ஆர்க்டிக் பகுதிக்கே உரித்தான அழிந்து வரும் ஓநாய் வகைகளில் ஒன்றை (Arctic Wolf)குளோனிங் முறையில் உருவாக்கி சீன விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம், 10 ஆம் திகதி பீஜிங்கில் உள்ள சினோஜீன் பயோடெக்னாலஜி (Sinogene Biotechnology) ஆய்வு கூடம் ஒன்றில் இந்த ஓநாய் உருவாக்கப்பட்டது.
மாயா எனப் பெயரிடப்பட்ட இந்த ஓநாய் உருவாக்கப்பட்டு 100 நாட்களை குறிக்கும் வகையில் இது வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.
அழிந்து வரும் அல்லது அழியும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள, விலங்குகளை இனவிருத்தி செய்ய இவ்வாறான புதிய மரபணு தொழில்நுட்பம் உதவும் என, அறிவியலாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
2020-ஆம் ஆண்டு, ஹர்பின் போலார்லன் (Harbin Polarland) அமைப்புடன் இணைந்து தாங்கள் ஆய்வு நடவடிக்கைகளை தொடங்கியதாக சினோஜென் மரபணு உயிரியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்தது. ஈராண்டுகள் கடும் உழைப்பிற்கு மத்தியில் தங்களுக்கு இந்த மகத்தான வெற்றி கிட்டியிருப்பதாகவும் சினோஜென் தெரிவித்துள்ளது.
உலகிலேயே மரபணு வாயிலாக முதல் முறையாக வனவிலங்கு ஒன்றை உருவாக்கிய பெருமையும் தங்களையே சாரும் என சினோஜென்உயிரியல் நிறுவனத்தின் நிர்வாகி மி ஜிடோங் (Mi Jidong) தெரிவித்தார்.
குளோனிங் மரபணு முறையில் உருவாக்கப்பட்ட இந்த துருவ ஓநாய் மரபணு உயிரியல் துறையின் மிகப் பெரிய மைல் கல்லாக கருதப்படுகிறது.
புதர் வால் கொண்ட சாம்பல்-பழுப்பு நிற மாயா என்ற இந்த ஓநாய் ஆரோக்கியமான நிலையில் இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மாயா விளையாடி ஓய்வெடுக்கும் வீடியோக்களை ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது விஞ்ஞானிகள் காண்பித்தனர்.
இது கனடாவின் வடக்கு ஆர்க்டிக் தீவுக் கூட்டத்தில் உள்ள ஆர்க்டிக் பகுதியைச் சேர்ந்த சாம்பல் ஓநாய் கூட்டத்தை சேர்ந்ததாகும். இது அழிந்துவரும் உயிரினமாக உலக வனவிலங்கு நிதியத்தால் பட்டியலிடப்பட்டுள்ளது.