கடந்த ஆண்டு உலகம் மிகப்பெரும் எழுச்சியையும், ஒரு மனிதரால் தொடங்கப்பட்ட தேவையற்ற போரையும் சந்தித்ததாக ஐ.நா. பொதுச்சபையில் தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ஐ.நா. பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பு நாடான ரஷ்யா அதன் அண்டை நாடு மீது படையெடுத்ததன் மூலம் ஐ.நா. சாசனத்தின் முக்கிய கொள்கைகளை தெளிவாக மீறியதாகவும் குற்றஞ்சாட்டினார்.
ஐ.நா. பொதுச் சபை அமர்வு ஆரம்பமாகி அதில் பல்வேறு நாட்டு தலைவர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று பொதுச் சபையில் உரையாற்றும் போதே பைடன் இவ்வாறு தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பின்மை, மோதல்கள், இயற்கை பேரழிவுகள் உட்பட உலகம் முழுவதும் நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தனது உரையில் பைடன் பட்டியலிட்டார்.
அத்துடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
ரஷ்யாவிற்கு ஏற்பட்ட அச்சுறுத்தலை சமாளிக்கவே உக்ரைன் மீது போர் தொடுத்ததாக புடின் கூறுகிறார். ஆனால் யாரும் ரஷ்யாவை அச்சுறுத்தவில்லை, ரஷ்யாவைத் தவிர வேறு யாரும் மோதலை நாடவில்லை எனவும் தெரிவித்த பைடன், ஐரோப்பாவிற்கு எதிராக அணு ஆயுத அச்சுறுத்தல்களை புடின் விடுத்துள்ளதாக கூறினார்.
ரஷ்யாவின் படையெடுப்பு உக்ரைன் உரிமையை அந்நாட்டு மக்களின் உரிமைகளை நசுக்குவது தொடர்பானது என்று பைடன் கூறினார்.
உக்ரைனில் பாடசாலைகள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகளின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தவதாக குற்றம்சாட்டிய பைடன், ரஷ்யாவின் போர் குற்றம் இழைத்து வருவதாகவும் அதற்கு அங்கு ரஷ்யாவிடம் இருந்து மீட்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் சான்றாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
ஒரு நாட்டின் பிரதேசத்தை தங்கள் விருப்பப்படி யாரும் கைப்பற்றி விட முடியாது எனவும் சுட்டிக்காட்டிய பைடன், உக்ரைன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலேயே அந்நாட்டுக்கு பெரிய அளவிலான பாதுகாப்பு உதவி மற்றும் நேரடி பொருளாதார ஆதரவை அமெரிக்கா வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா விரும்புவதாக தெரிவித்த பைடன், அதற்கு குறுக்கே இருக்கும் ஒரே நாடு ரஷ்யா மட்டும் தான் எனவும் கூறினார்.
அத்துடன், அணு ஆயுதப் போரில் யாரும் வெற்றி பெற்று விட முடியாது. ஒருபோதும் அதில் ஈடுபட வேண்டாம் என்றும் தெரிவித்தார். ராஜதந்திர உரையாடல் மூலம் அணு ஆயுத பரவல் தடையை அனைத்து நாடுகளும் வலுப்படுத்த வேண்டும். என்ன நடந்தாலும், அமெரிக்கா ஆயுத கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடர தயாராக உள்ளது எனவும் பைடன் உறுதியளித்தார்.
எனினும் அணு ஆயுத பயன்பாடு குறித்து பொறுப்பற்ற அச்சுறுத்தல்களை ரஷ்யா விடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.