ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள ஒரு மசூதியில் இடம்பெற்ற கார் குண்டுவெடிப்பில் குறைந்தது 7 பேர் கொல்லப்பட்டதுடன், 41 பேர் காயமடைந்தனர்.
நேற்று வெள்ளிக்கிழமை மதியத் தொழுகையை முடித்துவிட்டு வழிபாட்டாளர்கள் வெளியேறியபோது மசூதி வாயிலில் கார் குண்டு வெடித்தது என காபூல் நகர பொலிஸ் செய்தித் தொடர்பாளர் காலித் சத்ரன் கூறினார். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த அனைவரும் பொதுமக்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு உடனடியாக எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
இந்த குண்டுவெடிப்பு ஆப்கானிஸ்தானில் தொடரும் பாதுகாப்பின்மை மற்றும் பயங்கரவாத நடவடிக்கையின் மற்றொரு கசப்பான நினைவூட்டல் என காபூலில் உள்ள ஐ.நா. தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மசூதிக்கு முன்பாக உள்ள பிரதான சாலையில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது என ஆப்கான் உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அப்துல் நபி தாகோர் கூறியுள்ளார்.
சமீப மாதங்களில் வெள்ளிக்கிழமை தொழுகையின் போது மசூதிகளில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளின் தொடராக நேற்று வெள்ளிக்கிழமை மசூதி குண்டுவெடிப்பு இடம்பெற்றது.