கனடாவில் வெறுப்புணர்வு சம்பவங்கள், வகுப்புவாத வன்முறை, இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் கூர்மையான அதிகரிப்பு அவதானிக்கப்படுவதால் அந்நாட்டில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் இடம்பெற்ற இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு, வன்முறை சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க கனடா அதிகாரிகளிடம் வலியுறுத்துமாறு அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம், துணை தூதரகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டில் உள்ள இந்தியர்கள், இந்திய மாணவர்கள், அந்நாட்டுக்கு பயணம் மேற்கொள்வோர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என இந்திய மத்திய வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் உள்ள இந்தியர்கள், இந்திய மாணவர்கள் அந்நாட்டின் ஒட்டாவா நகரில் உள்ள இந்திய தூதரகம், ரொரண்டோ மற்றும் வான்கூவர் பகுதிகளில் உள்ள இந்திய துணை தூதரகங்களில் அல்லது தூதரக வலைதளத்தில் தங்கள் விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். இது ஏதேனும் ஒரு தேவை அல்லது அவசர காலங்களில் இந்தியா்களுடன் தொடா்பில் இருக்க இந்திய தூதரகத்துக்கும், துணை தூதரகங்களுக்கும் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனி நாடு அமைக்க வலியுறுத்தி, அண்மையில் ரொண்டோவின் ஒரு பகுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. அதில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட சீக்கியா்கள் கலந்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்த நிலையில் இந்திய மத்திய அரசு மேற்கண்ட அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.