித்திகாது என்பது அவளின் நம்பிக்கை.

கச்சேரிப் பெரியவர் சுடப்பட்டு இரணைமடுச் சந்தியில் போடப்பட்டிருந்ததும் அவரின் குற்றங்கள் ஒரு மட்டையில் எழுதப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்ததுமான சம்பவங்களால் அந்தக் கிராமங்களில் ஏற்பட்ட பரபரப்பு மெல்ல மெல்ல அடங்கி விடவே மக்கள் தங்கள் வழமையான வேலைகளைத் தொடங்கி விட்டனர்.

எப்படியும் குளப்பொருக்கு ஏற்றிப் பறிக்க இரண்டு கிழமைகளாவது எடுக்கும். ஏனெனில் சேனாதி, பூசாரி கந்தப்பர், பரமர் ஆகியோரது மூன்று வண்டில்களுமே பதினாறு குடும்பங்களினதும் வயல்களுக்கு குளப்பொருக்கு பறிக்க வேண்டியிருந்தது. அக்குடும்பங்களைச் சேர்ந்த இளம் பெண்கள் குளத்து நீர் வற்றிய பகுதிகளில் பாளம் பாளமாக வெடித்துப் போய்க்கிடக்கும் பொருக்குகளை வெட்டிக் குவித்து வண்டில்களில் ஏற்றிவிட, அவை வயல்களில் கொண்டு போய் பறித்து விடுவார்கள். வயல்களில் அந்த ஊரின் நடுத்தர வயதுப் பொண்கள் அவற்றைக் கடகங்களில் அள்ளிப் போட்டு மண் வெட்டிகளால் தட்டிப் பரவி விடுவர்.

வயதான பெண்கள் சோறும் பல மரக்கறிகளைப் போட்டு ஒரு குழம்பும் வைத்துக்கொண்டு போய்க் கொடுப்பார்கள்.

எருப்பரவல் இந்த முறையிலேயே இடம்பெறும்.

பதினாறு குடும்பங்களுக்கும் வயல்கள் தனித்தனியாகவே இருந்தன. ஆனால் பசளையிடுதலில் தொடங்கிச் சூட்டடி வரையும் வேலைகள் கூட்டாகவே இடம்பெறும். எனினும் அவரவர் வயல்களின் விளைச்சல்கள் அவரவருக்கே உரியனவாகும்.

இப்படியான பாரம்பரிய வழக்கத்துக்கான அடிப்படைக் காரணம் இருந்தது. அதுவே பதினாறு குடும்பங்களையும் ஒன்றாகப் பிணைத்திருந்தது.

அந்தப் பதினாறு குடும்பங்களின் காணிகளும் குலமுத்தர் என்பவருக்கே சொந்தமாயிருந்தன. அவரின் பிள்ளைகளான கணபதி, முருகர், வைரவர், வேலாத்தை ஆகிய நால்வரின் குடும்ங்களும் முத்தருடனும் மனைவியுடனும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்தனர். கம வேலைகள் உட்பட சகல வேலைகளையும் எல்லோரும் ஒன்றாகவே செய்து வந்தனர். அத்தனை குடும்பங்களுக்கும் ஒரே சமையல்தான்.

முத்தர் இறந்த பின்பு அக்குடும்பத்தின் மூத்தவரான கணபதியே தலையாரியானார். அந்த நால்வரின் பிள்ளைகளும் வளர்ந்து திருமணமான பின்பு கணபதியர் அவர்கள் ஒவ்வொரின் திருமணத்தின் பின்னும் அவரவருக்கு காணியில் ஒவ்வொரு பகுதியைக் கொடுக்க அவர்களும் அவற்றில் குடியேறினர். கணபதியரின் இறப்பின் பின்பு கணபதியரின் மூத்த மகன் சிதம்பரி தலையாரியானார். சிதம்பரியின் மூத்த மகனான காசியரே தற்சமயம் அந்தக் குடும்பத்தின் தலையாரியாக விளங்கினார்.

தற்சமயம் 16 குடும்பங்களும் தனித்தனி வீடுகளையும் தனித்தனி காணிகளையும் கொண்டிருந்த போதிலும் சகல குடும்பங்களும் காசியரின் கட்டுப்பாட்டிலேயே இயங்கி வந்ததுடன் அவர்கள் தாங்கள் அனைவரும் குலமுத்தர் பரம்பரை என்ற பிணைப்பால் கட்டுப்பட்டிருப்பதை என்றும் மீறியதில்லை.

இன்றுவரை எல்லாக் குடும்பங்களும் ஒரு நீளக்கோடும் அதிலிருந்து பிரியும் மூன்று சிறு கோடுகளுமான மரபுக் குறியையே பயன்படுத்தி வருகின்றனர். குடும்பங்களுக்கான தனித்தனிப்பட்டிகள் இருந்தபோதும் எல்லாப் பட்டிமாடுகளுக்கும் ஒரே குறியே சுடப்படும்.

அதாவது அவர்கள் ஒரே குடும்பம் என்ற உணர்விலிருந்து ஒரு துளிவுகூட விலகி விடவில்லை.

அந்த உணர்வின் வெளிப்பாட்டில் ஒரு பகுதிதான் மயில் யாரை விரும்புகிறாள் என்பதை சேனாதி பொன்னாவிடம் அறிய முனைந்ததும், அவள் விரும்புபவனை அவளுக்கு கட்டி வைக்க வேண்டுமெனக் கூறியதுமாகும்.

அவர்கள் அங்கு சென்றடைந்தபோத பரமரின் வண்டி பொருட்கள் ஏற்றப்பட்டுப் புறப்படுவதற்காக மணியன் மாடுகளை வண்டியில் பூட்டிக்கொண்டிருக்க பெண்கள் பூசாரியாரின் வண்டிலை நிரப்பிக்கொண்டிருந்தனர்.

சேனாதி மணியனின், “முதல் கொட்டல் நீதானே, எங்கை பறிக்கப் போறாய்?...” எனக் கேட்டான்.

“வேறை எங்கை மச்சான்! தலைச்சன் காணியிலை தான்!”.... என்றான். அவர்கள் தலைச்சன் காணியெனக் காசியரின் காணியையே குறிப்பிடுவதுண்டு.

“சரி..... சரி.... முதல் பறியல்.... பிள்ளையாரை நினைச்சுக்கொண்டு பறி...” என்றான் சேனாதி.

“சரி, மச்சான்! .....” என்று விட்டு மாடுகளைத் தட்டி விட்டான் மணியம்.

பொன்னாவுக்கு அருகில் சென்ற குலம், “மண் வெட்டியைக் கொண்டா...” நான் கொஞ்ச நேரம் வழிக்கிறன்.... நீ களையாறு .....!“ என்றான்.

பொன்னா மண்வெட்டியை அவனிடம் கொடுத்தவாறே “நான் களைக்கேல்லை மச்சான்.... நீ கடகத்திலை கோலி விடு நான் சுமந்து கொட்டுறன்!” என்று விட்டுக் கடகத்தை எடுத்து அவனருகில் போட்டாள்.

அருகில் பொருக்கு வழித்துக்கொண்டு நின்ற மயில் கேலியாக “மச்சாளிலை பக்குவம் பாக்கிறான். அவன்ரை ஆசைக்குக் கொஞ்சம் களாயாறன்...!” என்றாள்.

பொன்னா அவளிடம் நெளித்துக்காட்டி விட்டு, “நீயும் முறை மச்சாள் தானே.... அவனட்டை மண்வெட்டியை குடுத்திட்டுக் கொஞ்சம் களையாறு..” என்றாள்.

“போடி.... என்னைப் பக்குவம் பாக்கவும் ஒருதன் வருவன்தானே!” என்று விட்டு மயில் கலகலவெனச் சிரித்தாள்.

அப்போது அவளின் கண்கள் ஒருமுறை சேனாதி மீது பாய்ந்து விட்டுத் திரும்பியதைப் பொன்னா கவனிக்கத் தவறவில்லை.

“ஆரடி அவன் எங்களுக்கும் சொல்லன்?” எனக் கேட்டாள் பொன்னா.

அவர்களின் கதைகளைக் கேட்டவாறே வேலை செய்து கொண்டிருந்த புவனம், “நானும்தான் கேட்டுக் கேட்டு அலுத்துப் போனன்.... பென்னாம் பெரிய இரகசியமெண்டு சொல்லுறாளில்லை! எப்பிடியும் மலிஞ்சாச் சந்தைக்கு வரும்தானே!” என்றாள்.

“போடி விசரி.... நாங்கள் பெட்டையள் ஆரையும் விரும்பினாலென்ன விட்டாலென்ன காசியப்புவும் சரவணையப்புவும் சொல்லுறவனுக்குத் தானே கழுத்தை நீட்ட வேணும்! என்றாள் மயில்.

அந்த வார்த்தைகள் பொன்னாவின் நெஞ்சில் “சுரீர்” என முள்ளாகக் குத்தின. அவள் சொன்னது உண்மைதான் என்ற போதிலும் அவள் மனம் அதை ஏற்றக்கொள்ள மறுத்தது.

“போடி விசரி.... நாங்கள் எங்கடை விருப்பதைத் துணிஞ்சு சொன்னால் அவை மறுக்க மாட்டினை.... எங்கடை பெட்டையள் அவைக்கு முன்னாலை வாய் திறவாயினம்” என்றாள் பொன்னா.

அந்த வார்த்தைகள் மயிலுக்கு ஒருவிதமான தென்பை ஊட்டினாலும் அவர்களிடம் தன் விருப்பத்தைசை் சொல்ல முடியுமோ என்பது அவளிடம் பதிலற்ற கேள்வியாகவே இருந்தது. அவளின் சகோதரி முறையான சின்னத்தங்கம் தன்னுடன் நெடுங்கேணியில் படித்த ஒருவனை விரும்பியபோது முழு ஊருமே அவளை எதிர்த்தது. அவள் அந்த எதிர்ப்பை மீறி அவனுடன் ஓடிய போது அவளை “அமர் பிடிச்ச கொண்டோடி”, என முழு ஊருமே திட்டியது. அவளின் குடும்பமே ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையில் தாய் புளிய மரத்தில் தூக்குப் போட்டு இறந்து விட்டாள். அந்த “அமர் பிடித்த கொண்டோடி” என்ற வார்த்தைகள் அவளின் ஆசையையே நெஞ்சுக்குள் அடக்கி வைத்து விட்டன.

அந்த ஊரில் உள்ள “ஆண்கள் வெளியிடத்து” பெண்களைத் திருமணம் செய்யலாம். ஆனால் பெண்கள் வெளியிடத்து ஆண்களைத் திருமணம் செய்யக்கூடாது” என்ற பாரம்பரியக் கோட்பாடு தான் அத்தகைய பலத்த எதர்ப்புக்குக் காரணம் என்பதை மயில் யோசித்துப் பார்க்கவில்லை. எனினும் பெண்கள் தங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பது அளவுக்கு மீறிய செயல் என்றே கருதப்பட்டு வந்தது.

அப்போது அவ்விடத்துக்கு வந்த சேனாதி, “மயில் மண்வெட்டியைத் தா..... நான் கொத்தி வழிச்சுக் குவிக்கிறன்.... நீ பொன்னாவோடை சுமந்து கொட்டு”, என்றான்.

“பாத்தியேடி.... உன்னைப் பக்குவம் பார்க்கவும் ஆள் வந்திட்டுது!......” என்று விட்டுக் கலகலவெனச் சிரித்தாள் பொன்னா!

புவனமும், “எடியே..... இனியெண்டாலும் மூக்கைலை அழாதை....!” என்று சொல்லி்ச் சிரித்தாள்.

இனம் புரியாத ஆனந்தத்தில் மயிலின் மனம் வானத்தில் பறக்கத் தொடங்கியது.

சேனாதி திரும்பி அவர்களைக் கோபத்துடன் பார்த்ததும் சிரிப்புகள் “பட்டென” நின்றன.

மயில் ஒருவித தயக்கத்துடன் அவனிடம் மண் வெட்டியைக் கொடுத்தாள்.

சேனாதி புவனத்தைப் பார்த்து, “இந்த வாட்டி பறிச்சுப்போட்டு வந்து, உனக்குப் பக்குவம் பாக்கிறன்,” என்று விட்டுப் பொருக்குகளைக் கொத்த ஆரம்பித்தான். அதன் பிறகு பெண்கள் எவருமே எதுவுமே பேசவில்லை.

(தொடரும்)


Category: வாழ்வு, இலக்கியம்
Tags: இலங்கை, வட மாகாணம், முல்லைத்தீவு



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE