ரஷ்யாவுக்கும் ரஷ்ய மக்களுக்கும் ஆபத்து என்று வந்தால் ரஷ்யாவிடம் உள்ள அனைத்து வகை ஆயுதங்களையும் பயன்படுத்துவோம் என ஜனாதிபதி விளாடி புடின் எச்சரித்துள்ளார். இது வெறும் வெற்று மிரட்டல் அல்ல எனவும் அவர் கூறினார்.
அத்துடன், உக்ரைன் போருக்காக 3 இலட்சம் கூடுதல் படையினரை அணி திரட்ட உத்தரவிட்டுள்ளதாகவும் புடின் தெரிவித்தார்.
உக்ரைன் போரில் அண்மைக் காலமாக ரஷ்யப் படையினர் பின்னடைவுகளை சந்தித்து வரும் சூழலில் நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் ரஷ்ய மக்களின் பாதுகாப்பதற்காக எத்தகைய நடவடிக்கையும் எடுக்கத் தயங்க மாட்டேன். பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான அனைத்து வகையான ஆயுதங்களும் ரஷ்யாவிடம் உள்ளன. சில ஆயுதங்கள் நேட்டோவிடமிருப்பதை விட நவீனமானவை எனவும் புடின் எச்சரித்தார்.
உக்ரைனில் கடந்த 2014-ஆம் ஆண்டு வன்முறை மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய நாஜி ஆதரவு அரசிடமிருந்து டான்பாஸ் பிராந்தியத்தை மீட்பதற்காக சிறப்பு இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் போரில் ரஷ்யாவின் பல்வேறு தலைமுறைகளைச் சோ்ந்தவா்கள், இனத்தவா்கள், ரஷியாவின் மகத்தான வரலாற்றால் ஒன்றிணைந்தவா்கள், படை வீரா்கள், நாஜி ஆதரவு ஆக்கிரமிப்பிலிருந்து விடுதலை பெற்ற டொனட்ஸ்க், லுஹான்ஸ், கொ்சான், ஸபோரிஷியா உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு நிற்கிறாா்கள்.
பிற நாடுகளில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் தீவிரம் காட்டி வரும் மேற்கத்திய நாடுகள், ரஷ்யாவை பலவீனப்படுத்தி, துண்டாடி இறுதியில் அழித்துவிட துடிக்கின்றன. 1991-இல் சோவியத் ஒன்றியத்தை துண்டாடியது போல ரஷ்யாவையும் துண்டாட வேண்டும் என்று அந்த நாடுகள் வெளிப்படையாகவே அறைகூவல் விடுக்கின்றன.
அதன் ஒரு பகுதியாகத்தான், நேட்டோ அமைப்பை ரஷ்ய எல்லையை நோக்கி அந்த நாடுகள் விரிவுபடுத்தி வந்தன. ரஷ்யா மீதான வெறுப்பை அண்டை நாட்டு மக்களின் மனங்களில் மேற்கத்திய நாடுகள் திணித்தன எனவும் புடின் தனது உரையில் குற்றஞ்சாட்டினார்.
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் பரிந்துரைகளை உக்ரைன் பிரதிநிதிகள் ஏற்றனா். ஆனால், அத்தகைய சமாதானத்தை ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. எனவே, பேச்சுவார்த்தை உறுதிமொழிகளை கைவிடுமாறு உக்ரைனை அந்த நாடுகள் பணித்தன. உக்ரைனுக்கு கூடுதலாக ஆயுதங்களை அனுப்பி ரஷ்யாவுடன் போரிடத் தூண்டின எனவும் புடின் கூறினார்.